Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'விண்வெளியில் பெட்ரோல் பங்க்' - 1.5 மில்லியன் டாலர் நிதி பெற்ற சென்னை OrbitAid ஸ்டார்ட்-அப் கதை!

விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் முயற்சியில் இறங்கியுள்ள சென்னை ஸ்டார்ட் அப் Orbit Aid, யுனிகார்ன் இந்தியா வென்சர்ஸ் இடம் இருந்து முதன்மை விதை நிதியாக 1.5 மில்லியன் டாலர் பெற்றுள்ளது.

'விண்வெளியில் பெட்ரோல் பங்க்' - 1.5 மில்லியன் டாலர் நிதி பெற்ற சென்னை OrbitAid ஸ்டார்ட்-அப் கதை!

Wednesday January 29, 2025 , 4 min Read

சிறு வயது முதலே விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்தவர் பெரம்பலூரைச் சேர்ந்த சக்திகுமார். பல கோடி செலவில் விண்ணுக்கு செலுத்தப்படும் செயற்கைகோள்கள் சில ஆண்டுகளுக்கு மேல் பயனில்லாமல் விண்வெளியில் சுற்றுவதற்கு என்ன தீர்வு தர முடியும் என்று சிந்தித்து 'ஆர்பிட் எய்ட்' (Orbit Aid) என்கிற ஸ்டார்ட் அப் தொடங்கியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் வடக்களுர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திகுமார். படித்தவர்கள் அதிகம் இல்லாத ஒரு சின்ன கிராமத்தில் வளர்ந்த இவருக்கு, விண்வெளி தொடர்பான ஆர்வம் பள்ளிப் பருவத்தில் இருந்தே இருந்திருக்கிறது. விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்தவர் ஏரோநாடிகல் என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார். அதன் பின்னரே ஏரோநாடிகல் என்ஜினியரிங் வேறு ஏரோஸ்பேஸ் வேறு என்கிற புரிதலே வந்திருக்கிறது.

எனினும், இளநிலை ஏரோநாடிகல் என்ஜினியரிங் படித்துக் கொண்டே விண்வெளி தொடர்பான தன்னுடைய ஆய்வுகளைச் செய்து மறைந்த விஞ்ஞானி அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டவர்களிடம் விளக்கிக் கூறி பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். இளநிலை முடித்த பின்னர் முதுநிலை படிப்பை ராக்கெட் மற்றும் சாட்டிலைட் தொடர்பான படிப்பாக தேர்வு செய்து படித்துள்ளார்.

சக்திவேல்

சக்திகுமார், நிறுவனர், Orbitaid

கல்லூரி படிப்பை முடித்த பின்னர் 2011ம் ஆண்டு ஐஐஎஸ்-இல் (Indian Institute of science) ஆய்வாளராக பணியில் சேர்ந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார் சக்திகுமார். 2011 முதல் 2014 வரை சாட்டிலைட்களின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டவருக்கு விண்வெளியில் இருக்கக் கூடிய ஒரு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், என்கிற எண்ணம் தோன்றி இருக்கிறது.

சேட்டிலைட்கள் சந்திக்கும் பிரச்சனை - OrbitAid தரும் தீர்வு

ஆண்டுதோறும் தோராயமாக 60 சாட்டிலைட்கள் வரை விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றன. தேவையில்லாமல் காசு விரயமாகிறது என்று பெரும்பாலான மக்கள் புரிதலின்றி கருதுகின்றனர், ஆனால் சாட்டிலைட்கள் செய்யும் பயன்கள் ஏராளமானவை. ஒரு சாட்டிலைட்டின் ஆயுட்காலம் என்பது 5 முதல் 6 ஆண்டுகள் இருக்கும், அதன் பின்னர், அவை செயல்படாமல் போவதற்கு முக்கியக் காரணம் அதில் இருக்கும் எரிபொருள் தீர்ந்து போவதே.

"சாட்டிலைட்டில் பொருத்தப்படும் சோலார் தகடுகள் உள்ளே இருக்கும் இயந்திரங்கள் இயங்குவதற்கான சோலார் மின்சக்தியை உருவாக்குகின்றன. எனினும், புவி வட்ட பாதையில் சாட்டிலைட் சுற்றி வருவதற்கு எரிபொருள் தேவை, அந்த எரிபொருள் தீர்ந்து போவதால் பயனற்ற பொருளாக விண்வெளியில் பல சாட்டிலைட்கள் சுற்றி வருகின்றன. இவற்றின் பயன்பாட்டை அதிகரிக்கவே சாட்டிலைட்டுகுளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக விண்வெளியில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை உருவாக்கலாம் என்கிற சிந்தனை தோன்றியது," என்கிறார் Orbit aid நிறுவனரும் செயல் இயக்குனருமான சக்திகுமார்.

2014-லேயே orbit aidக்கான திட்டமிடல்கள் இருந்தாலும் விண்வெளியில் தனியார் துறைகளுக்கு அப்போது அனுமதி இல்லை. தனியார் நிறுவனங்களின் பங்களிப்புக்கு 2020ம் ஆண்டிற்கு பின்னரே அனுமதி தரப்பட்டது. 2014 முதலே என் மனதில் தோன்றிய ஒரு திட்டமிடலை 2021ல் Orbit Aid மூலம் செயல்படுத்தத் தொடங்கினேன், என்று கூறுகிறார் சக்திகுமார்.

ஆர்பிட் எய்ட்-ன் முக்கிய நோக்கம் விண்வெளியில் இருக்கும் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்புவதாகும். எளிமையாகச் சொல்வதானால் விண்வெளியில் பெட்ரோல் ஸ்டேஷன் அமைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கலாம் ஆனால் இதனால் பல கோடி ரூபாய் மக்கள் பணம் சேமிக்கப்படும், என்று கூறுகிறார் சக்திகுமார்.

ஒரு செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டு அது புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது என்பது வரைக்கும் நாம் செய்திகளில் கேட்டு தெரிந்து கொண்டிருப்போம். ஆனால், அதற்கு பின்னர் அதன் செயல்பாட்டால் நமக்கு கிடைக்கும் பலன்கள் எண்ணிலடங்காதவை. இத்தகைய செயற்கைகோள்கள் குறிப்பிட்ட காலங்களுக்குப் பிறகு செயல்படாமல் விண்வெளியில் குப்பைகளாக மிதந்து கொண்டிருக்கின்றன. அவற்றை இயக்க முடியாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் அதில் இருக்கும் எரிபொருள் தீர்ந்து போவது.

"விண்வெளியிலேயே செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் ஒரு வசதியை ஏன் ஏற்படுத்தக் கூடாது என்று அதற்கான ஆராய்ச்சியில் இறங்கினேன். என்னுடன் நிகில் பாலசுப்ரமணியன் மற்றும் மனோ பாலாஜி இணைந்து செயல்படத் தொடங்கினர். என்னுடைய சேமிப்பில் இருந்து ரூ.50 லட்சத்தை முதலீடாக்கியே இந்த ஸ்டார்ட் அப்பை தொடங்கினேன்."

முதலீட்டிற்காக பலரை அணுகிய போது அவர்களுக்கு இது பற்றிய புரிதலே இல்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து refueling பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். சுமார் மூன்றரை ஆண்டுகள் Orbit aid-இன் அவசியத்தை விளக்கிக் கூறி வந்தேன்.

orbit aid

OrbitAid உருவாக்கியுள்ள எரிபொருள் நிரம்பும் இயந்திரத்துடன் குழுவினர்

முதலீடுகள் பெற்ற OrbitAid

தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிதியை பெறுவதற்காக இரண்டாவது முறை விண்ணப்பித்து விளக்கம் அளித்த போது, அதன் எதிர்காலத்தை உணர்ந்து கொண்டு ரூ.4.5 கோடியை Startup TN முதலீடு செய்தது. இதன் மூலம் தமிழக அரசு இந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளது, என்று கூறுகிறார் சக்திகுமார்.

"யுனிகார்ன் இந்தியா வென்சர்ஸ்ன் முதன்மை விதை நிதியாக 1 மில்லியன் டாலர் (ரூ.8 கோடி) தற்போது OrbitAid பெற்றுள்ளது. இந்த நிதிகளைக் கொண்டு புவிவட்டப் பாதையில் வழங்க உள்ள சேவைகளுக்கான பணிகளை இவர்கள் தொடங்க உள்ளனர். இந்த ஆண்டில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான சோதனை ஓட்டத்தையும் நிகழ்த்தி பார்க்க திட்டமிட்டுள்ளதாக," சக்திகுமார் தெரிவித்துளளார்.

பொருட்களை மறுபயன்பாடு செய்வுதற்கான முன்னெடுப்புகளை நாம் வாழும் பூமியிலேயே பலர் செய்து வரும் நிலையில், விண்வெளியில் வீணாக இருக்கும் செயற்கைகோள்களை மறுபயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்த நிறுவனம். இந்த சோதனை திறம்பட செயல்பட்டால் விண்வெளியின் கட்டமைப்பை இவர்களின் எரிபொருள் நிரப்பு திட்டமான Standard Interface Docking and Refueling Port (SIDRP) மேம்படுத்தும்.

அண்மையில் ஆர்பிட் எய்டின் காப்புரிமை பெற்ற SIDRP கொண்டு ஃப்ரிடாவில் புவிஈர்ப்பு விசையில்லா விமான சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இந்த சோதனை மூலம் புவிவட்டப்பாதையில் சாட்டிலைட்டுகளுக்கு எரிபொருள் நிரப்புவது சாத்தியம், என்பதை சக்திகுமார் குழுவினர் நிரூபித்துள்ளனர். Orbit Aid பயணத்தில் இந்த சோதனை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை உருவாக்கியுள்ளது, வானமே எல்லை என்பதைக் கடந்து விண்வெளியில் தனது சந்தையை ஏற்படுத்தி உள்ளனர்.

கடந்த ஓராண்டாக இந்நிறுவனம் செயற்கைக்கோள் இணைவு மற்றும் எரிபொருள் நிரப்பு சோதனைகளுக்காக பல நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த ஓராண்டில் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டு புவிவட்டப் பாதையில் சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

orbit aid team

தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் டிஎன் மற்றும் யுனிகார்ன் வென்சர்ஸ் இடம் இருந்து பெற்றுள்ள நிதி கூடுதல் உத்வேகம் தந்துள்ளதாக சக்திகுமார் தெரிவித்துளளார்.

“எங்களுடைய இலக்கு நிறைவேறுவதற்கான அங்கீகாரமாக இந்த முதலீடுகளை பார்க்கிறோம். விண்வெளியில் எங்கள் குழுவினர் நடத்தப் போகும் சோதனையே எங்களின் முயற்சியையும் தனித்துவத்தையும் வெளிக்காட்டும். மக்கள் பணம் வீணாகக் கூடாது, விண்வெளித் துறையில் இந்தியா சாதிக்க வேண்டும் என்கிற எங்களின் நோக்கம் நிறைவேறும்,” என்று நம்புவதாக தெரிவித்துள்ளார் சக்திகுமார்.

அகில இந்திய தொழில்துறை அமைப்பின் தகவல்படி, பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கின்றன. இதனை மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் வெற்றிகரமானதாக்கும் அரசின் முக்கிய திட்டங்களாகும். 2030க்குள் 70 பில்லியன் டாலர் இலக்கை அடைய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கு மேம்பட்ட கட்டமைப்பு அரசுக்கு தேவைப்படுகிறது. ஆர்பிட் எய்ட்டின் வளர்ச்சி மற்றும் விண்வெளித் துறையில் ஒரு புதுமையான முயற்சியை செய்யும் முன்னணி நிறுவனமாக களமிறங்கி அதன் திறனை வெளிக்காட்டியுள்ளதாக AIAI பாராட்டியுள்ளது.