Byju’s-க்கு எதிராக திவால் நடைமுறை கோரும் பிசிசிஐ; கோரிக்கையை ஏற்றது NCLT!
வணிக நடவடிக்கைகளின் கணக்கு வழக்குகள் உட்பட பைஜூஸ் நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களையும் IRP உடனடியாகத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும்.
கல்வித் தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸின் தலைமை நிறுவனமான திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட் மீது கார்ப்பரேட் திவால் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) விண்ணப்பத்தை தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (என்சிஎல்டி) செவ்வாயன்று ஏற்றுக்கொண்டது. இந்த நடவடிக்கை, ரூ.158.90 கோடி தொகையை பைஜூஸ் செலுத்தாததற்காகக் கோரப்பட்ட நடவடிக்கையாகும்.
இந்த திவால் சட்ட நடவடிக்கையின் மூலம் பைஜூஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன் தன் நிறுவனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறார். இது தொடர்பாக தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் தன் உத்தரவில், ஸ்பான்சர்ஷிப் உரிமைகளைப் பெற்றதன் மூலம் பிசிசிஐ-யின் சேவைகளை பைஜூஸ் நிறுவனம் பயன்படுத்திக் கொண்டது என்பதை மறுக்க முடியாது.
இது தொடர்பாக இரு தரப்பினரிடையேயும் நடைபெற்ற மின்னஞ்சல் பரிவர்த்தனைகளை ஆராய்ந்த போது பைஜுஸ் நிறுவனம் பிசிசிஐ-க்கு அந்தத் தொகையை அளிக்க வேண்டியுள்ளது என்றும் அதைக் கொடுக்காமல் பைஜு போக்குக் காட்டியுள்ளது என்பதும் உறுதியாகிறது என்றும் தெரிவித்துள்ளது.
பைஜூஸ் நிறுவனத்திற்கு எதிராக போடப்பட்ட பல திவால் கோரும் நடவடிக்கைகள் பட்டியலில் பிசிசிஐ-யும் இப்போது இணைந்துள்ளது. அதாவது, பிசிசிஐ-க்கு தர வேண்டிய தொகைக்கான காலநீட்சியை தொடர்ந்து தின்க் அண்ட் லேர்ன் நிறுவனம் கேட்டுக் கொண்டேயிருந்ததிலிருந்து தொகைக் கொடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது.
திங்க் அண்ட் லேர்ன் நிறுவனத்திற்கு எதிரான திவால் நடவடிக்கைகளை அனுமதிக்கும் உத்தரவின் மூலம், நிறுவனம் இப்போது அதன் சொத்துக்களை 180 நாட்களுக்கு விற்பது, பரிமாற்றம் செய்வது அல்லது அகற்றுவது, போன்றவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் என்.சி.எல்.டி அமர்வு பங்கஜ் ஸ்ரீவஸ்தவாவை இடைக்காலத் தீர்மான நிபுணராக (IRP) நியமித்துள்ளது,
அவர் ஒரு வாரத்திற்குள் எழுத்துப்பூர்வ ஒப்புதலைத் தாக்கல் செய்ய வேண்டும். ஸ்ரீவஸ்தவாவின் நியமனம் உறுதிசெய்யப்பட்டதும், ஐபிசி சட்டம், 2016 இன் 17வது பிரிவின்படி, திங்க் அண்ட் லேர்ன் விவகாரங்களை நிர்வகிப்பதில் அவருக்கு முழுக் கட்டுப்பாடு இருக்கும், அதன் இயக்குநர்கள் குழுவும் இடைநீக்கம் செய்யப்படும்.
இந்த இடைக்கால தீர்மான நிபுணர் அவர் நியமனத்திற்குப் பிறகு 30 நாட்களுக்குள் Think & Learnக்கு எதிராக பெறப்பட்ட அனைத்து உரிமைகோரல்களையும் தொகுத்த பிறகு, கடன் வழங்கியவர்களின் குழுவை அமைக்குமாறு அவருக்கு உத்தரவிட்டது. வணிக நடவடிக்கைகளின் கணக்கு வழக்குகள் உட்பட பைஜூஸ் நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களையும் IRP உடனடியாகத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும்.
அனைத்து பொறுப்புகளின் பட்டியல் உட்பட, திங்க் அண்ட் லேர்ன் நிறுவனத்தின் சொத்துக்கள், நிதி மற்றும் செயல்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் IRP சேகரிக்க வேண்டும் என்பதால், பைஜூவின் பிற முறைகேடுகளும் இந்த ஐஆர்பி விசாரணைக்குள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.