இந்தியாவிலே அதிக ரேட்டிங் பெற்ற உபெர் லேடி ஆட்டோ டிரைவர் ராஜி அக்கா!
பெண்களுக்காக நைட் ஷிப்ட் சவாரி; குட்டீஸ், முதியவர்களுக்கு இலவச சவாரி!
பாதுகாப்பு மீறல் தொடர்பாக நாட்டில் நிகழும் தொடர்ச்சியான சம்பவங்கள், நம்மில் பலரையும் இரவில் தனியாக பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்யவைத்துள்ளது. குறிப்பாக பெண்களை!
பாதுகாப்பின்மையினால் சில இடங்களுக்கு பெண்கள் தனியாக பயணம் செய்ய முடியாத நிலையே இன்றளவும் நீடிக்கிறது. அதிலும், சென்னை போன்ற மாநகரத்தில் இரவு 10 மணிக்குப் பிறகான பயணமெனில் பிராயணத்திற்கான போக்குவரத்து சாதனமாக ஆட்டோவை தேர்ந்தெடுக்கும் முன் பல நிமிட யோசனைகள்... இனி வேண்டாம், அத்தகு தயக்கங்கள். ஏனெனில், அது போன்ற சந்தர்ப்பங்களில் தவிக்கும் பெண்களின் மீட்பராக நள்ளிரவிலும் பாட்ஷவாக மாறி பத்திரமாக வீட்டுக்கு அழைத்து செல்கிறார் ஆட்டோ ராஜி அக்கா!
ஏறக்குறைய இரு தசாப்தத்திற்கு முன்னர் ஒரு ஓட்டுநராக பழைய ஆட்டோவின் முன் இருக்கையில் அமர்ந்து, தொழில் வாழ்க்கையை தொடங்கியவர் ராஜி அஷோகன். ஊராருக்கு ராஜி அக்கா. நாள் முழுக்க சென்னை டிராபிக்கில் வண்டியை ஓட்டி முடித்து வீடு திரும்பினாலும் நள்ளிரவில் அவரது தொலைபேசி மணி ஒலித்து, எமர்ஜென்சி என்றால் உடனே காக்கிச் சட்டையை அணிந்து கிளம்பிவிடுகிறார். அதையொரு சேவையாகவே எண்ணி நேரம்காலம் பாராது உழைத்து வருகிறார் அவர். குட்டிக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இலவச சவாரியும் வழங்குகிறார்.
“கடந்த 20 வருஷமா ஆட்டோ ஓட்டுறேன். கஸ்டமரை பார்த்தாலே தெரியும் இவங்க ஆட்டோவில் ஏறுவார்களானு. இரவு நேரங்களில் பல பெண்கள் ஆட்டோவில் ஏற ரொம்ப தயங்கி தயங்கி நிப்பாங்க. அவங்களுக்காக இரவு நேரத்தில் வண்டி ஓட்டினேன்.
நைட்டு பகலுனு எப்போனாலும் சவாரிக்கு ஆட்டோ ரெடி. பெரும்பாலான சமயங்களில் நைட்டு டைம் ஏர்போர்ட்டில் தான் சவாரி இருக்கும். அவங்க முன்கூட்டியே இத்தனை மணிக்கு வந்திருங்கனு சொன்னா, நான் அதுக்கு ஏத்தமாதிரி தயாராகி கொள்வேன்” என்றார்.
ராஜி கோவைக்கு பிழைக்க வந்தபோது அம்மக்கள் காட்டிய எதிர்பாப்பு அற்ற அன்பே அவரை மாற்றியதாக கூறி அவர் கதை பகிரத் தொடங்கினார்.
“எனக்கு பூர்விகம் கேரளா. அங்கிருந்து 1992ம் ஆண்டில் கோவைக்கு நானும் என் கணவரும் வந்துவிட்டோம். லாக்கப் நாவல் எழுதிய சந்திரகுமார் தான் எங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தார். யார், என்னன்னு தெரியாத எங்களுக்கு கோவை ஆட்டோக்காரர்கள் தான் வீடு பிடித்து, பொருள்கள் வாங்கிக் கொடுத்தார்கள். அவர்களிடம் இருந்து தான், எவ்வித எதிர் பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவதை கற்றுகொண்டேன். பி.ஏ படித்து, டைப் ரைட்டிங் முடித்திருந்ததால் டிராவல் ஏஜென்சியில் அக்கவுண்டன்ட்டாக பணிபுரிந்தேன்.
கணவர் கஷ்டப்பட்டுட்டு இருந்த சமயம், அவருக்கு உதவி செய்யலாம்னு லோன் எடுப்பதற்காக ஆட்டோ லைசென்ஸ் எடுக்க விண்ணப்பித்திருந்தேன். ஒரு நாள் நைட்டில் வெறும் ஒரு மணிநேரத்தில் ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டேன். இன்று அதுவே எனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கு. ஒரு நாளுக்கு 1200ரூ முதல் 1300 வரை ஓட்டுவேன். மாதம் 30,000 முதல் 40,000ரூபாய் சம்பாதிக்கிறேன்,” என்றார் ராஜி.
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு ஏற்பட்ட தொழில் பின்னடைவால், 1999ம் ஆண்டில் தலைநகரம் சென்னையில் குடிபெயர்ந்துள்ளார். வாழ்வாதாரத்தை வலுப்படுத்த ராஜியும் வேலைக்கு செல்ல முயன்றுள்ளார். ஏகப்பட்ட நிறுவனங்களுக்கு இன்டர்வியூக்கு சென்றும் வேலை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் கணவரது தொழிலான ஆட்டோ ஓட்ட அவரும் முடிவெடுத்துள்ளார்.
“கோயம்புத்தூரிலே ஆட்டோ ஓட்டப் பழகினாலும், நாளாகிவிட்டதால் அவ்வளவு பிடி படவில்லை. சென்னையில் ஒருவரிடம் வாடகைக்கு ஆட்டோ எடுத்து பழகினேன். சவுக்கார்பேட்டுக்குள் போயி வெளிய வர்றத்துக்குள்ள அங்குட்டு இடிச்சு, இங்குட்டு இடிச்சு ஆட்டோவோட டாப்பே கிழிஞ்சிருச்சு. மறுநாளே தம்பி செகண்ட்சில் ஒரு ஆட்டோ வாங்கி கொடுத்தான். என்னால் முடியும் என்ற எண்ணம் தொடர்ந்து மேற்கொண்டேன்.”
தொடர்ந்து அவருடைய முதல் சவாரி பயணத்தை பற்றி பகிர்ந்தபோது.
“என் முதல் சவாரி மறக்க முடியாத ஒன்று. இப்ப நினைச்சாலும் நேத்து நடந்த மாதிரி இருக்கு. குளத்தூரில் உள்ள சிஸ்டர் வீட்டிலிருந்து தான் ஆட்டோவை ஓட்டினேன். 242 பஸ்சை ஃபாளோ பண்ணிக்கிட்டே சென்ட்ரல் போனேன். அங்கிருந்து யு டெர்ன் போட்டு பார்க் ஸ்டேஷனில் போய் கரெக்ட்டா நோ பார்க்கிங்கில் வண்டியை போட்டுட்டு நிக்குறேன். ஆனா, உண்மையா லேடி டிரைவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் நல்ல சப்போர்ட் கொடுப்பாங்க.
சவாரியே கிடைக்காம நின்ன அப்போ, நார்த் இந்தியன் ஒருத்தங்க சவாரி ஏறினாங்க. பார்க் ஸ்டேஷன் டூ எக்மோர் தான் முதல் சவாரி. முதல் சம்பளம் 20ரூபாய். கஸ்டமருக்கும் ரூட் தெரியாது, எனக்கும் ரூட் தெரியாது. சுத்தி சுத்தி பழைய கமிஷனர் ஆபிசில் போய் நிப்பாட்டி இறக்கிவிட்டுடேன். தொடர்ந்து எனக்கு எந்த சவாரி கிடைத்தாலும், நேரா சென்ட்ரல் கூட்டிட்டு போயிருவேன். அங்கு இருந்து தான் எனக்கு வழி தெரியும்,” என்றார் நகைப்புடன்.
சென்னையின் சந்துப் பொந்துகளை கண்டறிந்து கொண்டு, டிராபிக்கில் வண்டியை ஓட்டுவது ஒருபக்க சிரமமாக இருக்க, வண்டியின் கிக்கரை அடித்து கைகள் புண்ணாகியுள்ளது.
“நாள் முழுக்க வெயிலில் வண்டியை ஓட்டி, கிக்கர் அடித்து அடித்து கையில் எல்லாம் புண்ணாகிரும். நைட்டுலாம் வலி பின்னிஎடுக்கும். தோசையகூட பிச்சு சாப்பிட முடியாது. என் கணவரும் முடிந்தால் செய்னு சொல்லுவாரு. வேறு வேலைக்கு போகலாம்னா மாசம் ரூ500, 1000 தான் சம்பளம் கொடுப் பாங்க. நான் அந்த சமயத்திலே நாள் ஒன்றுக்கு 1000ரூ ஆட்டோ ஓட்டுவேன்.
அதுமட்டுமில்லாமல், கோவையில் வசித்த காலத்தில் வாசலில் நிற்கும் கணவரது ஆட்டோவை தள்ளி வைக்கவே சிரமப்பட்டேன். ஆனால், இப்போ கஸ்டமர்களோடு சேர்த்து ஆட்டோவை நகர்த்துவேன். அதனால, தொடர்ந்து என்னால் ஆட்டோ ஓட்டமுடியும்னு தோணுச்சு. இன்று, இந்தியாவிலே உபேரில் அதிக ரேட்டிங் பெற்ற ஒரே ஆட்டோ டிரைவர் நான்,” என்று பெருமையாகக் கூறினார் ராஜி.
கடந்த சில ஆண்டுகளில், சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஊக்கமளிக்கும் பேச்சுக்களை வழங்கியுள்ளார். இத்தொழிலில் சேர ஆர்வமுள்ள பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டவும் கற்று தருகிறார்.
“1.5 லட்சம் ஆட்டோக்கள் ஓடும் சென்னையில் 100பேர் கூட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் இல்லை என்பது தான் வருத்தம். மாத வேலைக்கு ஜவுளிக்கடைகளில் நாள் முழுக்க நின்று 7,000ரூபாய் சம்பளம் வாங்குவதற்கு, ஆட்டோ ஓட்டி நாலஞ்சு மணி நேரத்துல அந்த காசை சம்பாதித்துவிடலாம். ஆர்வமுள்ளவர்கள் எனக்கு கால் பண்ணுங்க, என் சொந்த ஆட்டோவில் நானே கற்றுத் தருகிறேன். லைசென்ஸ் வாங்குவதற்கான எல்லா உதவியும் நானே செய்கிறேன்,” என்றபடியே பை பை சொல்கிறார்.
எந்த தொழிலும் குறைந்தது இல்லை. பிடித்த வேலை, வேலைகேற்ற ஊதியம், அதற்கென்று ஒரு கவுரவம்... இவை மூன்றும் சேர்ந்து அமைந்தால் அவ்வேலையை வாழ்நாள் முழுக்க செய்யலாம்... என்றார் இறுதியாக.