'மேற்கை விட்டுவிட்டு உள்ளூர் தொழில் முனைவோர்களை கொண்டாடுங்கள்' - Techsparks-இல் பாவிஷ் அகர்வால்!
ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால், முக்கியத்துவம் மிக்க நாடு இந்தியா என குறிப்பிட்டவர், புதுமையாக்கத்தில் இந்தியாவை உலக அளவில் முன்னிலை பெற வைப்பது அவசியம், என்றார்.
ஓலா மற்றும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனர் பாவிஷ் அகர்வால், மேற்கத்திய நிறுவனங்களை விட, சொந்த நாட்டு நிறுவனர்களை கொண்டாட வேண்டும் என இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
"தொழில்நுட்ப சமூகத்தில் நாம் மேற்கத்திய நிறுவனர்களை கொண்டாடுகிறோம். ஆனால், திருபாய் அம்பானி, டாடாவை ஏன் கொண்டாடுவதில்லை. இவர்களுக்கு இன்னும் கூடுதலாக போற்றுதலுக்கு உரியவர்கள்...” என்று பெங்களூருவில் நடைபெற்ற டெக்ஸ்பார்க்ஸ் 2024 நிகழ்ச்சியில் பேசும் போது குறிப்பிட்டார்.
தேசிய பொருளாதார வளர்ச்சியில் இந்திய தொழில்முனைவோர்களின் முக்கிய பங்களிப்பையும் வலியுறுத்திப் பேசினார்.
இந்தியாவின் எழுச்சி மற்றும் ஓலாவின் வளர்ச்சியை ஒப்பிட்டு பேசியவர், உள்நாட்டு நிறுவனங்கள் எப்படி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன என்று குறிப்பிட்டார். இந்திய தொழில்முனைவோரின் உத்வேகத்தை சுட்டிக்காட்டும் வகையில், உற்சாகம், ஈடுபாடு மற்றும் துடிப்பு பற்றி பேசினார்.
இருப்பினும், ஏஐ, தேடல், செமிகண்டக்டர் ஆகிய பிரிவுகளில் இந்திய சேவை இல்லாதது பற்றியும் பேசினார்.
“இந்தியா உலகில் டிஜிட்டல் தரவுகளை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக இருக்கிறது. நாம் உலக டிஜிட்டல் தரவுகளில் 20 சதவீதத்தை உருவாக்குகிறோம், ஆனால், நாம் அவற்றுக்கு உரிமை கொண்டிருக்கவில்லை. இந்தியா உலகின் சிப் மையமாக திகழ்ந்தாலும், இந்திய சிப் இன்னமும் உருவாக்கப்படவில்லை,” என்று கூறியவர், இந்தியா சொந்த தொழில்நுட்பங்களை உருவாக்க தனது திறன் மற்றும் வளங்களை பயன்படுத்த வேண்டும், என்றார்.
எதிர்காலம் பற்றி குறிப்பிட்டவர், வருங்காலத்தை நோக்கும் போது, 2047ல் இந்தியா வளர்ந்த பொருளாதாரமாக உருவாக வேண்டும் எனும் பகிரப்பட்ட கனவை பார்க்கிறேன்,” என்று கூறினார். தொழில்நுட்பத்தில் குறிப்பாக ஏஐ நுட்பத்தில் முன்னிலை வகிப்பது இதற்கு அவசியம் என்றார்.
அமெரிக்க மற்றும் இந்திய தொழில்நுட்ப செயல்முறைகளில் வேறுபாடு இருப்பதாக கூறியவர், அமெரிக்க தொழில்நுட்பம் முதலாளித்துவ நோக்கம் கொண்டது என்றால் இந்திய தொழில்நுட்பம் சமூக நலன்களின் கவனம் செலுத்துவது என்றார்.
“புதுமையாக்கத்தில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருக்கிறது எனக் கூறியவர், பரந்த சமூகத்திற்கு பலன் அளிக்கும் வெளிப்படையான படிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தேவை,“ என்றார்.
உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். "இந்தியா தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தேசம். நாம் உலகின் 20 சதவீதமாக இருக்கிறோம். உலகிற்கு நாம் முக்கியம்,” என்றார்.
(பொறுப்பு துறப்பு: யுவர்ஸ்டோரி நிறுவனர், சி.இ.ஓ, ஷரத்தா சர்மா, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சுயேட்சை இயக்குனர்.)
ஆங்கிலத்தில்: அபராஜிதா சக்சேனா, தமிழில்: சைபர் சிம்மன்
'இந்திய ஸ்டார்ட் அப் இடத்தை வலுவாக்க, ரு,25,000 கோடி நிதி முக்கியம்,' என்கிறார் அமிதாப் காந்த்!
Edited by Induja Raghunathan