Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

2 லட்சம் முதலீட்டில் தொடங்கி 10 ஆண்டுகளில் பலகோடிகளை எட்டிய அலெக்ஸ் பாண்டியன் !

2 லட்சம் முதலீட்டில் தொடங்கி 10 ஆண்டுகளில் பலகோடிகளை எட்டிய அலெக்ஸ் பாண்டியன் !

Wednesday August 02, 2017 , 3 min Read

பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு விசிட்டிங் கார்டாக இருந்தாலும் சரி, திருமண அழைப்பிதழாக இருந்தாலும் சரி நிறுவனங்களுக்கான Brochure என்கிற சிற்றேடு அச்சடிக்கவேண்டும் என்றாலும்கூட சென்னையில் நாம் ஆர்டர் கொடுத்தால் டிசைன் செய்து நம்மிடம் புரூஃப் காண்பித்த பின்னர் அச்சடித்து கைக்கு வர நான்கு நாட்கள் முதல் ஒரு வாரம்கூட ஆகும். பிரின்டிங் தொழில் நுட்பம் அப்படி இருந்தது. 


இதை ஏன் விரைவுப்படுத்தக்கூடாது என்று எண்ணிய Topaz Technologies என்ற சிறிய நிறுவனத்தை தொடங்கி நடத்திவந்த அலெக்ஸ் பாண்டியன், பிரின்டிங் தொழிலுக்கென மென்பொருள் தயாரிப்பது என முடிவெடுத்தார். ஆனால், அவர் சந்தித்த பிரச்சனை பிரின்டிங் துறையில் இருந்தவர்களுக்கு தங்களுக்கு எப்படிப்பட்ட மென்பொருள் தேவை என்று சொல்லக்கூடத் தெரியவில்லை என்பதே. காரணம் மென்பொருள் என்பதே அவர்களுக்கு முற்றிலும் புதியது, அலெக்சுக்கோ பிரின்டிங் துறை என்பது முற்றிலும் புதியது.

அலெக்ஸ் பாண்டியன்
அலெக்ஸ் பாண்டியன்
”மாதக்கணக்கில் பிரின்டிங் நிறுவனத்தில் பெயின்ட் வாசனையை முகர்ந்தபடி, பிரின்டிங் எந்திரத்தின் ஓசைக்கு நடுவில் அமர்ந்து அதன் ஒவ்வொரு நுட்பங்களையும் தேவைகளையும் ஆராய்ந்து வெற்றிகரமாக உருவாக்கினேன். சென்னையில் மட்டும் 50 வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்,”

என்று தொழிலில் தனக்குக் கிடைத்த முதல் வெற்றியை பகிர்ந்தார். இவரது மென்பொருள், பிரின்டிங் எந்திரத்தை அழகாக செயல்படுத்தக்கூடியது. கோரல் டிராவில் டிசைனை கொடுத்த அடுத்த சில விநாடிகளில் அச்சடித்து நம் கைகளில் தவழத் தொடங்கின பிரின்டிங் ஐட்டங்கள். அதுவரை குறைந்தது 500 அல்லது 1000 எண்ணிக்கைகளில்தான் அச்சடிக்கமுடியும் என்றிருந்த நிலை மாறி, 100 விசிட்டிங் கார்டுக்குக் குறைந்துகூட பிரின்ட் செய்யலாம் என்ற நிலை உருவானது.


சரி, இதில் சுவாரஸ்யம் என்னவெனில் கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது அலெக்சிடம் இருந்தது 2 அரியர்கள், இல்லாமல் இருந்தது எந்த வேலைவாய்ப்பும்.


நண்பரிடம் வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் கடன், வீட்டில் தரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பணம் என இரண்டே லட்ச ரூபாய் முதலீட்டோடு வெறும் 3 பேரை மட்டுமே கொண்டு துவங்கப்பட்ட Topaz Technologies தான் நாம் முன்னர் பார்த்த பிரின்டிங் மென்பொருளைக் கண்டுபிடித்து பிரின்டிங் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனம். நிறுவனத்தைத் தொடங்கியபோது வெப் டிசைனிங் மட்டும்தான் முக்கியப் பணியாகக் கையில் எடுக்கப்பட்டது. அப்போதே ஒரே ஆண்டில் 5 லட்சம் மதிப்பிலான வணிகம் நடந்தது. அந்த நிலையில்தான் பிரின்டிங் துறைக்கு மென்பொருள் தயாரிக்கும் துறைக்குள் கால்வைத்தார்.


இதற்கிடையில் திடீரென தொழிலில் 25 லட்சம் ரூபாய் வரை நட்டம் ஏற்படத் தொடங்கியது. ஆனாலும் அது சற்று முன்னரே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்பதால் சுதாரித்துக்கொண்டார் அலெக்ஸ் பாண்டியன். பிரின்டிங் மென்பொருள் கோடிக்கணக்கில் வருவாயைக் கொடுக்கத் தொடங்கிய போது ஃபீனிக்ஸ் போல மீண்டு வந்ததுடன், பிரின்டிங் மென்பொருள் நல்ல லாபத்தைத் தந்து கொண்டிருந்த நிலையிலேயே அதைத் தயாரித்து, வழங்கும் தொழிலில் இருந்து வெளியே வந்தார்.

புதிய துறைகளில் தொழில் தொடக்கம்

அதன்பிறகு அடுத்த மென்பொருள் உருவாக்க ஆய்வைத் தொடங்கிய அலெக்ஸ் கைகளில் எடுத்தது HMS – Hospital Management System அரசு மருத்துமனைகள் அனைத்தின் பணிகளையும் ஒருங்கிணைக்கும் மெகா மென்பொருள் திட்டம், அதேபோல FMS – Flyover Management System ம் என பாலங்களைக் கட்டுப்படுத்தும் மென்பொருள்.


இவற்றுக்கான ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும்போதுதான் ஆய்வுப்பணிக்கு மட்டுமே பல கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தார் அலெக்ஸ். அந்த R & D திட்டத்தை அப்படியே வேறு ஒரு பெரிய நிறுவனத்திற்கு விற்றார். அத்திட்டம் வெற்றிகரமாக அந்த நிறுவனத்தால் பின்னர் முடித்துப் பயன்பாட்டுக்கு வந்தது.

”அதில் விற்றுக்கிடைத்த பணத்தை மைனிங் துறையில் முதலீடாகப் போட்டேன். ஹாங்காங் நகரை மையமாக வைத்து பன்னாட்டு சந்தைகள் பற்றிய ஆய்வையும் விவரங்களையும் திரட்ட திட்டமிட்டேன்,” என்றார்.

வெற்றித் திட்டங்களைத் தேடிப்பிடித்து அதன் நுட்பங்களை நுணுக்கமாக அலசி ஆராய்ந்து கற்றுக்கொண்டு கால்பதிப்பது அலெக்சின் இயல்பு. Topaz Technologies என்ற சிறிய நிறுவனம் பத்ததாண்டுகளுக்குள் Clayas Infrastructure Pvt Ltd., என்ற பல கோடிகள் வணிகம் நடக்கும் அடுத்தடுத்த வணிக நிறுவனமாக மாற்றிக்காண்பித்தார். Clayas சூரிய மின் சக்தித் துறையில் வணிகம் செய்து வருகிறது, இந்தியாவின் பெரிய நிறுவனம் ஒன்றோடு இணைந்து அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறது இந்நிறுவனம்.

image
image

ஊடகத்துறையில் கால்பதிப்பு

தனது வெற்றிப்பயணத்தின் அடுத்தகட்டமாக FX16 TV NETWORK PVT LTD., என்ற ஊடக நிறுவனத்தைத் தொடங்கி முதற்கட்டமாக டிஜிட்டல் மீடியா தளத்தில் கால்பதித்து விரைவில் சேட்டிலைட் டிவி சேனல் ஒளிபரப்புக்கு ஆயத்தமாகிவருகிறார் அலெக்ஸ்.

அலெக்சின் முதல் நிறுவனமான Topaz ல் பணி செய்த மூன்றுபேருமே அவரது கல்லூரியின் ஜுனியர் மாணவர்கள்தான். அவர்களும் அரியர்கள் வைத்திருந்தவர்கள்தான். ஒருவர் 17 அரியர்கள் வைத்திருந்தார். ஆனால், அங்கு பெற்ற பயிற்சியால் தற்போது பல முன்னணி நிறுவனங்களில் பல ஆயிரக்கணக்கில் சம்பளம் பெற்று உயர்நிலையில் உள்ளனர். 

”அரியர்ஸ் ஒருவரின் திறமையின் அளவீடு அல்ல,” என்கிறார் அலெக்ஸ்.

எப்போதும், யாரும் செல்லத் துணியாத பாதையில் செல்ல வேண்டும், அதற்காக நமக்கென்ற புதிய பாதையை உருவாக்க வேண்டும் என்பதே அலெக்ஸின் கோட்பாடாக இருந்துவருகிறது. 

பிசினஸ் துறையில் கால்வைப்பவர்கள் எதையும் சரியாகக் கணிக்க வேண்டும் மேலும் அதற்கு மனதளவில் தயாராக இருக்க வேண்டும். ரிஸ்க்தான்... ஆனால் அந்த ரிஸ்க் மட்டுமே நம்மை உயர்த்தவும் முடியும் என்கிறார். 

ஒரு நல்ல வியாபாரிக்கு முடிவுகள் எடுப்பதில் எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது என்பதும் அலெக்சின் உறுதியான நிலைப்பாடு. எப்போதும் ஒரு முதலீடு செய்வதானாலும் சரி அல்லது தொழில் தொடங்கினாலும் சரி, அதற்கு முதலில் அதைப்பற்றிய முழு விவரத்தையும் படித்து, ஆராய்ந்து, கணிப்பது தனது வழக்கம் என்று கூறுகிறார் அலெக்ஸ்.


இதையெல்லாம்விட இத்தனை தொலைவுக்கு தொய்வில்லாமல் வந்து இன்னும் பல தொலைவுக்கு ஊக்கமுடன் செல்ல உறுதுணையாக இருந்தவர்கள் லாபத்தின்போதும், நட்டத்தின்போதும் தன்னோடு நின்ற தொழில் பங்குதாரர்கள். இப்போது தனக்கு முதுகெலும்பாக நின்று கொண்டிருப்பவர்கள் தன் மனைவி ஃசோஃபியாவும் தன் தாய் தந்தையும்தான் என்கிறார் FX16 TV யின் மேலாண்மை இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன்.