Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தருமபுரியில் எஸ்.ஐ ஆக பொறுப்பேற்றுக் கொண்ட இந்தியாவின் முதல் திருநங்கை: ப்ரீத்திகா யாஷினி சந்தித்த புறக்கணிப்பும், இன்னல்களும்...

தருமபுரியில் எஸ்.ஐ ஆக பொறுப்பேற்றுக் கொண்ட இந்தியாவின் முதல் திருநங்கை: ப்ரீத்திகா யாஷினி சந்தித்த புறக்கணிப்பும், இன்னல்களும்...

Monday April 03, 2017 , 3 min Read

இந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் உதவி ஆய்வாளராக ப்ரீத்திகா யாஷினி பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் உதவி ஆய்வாளருக்கான ஓராண்டு பயிற்சியை முடித்த பிரித்திகா யாஷினி உள்ளிட்ட 108 பேருக்கு தற்போது காவல் நிலைய பணி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அதில், தருமபுரி மாவட்டத்தில் 15 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் பிரித்திகா யாஷினியும் ஒருவர். தருமபுரியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அவர் உதவி ஆய்வாளராக இனி பணிபுரிவார். 

image


'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி' என்று கூறுவார்கள், அது ப்ரித்திகாவின் விஷயத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அவரின் விடாமுயற்சி, இந்தியாவின் காவல்துறையில் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் என்ற பெருமையை பெற்றுத் தந்துள்ளது. ஆனால் இதற்கு பின்னால் அவர் சந்தித்த துயரங்கள் மிக அதிகம்.

அவரின் இந்த வெற்றியும் கூட ஒவ்வொரு கட்டத்திலும் நீதிமன்றம் சென்றே பெற வேண்டியிருந்தது. 

ப்ரித்திகாவின் இளமைப் பருவம்

சேலத்தில் உள்ள கந்தம்பட்டி என்ற ஊரில் பிறந்து வளர்ந்த ப்ரித்திகாவிற்கு தனது பள்ளிப் பருவத்தின் போதே அவரின் மாற்றம் புலப்பட ஆரம்பித்ததாம். "என்னுடைய நடவடிக்கை, பழக்கவழக்கங்கள் எல்லாமே பெண்ணை போன்றே இருக்கும், பெரும்பாலான நேரத்தை என் வயதையொட்டிய பெண்களிடமே செலவழித்தேன்" என்று கூறும் ப்ரித்திகா தன்னுடைய பதின்பருவம் தன்னை முழுவதுமாக அறிந்து கொள்ள உதவியது என்கிறார். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் தன் நிலைப்பாடை உணர்ந்த அவர், பெற்றோர்களிடமும் மற்றவர்களிடமும் அதை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

மிகுந்த சிரமங்களுக்கிடையே 2011 ஆம் ஆண்டு கணினி பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார். கல்வியின் அவசியத்தை உணர்ந்திருந்த ப்ரித்திகா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தனது நிலையை முதலில் அவரின் தாயாரிடம் பகிர்ந்து கொண்ட போது,

"அம்மாவிற்கு பெரும் அதிர்ச்சி. மிகவும் அழுதார். பூஜை, பரிகாரம், மருத்துவ ஆலோசனை என்று என்னனோவோ செய்து பார்த்தார்கள். இதற்கெல்லாம் மேல் மனநோய் மருத்துவம் வரைக்கும் என்னை கொண்டு சென்றார்கள்". 

ப்ரித்திகாவின் ஒரே அண்ணன் கூட இவரை தவிர்க்க , வீட்டிலேயே இருக்க கூடாது என்றும் கூறிவிட்டாராம்.

image


சென்னை புகலிடமாக...

2011 ஆம் ஆண்டு படிப்பை முடித்ததும், வீட்டில் உள்ள பிரச்சனையின் காரணமாக ப்ரித்திகா சென்னை வந்தார். பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பம் செய்தார். நேர்காணல் நிறைவு பெற்றதும் அவரின் சான்றிதழ்களில் உள்ள வேறு பெயரும் மற்றும் அவரின் நிலையும், வேலை நிராகரிப்பிற்கு காரணமாக அமைந்தது. தான் நினைத்தபடி கௌரவமான வாழ்க்கை வாழ முடியோதோ என்ற அச்சம் தோன்றியதாக கூறுகிறார். மிகுந்த இடர்பாடுகளை கடந்து தனியார் மருத்துவமனையில் பணி புரிந்தார்.

சீருடை கனவு

சிறு வயது முதற்கொண்டே ப்ரித்திகாவிற்கு காவல் துறையில் சேரும் கனவு இருந்தது. அவர் சந்தித்த இன்னல்கள் களைய வேண்டுமென்றால் சாதித்தே ஆக வேண்டும் என்று உணர்திருந்தார். தன் சமூகத்திற்கும் உதவிட வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.

பிப்ரவரி மாதம் காவல் துறையில் துணை ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பித்தார். விண்ணப்பம் ஏற்கப்படாத நிலையில் நீதிமன்றம் சென்றார். பின்னர் மே மாதம் எழுதிய தேர்விற்கான முடிவுகள் ஜூலை மாதத்தில் அறிவிக்கப்பட்டது. ஜாதி, ஆண் பெண், சமூகம், துறை ரீதியாக என பல்வேறு நிலைகளின் கீழ் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இவருக்கு எந்த கட் -ஃஆப் மதிப்பெண்ணும் வரையுறுக்கப்படவில்லை. மீண்டும் நீதிமன்றம் சென்றார். இதன் பிறகு உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது. நானூறு மீட்டார் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கைபந்து என எல்லா தேர்வுகளை கடந்து நூறு மீட்டார் ஓட்டப்பந்தயத்தில் ஒரு வினாடி தாமதமாக வந்ததால் நிராகரிக்கப்பட்டார். மீண்டும் நீதிமன்றம் வரை சென்று வென்றுள்ளார்.

நவம்பர் மூன்றாம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இவருக்கு மட்டுமின்றி இவர் சார்ந்த சமூகத்தையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

"என்னுடைய இந்த போராட்டத்தில் பவானி சுப்பராயன் அவர்களுக்கு மிகுந்த கடமைப்பட்டுள்ளேன். எந்த வித எதிர்பார்ப்புமின்றி எனக்காக வாதாடி இந்த வெற்றியை பெற்று தந்துள்ளார்" என்கிறார் ப்ரித்திக்கா.

சந்தித்த சவால்கள்

"உடல் ரீதியாக, மன ரீதியாக மிகுந்த போராட்டங்களையே சந்தித்துள்ளேன்." வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்த பொழுது தங்க இடம் கூட இல்லை, வீடு தர கூட யாரும் முன்வரவில்லை. வேலை பெறுவது என்பது மிக கடினமாக இருந்தது. சமூகத்தில் எங்களுக்கென்று எந்த அங்கீகாரமும் இல்லாதது வருத்தமளிக்கிறது. வீட்டை விட்டு வந்த இரண்டு வருடம் பின் தான் அவர்களை மீண்டும் பார்க்க சென்றேன். வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை அவர்களை சென்று பார்த்துவிடுவேன். அவர்களும் என் நிலையை புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

image


எங்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என்று ஒன்றரை வருடம் முன்பு ஆணை இருந்தாலும் அது இன்னும் நிலுவைக்கு வரவில்லை. எங்கள் நிலை மேம்பட வேண்டுமானால் எங்களுக்கு ஒதுக்கீடு நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

தன் சமூகத்திற்கு அவரின் அறிவுரை

முதலில் பெற்றோர்கள் எங்களை போன்றோரை மனவுமந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். புரிதல் அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் புரிந்து கொண்டால் எங்களை போன்ற பெரும்பாலானோர் வீட்டை விட்டு வெளியேறும் அவசியம் ஏற்படாது.

"திருநங்கைகளுக்கு நான் சொல்வெதெல்லாம் எக்காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியேற நினைக்காதீர்கள். உங்களின் போராட்டத்தை அங்கிருந்தே புரிய வைக்க வேண்டும். படிப்பு மிக அவசியம். படிப்பு தான் நமக்கு கை கொடுக்கும், நம் நிலையை உயர்த்தும்".

என்னால் முடிந்த அளவு என் போன்றவர்களுக்கு வழிகாட்ட தயாராக உள்ளேன் என்றார்.

எதிர்காலம்

இயற்கையாகவே தன்னம்பிக்கை அதிகம் இருந்தாலும், 

"புறக்கணிப்பு, இன்னல்கள் இவையே என்னை சாதிக்க உந்தித் தள்ளியது". என் சமூகத்திற்கு நான் எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறேன்.

"இந்த வெற்றி மாற்றத்தை உண்டு பண்ணியுள்ளது, குடும்பத்தினரின் சந்தோஷம், மீடியா பேட்டி, முகம் தெரியதாவர்களிடம் இருந்து கூட வாழ்த்துகள், இடைவிடாத தொலைபேசி அழைப்புகள் என, சாதிக்க வேண்டியதை நோக்கிய என் பயணத்தை வேகப்படுத்தியுள்ளது" என்று புன்முறுவலுடன் பேசினார் ப்ரித்திகா.