Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

66 வயதில் அல்ட்ரா மாரத்தான் ஓடும் புஷ்பா பட்!

66 வயது புஷ்பா பட் கார்துங் லா சேலஞ்சில் ஏற்கெனவே ஒரு முறை பங்கேற்ற நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக அல்ட்ரா மாரத்தானில் பங்கேற்கிறார்.

66 வயதில் அல்ட்ரா மாரத்தான் ஓடும் புஷ்பா பட்!

Friday September 09, 2022 , 4 min Read

புஷ்பா பட்; இவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு, அதாவது, தனது 63 வயதில் உலகின் மிக உயரமான அல்ட்ரா மாரத்தானில் ஓடினார். கடல் மட்டத்திலிருந்து 17,852 அடி உயரத்தில் 72 கி.மீட்டர் நிலப்பரப்பில் கார்துங் லா சேலஞ்சில் பங்கேற்றார்.

அல்ட்ரா மாரத்தான் போட்டியில் முதல் மூன்று ஸ்ட்ரெச் சரியான நேரத்தில் முடித்தபோதும், கடைசி ஸ்ட்ரெச்சில் நான்கு நிமிட கட் ஆஃப்பில் தவற விட்டார்.

“நான் அதிர்ச்சியில் இருந்தேன். என்னைச் சுற்றியிருந்த என் மகளும் மற்றவர்களும் அழுதார்கள். நான் கவலையாக இருந்தேன். இருந்தபோதும் என் கஷ்டத்தை என்னால் வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை. நாம் நம் உணர்வுகளை மறைத்துக்கொண்டே பழகிவிட்டோம். அப்படித்தான் வளர்க்கப்படுகிறோம்,” என்கிறார் புஷ்பா.

புஷ்பா ஹெர்ஸ்டோர் உரையாடலின்போது கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் இருக்கும் ஜிப்ஸா பகுதியிலிருந்து தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இங்கு 2022 லடாக் அல்ட்ரா மாரத்தானுக்கான பயிற்சியில் இருந்தார்.

pushpa-marathon-1

மனதிற்கான பயிற்சி

அதிக உயரத்தில் பயிற்சி செய்வது எளிதான விஷயமில்லை. ஹெர்ஸ்டோரி புஷ்பாவைத் தொடர்புகொள்வதற்கு முன்பு ஜிஸ்பாவில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்திருக்கிறார். இந்த ஹோட்டல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. போக்குவரத்து இரைச்சல் நிறைந்த இடம். சத்தத்தில் அவரால் தூங்க முடியவில்லை. மனதிற்கு அளிக்கப்படும் பயிற்சி எத்தனை முக்கியமானது என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

“இன்று கொளுத்தும் வெயிலில் ஜிஸ்பாவிலிருந்து தார்சா வரை நடந்து சென்றோம். நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? இத்தனை கஷ்டம் எதற்கு? இப்படிப்பட்ட எண்ணங்கள் மனதில் தோன்றுவது இயல்புதான். சோலாங் பள்ளத்தாக்கில் 6,000 அடியாக இருந்த உயரம் ஜிஸ்பாவில் 10,000 அடிக்கும் கூடுதலாக மாறியது. நடப்பது கடினம்தான். முயற்சியை கைவிட சொல்லி மனம் தொடர்ந்து அரைகூவல் விட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் அதைக் கடந்து செல்வதற்கான ஒழுக்கத்தைப் பழகிக்கொள்ளவேண்டும்,” என்கிறார் புஷ்பா.

மனதை வலுப்படுத்திக்கொள்வது மட்டுமல்லாது டயட்டை முறையாக பின்பற்றி வருகிறார் புஷ்பா. கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்துவிடுகிறார். ஊட்டச்சத்துக்காக சிக்கன், முட்டை, பருப்பு, பழங்கள், காய்கறிகள், தயிர், புரோட்டீன் சப்ளிமெண்ட் போன்றவற்றை எடுத்துக்கொள்கிறார்.

புஷ்பா தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் எத்தனையோ சவால்களைக் கடந்து வந்திருக்கிறார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவருக்கு 12 வயதிருந்தபோதே இவரது அப்பா உயிரிழந்துவிட்டார். 17 வயதில் சொந்தமாக வேலை செய்து சம்பாதித்து அதைக் கொண்டு படித்திருக்கிறார்.

எல்பிஸ்டன் கல்லூரியில் பிஏ படித்தவர் Narsee Monjee Institute of Management Studies கல்வி நிறுவனத்தில் எம்பிஏ படித்தார். குட்லாஸ் நெரோலாக் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் செக்ரட்டரியாக கேரியரைத் தொடங்கினார். 13 ஆண்டுகள் வேலை செய்த பிறகு Lupin Labs நிறுவனத்திற்கு மாறினார். அங்கு இரண்டாண்டுகள் வேலை பார்த்த பிறகு Maersk ஷிப்பிங் நிறுவனத்தில் சேர்ந்தார்.

“50 வயதில் Maersk நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தொழில்முனைவு முயற்சியைத் தொடங்கினேன். அந்த சமயத்தில் நான் நீச்சல் செய்து கொண்டிருந்தேன். எனக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் பாதிப்பு இருந்தது எனக்குத் தெரியவில்லை. வேலையின் அழுத்தம் காராணமாக உடல் சோர்வுற்றிருப்பதாக நினைத்தேன். 17 வயது முதல் வேலை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு வாழ்க்கையில் ஒரு மாறுதல் தேவைப்பட்டது,” என்கிறார்.

L'Oréal சலூன் ஃப்ரான்சைஸ் முயற்சியில் முதலீடு செய்தார். ஹெச் ஆர் கன்சல்டண்டாக இருந்தார்.

தொழில்முனைவு முயற்சியிலும் முழுமையான திருப்தி கிடைக்கவில்லை. பெருந்தொற்று சமயத்தில் நேரம் கிடைத்தது. அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனில் கோர்ஸ் சேர்ந்தார். 65 வயதில் ஊட்டச்சத்து நிபுணராக தகுதி பெற்றார். பயணம் செய்வது பிடிக்கும் என்பதால் அதிகம் பயணம் மேற்கொள்கிறார். கவிதை எழுதுகிறார். லடாக் மாரத்தானில் இவர் முதல் முறையாக பங்கேற்றது Runner’s Tribe தொகுப்பில் இடம்பெற்றது.
pushpa-marathon-2

கார்துங் லா

புஷ்பா 47 வயதில் ஓட ஆரம்பித்தார். இவருடன் பணியாற்றியவர்கள் ஸ்டாண்டர்ட் சார்டர்ட் மும்பை மாரத்தானில் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர். அப்போது புஷ்பாவும் இதை முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்தார். தினமும் 10 முதல் 15 கி.மீட்டர் பயிற்சி எடுத்துக்கொள்வது பற்றி மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்க, புஷ்பாவால் 15 நிமிடங்கள் கூட ஓட முடியவில்லை.

ஓடுவது எளிதான விஷயமில்லை; கடினம்தான் என்பது அவருக்குப் புரிந்தது. இருந்தபோதும் முழு ஈடுபாட்டுடன் களமிறங்க முடிவு செய்தார். 2014-ம் ஆண்டு முதல் 8 அல்ட்ரா மாரத்தான், 11 ஃபுல் மாரத்தான் ஓடியிருக்கிறார். டாடா மும்பை மாரத்தான், சதாரா மாரத்தான், தானே மாரத்தான், லடாக் மாரத்தான் போன்றவை இதில் அடங்கும்.

2018-ம் ஆண்டு நியூயார்க் மாரத்தான் ஓடினார். 4 மணி நேரம் 58 நிமிடங்களில் சிறப்பாக ஓடினார். 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெர்லின் மாரத்தான் நிறைவு செய்தார்.

கார்துங் லா பகுதிக்கு 2013-ம் ஆண்டு சுற்றுலா பயணியாக சென்றிருந்தார். அப்போதிருந்தே கார்துங் லா சேலஞ்சில் பங்கேற்கவேண்டும் என்கிற ஆர்வம் பிறந்திருக்கிறது.

“அங்கு பலர் சைக்கிளில் செல்வதைப் பார்த்தேன். கார்துங் லா உச்சியில் இருந்தேன், சுவாசிப்பது கடினமாக இருந்தது. அந்த அனுபவம் என் மனதில் நிறைந்திருந்தது. நான் லடாக் மாரத்தான் ஓடியபோது லே மார்க்கெட்டில் பலர் ஓட்டத்தை நிறைவு செய்வதைப் பார்த்தேன். 72 கி.மீட்டர் கடினமான நிலப்பரப்பைப் பார்த்து வியந்து போனேன். முறையான தகுதி பெற்றிருப்பதால், நாமும் ஏன் முயற்சி செய்யக்கூடாது என்று யோசித்தேன்,” என்று நினைவுகூர்ந்தார்.

அடர்ந்த மூடுபனி, எதிரில் இருப்பது தெளிவாக தெரியாது, வழுக்கலான நீர் தேக்கங்கள் அனைத்தையும் கடந்து புஷ்பா மலையில் ஓடினார். சரிவுகளில் மேலும் கீழுமாக ஆறரை மணி நேரம் ஓடினார். மிகப்பெரிய சவாலுக்கு தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும் விதமாக லோனாவாலாவில் 60 கி.மீட்டர் இரவு நேரத்தில் ஓடினார்.

“வயதாக ஆக, தசைகள் வலுவிழக்கத் தொடங்கும். நீண்ட தூரம் ஓடும்போது ஸ்டாமினா, தசைகள், முதுகு, முட்டி, தொடையின் தசைநார்கள் என அனைத்தும் நல்ல நிலையில் இருக்கவேண்டும். எனக்கு முழங்கால் மூட்டு வாதம் இருப்பது கண்டறியப்பட்டது. அக்சா கடற்கரையில் மணலில் ஓடி என் முழங்காலை வலுப்படுத்திக்கொண்டேன்,” என்கிறார்.

கடினமான, நீண்ட பயணம்

புஷ்பாவின் கடினமான, நீண்ட பயணத்தில் 30% ஓடவேண்டும். மற்ற நேரம் முழுக்க நடைதான்.

”50% குறைவான ஆக்சிஜனே இருக்கும். ஓடும்போது மூச்சு வாங்கும். சில இடங்களில் ஒரு கிலோமீட்டர் ஓட 20 நிமிடங்கள் வரை எடுக்கும்.

அந்த நிலப்பரப்பிலும் உயரத்திலும் ஓடுவது கடினம். 32 கி.மீட்டர் கடந்துவிட்டோம் என நினைப்போம். 48 கி.மீட்டரில் மீண்டும் சோர்வடைந்துவிடுவோம். கீழே இறங்கி ஓடும்போது காலின் முன் பகுதியில் வலி இருக்கும். மூட்டுகளிலும் அழுத்தத்தை உணர முடியும்,” என்கிறார். அவர் மேலும் கூறும்போது,

“மிகவும் கடினமான மாரத்தான் அது. இளம் வயதினர்கூட மூச்சு விட சிரமப்படுவதைப் பார்க்கமுடியும். பலர் பின்வாங்கி விடுவார்கள். 8, 10.5, 12 மற்றும் 14 மணி நேரம் கட் ஆஃப் இருக்கும்,” என்றார்.
pushpa-marathon-3

’வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே’ என்று சொல்வார்கள். ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் உடம்பு நாம் சொல்வதைக் கேட்காது என்பதையும் புஷ்பா ஒப்புக்கொள்கிறார்.

“ஜிப்ஸா வருவதற்கு முன்பு மாதேரன் அருகில் இருக்கும் நேரல் பகுதியில் ஓடினேன். அந்த உயரத்தில் ஓடுவது மிகவும் கடினமாக இருந்தது. 50 கி.மீட்டர் ஓடினேன். கடைசி எட்டு கிலோமீட்டர் ஓடியபோது காலின் முன்பகுதியில் கடுமையான வலி இருந்தது. அதன் பிறகு வலி இல்லை. சில சமயம் வலிகளைப் புறக்கணித்துவிடுவது நல்லது,” என்கிறார்.

புஷ்பாவிற்கு தொடர்ந்து ஆதரவளித்து உற்சாகப்படுத்துவது அவரது மகளும் நட்பு வட்டமும்தான்.

”நான் காலை 5 மணிக்கு எழுந்துவிடுவேன். ஒரு மணி நேரம் ஓடுவேன். யோகா செய்வேன். ஜிம் செல்வேன். பாட்காஸ்ட் கேட்பேன். சமையல் செய்து முடித்துவிட்டு ஆபீஸ் புறப்படுவேன். மாலையில புத்தகம் படிப்பேன். மகளுடனும் சகோதரிகளுடனும் பேசுவேன். 9.30 மணிக்கு படுக்கைக்கு சென்றுவிடுவேன். ஞாயிற்றுக்கிழமைகளில் குழுவாக ஒன்று சேர்ந்து ஓடுவோம்,” என்கிறார்.

வாழ்க்கையை ஒழுக்கத்துடனும் நிறைவுடனும் வாழ வேண்டும் என்பதே அவர் வலியுறுத்தும் முக்கிய கருத்து. மென்மேலும் அதிக உச்சத்தை தொட்டுவிட வேண்டும் என்கிற துடிப்புடன் இருக்கிறார் புஷ்பா.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா