பயன்படுத்திய இருசக்கர வாகன சந்தையில் வெற்றிகரமாக இயங்கும் நரேன் கார்த்திகேயனின் ஸ்டார்ட்-அப்!
இந்தியா உலகிலேயே இரு சக்கர வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்யும் சந்தையாக இருக்கிறது.
இத்தொழில் அமைப்பான சியாம் (SIAM) தகவல்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 20 மில்லியன் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாகின்றன. சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளில் பயன்படுத்திய இருசக்கர வாகங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
இருப்பினும், பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில், அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் வெகுசிலவே இருக்கின்றன.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 கார் பந்தைய வீரரான நரேன் கார்த்திகேயன் தனது சிறுவயது நண்பர் கிறிஸ்டோபர் ஆனந்த் சற்குணத்துடன் இணைந்து ’ட்ரைவ் எக்ஸ்’ (
) நிறுவனத்தை 2020ல் துவக்கினார். கோவையைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் மக்களுக்கு கையடக்க விலையில் போக்குவரத்து தீர்வுகளை அளிக்க விரும்புகிறது.“கோவிட் பொதுமுடக்கத்தின் போது நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, இந்தியாவில் செலவுகுறைந்த போக்குவரத்து வசதியின் தேவை பற்றியும், தொழில்நுட்பம் எப்படி இதற்கான தீர்வாகவும் அமையும் என்று நரேன் கார்த்திகேயன் தெரிவித்த போது இந்த எண்ணம் உண்டானது,” என்கிறார் இணை நிறுவனர் மற்றும் சிடிஓ கிறிஸ்டோபர்.
டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை நடத்துவதில் அனுபவம் உள்ள கிறிஸ்டோபர் லேமான் பிரதர்ஸ், நொமுரா, ஸ்காட்லாந்து வங்கி உள்ளிட்டவற்றிலும் பணியாற்றி இருக்கிறார்.
இருசக்கர வாகனங்கள்
வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகனங்களை சந்தா செலுத்தி பயன்படுத்தும் வகையிலும், குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளவும் உதவும் டிஜிட்டல் மேடையாக ’ட்ரைவ் எக்ஸ்’ துவங்கியது. முன்பணம் செலுத்தத் தேவையில்லை என்பதோடு, வாகன வசதி, பராமரிப்பு, காப்பீடு, டயர் மாற்று உள்ளிட்டவை கொண்ட சந்தா சேவையையும் வழங்குகிறது.
2021ல், பயன்படுத்திய இருசக்கர வாகங்களை புதுப்பித்து விற்கும் மாதிரியை துவங்கியது. புதிய வாகனங்கள் வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் வாரண்டி, நிதிஉதவி, சேவை, நம்பகத்தன்மை ஆகியவை அனைத்தும் பயன்படுத்திய வாகனங்களுக்கும் வழங்கப்படுகிறது.
“சந்தா முறை மெட்ரோ நகரங்களில் நன்றாக செயல்பட்டாலும், வாடிக்கையாளர்கள், குறிப்பாக சிறிய நகரங்களில் உள்ளவர்கள் வாகனங்கள் உரிமையை விரும்புவதை உணர்ந்தோம்,” என்கிறார் நரேன் கார்த்திகேயன்.
“நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் இணைந்து செயல்பட்ட அனுபவத்தில், நிதி வசதி இல்லாதது, உள்ளூர் நிதி அளிப்பவர்களின் ஆதிக்கம், தரமான வாகனங்களைக் கண்டறிவதில் சிக்கல், குறுகிய காலத்தில் வேறு வாகனங்களுக்கு மாறுவதில் சிக்கல் உள்பட பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதை உணர்ந்தோம்,” என்கிறார்.
இந்த இடைவெளியை போக்க, ’ட்ரைவ் எக்ஸ்’, இத்துறையில் தன்னை தனித்து நிற்க வைத்து, பயன்படுத்திய வாகனங்களை விற்பனை செய்வதில் வெற்றி பெற, சில முக்கிய அம்சங்களை கண்டறிந்தது.
வழக்கமான முறைகள் தவிர, வாடிக்கையாளர்கள், நிறுவனங்கள், டீலர்கள் என பலதரப்பினரிடம் இருந்து வாகனங்களை நிறுவனம் பெறுகிறது. வாகனங்கள் பராமரிப்பிற்காக நவீன வசதிகள் கொண்ட பயன்படுத்திய வாகனங்களுக்கான ’ட்ரைவ் எக்ஸ்’ தொழில்நுட்ப மையங்களையும் அமைத்துள்ளது.
120 அம்சங்கள் பட்டியல் கொண்டு வாகனங்கள் சோதிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனைக்கு பிறகான வாரண்டியும் அளிக்கப்படுகிறது. நிதி உதவிக்கான முறையையும் ஏற்படுத்தியுள்ளது. உடனடி கடன் அனுமதி, குறைந்த வட்டி, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூலம் முன்பணம் என வாகனங்களுக்கு மறுநிதி வசதியும் அளிக்கிறது. வாகனங்களை பரிசோதனை செய்ய, தொழில்நுட்ப மையங்களை பராமரிக்க, வாகனங்கள் இருப்பை அறிய, நிதி வசதி ஆகியவற்றுக்கான பிரத்யேக தொழில்நுட்பத்தையும் நிறுவனம் கொண்டுள்ளது.
அமைப்பு சாராத பயன்படுத்திய இருசக்கர வாகன சந்தையில் செயல்படுவது தான் மிகவும் சவலானது என நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.
“நாடு முழுவதும் உள்ள பயன்படுத்திய வாகனங்கள் டீலர்கள் வாகனங்களை திரட்டுவது, லாபத்தை அதிகமாக்குவதில் கவனம் செலுத்தும் போது, டிரைவ் எக்ஸ் புதுப்பிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு ஏற்ற போக்குவரத்து சூழலை, நீடித்தத் தன்மை கொண்ட, பிராண்ட்கள் நிலையை தக்க வைக்கும் சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது என்கிறார் நரேன்.
“மூல உற்பத்தி நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள், சேவையாளர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்படும் வகையில் எங்கள் பணி அமைந்துள்ளது என்கிறார்.
பீப்கார்ட், கிரெட் ஆர் போன்ற நிறுவனங்கள் இந்த பிரிவில் செயல்பட்டு வருகின்றன.
வளர்ச்சி
நிறுவனம் துவக்கத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அளித்த நிதியில் துவங்கியது. பின்னர் 2021-22ல் ஏ சுற்று நிதி பெற்றது.
2022 ஆகஸ்ட்டில், நிறுவனம் டிவிஎஸ் நிறுவனத்திடம் இருந்து, ரூ.85.41 கோடி நிதி பெற்றது. இதன்படி, முதன்மை மற்றும் இரண்டாம் முதலீடுகள் மூலம் NMMSPL வாயிலாக 48.27 சதவீத பங்குகள் வாங்கப்பட்டன.
துவங்கிய 12 மாதங்களில் நிறுவனம் இரண்டு புதுப்பிப்பு மையங்கள் மற்றும் நான்கு நிறைவு அளிக்கும் மையங்களை அமைத்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது வருவாய் 40 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. 21 ம் ஆண்டில் வருவாய் 17 மடங்கு அதிகரித்தது.
ஆண்டுக்கு 7 ஆயிரத்திற்கும் மேலான பரிவர்த்தனைகள், முதல் மற்றும் இரண்டாம் அடுக்கு நகரங்களில் 50 மையங்கள், ஐந்து புதுப்பிப்பு மையங்கள் எனும் இலக்கை நோக்கி நிறுவனம் சென்று கொண்டிருக்கிறது.
2021 நிதியாண்டில் ரூ.45-50 லட்சம் வருவாய் ஈட்டிய நிலையில், 22 நிதியாண்டில் இதுவரை ரூ.8 கோடி ஈட்டியுள்ளது.
பயன்படுத்திய வாகனங்கள் விற்பனை, சேவை மூலம் பிராதானமாக வருவாய் ஈட்டுகிறது. நிறுவனத்திற்கு சொந்தமான, நிறுவனம் இயக்கும் மையங்கள், ஷோரூம் தவிர, பிரான்சைஸ் மாதிரிகளையும் கொண்டுள்ளது.
2023 பிப்ரவரியில் நிறுவனம் கோவையில் டிரைவ் எக்ஸ், தொழில்நுட்ப மையத்தை கோவையில் அமைத்தது. சென்னை, மற்றும் ஓசூரில் அமைக்க திட்டமிட்டுள்ளது. கோவை மையம் மாதத்திற்கு 300-400 இருசக்கர வாகனங்களை புதுப்பிக்கும் திறன் கொண்டது. பல பிராண்ட் வாகனங்களைக் கையாளும் திறன் கொண்டது. நிறுவன தேவைக்கேற்ற அம்சங்களை உறுதி செய்யும் எல்ஜி இயந்திரங்கள் கொண்டுள்ளது.
எதிர்காலம்
நிறுவனம் இந்தியா முழுவதும் தொழில்நுட்ப மையங்கள் அமைக்க விரும்புகிறது. ஆண்டுக்கு 6 ஆயிரம் வாகனங்களுக்கு மேலான சில்லறை விற்பனையை அடையவும் 50 விற்பனை மையங்கள், ஐந்து புதுப்பிப்பு மையங்களைக் கொண்டிருக்கவும் திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் பிரான்சைஸ் அமைத்து விரிவாக்கம் செய்யவும் விரும்புகிறது.
எதிர்காலத்தில் மொத்த அமைப்பையும் பத்து மடங்கு விரிவாக்கம் செய்யும் உத்தேசத்துடன், தொழில்நுட்ப பணியாளர்கள், பெயிண்டர்கள் உள்ளிட்டவர்களை நியமனம் செய்து வருகிறது. ஐடிஐ பட்டதாரிகளுக்கு வேலை அளிக்கவும் பயிற்சி கல்லூரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
ஆங்கிலத்தில்: திரிஷா மேதி | தமிழில்: சைபர் சிம்மன்
மகளின் தோல் பிரச்சனைக்கான தீர்வு தேடலில் உருவான ப்ராண்ட் - கோவை ‘வில்வா’ வெற்றிக்கதை!
Edited by Induja Raghunathan