16 வயதில் 25 ரூபாயுடன் கோவை வந்த ராஜா, ‘ஸ்ரீ ராஜா பிரியாணி ஹோட்டல் & லாட்ஜ்’ கட்டமைத்த வெற்றிக்கதை!
1979ல் சொந்த ஊரை விட்டு, கையில் 25 ரூபாயுடன் கோவை வந்து, தற்போது 10 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மூன்று பிரியாணி ஹோட்டல்கள் மற்றும் 30 அறைகள் அடங்கிய லாட்ஜின் சொந்தக்காரராக வலம் வருகிறார் 55 வயது கே.ஆர்.ராஜா.
விக்ரமனின் திரைப்படங்களில் பார்க்கக் கிடைக்கும் வளர்ச்சியை நினைவுப்படுத்துகிறது ராஜாவின் வெற்றி. ஆனால், அது ஒரு பாடல் ஒலித்து முடியும் ஐந்து நிமிடங்களிலோ, ஒரிரவிலோ நடந்தது அல்ல. பல்லாண்டு கனவுகள், விடாமுயற்சி, நம்பிக்கை தான் கோவையில் ‘ஸ்ரீ ராஜா பிரியாணி ஹோட்டல் & லாட்ஜ்’ வைத்து நடத்தும் கே.ஆர்.ராஜாவின் வெற்றியை சாத்தியப்படுத்தியது.
ஒரு ஹோட்டல் தொடங்கி நடத்துவதில் என்ன பெரிய சவால் இருக்கப் போகிறது என்பது தான் எனக்கு தோன்றிய முதல் கேள்வி. ஆனால், வளமான பின்புலத்தோடு இருக்கும் குடும்பத்தில் பிறந்து, நலிந்து போயிருந்த பிசினஸை தூக்கி நிறுத்திய கதை அல்ல ராஜாவினுடையது.
1963 ஆம் ஆண்டில், தேவகோட்டை அருகில் இருக்கும் கோவிந்தமங்களம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கே.ஆர்.ராஜா. 1974 ஆம் ஆண்டு உண்டான பஞ்சத்தில் இருந்து பிழைக்க, தன்னுடைய ஒன்பது வயதிலேயே ஊரை விட்டு ஓடி, மானாமதுரையில் இருக்கும் ஒரு முறுக்கு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். வேலை செய்ய தொடங்கிய சில தினங்களிலேயே பள்ளிப்படிப்பை தொடர வேண்டும் எனும் வேட்கை உண்டாக திரும்பவும் கிராமத்திற்கே வந்து சேர்ந்தார்.
அவருடைய கிராம பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரையிலுமே இருந்ததால், தினமும் நான்கு கிமீ நடந்து பக்கத்து கிராமத்தில் இருந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். படிக்கும் காலத்திலேயே அவருக்கு பிசினஸ் செய்வதின் மீது ஆர்வம் இருந்ததாக சொல்கிறார்.
“மத்த பிள்ளைங்க எல்லாம் விளையாடிட்டு இருக்கும் போது, நான் எழுபத்தஞ்சு பைசாவுக்கு கடலை மிட்டாய் எல்லாம் வாங்கி ஒரு ரூபா இருபத்தஞ்சு பைசாவுக்கு வித்துடுவேன்,” என்கிறார்.
மேலும், ஒரு சின்னப் பெட்டியில் பொருட்கள் நிறைய வாங்கி வைத்து பெட்டிக்கடை போல நடத்தியதாகவும் நினைவுகூர்கிறார். பிறகு 1979 ஆம் ஆண்டில், இருபத்தைந்து ரூபாயோடு கோவைக்கு பஸ் ஏறியிருக்கிறார்.
“கோவையில் வேலை தேடிய நாட்களில் தங்க இடமின்றி சில சமயம் நடைப்பாதையில் தூங்கியுள்ளேன்...” என்றார்.
பின் ஒப்பணக்கார வீதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். வேலை செய்து கொண்டிருக்கும் போதே கூடுதலாக எதையாவது செய்ய வேண்டும் என யோசித்து, துணி வியாபாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்.
“என் அப்பா அம்மா செஞ்சு போட்டிருந்த செயினை அடமானம் வெச்சு, ஒரு கடையில துணி வாங்கி ஹோட்டல்ல வேலை செஞ்சுட்டு இருந்தவங்களுக்கு எல்லாம் வியாபாரம் பண்ணுனேன்.”
மாதம் தொடங்கும் போது பணத்தை வசூல் செய்வாராம். இப்படி போய் கொண்டிருக்கும் போதே,தையல் வேலை பயின்றிருக்கிறார். வைக்கோல் விற்பது, துணி தைப்பது என இடையிடையே பல முயற்சிகள் செய்தபடியே இருந்திருக்கிறார். பிறகு, 1986 ஆம் ஆண்டில் பாப்பநாயக்கன்பாளையத்தில் ஒரு பெட்டிக்கடை தொடங்கியிருக்கிறார். 1987-ல் ஆறுக்கு பத்து இருந்த ஒரு அறையை வாடகைக்கு எடுத்து உணவகம் தொடங்கியிருக்கிறார்.
“இரண்டு சின்ன மடக்கு டேபிள், ஒரு தோசைக்கல் வெச்சுட்டு ஒரு டிபன் கடை மாதிரி அதை தொடங்கினேன்,” என்கிறார்.
சமையலில் முன் அனுபவம் இருந்ததால், கூடுதல் முயற்சியோடு சமையல் வேலையையும் சிறப்பாக செய்ய கற்றுக் கொண்டு செய்திருக்கிறார் ராஜா. அதுவரை கடினமாக உழைத்துக் கொண்டேயிருந்த ராஜா, பெரும் தடங்கலை சந்தித்தது 1989 ஆம் ஆண்டில். குறிப்பிட்ட அரசியல் பின்புலம் உடைய ஒரு குழுவினர் உணவகத்தில் சாப்பிட்டதற்கு பணம் செலுத்த தவறியதால் உண்டான பிரச்சினை வன்முறையாக மாறியிருக்கிறது.
“அது கரெக்டா தீபாவளிக்கு முன்னாடி நாள். ஊருக்கு போகலாம்னு எல்லாரும் ரெடி ஆயிட்டு இருந்தப்போ அப்படி நடந்துச்சு. அந்த சண்டையில் என் கை விரல் வெட்டப்பட்டது,” என நினைவுகூர்கிறார்.
அப்போதிருந்த வியாபாரிகள் சங்க தலைவரும், பத்திரிக்கையாளர் கருணாகரனும், காவல்துறையினருமே தனக்கு அப்போது ஆதரவாக இருந்ததாக சொல்கிறார் கே.ஆர்.ராஜா. தன் பக்கம் நியாயம் இருக்கும் வரை யாருக்குமே அஞ்ச வேண்டியதில்லை என இவர்கள் வலியுறுத்தியது தான் தனக்கு பெரிய பக்கபலமாக இருந்ததென திரும்ப திரும்ப நன்றியோடு நினைவுகூர்கிறார்.
அந்த சிக்கலை சமாளித்த பிறகு, 1992 ஆம் ஆண்டில், கோவை ஆவாரம்பாளையத்தில் ஒன்றே-கால் செண்டு நிலம் வாங்கி அதில் உணவகம் கட்டியிருக்கிறார். இது அவருடைய பிசினஸ் வாழ்க்கையில் பெரும் வளர்ச்சியாக அமைந்திருக்கிறது. அந்த வளர்ச்சி நிலையானதாக இருந்ததால், அந்த ஹோட்டலுக்கு கிளைகளும் முளைத்திருக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக 2007 ஆம் ஆண்டில், காந்திபுரத்தில் லாட்ஜ் ஒன்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகியிருக்கிறது.
“நான் முதன்முதலாக வந்திறங்கிய காந்திபுரம் பஸ் ஸ்டாண்டிலேயே ஒரு லாட்ஜை விலைக்கு வாங்க வாய்ப்பு கிடைச்சுது. லோன் போட்டு அதை வாங்கினேன்,” என்கிறார்.
வளமான பின்புலம் இல்லாமல் இளம் வயதில் கோவைக்கு வந்து, பல்லாண்டு உழைப்பின் விளைவாக ஒரு லாட்ஜை வாங்கியிருப்பது அவருக்கு பெரிய வெற்றி. மேலும், பல நூறு மக்கள் தன் ஹோட்டல்கள் வழியே பசியாறுவதையும் பெருமிதமாக நினைக்கிறார். இந்த மகிழ்ச்சி நிரந்தரமான உணர்வாக இருப்பதில்லை. பெரும் சவால்களை சந்தித்த ராஜா, கோவையில் ஹோட்டல் நடத்துவதில் இருக்கும் சிக்கல்களில் ஒன்று ரௌடியிசம் என்று சொல்கிறார். தற்போது காவல்துறையின் தலையீட்டால் பெரிய அளவில் பாதிப்புகளை சந்திப்பதில்லை எனவும் சொல்கிறார்.
இன்றைய நாளில், ‘ஸ்ரீ ராஜா பிரியாணி ஹோட்டல்கள்’ அங்கு பரிமாறப்படும் உணவின் தரத்திற்கு பெயர் பெற்றவையாக இருக்கிறது. எப்போதுமே குறைந்த லாபத்தில் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதே தன்னுடைய நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கிறார் ராஜா.
பெரிய அளவில் வளர்ச்சி காண்பதற்கு முன்னரே நூறு கிராம் சில்லி சிக்கனை வெறும் பனிரண்டு ரூபாய்க்கு கொடுத்திருக்கிறார் அவர். மேலும், பத்து ஆண்டுகளுக்கு முன் விற்கப்பட்டுக் கொண்டிருந்த பரோட்டாவை தற்போதும் பத்து ரூபாய்க்கே அளிக்கிறார்.
“சரியான பொருட்களை வாங்கி கொடுத்தா உணவோட தரம் மாறாம இருக்கும்,” என உணவின் தரத்திற்கான வழியை சொல்கிறார்.
வர்த்தகம் பற்றிய பட்டப்படிப்பை முடித்திருக்கும் ராஜாவின் மகனும் தற்போது ஹோட்டல்களை நடத்த முன்வந்திருப்பது தனக்கு பெரிய ஆதரவென ராஜா உணர்கிறார். தரமான உணவு நவீன தொழில்நுட்பங்களோடு இணையும் போது பெரிய அளவில் பேசப்படும் என்பதை நிரூபிக்க, சமூக வலைதள மார்க்கெட்டிங் முதலானவற்றை அவருடைய மகன் கையாண்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். இதன் வழியே பிசினஸும் விரிவடைகிறது.
அடுத்த தலைமுறை தொழில் முனைவோருக்கு வெளிச்சமாக இருக்க நினைக்கும் கே.ஆர்.ராஜா, அடிப்படையில் அறிவுரை தேடி வரும் இளம் பிசினஸ்மேன்களுக்கு சொல்வது,
‘ஒரு முறை தோல்வியை கண்டாலும் மனம் தளராமல் அடுத்த முயற்சியை செய்ய வேண்டும்’ என்பதே...
தனித்து தொழில் நடத்த தொடங்கி மனம் தளர்ந்து போயிருக்கும் ஏதோ ஒரு இளைஞருக்கு நம்பிக்கை ஊட்டவேனும் கே.ஆர்.ராஜாவின் கதை பலமுறை சொல்லப்பட வேண்டியதாக இருக்கிறது!