'ஏஐ துறையில் இந்தியா முன்னிலை பெற 1 மில்லியன் டாலர் முதலீடு'- Perplexity AI சி.இ.ஓ உறுதி!
சீன ஏஐ நிறுவனம் Deepseek உருவாக்கியுள்ள காரண காரியங்களை விளக்கும் திறன் கொண்ட ஏஐ மாதிரியான டீப்சீக் ஆர்1 நுட்பத்தை அனைத்து வகையிலும் மிஞ்சக்கூடிய நுட்பத்திற்கு மேலும் 10 மில்லியன் டாலர் முதலீடு வழங்குவேன், என்றும் அரவிந்த ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.
ஏஐ நுட்பத்திற்கான சர்வதேச அளவிலான போட்டி தீவிரமாகிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் ஏஐ முயற்சிகளை ஊக்குவிக்க தனிப்பட்ட அளவில் ஒரு மில்லியன் டாலர் முதலீடு மற்றும் வாரத்திற்கு ஐந்து மணி நேர கவனம் ஆகியவற்றை அளிக்கத் தயாராக இருப்பதாக பிரப்ளக்சிட்டி ஏஐ (Perplexity AI) நிறுவன சி.இ.ஓ.அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.
“தனிப்பட்ட முறையில் ஒரு மில்லியன் டாலர் முதலீடு மற்றும் வாரத்தில் என்னுடைய ஐந்து மணி நேரத்தை, ஏஐ துறையில் இந்தியாவை மகத்தானதாக உருவாக்கக் கூடிய மிகவும் தகுதி படைத்த குழுவுக்கு அளிக்கத்தயாராக உள்ளேன். இதை பின்வாங்க முடியாத ஒரு உறுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த குழு, டீப்சீக் குழு போல ஈடுபாடு மிக்கதாக இருக்க வேண்டும், எம்.ஐ.டி உரிமம் கொண்ட ஓபன் சோர்ஸ் மாடலை பயன்படுத்த வேண்டும்,” என்றும் அவர் எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
சீன ஏஐ நிறுவனம் டீப்சீக் (DeepSeek) உருவாக்கியுள்ள காரண காரியங்களை விளக்கும் திறன் கொண்ட ஏஐ மாதிரியான 'டீப்சீக் ஆர்1' நுட்பத்தை அனைத்து வகையிலும் மிஞ்சக்கூடிய நுட்பத்திற்கு மேலும் 10 மில்லியன் டாலர் முதலீடு வழங்குவேன், என்றும் கூறியுள்ளார்.
டீப்சீக் ஆர்1 மாதிரி (DeepSeek R1) தர்க விளக்கம், கணித தீர்வுகள், நிகழ்நேர முடிவெடுத்தல் திறன் கொண்டுள்ளது.
2022ல் உருவாக்கப்பட்ட பிரப்ளக்சிட்டி, இயந்திர கற்றல் மற்றும் என்.எல்.பி ஆகிய நுட்பங்களை கொண்டு செயல்படும் ஏஐ தேடியந்திர சாட்பாட் சேவையாக விளங்குகிறது. ஓபன் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிடும் இந்த ஸ்டார்ட் அப்,. கடந்த டிசம்பரில் நான்காவது சுற்றில், 9 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டில் 500 மில்லியன் டாலர் நிதி பெற்றது.
இந்தியர்கள் ஏஐ மாதிரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு பதில் ஏற்கனவே உள்ள மாதிரிகள் சார்ந்த சேவையை உருவாக்க வேண்டும், என இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி கூறிய கருத்து தவறானது என்றும் பிரப்ளக்சிட்டி நிறுவனர் அண்மையில் கூறியிருந்தார். இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறியிருந்தார்.
“நந்தன் நிலேகனி அற்புதமானவர், இன்போசிஸ், யுபிஐ போன்றவை மூலம் நாம் யாரும் நினைக்க முடியாததை விட இந்தியாவுக்கு அதிகம் செய்திருக்கிறார். ஆனால், ஏஐ மாதிரி பயிற்சி திறன் அல்லாமல், ஏற்கனவே உள்ள மாதிரிகள் அடிப்படையில் இந்தியர்களை செயல்படச் சொல்லும் அவரது கருத்து தவறானது. இரண்டுமே தேவை.” என்கிறார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றுக்கு பதில் அளிக்கும் வகையில் இரண்டாவது பதவை வெளியிட்டிருந்தார்.
“ஏஐ மாதிரிகள் பயிற்சி அளிக்கும் விவாதம்: பிரப்ளக்சிட்டியை உருவாக்கும் போது எனக்கு உண்டான சிக்கல் போலவே இந்தியாவும் இந்த சிக்கலை எதிர்கொள்வதாக உணர்கிறேன். மாதிரிகளை உருவாக்குவதற்கு பெரும் அளவில் பணம் தேவை. ஆனால், ஏஐ துறையிலும் இஸ்ரோ போல செயல்படமுடியும் என இந்தியா உலகிற்கு உணர்த்த வேண்டும். எலான் மஸ்க் இஸ்ரோவை (புளு ஆரிஜனை அல்ல) பாராட்டக் காரணம், அதிகம் செலவு செய்யாமல் விஷயங்களை செய்து முடிப்பதை அவர் மதிப்பது தான். அதே முறையில் தான் அவர் செயல்படுகிறார். டீப்சீக் சாதனையை கருத்தில் கொள்ளும் போது ஏஐ துறையிலும் இப்படி சாதிக்க வாய்ப்புள்ளது”.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனியார் துறை முதலீடாக 500 பில்லியன் டாலர் வரையான முதலீட்டை, ஓபன் ஏஐ மற்றும் சாப்ட் பேங்க் இடையிலான கூட்டு முயற்சி ஸ்டார்கேட் வாயிலாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் டேட்டா செண்டர்களை அமைத்து, ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கம் கொண்டது இது.
இந்தத் திட்டம் துவக்கத்தில் சாப்ட்பாங்க், ஓபன் ஏஐ, ஆரக்கிள், எம்ஜிஎக்ஸ் நிதி பெறும். சாப்ட்பாங்க், ஓபன் ஏஐ,முதன்மை பங்குதாரர்களாக விளங்கும். சாப்ட்பாங்க் சி.இ.ஓ.மசயோஷி சென் தலைவராக இருப்பார்.
இந்த அறிவிப்பை சுட்டிக்காட்டும், கிசான் ஏஐ நிறுவனர், உலகம் இப்படி தீவிரமாக இருக்கும் போது, இந்தியாவில் இன்னமும் ஏஐ மாதிரிகளில் கவனம் செலுத்த வேண்டுமா இல்லையா என விவாதித்துக்கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.
ஐஐடி மாணவர்களுக்கு சலுகை
பிரப்ளக்சிட்டி ஏஐ தேடியந்திரம் இலவச மற்றும் பிரத்யேக அம்சங்கள் கொண்ட கட்டணச் சேவை ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் பிரத்யேக அம்சங்களை, ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் இலவசமாக பயன்படுத்த பிரப்ளக்சிட்டி ஏஐ அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை ஐஐடி மெட்ராஸ் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
பிரப்ளக்சிட்டி சி.இ.ஓ.அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ஐஐடி மெட்ராசில், பிடெக் மற்றும் எம்டெக் இரட்டை பட்டம் பெற்ற முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“பிரப்ளக்சிட்டி தேடியந்திரம் நிகழ்நேர தகவல் மற்றும் மொழி மாதிரிகள் நுட்பத்தை இணைத்து பயன்படுத்துகிறது. சான்றுகளையும் அளிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் ஆய்வுக்கு இதை பயன்படுத்துகின்றனர். கட்டணச்சேவை மூலம் மாணவர்கள் ஏஐ மாதிரிகளை அதிகம் நாடலாம். இந்த வசதியை இலவசமாக அளிக்க முன்வந்துள்ள அரவிந்த் ஸ்ரீனிவாசுக்கு நன்றி,” என ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
”ஏஐ தேடல் ஆன்லைனில் எதிர்காலத் தலைமுறை தகவல்களை பெறும் மற்றும் கற்றல் முறை மீது தாக்கம் செலுத்துகிறது. நான் படித்த கல்வி நிறுவன மாணவர்களுக்கு இந்த சேவையை இலவசமாக வழங்குவதை பெருமையாக கருதுகிறேன், என அரவிந்த் ஸ்ரீனிவாஸ் அந்த செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.
Edited by Induja Raghunathan