Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கணவரின் தொடர் கொடுமைகள்; மறுவாழ்வு தேடி சென்னை வந்த மூன்று பெண்களின் பகிர்வு!

குடும்ப வன்முறையிலிருந்த மீண்ட 3 பெண்கள், எவ்வாறு கலாச்சார மற்றும் நிதித் தடைகளை உடைத்து, அவர்களது வாழ்வை மறுகட்டமைப்பு செய்தார்கள் என்று பகிர்ந்து, மற்றவர்களுக்கான இன்ஸ்பிரேஷனாகி உள்ளனர்.

கணவரின் தொடர் கொடுமைகள்; மறுவாழ்வு தேடி சென்னை வந்த மூன்று பெண்களின் பகிர்வு!

Saturday November 16, 2024 , 5 min Read

அக்டோபர் மாதம் குடும்ப வன்முறை விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்ட நிலையில், குடும்ப வன்முறையிலிருந்த மீண்ட 3 பெண்கள், எவ்வாறு கலாச்சார மற்றும் நிதித் தடைகளை உடைத்து, அவர்களது வாழ்வை மறுகட்டமைப்பு செய்தார்கள் என்பதை சோஷியல் ஸ்டோரியிடம் பகிர்ந்து, அவர்களை போன்றொருக்கான இன்ஸ்பிரேஷன் நாயகிகளாகி உள்ளனர். அவர்களின் பகிர்வின் தொகுப்பு இது.

இவர்களது கதை குடும்ப வன்முறை பற்றி பேசுகிறது என்பதால், நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் குடும்ப துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், தயவு செய்து 181 (பெண்களுக்கான தேசிய ஆணையம் ஹெல்ப்லைன்), +91-11-23389680 (அகில இந்திய மகளிர் மாநாடு), 1800 102 7282 (PCVC), அல்லது +91-11-24373736 (சக்தி ஷாலினி) ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

women reclaim life after domestic abuse

1. பெயர்- மரகதம்; வயது- 36; புதுக்கோட்டை.

எங்களது குடும்பம் ஏழ்மையானது. எனக்கு 2 இளைய சகோதரர்கள். 5ம் வகுப்போடு என் படிப்பை நிறுத்திவிட்டனர். 16 வயதிலே என் தாயின் சகோதரருக்கு திருமணம் செய்து வைத்தனர். அப்போது அவருக்கு வயது 34. இளம் வயதில் உணர்ச்சி முதிர்ச்சியோ அல்லது என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் கல்வியறிவோ இல்லாததால், என் கணவரைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கும். அதனால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியவில்லை. அப்போது தான் வன்முறை தொடங்கியது.

இரக்கமின்றி அடிக்க ஆரம்பித்தார். சில நாட்களில், அவர் முழு குடும்பத்தின் முன்னிலையிலும் என்னை அடித்தார். சந்தைக்குச் செல்ல வெளியே வரும்போது கூட சந்தேகப்பட ஆரம்பித்தார். மாமியார் வீட்டில் அனுபவித்த கொடுமைகளை என் குடும்பத்தினரிடம் கூற முடியாது. என் பெற்றோரும் அவருடைய குடும்பத்தினரின் பக்கம்தான் இருப்பார்கள். அவர்கள் நல்ல வசதி படைத்தவர்கள் என்பது என் வழக்கையை இன்னும் கடினமாக்கியது. அவர்களுக்கு சேவை செய்வதற்காக தான், என்னை அவர்களது குடும்பத்தில் சேர்த்துள்ளார்கள் என்பதை உணர்ந்தேன்.

தினசரி வன்முறையைத் தாங்க முடியாமல், எனது திருமணத்தின் இறுதிக் கட்டத்தை அடைந்தேன். காது கேளாத, வாய் பேசமுடியாமல் பிறந்த என் மகளுடன் தப்பிக்க முயன்றேன். குழந்தையின் பிறப்பு மற்றும் ஊனமுற்ற சான்றிதழ்கள், திருமண சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை போன்ற முக்கியமான ஆவணங்களை ஒவ்வொன்றாக கொல்லைப்புறத்தில் மறைக்க ஆரம்பித்தேன். கடைசியாக, வீட்டிலிருந்து தப்பித்தேன். புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் சென்றடைந்தேன்.

அப்பெரிய பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் சில மணி நேரம் அமர்ந்தேன். நாள் முழுவதும் சரியான உணவு சாப்பிடவில்லை. அப்போது தான், மதுரவாயல் காவல் நிலையத்திற்குச் சென்றேன். அவர்கள் என் கதையைக் கேட்டு என்னையும் என் குழந்தையையும் சென்னையில் உள்ள ஒரு NGO நிறுவனமான The International Foundation for Crime Prevention and Victim Care (PCVC) க்கு அழைத்துச் சென்றனர். அன்றிரவு தொடங்கி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன, புதிய நகரத்தில் தனி மனிதியாக வாழ்வது, செவிலியராக வாழ்வாதாரத்தை தேடிக் கொள்வது, என்னையும் என் செலவுகளையும் எப்படிக் கவனித்துக்கொள்வது என்று வாழ்க்கையை வாழ கற்றுக்கொண்டேன்.

இங்கு வந்த பிறகும், என் கணவர் ஆட்களை அனுப்பி, 8 மாதங்களுக்கு முன்பு என் மகளை அழைத்துச் சென்றார். அவளை எண்ணி கவலையாக உள்ளது. ஆனால், PCVC எனக்கு அளிக்கும் அனைத்து உதவிகளையும் பயன்படுத்தி கண்ணியத்துடனும் விருப்பத்துடனும் வாழ முயற்சிக்கிறேன். எனக்காகவும் என் குழந்தைகளுக்காகவும் ஒவ்வொரு மாதமும் விடாமுயற்சியுடன் சேமிக்கிறேன். என் குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் வழங்கிடும் நிலையை அடைய எண்ணுகிறேன்.

நீங்கள் ஒரு வன்முறை குடும்பத்தில் சிக்கியுள்ள பெண்ணாக இருந்தால், உங்களுக்கு உதவக்கூடிய ஆதரவு அமைப்புகள் எங்கே உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களது விதி இது என எண்ணி வாழ வேண்டாம். துஷ்பிரயோகத்திலிருந்து வெளியேற உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கவும். நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். நீங்கள் நன்றாக வாழ தகுதியானவர்கள்.

2. பெயர்- கலையரசி; வயது- 32; சென்னை.

பல ஆண்டுகளாக வன்முறை, துரோகங்களை அனுபவித்து நிலையில், மணவாழ்க்கையை முடித்து கொண்ட பிறகு தான், உண்மையான சுதந்திரம் என்றால் என்பதையே கற்றுக்கொண்டேன். 2008ம் ஆண்டு தந்தை மறைந்துவிட, குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகியது. அதனால், என் அம்மா எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அப்போது எனக்கு வயது 15. அவருக்கு வயது 16. அவர் ஒரு கட்டுமான தொழிலாளி. திருமணத்திற்கு பிறகு மயிலாடுதுறையில் குடிபெயர்ந்தேன். திருமணம் ஆன நாள் முதல் அவர் மது அருந்தத் தொடங்கினார். தினமும் குடித்துவிட்டு கண்டப்படி திட்டுவார். நாளடைவில், வன்முறை உடல்ரீதியாகியது. குடிபோதையில் பயங்கரமாக அடித்தார்.

16 வயதில் எனக்கு மகன் பிறந்து 2 மாதங்களாகிய போது தான், அக்கம்பக்கத்தார் என் கணவர் தொடர்பிலிருந்த எல்லா பெண்களை பற்றியும் கூறினர். அதை பற்றி அவரிடம் கேட்ட போது, அவர் என்னை மோசமாக அடித்தார். அதில், சி-செக்‌ஷனின் போது போடப்பட்ட தையல்கள் பிரிந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இந்த சம்பவத்திற்குப் பிறகு, என் கணவர் பெண்களை வீட்டிற்குள் அழைத்து வந்து குடித்துவிட்டு அவர்களுடன் இரவும் பகலும் கழிக்க ஆரம்பித்தார். இதைத் தாங்க முடியாமல், தீக்குளிக்க முயன்றேன். ஆனால், பக்கத்து வீட்டுக்காரர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று என்னை காப்பாற்றினர். இரண்டு மாத சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்தேன், ஆனால் என் கணவரின் நடத்தை சிறிதும் மாறவில்லை.

ஒரு நாள், ஆத்திரத்தில், என் மகனைத் தூக்கி வந்து, அவனைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். அப்போதுதான் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து, குழந்தையுடன் சென்னை வந்தேன். என் முகத்தில் மூன்றாம் நிலை தீக்காயங்கள் இருந்ததால், தீவிர பாகுபாட்டை எதிர்கொண்டேன்.

வேலை கொடுக்க மாட்டார்கள், பேருந்தில் என் அருகில் உட்கார மாட்டார்கள். வாடகைக்கு வீடு தர மாட்டார்கள். 500 ரூபாய்க்கு சைக்கிள் வாங்கி வீடுகளுக்கு தண்ணீர் கேன் விநியோகம் செய்ய ஆரம்பித்தேன். மீன் மற்றும் காய்கறிகள் விற்பது, வீட்டு வேலை செய்வது போன்ற எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தேன்.

பின்னர், எனது நண்பர் என்னை PCVC க்கு அறிமுகம் செய்தார். அவர்கள் என் தீக்காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்து நகரத்தில் உள்ள பிரபலமான உணவகத்தில் வேலை செய்ய உதவினர். தொடர்ந்து பல உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் வேலைக்குச் சென்றேன். அங்கும், என் தழும்புகளால் கேலி செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டேன். ஆனால், கண்டுக்கொள்ளாமல் கடினமாக உழைத்தேன். நிச்சயமாக, அச்சம்பவங்கள் என்னை மனதளவில் பாதித்தது. ஆனால், PCVC ஊழியர்கள் அவற்றை சமாளிக்க எனக்கு உதவினார்கள். இன்று சென்னையில் ஒரு உணவகத்தில் தலைமைச் சமையல்காரராகப் பணிபுரிகிறேன். நல்ல சம்பளம் வாங்குகிறேன். இப்போது, ​​என் அம்மா என் மகனை வளர்க்க உதவுகிறார்.

குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெரும்பாலான பெண்களுக்கு அவர்களின் குடும்பங்களின் ஆதரவு கிடைப்பதில்லை. உண்மையில், குடும்பத்தினரை போன்று உதவக் கூடிய அமைப்புகள் சமூகத்தில் இருக்கின்றனர். உங்கள் பலத்தை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க உங்களை தயார்படுத்துங்கள். உதவி கேட்க தயங்காதீர்கள் - அது எத்தனை முறையாக இருந்தாலும் சரி.

3. பெயர்- ராணி; வயது- 28; சென்னை.

18 வயது இருக்கும் போது எனக்கு திருமணம் நடந்தது. மோதல்களும் புறக்கணிப்புகளும் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்ததால், திருமணத்தை சுதந்திரத்திற்கான ஒரு கதவாகப் பார்த்தேன். திருமணத்திற்கு பிறகு உயர்கல்வி படிக்கலாம். என் நிபந்தனைகளின்படி, வாழ்க்கையை உருவாக்கலாம். பணத்தைச் சேமித்து சுதந்திரமாக வாழலாம் என்று நினைத்தேன். என் கணவரின் வீடு, பிறந்த வீட்டை விட பெரிய சிறையாக மாறியது. திருமணத்திற்கு முன், என் கணவரை மென்மையாகப் பேசும் ஒரு மனிதராக தான் எனக்கு தெரியும். கல்யாணம் ஆன பிறகு அவர் நிறைய குடித்தார். விரைவில், என் தொலைபேசி என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது. பணம் கொடுக்கவில்லை. அற்ப விஷயங்களுக்கு சண்டை போட ஆரம்பித்தார். அவரது சட்டையில் கறை படிந்ததாலோ அல்லது முதல் காலிங் பெல்லிலே கதவைத் திறக்காமல் இருந்தாலோ பலமாக அடித்தார். இதனால், கிட்டத்தட்ட ஒரு கண்ணில் பார்வையை இழந்தேன். என் கையை கூட உயர்த்த முடியவில்லை.

இதுப்பற்றி அம்மாவிடம் கூறும் போதெல்லாம், அவர் என்னை சமாதானப்படுத்தி, அவரிடம் திரும்பிச் செல்லும்படி கூறுவார். அதுதான் இப்போது என் வீடு என்றும், என் வாழ்நாள் முழுவதும் நான் அங்கேயே வாழ வேண்டும் என்பார். ஒருமுறை கூட நான் சொல்வதை அவர் நம்பி, உதவவில்லை. இது ஒவ்வொரு நாளும் என் மனதை உடைத்தது. என் கணவர் என்னை வருடா வருடம் கர்ப்பமாக்கிவிடுவார். வேறு எண்ணங்களுக்கு போகாமல் வீட்டிலே இருப்பதற்கு இதுவே வழி என்று அவர் கூறுவார். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, ஒரே வருடத்தில் இரண்டு முறை கருக்கலைப்பு செய்தேன்.

இரண்டு தெருத் தள்ளி வசிக்கும் என் அம்மாவைப் பார்க்கவோ அல்லது தனியாக எங்கும் செல்லவோ அனுமதிக்கமாட்டார். 10 ஆடுகள், 30 கோழிகள் மற்றும் 3 நாய்களை வளர்த்து வந்தார். அவற்றிற்கு நான் சமைத்து கொடுத்து மூன்று சிறு குழந்தைகளுடன் சேர்த்து அவற்றை பராமரிக்க வேண்டும். ஏன் இந்த பாரத்தை என் மீது சுமத்துகிறீர்கள் என்று அவரிடம் கேட்டால், ​​​​அது என்னை சுய உணர்வை வளர்க்காமல் தடுக்கும் என்பார். எப்போதாவது அடித்தது காயமாகி, மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை நேரும். அப்போது, மருத்துவரிடம் நான் எதுவும் பேசக்கூடாது. கீழே விழுந்து காயம் ஏற்பட்டது என்று விடுவார். இறுதியாக, வீட்டை விட்டு வெளியேறி PCVC இன் தங்குமிடத்தில் இருக்கிறேன்.

இன்று, வெறும் 28 வயதில், மூன்று குழந்தைகளுடன், வாழ்க்கை பரந்ததாகவும் பயமுறுத்துவதாகவும் தெரிகிறது. அடுத்த ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வை எழுதப் படிக்கிறேன். கணினி அறிவியலில் பட்டதாரியாக இருப்பதால், எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஆதரவான ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னைப் பற்றியும் என் வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்கும் முன் நான் அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

(அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

ஆங்கிலத்தில்: சரண்யா, தமிழில்: ஜெயஸ்ரீ