Zoho-வின் சந்தை மதிப்பு 58% அதிகரித்து 1 லட்சம் கோடியை கடந்தது!
பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ, சொந்த நிதியில் இயங்கும் முன்னணி 10 நிறுவனங்களில் 2024ம் ஆண்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சென்னையைச் சேர்ந்த சாஸ் யூனிகார்ன் நிறுவனம், ஜோஹோ கார்ப்பரேஷனின், சந்தை மதிப்பீடு ரூ.1,03,760 கோடியாக அதிகரித்திருப்பதாக பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 அறிக்கை தெரிவிக்கிறது. நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு, ரூ.65,700 கோடியில் இருந்து 58 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆக்சிஸ் வங்கியின் தனியார் வங்கி வர்த்தகமான பர்கண்டி பிரைவேட் மற்றும் ஹுருன் இந்தியா இணைந்து வெளியிடும் இந்த அறிக்கை, நான்காவது ஆண்டாக, இந்தியாவின் மதிப்புமிக்க 500 நிறுவனங்களை பட்டியலிடுகிறது.

இந்த பட்டியல் சந்தை மதிப்பு (பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள்) மற்றும் சந்தை மதிப்பீடு (தனியார் நிறுவனங்கள்) அடிப்படையில் பட்டியலிடுகிறது. இந்தியாவில் தலைமையகம் கொண்ட நிறுவனங்களை மட்டுமே இந்த பட்டியலில் உள்ளது. அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் இதில் இடம்பெறவில்லை.
இந்த பட்டியலில் ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ, சொந்த நிதியில் இயங்கும் முன்னணி 10 நிறுவனங்களில் 2024ம் ஆண்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரூ.2,11,610 கோடி மதிப்பீடு கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் முதல் இடத்தில் உள்ளது.
ஜோஹோவை உருவாக்கிய ஸ்ரீதர் வேம்பு, அண்மையில் சி.இ.ஓ பதவியில் இருந்து விலகி, முதன்மை விஞ்ஞானி எனும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்த பொறுப்பில், அவர் நிறுவன ஆய்வு பணிகளை வழிநடத்துவதோடு, தனிப்பட்ட கிராமப்புற முன்னேற்ற திட்டங்களிலும் கவனம் செலுத்துவார்.
"இன்று புதிய அத்தியாயம் துவங்குகிறது. ஏஐ துறையில் அண்மைக்கால முக்கிய மேம்பாடுகள் உள்ளிட்ட நம்மை எதிர்நோக்கியுள்ள பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, ஆய்வு மற்றும் மேம்பாடு பணிகளிலும், என்னுடைய தனிப்பட்ட கிராமப்புற வளர்ச்சி நோக்கிலும் கவனம் செலுத்துவது ஏற்றதாக இருக்கும்," என முடிவெடுக்கப்பட்டுள்ளது என எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருந்தார்.
இதண்டையே, ஆன்லைன் புரோக்கரிங் நிறுவனம் ஜீரோதா, பட்டியலிடப்படாத முன்னணி 10 நிறுவனங்களில் நான்காவது இடத்தில் உள்ளது. அதன் சந்தை மதிப்பீடு, 50 சதவீதம் அதிகரித்து ரூ.87,750 ஆக உள்ளது.
இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனங்களின் செல்வாக்கை இந்த பட்டியல் அடையாளம் காட்டியுள்ளது. 2024 டிசம்பரில் ரூ.9,580 கோடிக்கு மேல் மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் பரிசீலிக்கப்பட்டன. பட்டியலில் உள்ள நிறுவனங்களின் சராசரி வயது 43 ஆண்டுகள் மற்றும் அவற்றின் மொத்த மதிப்பீடு ரூ.234 லட்சம் கோடி.
இந்த நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களாகவும் விளங்குகின்றன. இவற்றின் பணியாளர் பரப்பு 20 சதவீதம் அதிகரித்து 1.3 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை அளித்துள்ளன. இவற்றின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 8.4 மில்லியன் ஆகும். (இந்திய பணியாளர்களில் 16 சதவீதம்).
ஆங்கிலத்தில்: புவனா காமத், தமிழில்: சைபர் சிம்மன்

சி.இ.ஓ டு முதன்மை விஞ்ஞானி - Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் 30 ஆண்டுகால தொழில் பயணம்!
Edited by Induja Raghunathan