ராஜலட்சுமி சக்திவேல் - சேலத்தில் இருந்து சர்வதேச கார் ஆட்டோமோட்டிவ் நிறுவன இயக்குனர் ஆன கதை!
’தொழில்நுட்ப துறையில் பெண்கள்’ வரிசயில், இப்போது ஹார்மன், ஆட்டோமோட்டிவ் பிரிவு- கார் ஆடியோவின் குலோபல் பிளாட்பார்ம் மென்பொருள் முத்த இயக்குரனான ராஜலட்சுமி சக்திவேல் பற்றி அறிந்து கொள்வோம். APTIV- இ இருந்த போது இவர் டாடா நானோஸ் காருக்கான கிளஸ்டரை உருவாக்கும் வாய்ப்பு பெற்றார்.
ராஜலட்சுமி சக்திவேல், 1996ல் சேலம் விநாயக மிஷன் கிருபானந்தனா பொறியியல் கல்லூரியில், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பி.இ. பட்டம் பெற்ற போது, அவர் முன்னணி மாணவர் என்ற போதிலும் முதல் வாய்ப்பை பெற சிறிது காலம் ஆனது.
அவரது நண்பர்கள் மற்றும் சக மாணவர்கள் ஜாவா மற்றும் ஐபிஎம் மெயின்பிரேம் போன்ற துணை வகுப்புகளில் படித்து, அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ராஜலட்சுமி இந்தியாவிலேயே இருக்க விரும்பினார்.
“அந்த நாட்களில், தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலைவாய்ப்பு நியமனத்திற்காக பல்வேறு கல்வி நிறுவன வளாகங்களுக்கு வந்தது இல்லை. எச்.ஏ.எல், பாரத் எலக்ர்டானிக்ஸ், பெல், இன்போசிஸ், பிபிஎல், விப்ரோ போன்ற நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான ஒரே வாய்ப்பு பட்டதாரி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது தான்,” என்கிறார்.
அதன் பிறகு, மூன்று அல்லது நான்கு தொழில்நுட்பச் சுற்றுகள் இருக்கும். அவற்றை நான் எளிதாக தேர்ச்சி பெற்றேன்.
“திரும்பிப் பார்க்கும் போது, சேலம் போன்ற சிறிய நகரில் இருந்து வந்ததால், நான் நம்பிக்கையுடன் இருக்கவில்லை அல்லது தகவல் தொடர்பு ஆற்றல் இருக்கவில்லை என நினைக்கிறேன்,” என்கிறார் ராஜலட்சுமி.
எனினும், ஆரம்பப் பின்னடைவை மீறி, ராஜலட்சுமி APTIV மற்றும் டெல்பி ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தனது 24 ஆண்டு தொழில் வாழ்க்கையில் உயர் பதவிகள் வகித்திருக்கிறார். இப்போது அவர், கார் ஆடியோவில் முன்னிலை வகிக்கும், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் துணை நிறுவனமான ஹார்மன் இண்டர்நேஷனல் (இந்தியா) நிறுவனத்தில் மூத்த இயக்குனராக இருக்கிறார்.
முன்னேற்றம்
பொறியியல் முடித்த பிறகு நிறுவனங்களின் மேல் அடுக்கில் நுழைய முடியாததை மீறி, ராஜலட்சுமிக்கு ஏடிஎஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் ஆய்வு பெறியாளராக பணி கிடைத்தது. அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு பிராடக்ட் வடிவமைப்பு, பராமரிப்பை தனியாகக் கையாண்டதோடு, அதன் சேவை குழுவை இந்தியா முழுவதும் கையாண்டார்.
“இந்த வேலை எனக்கு வடிவமைப்பு சவால்களை எதிர்கொள்ள வைத்தது. சவால்களும், வாய்ப்புகளும் எனது சிறந்த வெளிப்பாட்டை கொண்டு வந்தது. இதை வேலைவாய்ப்பு நேர்காணலில் 30 அல்லது 45 நிமிடங்களில் கண்டறிய முடியாது என்கிறார். அதன் பிறகு, ஆட்டோமோட்டிவ் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டெல்பி நிறுவனத்தின் ஆப்ஷோர் வளர்ச்சி மையமான சிஜி ஸ்மித் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி கிடைத்தது. இது தனது தொழில் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை,” என்கிறார். இது ஆட்டோமோட்டிவ் துறை திசையில் அழைத்துச்சென்றது.
“நல்ல வழிகாட்டுதல் மூலம் எனக்கு அதிகாரம் அளித்த ஒரு சூப்பர்வைஸர் கீழ் பணியாற்றியது எனது அதிர்ஷ்டம், அவர் கொடுத்த பணிகள் இந்தத் துறையில் என்னை வளர வைத்தது. என் முதல் சம்பளம் ரூ.4500 என்ற நிலையில், அவர்கள் ரூ.12000 அளித்தனர். நல்ல பணியாளர்களை எப்படி நடத்துகின்றனர் என்பதற்கான உதாரணமாக இந்த உயர்வு அமைந்தது,” என்கிறார்.
அங்கிருந்து அவர், நிறுவனம் பெங்களூருவில் சொந்த தொழில்நுட்ப மையம் அமைத்த போது டெல்பிக்கு மாற்றலானார். 2015ல் டெல்பியில் சீரமைப்பை அடுத்து அவர் APTIV எனும் பிரிவில் சேர்ந்தார். இங்கு அவர் முதல் பெண் தொழில்நுட்பத் தலைவராக இருந்தார்.
“பெங்களூருவில் எங்களிடம் 1000 முழுநேர ஊழியர்கள் மற்றும் 500 ஒப்பந்த ஊழியர்கள் இருந்தனர். மனிதவள மேம்பாடு, கொள்முதல், நிதி, லாஜிஸ்டிக்ஸ், சட்ட விஷயங்கள், பாதுகாப்பு ஆகிய நிர்வாகப் பொறுப்புகளை நான் கவனிக்க வேண்டியிருந்தது. பொறியியல் பிரிவில் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர் மற்றும் பாடி கண்ட்ரோல் மாடுல் முதன்மை பொறியாளராக இருந்தேன்,” என்கிறார்.
வரலாற்றில் அங்கம்
Aptiv நிறுவனத்தில் இருந்த போது ராஜலட்சுமி இந்தியாவின் முதல் மக்கள் கார் எனக் கருதப்பட்ட டாட்டா நானோ அறிமுகத்தில் செயல்பட்ட குழுவில் அங்கம் வகிர்த்தார்.
“இது மிகவும் பெருமிதமான தருணம். பிராடக்ட் வடிவமைப்பில் சிக்கன பொறியியலின் அடையாளமான நானோ அமைந்தது. சாட்ப்வேர் மற்றும் அமைப்பில் நான் பணியாற்றினேன். நான் சாப்ட்வேர் தலைவராக துவங்கினேன், பின் இடைவெளி எடுத்துக்கொண்டேன். திரும்பி வந்த போது உற்பத்தி நெருங்கிய நிலையில் சிஸ்டம் பொறுப்பு அளிக்கப்பட்டது,” என்கிறார்.
இந்த காலத்தில் இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பமாக இருந்தவர் முழு ஓய்வு எடுத்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டார். பேரு கால விடுமுறைக்குப் பிறகு அவர் பணிக்கு திரும்பினார். இந்திய சந்தையில் முதல் பிராடக்ட் அறிமுகத்திற்கு வழிவகுத்ததால் டெல்பியில் இது உற்சாகமாக பணி காலமாக இருந்தது என்கிறார். இதன் மூலம் சென்னையில் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது.
2019ல், அவர் ’ஹார்மன்’ (HARMAN) நிறுவனத்தில் இருந்து அழைப்பை பெற்றார். நிறுவன மனிதவள அதிகாரி மிகவும் வலியுறுத்தியதால் ராஜலட்சுமி அதை ஏற்றுக்கொண்டார்.
“ஹர்மனில் புதிய பிராடக்ட் வரிசை துவக்குவது பற்றி பேசினார். இந்த வாய்ப்பு சுவாரஸ்யமாக தோன்றியது. APTIV-ல் நான் நிர்வாகம், பொறியியலில் உயர் பதவியில் இருந்தேன். அதனால் பெங்களூருவில் உட்கார்ந்து இருப்பது தவிர வளர்ச்சி வாய்ப்பில்லை. ஹர்மனில் நான் இருக்கும் நகரிலேயே உயர்மட்ட வளர்ச்சி கொண்ட உலகலாவிய பதவி கொடுத்தனர்,” என்கிறார்.
தொழில்நுட்பத்தில் பெண்கள்
ஹர்மனில் அவரது பணி கார் ஆடியோ குழுவை உருவாக்குவதாக இருந்தது. 10 பேர் கொண்ட குழு 300 பேராக வளர்ந்துள்ளது.
“பிளாட்பார்ம் மென்பொருளுக்காக சர்வதேச அளவில் மூத்த இயக்குனர் பொறுப்பு அளிக்கப்பட்டது. மேலும், கார் ஆடியோ குழு பொறுப்பும் அளிக்கப்பட்டது. இதற்கு கார் ஆடியோவுக்குள் தொடர்ச்சியான செயல்முறைகள், கோட்பாடுகள், செயல்முறைகள் நிறைவேற்றம் தேவை,” என்கிறார்.
தொழில்நுட்பத் துறையில் உயர் பதவியில் இருக்கும் பெண் என்ற முறையில், தொழில்நுட்பத் துறையில் பல்வேறு காரணங்களினால் பெண்கள் நீடிப்பது கடினம் என ஒப்புக்கொள்கிறார். பெப்சி முன்னாள் சி.இ.ஓ இந்திரா நூயி,
“உயிரியல் கடிகாரம் மற்றும் தொழில் வாழ்க்கை கடிகாரம் பலமாக முரண்படுகின்றன,” என்று கூறியதை மேற்கோள் காட்டுகிறார்.
தனிப்பட்ட மற்றும் தொழில்வாழ்க்கையில் சிகரம் தொடும் காலமும் இருக்கும் என்கிறார்.
“பல பெண்கள் இந்த இரண்டுக்கும் இடையே தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. அவர்கள் பணியில் நீடிக்க தீர்மானித்தால் கூட, அவர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்க முன்வருவதில்லை. ஏனெனில், நேரம் முக்கியம், இதனால் தனி வாழ்க்கை பாதிக்கும் என நினைக்கின்றனர்,” என்கிறார்.
சூழல், குடும்பம், வாழ்க்கைத்துணை ஆகியோரின் ஆதரவு பெண்கள் பணி செய்யும் விதத்தை மாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது, என்கிறார். ஆனால், பெண்கள் எதிர்கொள்ளும் சுய சந்தேகம் மற்றும் சொந்த திறன்களை சந்தேகிக்கும் தன்மை ஆகிய பிரச்சனைகளிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
“மேலும், பெண்களை தொழில்நுட்பத் துறையில் தக்க வைத்து, தலைவர்களாக வளர்த்தெடுக்க, நிறுவனங்கள் ஆரம்ப நிலையிலேயே பெண் திறமையாளர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். பயணம் மற்றும் அதில் உள்ளதை அறியும் பாதை அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்,” என்கிறார் ராஜலட்சுமி.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan