தினமும் ரூ.3 கோடி நன்கொடை - இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ஷிவ் நாடார்!
2022 நிதியாண்டில் மட்டும் ₹1,161 கோடி அளவிற்கு நன்கொடை வழங்கி ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
நாளொன்றுக்கு ரூ.3 கோடி நன்கொடை; இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ஷிவ் நாடார்!
2022 நிதியாண்டில் மட்டும் ₹1,161 கோடி அளவிற்கு நன்கொடை வழங்கி ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
முதலிடம் பிடித்த ஷிவ் நாடார்:
எடில்கிவ் ஹுருன் அமைப்பு ஆண்டுதோறும் இந்திய அளவிலான நன்கொடையாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விப்ரோ நிறுவனத்தின் நிறுவனம் அசிம் பிரேம்ஜி முதல் இடம் பிடித்து வந்த நிலையில், நடப்பு ஆண்டில் அவரை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார்.
கல்வி சார்ந்த பணிக்காக அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ள ஷிவ் நாடார், நாளொன்றுக்கு 3 கோடி ரூபாய் வீதம் நன்கொடை அளித்துள்ளார். பட்டியலின்படி, 2021-22 நிதியாண்டில் ஷிவ் நாடார் நன்கொடை 8% குறைந்துள்ளது.
டாப் 10 பட்டியல்:
விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ அசிம் பிரேம்ஜி ஆண்டுக்கு 484 கோடி ரூபாய் நன்கொடையுடன் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். ஏனெனில், 2021 ஆம் ஆண்டில் விதிவிலக்கான பங்கு திரும்பப் பெறப்பட்டதன் காரணமாக அவரது நன்கொடைக்கான பங்களிப்பு 95 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான பில்லியனர் முகேஷ் அம்பானி, மொத்தம் 411 கோடி ரூபாய் பங்களிப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அம்பானியின் பங்களிப்பு கடந்த ஆண்டை விட 29% குறைந்துள்ளது. குமார் மங்கலம் பிர்லா 242 கோடி ரூபாய் பங்களிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
5வது இடத்தில் 213 கோடி ரூபாய் பங்களிப்புடன் மைண்ட்ட்ரீயின் நிர்வாகத்தைச் சேர்ந்த சுப்ரோதோ பாக்சி மற்றும் அவரது மனைவி சுஸ்மிதா ஆகியோர் உள்ளனர்.
அதேபோல், 231 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ள பார்த்தசாரதி மற்றும் அவரது மனைவி ராதா 6வது இடத்திலும், 7வது இடத்தில் கவுதம் அதானி 190 கோடி ரூபாய் பங்களிப்புடனும் உள்ளனர். 8-வது இடத்தில் வேதாந்த குழுமத் தலைவர் அனில் அகர்வால் ரூ.165 கோடி பங்களிப்புடனும், 9-வது இடத்தில் நந்தன் நிலகனி ரூ.159 கோடி மற்றும் 10-வது இடத்தில் ஏஎம் நாயக் ரூ.142 கோடி பங்களிப்புடனும் உள்ளனர்.
கொரோனாவால் சரிந்த நிதியுதவி:
கடந்த ஆண்டு 12,785 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்ட நிலையில், 2022 நிதியாண்டில் முதல் 10 இடங்களில் இருப்பவர்கள் மட்டும் 3,378 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கொடையாளர்கள் நன்கொடை அளிப்பது குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புதிதாக பட்டியலில் இணைந்துள்ள 19 நன்கொடையாளர்களும் 832 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளனர். இதன் மூலமாக இந்தியாவில் இளம் தொழில்முனைவோரும் நன்கொடை அளிப்பதில் ஆர்வமுடன் முன்வருவது தெளிவாகியுள்ளதாக எடில்கிவ் ஹுருன் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹுருன் இந்தியாவின் MD மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரஹ்மான் ஜுனைட் கூறுகையில்,
“கடந்த 5 ஆண்டுகளில், ரூ.100 கோடிக்கு மேல் கொடுத்த நன்கொடையாளர்களின் எண்ணிக்கை 2ல் இருந்து 15 ஆகவும், ரூ.50 கோடிக்கு மேல் 5ல் இருந்து 20 ஆகவும் அதிகரித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயர வாய்ப்புள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மற்றொரு ஆச்சரியமாக இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் புரோமோட்டர் ராகேஷ் கங்வால், கான்பூரில் உள்ள ஐஐடியில் உள்ள மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் கழகத்திற்கு 100 கோடி நிதி அளித்ததன் மூலமாக இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார்.
60வது பிறந்தநாளில் 60,000 கோடி நன்கொடை; அறக்கட்டளைக்கு அள்ளிக்கொடுத்த அதானி!