வாஷிங் பவுடர் தேவை இல்லை; 80 நொடி சுழற்சி - இதுவே தண்ணீர் இல்லா வாஷிங் மிஷின்!
80Wash நிறுவனம் உலர் நீராவி மற்றும் அயன் இல்லாத கதிர்கள் கொண்ட ஐஎஸ்பி ஸ்டீம் தொழில்நுட்பம் மூலம் அரை கோப்பை தண்ணீரில் சலவைத்தூள் இல்லாத துணி துவைக்கும் நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றுள்ளது. இந்த ஸ்டார்ட் அப்பின் மிஷின்கள் முன்னோட்ட அடிப்படையில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
நவீன துணி துவைக்கும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை மீறி வாஷிங் மிஷின் ஒரு ஸ்பூன் அழுக்கை அகற்ற 100 லிட்டர் தண்ணீரை பயன்படுத்துகிறது. மேலும், ரசாயனங்கள், துணி அழுக்குகள் கலைவையை கொண்ட வீணாகும் தண்ணீர் நீர் நிலைகளில் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த இரண்டு பிரச்சனைகளுக்குமான தீர்வை சண்டிகரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம்
அளிக்க முற்படுகிறது.ரூபல் குப்தா, நிதின் குமார் சலூஜா மற்றும் வரீந்தர் சிங் ஆகியோரால் துவக்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப், தனது இயந்திரம், துணிகள் மற்றும் உலோக பாகங்கள், பாதுகாப்பு கவச ஆடைகளை கூட, சலைவைத்தூள் இல்லாமல், சில மிலி தண்ணீரில் 80 நொடிகளில் (அழுக்களுக்கு ஏற்ப கூடுதல் நேரம் ஆகலாம்), துவைத்து தருவதாகக் கூறுகிறது.
இந்த இயந்திரம் காப்புரிமை பெற்ற ஐஎஸ்.எம் ஸ்டிரீம் தொழில்நுட்பம் சார்ந்தது. இந்த தொழில்நுட்பம் குறைந்த அலைவரிசை கொண்ட ரேடியோ அலைகள் (அயன் இல்லாதவை) சார்ந்த மைக்ரோவேவ் கொண்டு கிருமிகளை அழிக்கிறது.
மேலும், கரைகள், அழுக்குகள், நாற்றத்தை அறை வெப்பத்தில் உண்டாக்கப்படும் உலர் ஆவியால் நீக்குகிறது.
ஒரு சுழற்சியில் 80 நொடிகளில் (7-8 கிலோ மெஷின்) சலவைத்தூள் இல்லாமல், அரை கோப்பை தண்ணீரில் ஐந்து துணிகளை துவைக்கும் என்கிறது இந்த ஸ்டார்ட் அப். வலுவான கறைகள் என்றால் இந்த சுழற்சியை பலமுறை மேற்கொள்ளலாம். பொதுவாக 4-5 சுழற்சிகளில் கறை நீங்கும். 70 முதல் 80 கிலோ பெரிய மெஷின் எனில் 5-6 கிளாஸ் தண்ணீரில் பல சுழற்சிகளில் 50 துணிகளைத் துவைக்கலாம்.
தற்போது முன்னோட்ட முயற்சியாக சண்டிகர், பன்ச்குலா மற்றும் மொகாலியில் விடுதிகள், மருத்துவமனைகள், சலூன்கள் உள்ளிட்ட ஏழு இடங்களில் இந்த மிஷின் வைக்கப்பட்டுள்ளது.
மிஷின் ஐடியா
பஞ்சாப்பின் ராஜ்பூராவில் உள்ள சித்காரா பல்கலைக்கழக இன்குபேஷன் மையத்தில் இதற்கான விதை உண்டானது.
2017ல் ரூபல், கம்ப்யூட்டர் அறிவியலில் பிடெக் படித்துக்கொண்டிருந்தவர் சித்கரா பல்கலைக்கழக ஆய்வு மற்றும் புதுமையாக்க வலைப்பின்னலின் (CURIN) இணை இயக்குனர் நிதினை மற்றும் சித்கராவில் இருந்த சிறப்பு மையத்தில், Aautosync Innovations நிறுவனத்தில் திட்ட மேலாளராக இருந்த வரீந்தர் ஆகியோரை சந்தித்தார்.
நிதின் மற்றும் வரீந்தர் பல்வேறு ஸ்டார்ட் அப் திட்டங்களில் செயல்பட்டு, மாணவர்களுக்கு வழிகாட்டியிருக்கின்றனர். துவக்கத்தில் மூவரும் யூவி கதிர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கான கிருமி நீக்க தீர்வை முயற்சித்தனர்.
பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வல்லுனர்கள் ஆலோசனைகளுக்கு பிறகு மூவரும் துணி துவைப்பதற்கான இயந்திரத்தை உருவாக்கத் தீர்மானித்தனர். வேகமான, தானியங்கி மற்றும் சுற்றுச்சூழலுக்கு நட்பான தீர்வாக அமையும் என எதிர்பார்த்தனர். ஆனால், யூவி கதிர்கள் துணிகளை தூய்மையாக்க போதுமானதாக இல்லை.
“கிருமி நீக்கம் மட்டும் போதுதானதாக இல்லை. மைக்ரோவேப் 99.9 சதவீத கிருமிகளை அகற்றியது. ஆனால், அழுக்கு மற்றும் கறைகளை நீக்க வேண்டியிருந்தது. இந்த கட்டத்தில் தான் உலர் நீராவி சார்ந்த காப்புரிமை தொழில்நுட்பத்தில் பணியாற்றத்துவங்கினோம்,” என்கிறார் நிதின்.
மூவரும், ஜவுளித்துறை வல்லுனர்கள் மற்றும் மைக்ரோ-பயாலாஜிஸ்ட்ட் வல்லுனர்கள் குழுவை அமைத்து, இது தொடர்பாக முயற்சித்தனர்.
குறைந்த ஈரப்பதம் கொண்ட உலர் நீராவி கறைகளை அகற்றுவதில் மிகுந்த செயல்திறன் கொண்டிருந்தது. எனினும், இதற்காக தேவைப்பட்ட அதிக அழுத்தம் மிகுந்த மின்சாரத்தை எடுத்துக்கொண்டது. இந்த செயல்முறை இடர் மிகுந்தததாக அமைந்தது.
இந்த இடத்தில் தான் 80Wash குழு தனது சொந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தியது.
“அறை வெப்பத்தில் உலர் நீராவை உருவாக்க முடிந்தது. இந்த தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றோம். இதன் மூலம், கிருமிகள், அழுக்கு, கறை, நாற்றம் ஆகிய நான்கும் நீங்கின,” என்கிறார் நிதின்.
2021 துவக்கத்தில் காப்புரிமை கிடைத்த போது ஸ்டார்ட் அப்பை துவக்கி, முன்னோட்டமாக 7-8 கிலோ வாஷிங்மெஷினை உருவாக்கினர். அடுத்த ஆண்டு சர்வதேச காப்புரிமைக்கு விண்ணப்பிக்க உள்ளனர்.
முன்னோட்டம்
அம்பாலா மற்றும் தில்லியில் உள்ள சான்றிழ்த பெற்ற பங்குதாரர்களுடன் இணைந்து இந்த ஸ்டார்ட் அப் மிஷின் உற்பத்தியை அவுட்சோர்ஸ் செய்தது. சண்டிகர் நெடுஞ்சாலை அருகே சோதனைகளை மேற்கொள்ள சிறிய கிடங்கி அமைத்தது. இந்தக்கழு சித்கரா பல்கலைக்கழக இன்குபேஷன் மையத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. ஜிர்காபூர் மற்றும் ஹிசாரில் அலுவலகம் கொண்டுள்ளது.
ஆரம்ப சோதனைகளில் தீர்வு காண வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் தெரிய வந்தன.
உதாரணத்திற்கு, சோதனையில் பங்கேற்ற சலூன்கள் துணிகளில் முடி சிக்கிக்கொள்வதாக புகார் செய்தன என்றால் மருத்துவமனைகள் சிக்கலான நடைமுறைகள் காரணமாக மெஷின் ஏற்றதாக இல்லை என தெரிவித்தன. எனினும், மிஷின் தொடர்ந்து செயல்பட அவர்களில் சிலர் அனுமதித்தனர்.
“அவர்கள் மிஷின் பலன் குறித்து மகிழ்ச்சி அடைந்தாலும் அதிகாரப்பூர்வ அனுமதி பெற வேண்டியிருந்தது. நாங்கள் எதிர்காலத் தீர்வை உருவாக்கிக் கொண்டிருந்தோம்,” என்கிறார் ரூபல்.
அதே நேரத்தில், பல்கலைக்கழக விடுதிகளில் மாணவர்கள் மெஷின்களை முயற்சித்து பார்க்க தயாராக இருந்தனர். இது கருத்துக்களை அறிய உதவியது.
80Wash பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டண முறையை உருவாக்கி, மாணவர் ஒருவருக்கு மாதத்திற்கு ரூ.200 வசூலிக்கிறது.
“முன்னோட்ட அடிப்படையில் சோதனைகளை மேற்கொள்ள இது உதவுகிறது,” என்கிறார் ரூபல்.
பஞ்சாப், இமாச்சல பிரதேச மாநில அரசுகள், சித்கரா பல்கலைக்கழகம், மத்திய மின்னணு மற்று தகவல் தொழில்நுட்ப அமைக்கசத்தின் நிதியை ஸ்டார்ட் அப் பெற்றுள்ளது. மின்காந்த இடையீடு (EMI) சான்றிதழ் மற்றும் மின்காந்த ஒத்திசைவு(EMC) சான்றிதழ்கள் உள்ளிட்ட சோதனை சான்றிதழளை பெற ஸ்டார்ட் அப் முயற்சித்து வருகிறது. வர்த்தக மின்னணு தயாரிப்புகளுக்கு இவை அவசியம்.
“அரசு எங்கள் தயாரிப்புக்கு அதரவாக இருக்கிறது. இது விலை அல்லது நேரம் தொடர்பானது மட்டும் அல்ல ஆனால் சுற்றுச்சூழலுக்கு நட்பானது,” என்கிறார் ரூபல்.
மிஷின் தொடர்பாக நல்ல கருத்துகள் கிடைத்திருப்பதாகவும் குஜராத் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து விசாரணைகள் வருவதாகவும் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.
80Wash எதிர்காலத்தில் உற்பத்தி ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த வாய்ப்புகளை நிறுவனர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
“உற்பத்தி என்பது மிகுந்த முதலீடு தேவைப்படும் ஒன்று என்பதால் இப்போது கவனம் செலுத்தவில்லை. அவுட்சோர்சிங் முறையை கடைப்பிடித்து வருகிறோம். பின்னர் ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளோம்,” என்று இணை நிறுவனர்கள் கூறுகின்றனர்.
இந்த மிஷினின் விலை இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. சான்றிதழ் கிடைத்த பிறகு, நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் 100 மிஷின்கள் கொண்டு வர உள்ளது. அதன் பிறகு, 70 கி மிஷின்களை திட்டமிட்டுள்ளது.
“இன்னமும் வீட்டு சந்தையை நோக்கவில்லை. எங்கள் தயாரிப்பு மருத்துவமனைகள், விடுதிகள், சலூன்கள், பள்ளிகள் போன்ற வர்த்தக தேவைக்கானது. வாடிக்கையாளர்களுக்கு கார்டு அடிப்படையில் சேவை அளிக்கும் மாதிரியை ஆய்வு செய்து வருகிறோம். இந்த வர்த்தகத்திற்கான சிறந்த மாதிரியை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளோம்,” என்கின்றனர்.
புளுவீவ் கன்சல்டிங் தகவல் படி, 2019ல் இந்திய வாஷிங்மிஷின் சந்தை 1.26 பில்லியன் டாலராக இருந்தது. 2026ல் இது 1.7 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக வாஷிங்மிஷின் சந்தை IFB, LG ,Dexter போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் குறைந்த விலையில் விரிவான சேவை அளிக்கும் பிரிவில் ஸ்டார்ட் அப்கள் செயல்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
தண்ணீர் இல்லாத வாஷிங் மிஷின் கருத்தாக்கம் நீண்ட காலமாக உள்ளது. 2010ல் ஜெரோஸ் லிட் சிறிய பிளாஸ்டிக் மணிகள் மூலம் அழுக்கை நீக்கும் மிஷினை உருவாக்கியதாக செய்திகள் வெளியாகின. எல்ஜி நிறுவனமும் இத்தகைய மிஷின் தயார்ப்பில் ஈடுபட்டு வருகிறது. எனினும் இந்த மிஷின் சந்தைக்கு வரவில்லை.
இந்த திட்டத்தை புதுப்பித்திருப்பதாக எல்ஜி தெரிவித்துள்ளது. இதன் தொழில்நுப்டத்திற்கு தென்கொரிய ஜவுளி, தொழில் மற்றும் எரிசக்தி அமைச்சகம் சோதனைக்கான அனுமதி அளித்துள்ளது. தண்ணீருக்கு பதிலாக கார்பன் டையாக்சைடை இந்த மிஷின் பயன்படுத்துகிறது.
“எங்கள் தொழிநுட்பம் எல்.ஜி பயன்படுத்தும் நுட்பத்தில் இருந்து மேம்பட்டது மற்றும் முதல் முறையாக உருவானது. மற்ற நுட்பங்கள் எந்த அளவு சுற்றுச்சூழலுக்கு நட்பானது எனத்தெரியவில்லை. பயன்பாட்டுத்தன்மையும் முக்கியம்,” என்கிறார் நிதின.
(வாஷிங் மிஷின் தொழில்நுட்பம் தொடர்பான வரி மற்றும் ஸ்டார்ட் அப் அலுவலகங்கள் தொடர்பான தகவலுக்காக கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).