Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சுயநிதியில் ரூ.177 கோடி வருவாய் - இந்திய சோலார் சந்தையில் வெற்றி நடை போடும் Solarium நிறுவன வெற்றிக்கதை!

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், சூரிய சக்தியின் ஆற்றலை பயன்படுத்தி சோலார் பேனல் தயாரிக்கும் ஆலையை சுயநிதியில் தொடங்கி இன்று ரூ.177 கோடி வருவாய் ஈட்டி, வரிக்கு பின் லாபமாக ரூ.15.59 கோடி ஈட்டியுள்ளது Solarium.

சுயநிதியில் ரூ.177 கோடி வருவாய் - இந்திய சோலார் சந்தையில் வெற்றி நடை போடும் Solarium நிறுவன வெற்றிக்கதை!

Thursday March 06, 2025 , 4 min Read

அங்கிட் கார்க், 2018ல் 'சோலாரியம்' (Solarium) நிறுவனத்தை துவக்கிய போது, இந்தியா எரிசக்தியை தருவிக்கும் விதத்தை மாற்றி அமைக்க விரும்பினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், சூரிய சக்தியின் ஆற்றலை பயன்படுத்திக்கொள்ளும் அபிரிமிதமான வாய்ப்பை உணர்ந்தார்.

இன்று, சோலாரியம் கிரீன் எனர்ஜி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. நிறுவனத்தின் பங்கு வெளியீடு பிப் 5ம் தேதி துவங்கியது. நிறுவனம், ரூ.10 முகமதிப்பில், பங்கு ஒன்று ரூ.181- 191 விலையில் 54,99,600 சமபங்குகளை வெளியிட்டது. சோலாரியம் பங்கு வெளியீடு நிதியை செயல் மூலதனம் மற்றும் வர்த்தக தேவைக்காக பயன்படுத்திக்கொள்ள உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், நிறுவனம் ரூ.185 கோடி மதிப்பிலான திட்டங்களை நிர்வகித்தது. 2024 செப்டம்பரில் ரூ.45 கோடி வருவாய் பெற்றிருந்தது. ரூ.885 கோடி அளவில் புதிய டெண்டர்களையும் பெற்றுள்ளது.
Garg

துவக்கம்

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷன்கர் எனும் சிறிய நகரைச் சேர்ந்த கார்க், பொறியியல் படிப்பிற்கான வழக்கமான பாதையை தேர்வு செய்தார். கோட்டாவில் பயிற்சி பெற்றவர், தன்பாட் ஐஐடியில் பட்டம் பெற்றார்.

ஹூண்டாய் நிறுவனத்தின் சுரங்கப்பிரிவில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகு அவரது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் உண்டானது.

“சுரங்க பின்னணியில் இருந்து வருவதால் சுரங்க பணிகள் நீடித்த எரிசக்தி ஆதாரம் அல்ல என உணர்ந்திருந்தோம். ஒரு கட்டத்தில் இது தீர்ந்துவிடும் ஆனால் உலகின் எரிசக்தி தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, புதுப்பிக்கப்பட முடியாத எரிசக்திக்கு மாற்றாக புதுப்பிக்கதக்க எரிசக்தி தேவை,” என்று யுவர்ஸ்டோரியிடம் கார்க் கூறினார்.

நீர் மின்நிலையங்கள் சார்ந்த பூகோள வரம்புகள் மற்றும் காற்றலை தொடர்பான சிக்கல்களை கணக்கில் கொள்ளும் போது, இந்தியாவில் சூரிய ஆற்றல் போதிய அளவு பயன்படுத்தப்படாதது வாய்ப்பு என உணர்ந்தார். அதோடு, சூரிய மின்சக்தி, படிம எரிசக்திக்கு எப்படி மாற்றாக அமையும் என்பதை தெரிந்து கொண்ட போது மேலும் ஊக்கம் பெற்றார்.

காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி நிறுவனம் சுஸ்லானில் பயிற்சி ஊழியராக பணியாற்றிய அனுபவம் சொந்த சூரிய மின்சக்தி நிறுவனம் துவக்க உதவியது.

“நமக்கு இயற்கையான சூரிய ஒளி சாதகம் இருக்கிறது. நம்மிடம் நிலபரப்பு மற்றும் கூரைகளும் இருப்பதால் எளிதில் விரிவாக்கிக் கொள்ளலாம். இந்த அம்சங்கள் சூரிய மின்சக்தி அடுத்த பெரிய சந்தை என உணர்த்தியது,” என்கிறார் கார்க்.

இப்படி தான் 2018ல் சோலாரியம் துவங்கியது. அப்போது சூரிய மின்சக்திக்கான சூரிய பேனல்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டியிருந்தது. மேலும், இந்தியா இறக்குமதி கட்டுப்பாடுகள் அல்லது தர நிரணயம் எதையும் சீன இறக்குமதிக்கு விதிக்காததால், குறைந்த தரமான பொருட்கள் அதிகம் வந்தன. இந்த சூழலை சாதகமாக்கி கொண்டு உற்பத்தி ஆலை அமைக்க தீர்மானித்தார்.

“அப்போது வெகு சில உற்பத்தியாளர்களே இருந்தனர். நாங்களே சோலார் பேனல்கள் தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு தரமான சோலார் பேனல்கள் மற்றும் ஒருங்கிணைந்த தீர்வுகளை அளிக்க தீர்மானித்தோம்,” என்கிறார் கார்க்.

நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினரிடம் இருந்து நிதி பெற்று சோலார் பேனல்கள் தயாரிக்கத்துவங்கினார். அவற்றை 25 ஆண்டு வாரண்டியுடன் அளித்து, சீன தயாரிப்புக்கான சரியான மாற்றை அளித்தார். தொடர்ந்து, வீடுகளுக்கான தேவைகள் மற்றும் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (இபிசி) ஆகியவற்றை அளிக்கத்துவங்கினர்.

திருப்பு முனை

பேனல்கள் தயாரிக்க, நிறுவனம் ஈட்டிய லாபத்தை விட அதிக மூலதனம் தேவைப்பட்டது. லாப விகிதத்தை அதிகரிக்க சரியான உத்தி தேவை என நிறுவனம் தீர்மானித்தது.

“நிறைய ஆய்வு செய்து எங்கள் உற்பத்தியில் மூலதனம் முடக்கம் இருப்பதை உணர்ந்தோம். இதே மூலதனத்தை எங்கள் இபிசி சேவையில் முதலீடு செய்தால், எங்கள் லாப விகிதம் கணிசமாக அதிகரிக்கும். எனவே, வீடுகள், வர்த்தகம் மற்றும் அரசு ஆகிய மூன்று பிரிவுகளிலும், இபிசி முறையில் கவனம் செலுத்தினோம்,” என்கிறார்.

இபிசி சேவைகள் அளிப்பதன் மூலம், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கான முழு தீர்வுகளை அளிப்பதில் கவனம் செலுத்தியது. உதாரணத்திற்கு வாடிக்கையாளர் 3 மெகா வாட் சோலார் பேனல் அமைக்க விரும்பினால், இடத்தை மட்டும் தெரிவித்தால், வடிவமைப்பு, பொறியியல் மற்றும் இன்ஸ்டலேஷன் ஆகியவற்றை நிறுவனம் பார்த்துக்கொள்கிறது.

சோலார் பேனல்களை கொள்முதல் செய்ய நவாடிஸ் சோலார் மற்றும் சிட்டிசன் சோலார் உள்ளிட்ட பல மூல தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. சூரிய மின்சக்திக்கான அதிகரிக்கும் தேவைக்கு மத்தியில் இந்திய அரசு சோலார் பேனல்களுக்கு மானியம் அளித்து, புதுப்பிக்கத்தக்க எர்சக்தியை ஊக்குவிக்கிறது. சீன இறக்குமதி பேனல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சோலாரியம் மற்றும் இந்த துறையைச் சேர்ந்த மற்ற நிறுவனங்கள் பிஎம் சூரிய கர்: முப்டி பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் பலன் அடைந்துள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவர் மாதம் துவக்கப்பட்ட இந்த திட்டம், 2kWகொள்திறன் கொண்ட சோலார் அமைப்பு செலவில் 60 சதவீதம் வரை மானியம் அளிக்கிறது மற்றும் 2 முதல் 3kW கொள்திறன் கொண்ட அமைப்புகளுக்கு கூடுதல் அமைப்பு செலவில் 40 சதவீதம் மானியம் அளிக்கிறது.

மேலும், நாட்டில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க சோலார் மையங்கள் அமைக்க சிறப்பு கடன் அளிக்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 11,000 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. ஆனால், இந்நிறுவனங்களில் 30 மட்டுமே நாடு தழுவிய அளவில் செயல்பாடுகளை கொண்டுள்ளன. சோலாரியம் அவற்றில் ஒன்றாக விளங்குகிறது.

ரூ.75,000 ஒதுக்கீடு கொண்ட இந்த திட்டம், 2026-27 ம் ஆண்டில் நாட்டில் ஒரு கோடி வீடுகளில் மேல் தளத்தில் சோலார் பேனல்கள் அமைப்பதை இலக்காக கொண்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த சோலார் ஸ்கொயர் நிறுவனம் வீடுகளுக்கான சோலார் பேனல்கள் பிரிவில் முக்கிய போட்டியாக திகழ்கிறது. இரு நிறுவனங்களும் மாறுபட்ட பாதையை கொண்டுள்ளன.

சோலார் ஸ்கொயர் வழக்கமான ஸ்டார்ட் அப்கள் பாதையில் அண்மையில் பி சுற்றில், லைட்ஸ்பீடு வென்சர் பாட்னர்ஸ் தலமையில் 40 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. மாறாக சோலாரியம் இதுவரை நிதி திரட்டாமல் சொந்த நிதியில் இயங்கி வருகிறது.

“சோலார் ஸ்கொயர் பிரிவு அடிப்படையில் எங்களது போட்டியாளர் என்று கூறும் கார்க், ஆனால், வீடுகள், அரசு, வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் நாங்கள் செயல்படுவது போல இயங்கும் நிறுவனம் எதுவும் இல்லை, என்கிறார்.
சோலார்

பொது பங்குகள்

பாரம்பரிய வர்த்தக கொள்கையை பின்பற்றிய் கார்க், ஒரு வர்த்தகத்தை நீடித்த முறையில் வளர்த்தெடுக்க முடியும் என நம்புகிறார். மற்றவர்கள் அணுகுமுறையில் இருந்து என்னுடைய சிந்தனை வேறுபட்டிருந்தது. எனவே தான் வென்சர் மூலதனத்தை நாடியதில்லை.

நெருக்கமான நண்பர்கள், குடும்பத்தினரிடம் இருந்து பணம் பெற்றோம். துவக்கம் முதல் லாபகரமாக இருப்பதில் கவனம் செலுத்தினோம். எனவே செயல் செலவுகள் வளர்ச்சியை நீடித்த தன்மையில் அமைத்துக்கொண்டோம்,” என்கிறார்.

இந்த அணுகுமுறையே கோவிட் காலத்தில் நிறுவனத்திற்கு உதவியது என்கிறார்.

“எங்கள் எல்லா செலவுகளும் திட்டமிடப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகின்றன. அந்த சோதனை காலத்தை எதிர்கொள்ள போதிய மூலதனம் இருந்தது. எங்கள் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இது உதவியது. நிறுவனங்கள் சம்பள குறைப்பு, ஆட்குறைப்பை அறிவித்துக் கொண்டிருந்தபோது நாங்கள் முறையாக சம்பளம் வழங்கி, ஊதிய உயர்வும் அளித்தோம்,” என்கிறார்.

2024ல் சோலாரியம் ரூ.177 கோடி வருவாய் ஈட்டி, வரிக்கு பின் லாபமாக ரூ.15.59 கோடி ஈட்டியுள்ளது.

இந்திய சோலார் சந்தை 2023ல் 10.4 பில்லியன் டாலர் வருவாய் கொண்டிருந்தது, 2030ல் 24.9 பில்லியன் டாலரை தொடும் என்று பிரசியண்ட் அண்ட் ஸ்டிரேஜடிக் இண்டலிஜென்ஸ் ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan