'செல்போனால் தூக்கத்தை தொலைக்கும் இந்தியர்கள்' - Wakefit ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சார்பு விசயங்கள் இந்தியர்களின் தூக்கத்தை தொடர்ந்து சீர்குலைப்பதாக, வேக்ஃபிட் கிரேட் இந்தியன் ஸ்லீப் ஸ்கோர்கார்டு 2025ன் 8வது பதிப்பு கணக்கெடுப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 84% இந்தியர்கள் படுக்கைக்கு முன் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதாக இந்த கணக்கெடுப்பு கூற
சத்தமில்லாமல் மக்களை அச்சுறுத்தி வரும் பிரச்சினைகளில் ஒன்றாக இன்சோம்னியா (Insomnia) எனப்படும் தூக்கமின்மை பிரச்சினை உள்ளது. முன்பு மாதிரியெல்லாம், படுத்தவுடன் எல்லோருக்கும் தூக்கம் கண்களைத் தழுவுவது இல்லை. எந்தளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி நம் வேலைகளை சுருக்கி உள்ளதோ, அதே அளவுக்கு நம் தூக்கத்தையும் அதற்கு கைமாறாகப் பெற்றுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
இரவில் சரியான நேரத்தில், சரியான நேர அளவில் தூங்கவில்லை என்றால், உயர் ரத்த அழுத்தம், இதய கோளாறு, பக்கவாதம் வளர்சிதை மாற்றக் கோளாறு மற்றும் அறிவாற்றல் குறைவு போன்ற பிரச்னைகள் உருவாகும், என மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் எவ்வளவோ எடுத்துக் கூறினாலும், மக்கள் மத்தியில் இன்னமும் அது பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்படவில்லை என்றுதான் கூறவேண்டும்.
சிலர் உறங்க வேண்டும் என நினைத்தாலும், மன அழுத்தம், வேலைப்பளு, செல்போன் ஆதிக்கம் என பல காரணங்கள் அவர்களை உறங்க விடுவதில்லை.
இப்படி இரவில் சரியாக உறங்காமல் அவதிப்படுபவர்கள் எத்தனை சதவீதம் பேர், அதற்கு என்ன காரணம் என மெத்தைகள் மற்றும் இருக்கைகள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான திகழும் 'Wakefit' வித்தியாசமான கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. 8வது வேக்ஃபிட் கிரேட் இந்தியன் ஸ்லீப் ஸ்கோர்கார்டு 2025 (8th Great India Sleep Scorecard 2025) என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், தொலைபேசி மக்களின் தூக்கத்தை ரொம்பவே சீர்குலைக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

தூக்கம் பற்றிய கணக்கெடுப்பு
2025 உலக தூக்க தினத்தை முன்னிட்டு, இந்த கணக்கெடுப்பை வேக்ஃபிட் நடத்தியுள்ளது. இந்த கணக்கெடுப்பானது, நள்ளிரவு வேலைப்பளு, செல்போன், கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சி என டிஜிட்டல் சார்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் தூக்கமின்மையின் தாக்கம் உள்ளிட்ட போக்குகளை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் 2024 மற்றும் பிப்ரவரி 2025க்கு இடையில் இந்தியா முழுவதும் சேகரிக்கப்பட்ட 4,500க்கும் மேற்பட்ட பதில்களுடன் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில், மக்களின் மாறிவரும் தூக்க நடத்தைகள் மற்றும் அதனால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள் பற்றிய பல தகவல்கள் தெரியவந்துள்ளது.
வேக்ஃபிட்டின் இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் பின்வருமாறு:
- 84% இந்தியர்கள் படுக்கைக்கு முன் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
- சுமார் 58% பேர், தூங்க ஆரம்பிப்பதற்கு சரியான நேரமாகக் கருதப்படும் 10 மணியைத் தாண்டி, தினமும் இரவு 11 மணிக்கு மேல் தூங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
- 44% பேர் தினமும் காலையில் எழுந்தவுடன் புத்துணர்ச்சி அடைவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
- 18% பேர் தினமும் காலை 9 மணிக்குப் பிறகே எழுந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.
- 35% பேர் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இரவில் உறக்கம் வராமல் தவிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது மன அழுத்தம் தொடர்பான தூக்கக் கோளாறுகளை அதிகரிப்பதாக இந்த கணக்கெடுப்பு கூறுகிறது.

பெண்களே அதிகம்
ஆண், பெண் என பாலின வேறுபாடுகள் மற்றும் புவியியல் வேறுபாடுகளின்படியும், தூக்கப் பழக்கமானது மாறுவதாக இந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அதாவது, பெண்களில், 59% பேர் இரவு 11 மணிக்கு மேல் தூங்குவதாகவும், 50% பேர் காலையில் சோர்வை அனுபவிப்பதாகவும் இந்த கணக்கெடுப்பு கூறுகிறது. இது ஆண்களோடு ஒப்பிடுகையில், 42% கூடுதலாக உள்ளது. இதேபோல், 13% பெண்கள் இரவில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை எழுந்திருப்பதாக கூறியுள்ளனர். இதுவும் ஆண்களோடு ஒப்பிடுகையில் 9% அதிகம்.
பாலின வேறுபாடுகளைப் போலவே, பிராந்திய ரீதியாக, அதாவது, நகரங்களைப் பொறுத்தும் இரவு மக்களின் தூங்கும் நேரம் மாறுபடுகிறது. அதன்படி,
இரவு 11 மணிக்குப் பிறகு படுக்கைக்குச் செல்லும் நபர்களின் அதிகபட்ச சதவீதத்தை கொல்கத்தா (72.8%) பெற்றுள்ளது. கொல்கத்தாவோடு ஒப்பிடுகையில், சென்னை மற்றும் ஹைதராபாத்தில் சுமார் 55% பேர் இரவு 11 மணிக்கு மேல் படுக்கைக்குச் செல்பவர்களாக உள்ளனர்.
இரவில் தாமதமாகத் தூங்குவதால், காலையில் புத்துணர்ச்சியாக உணர்வதில்லை என கொல்கத்தா மற்றும் சென்னையைச் சேர்ந்த சுமார் 55% பேர் தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் பெங்களூரு இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு சுமார் 54% பேர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

தூக்கத்தை நாசமாக்கும் ஸ்மார்ட்போன்
டிஜிட்டல் பழக்கங்களுக்கு மக்கள் அடிமையாவதும், தூக்கத்தை எந்தளவிற்கு பாதிக்கிறது என்பதையும் இந்த கணக்கெடுப்பு சுட்டிக் காட்டியுள்ளது. சுமார் 84% பேர் இரவு படுக்கைக்கு தூங்கச் செல்வதற்கு முன்பு வரை மொபைல் போன்களை பயன்படுத்துவதாக இந்த கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர். 51% பேர் தங்கள் இரவு நேரங்களை ஸ்க்ரோலிங் மற்றும் அதிக நேரம் மொபைல் பார்ப்பதற்கும் காரணமாகக் கூறுகின்றனர். இது மக்களைத் தாமதமாகத் தூங்கச் செய்வதாக இந்த கணக்கெடுப்பு கூறுகிறது.
இரவில் இப்படி அதிக நேரம் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதால், 59% பேர் வேலையில் இருக்கும்போது, பகல்நேர தூக்கத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
படுக்கைக்கு முன் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது 25-30 வயதுக்குட்பட்டவர்களில் (90%) அதிகமாக உள்ளது. குருகிராம் (94%) மற்றும் பெங்களூரு (90%) போன்ற நகரங்கள் படுக்கைக்கு முன் தொலைபேசி பயன்படுத்துபவர்களை அதிகமாகக் கொண்டுள்ளன.

தொடர்ச்சியான கவலை
வேக்ஃபிட் கிரேட் இந்தியன் ஸ்லீப் ஸ்கோர்கார்டின் முந்தைய பதிப்புகளும் தூக்கமின்மை ஒரு தொடர்ச்சியான கவலை என்றே கூறுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டு பதிலளித்தவர்களில்,
சுமார் 51-58% பேர் இரவு 11 மணிக்கு மேல் தூங்குவதாக தொடர்ந்து தெரிவித்துள்ளனர். அதாவது, 3 இந்தியர்களில் 1 பேர் தூக்கமின்மையால் தவித்து வருகின்றனர். இது தூக்கக் கோளாறுகள் குறித்து அதிகரித்து வரும் கவலையை பிரதிபலிக்கிறது.
பல ஆண்டுகளாகவே படுக்கைக்கு முன் போன் பயன்பாடு அதிகமாகவே உள்ளது இந்த கணக்கெடுப்புகளின் மூலம் தெரிய வருகிறது. இது 84-90% என்ற அளவில் கவலை அளிப்பதாக உள்ளது. பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலையின்போது, பகல்நேரத் தூக்கத்தை அனுபவிப்பதாக கூறுவது, தூக்க ஆரோக்கியத்தை பராமரிப்பதில் தொடர்ச்சியான சவாலைக் குறிக்கிறது.
விழிப்புணர்வு அதிகரிப்பு
தொடர்ந்து கவலைதரும் விசயங்களாகப் பதிவு செய்த போதும், சில நம்பிக்கை தரும் நல்ல விசயங்களையும் இந்த கணக்கெடுப்பு கண்டுபிடித்துள்ளது. அதன்படி, நல்வாழ்வுக்கு தரமான தூக்கம் அவசியம் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் முன்பைவிட அதிகரித்திருப்பது இந்த கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
சுமார் 38% பேர் படுக்கைக்கு முன் திரைகளில் இருந்து பார்வையை அகற்றுவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்பதை உணர்ந்துள்ளனர் என்பது ஆறுதல் தரும் செய்தி. மேலும், 31% பேர் நிலையான தூக்க வழக்கத்தை பராமரிக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்பதும் நம்பிக்கை தரும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. .
இந்த கணக்கெடுப்பு குறித்து, வேக்ஃபிட்டின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநரான சைதன்யா ராமலிங்கே கவுடா கூறுகையில்,
“கிரேட் இந்தியன் ஸ்லீப் ஸ்கோர்கார்டு 2025, இந்தியர்களின் வளர்ந்து வரும் தூக்கப் பழக்கங்களையும், மறுசீரமைப்பு ஓய்வை அடைவதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டிஜிட்டல் பழக்கவழக்கங்களும் வேலை அழுத்தங்களும் வாழ்க்கை முறைகளை வடிவமைப்பதாக மாறி விட்டது. வேக்ஃபிட்டில், தூக்க ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி சார்ந்த உரையாடல்களை இயக்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.“
எட்டு ஆண்டுகால The Great Indian Sleep Scorecord மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சிறந்த தூக்க ஆரோக்கியத்திற்கான தகவலறிந்த தேர்வுகளைச் செய்ய தனிநபர்களை ஊக்குவிப்பதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.