Stock News: அமெரிக்க ‘வரி’ யுத்தம் எதிரொலி - பங்குச் சந்தையில் வீழ்ச்சி!
அமெரிக்காவின் வரி விதிப்பு கெடுபிடிகளின் எதிரொலியால் ஏற்பட்டு வரும் சர்வதேச பாதக போக்கு காரணமாக இந்திய பங்குச் சந்தைகளிலும் கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது.
மத்திய அரசு பட்ஜெட் தாக்கத்தை தாண்டி, அமெரிக்காவின் வரி விதிப்பு கெடுபிடிகளின் எதிரொலியால் ஏற்பட்டு வரும் சர்வதேச பாதக போக்கு காரணமாக இந்திய பங்குச் சந்தைகளிலும் கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (பிப்.3) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 731.91 புள்ளிகள் சரிந்து 76,774.05 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 243 புள்ளிகள் சரிந்து 23,239.15 ஆக இருந்தது.
பங்குச் சந்தை வர்த்தகத்தின் ஆரம்பத்தில் கடும் சரிவு நிலவினாலும், அதன்பின் அந்த இறக்க நிலை சற்றே தணிந்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் ஓரளவு நம்பிக்கையை தந்துள்ளது.
இன்று முற்பகல் 11.10 மணியளவில் சென்செக்ஸ் 463.02 புள்ளிகள் (0.60%) சரிந்து 77,042.94 ஆகவும், நிஃப்டி 168.65 புள்ளிகள் (0.72%) சரிந்து 23,313.50 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை இறக்கத்துடன் நிலை கொண்டது. ஆசிய பங்குச் சந்தைகளான சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங்கில் கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மத்திய அரசு பட்ஜெட்டின் தாக்கம் சாதகமாகவே இருந்தபோதிலும், அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் அரசு தனது வர்த்தக நாடுகளுக்கு விதித்து வரும் வரிச் சுமை காரணமாக சர்வதேச அளவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இப்போது இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
பஜாஜ் ஃபைனான்ஸ்
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபின்சர்வ்
நெஸ்லே இந்தியா
டைட்டன் கம்பெனி
பாரதி ஏர்டெல்
விப்ரோ
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டெக் மஹிந்திரா
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இன்ஃபோசிஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஏசியன் பெயிண்ட்ஸ்
டிசிஎஸ்
ஐசிஐசிஐ பேங்க்
சன் பார்மா
எஸ்பிஐ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஐடிசி
ஆக்சிஸ் பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 பைசா வீழ்ச்சி கண்டு ரூ.87.29 ஆக வரலாறு காணாத சரிவை சந்தித்தது.
Edited by Induja Raghunathan