Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

புதிய துறைகளில் வியாபாரத்தில் உச்சம் தொட்ட தொழில் முனைவோரின் வெற்றிக் கதைகள்!

வித்தியாசமாக யோசித்து, கடினமாக உழைத்து இன்று இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகளில் தங்கள் சிறகை விரித்துள்ள இந்தியா தொழில்முனைவோர்களைப் பற்றி 2020இல் யுவர் ஸ்டோரி வெளியிட்ட பல்வேறு கட்டுரைகளை ஓர் தொகுப்பாக வாசகர்களுக்காக வழங்கியுள்ளோம்.

புதிய துறைகளில் வியாபாரத்தில் உச்சம் தொட்ட  தொழில் முனைவோரின் வெற்றிக் கதைகள்!

Tuesday December 29, 2020 , 9 min Read

வித்தியாசமாக யோசித்து, கடினமாக உழைத்து இன்று இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகளில் தங்கள் சிறகை விரித்துள்ள இந்திய தொழில்முனைவோர்களைப் பற்றி 2020ல் யுவர் ஸ்டோரி வெளியிட்ட பல்வேறு கட்டுரைகளை ஓர் தொகுப்பாக வாசகர்களுக்காக வழங்கியுள்ளோம்.


யுவர் ஸ்டோரிக்கு வாங்க, புதுபுது தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகளை பாருங்கள். நீங்களும் உங்கள் வித்தியாசமான தொழில் முயற்சியால் உலகை வெல்ல சிறகை விரியுங்கள்.

வெற்றிக்கதைகள்

1. பளபளக்கும் டைல்ஸ் தயாரிப்பில் ஜொலிஜொலிக்கும் அபர்ணா எண்டர்பிரைசஸ்


டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர், இன்று சொந்தமாக டைல்ஸ் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறார். விடாமுயற்சியுடன் குறிக்கோளை நோக்கிப் பயணித்தால் லட்சியத்தை அடைவது உறுதி என்கிறது எஸ்.எஸ். ரெட்டியின் வெற்றிக் கதை.


1980ஆம் ஆண்டுகளில் கர்நாடகாவின் ஹுப்ளி பகுதியில் உள்ள டைல்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த எஸ்.எஸ். ரெட்டி, 1990இல் அபர்ணா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் ஹைதராபாத்தில் டைல்ஸ் வர்த்தகத்தைத் தொடங்கினார். தொடக்கத்தில் ஆந்திராவில் மட்டும் நடைபெற்ற தொழிலானது, விரைவில் இந்தியா முழுவதும் கிளை பரப்பத் தொடங்கியது.

அபர்ணா

தற்போது அவரின் மகளான அபர்ணா ரெட்டி நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து வருகிறார். 1990-களில் டைல்ஸ் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்த ரெட்டி, 2006ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ரெடி மிக்ஸ் கான்கிரீட் (ஆர்எம்சி) தயாரிப்பதற்காக தனது சொந்தத் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினார். 2008ல் கட்டுமானத் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் ரிஜிட் பிவிசி தயாரிப்பையும் இந்நிறுவனம் மேற்கொண்டது.


இன்று ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரு போன்ற நகரங்களில் சுமார் 19 தொழிற்சாலைகளுடன் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் விற்றுமுதல் 863 கோடி ரூபாய். தற்போது இந்நிறுவனம் இந்தியா மட்டுமன்றி பல்வேறு ஆசிய நாடுகளுக்கும் டைல்ஸ் ஏற்றுமதி செய்கிறது.


அபர்ணா டைல்ஸ் குறித்து மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்


2. மோடி குர்தா புகழ் 'சுப்ரீமோ' நிறுவனத்தின் சூப்பர் வளர்ச்சி


சாதாரண தையல் கடையில் தங்களது வாழ்க்கையைத் தொடங்கி, இன்று நாட்டின் மிகப் பெரிய பிராண்டுக்கு சொந்தக்காரர்களான இரு சகோதரர்களின் உழைப்பின் வெற்றிப் பயணம்


மோடி குர்தா புகழ் 'சுப்ரீமோ' நிறுவனம் இன்று குஜராத்தில் மிகப் பிரபலமான ஓர் பிராண்ட். ஆயத்த ஆடை சந்தையில் கலக்கி வரும் இந்நிறுவனத்தை வெறும் 250 சதுர அடியில் 1981ஆம் ஆண்டு அகமதாபாத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சவுகான் (60), பிபின் சவுகான் (57) ஆகிய இரு சகோதரர்கள் தொடங்கினர்.


தொடர்ந்து இருவரும் 1991ல் தங்கள் நிறுவனத்தை 'ஜேட்ப்ளூ' (JadeBlue) எனும் பிராண்டாக மாற்றி சர்வதேச அளவில் சந்தையை விரிவுப்படுத்தினர். ஃபார்மல்ஸ் முதல் கேஷுவல்கள் வரை ஆண்களுக்கான அனைத்து வகை ஆடைகளையும் ஒரே குடையின்கீழ் வழங்குகிறது 'ஜேட்ப்ளூ'. மேலும், 2003ல் 'க்ரீன்ஃபைபர்' எனும் லேபிளையும் இந்நிறுவனம் தொடங்கியது. இன்று, க்ரீன்ஃபைபர் பிராண்ட் மட்டும் 28 நகரங்களில் 38 ஸ்டோர்களைக் கொண்டிருக்கிறது.

மோடி

ஆண்கள் அனைவருக்குமான ஒன்- ஸ்டாப்- ஷாப் ஆக திகழும் இங்கு சினிமா, அரசியல், பிசினஸ், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இந்நிறுவனத்தின் ஆண்டு டர்ன்ஓவர் ரூ.265 கோடிகளாகும். பிரதமர் நரேந்திர மோடி அனுமதியுடன் 2010ல் இந்நிறுவனத்துக்கு தனி அடையாளமான 'மோடி குர்தா' ட்ரேடுமார்க் கிடைத்தது இந்நிறுவனம் தேசிய அளவில் தனது சிறகுகளை விரிக்க காரணமாக அமைந்தது.


மோடி குர்தா புகழ் 'சுப்ரீமோ' நிறுவனம் பற்றி இங்கே


3. புதுமையான மொபைல் கவர்கள் மூலம் தொழிலில் சாதித்த சென்னை இளைஞர்


நாகரீக வாழ்க்கை ஓட்டத்துக்கு ஏற்ப தங்களது தொழிலையும் மாற்றம் செய்து வித்தியாசமாக யோசித்தால் வாழ்க்கையில் மட்டுமன்றி தொழிலிலும் ஜெயிக்கலாம் என்பதற்கு ஓர் உதாரணம்தான் இந்த சென்னை இளைஞர்.


ரொனாக் சாரதாவுக்கு, அவரது தந்தை, 2013ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக ரூ.21 ஆயிரம் அளித்துள்ளார். இப்பணம் முழுவதையும் சீனாவில் இருந்து மொபைல் போன் கவர்கள் வாங்கி விற்க ரொனாக் திட்டமிட்டார். ஓர் முகநூல் பக்கம் தொடங்கி, விற்பனையைத் தொடங்கியவருக்கு ஆச்சரியம். அனைத்து மொபைல் கவர்களும் அதிவேகமாக விற்றுத் தீர்ந்தன.


ஸ்மார்ட் போன் சந்தையில் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற பொருள்களை உருவாக்கும் யோசனை அப்போதுதான் அவருக்கு உதயமாகியுள்ளது. இதையடுத்து, செல்போன் தொடர்பான பொருட்களுக்கு மட்டுமே என ‘கவர் இட் அப்’ என ஓர் தளத்தை உருவாக்கியுள்ளார். இதில் தற்போது, இருபாலருக்குமான டீ ஷர்ட்ஸ், தொப்பி, மக்குகள், போஸ்டர்கள், நோட்டுப் புத்தகங்கள் என பல்வேறு பொருள்கள் கிடைக்கின்றன. 

மொபைல்

‘Cover It Up' மூலம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த வண்ணம் செல்போன் கவர்களை உருவாக்கித் தருவதே இவர்களின் வெற்றியின் ரகசியம் என்கிறார். 2014ல் 250-300 கேஸ்கள் வரை உற்பத்தி செய்து விற்பனை செய்துவந்த இந்நிறுவனம், 2019-2020 வருடத்தில் 100,000 பொருட்கள் என்ற எண்ணிக்கையை எட்டும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். 


சந்தையில் பல பெரும் நிறுவனங்களோடு அவர்களின் பொருட்களை விற்பனை செய்ய கவர் இட் அப் ஒப்பந்தங்கள் செய்துள்ளது. மார்வெல், ஸ்டார்வார்ஸ், டிஸ்னி, லூனி டூன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், காலா, தர்பார், ரோபாட் 2.0, ஹாரி பாட்டர் என அந்த பட்டியல் நீளுகிறது. இவர்களின் விளம்பங்கள் கவர் இட் அப்பில் செல்போன் கவர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களாக வெளிவருகிறது.


இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள


4. ரூ. 1500 கோடி டர்ன் ஓவர் ஆகும் திரைச்சீலை உற்பத்தித் தொழில்


பெண்களுக்கான ஆடைகளை விற்பனை செய்து வந்த இரு சகோதரர்கள், தங்களின் வியாபார உக்தியை மாற்றி, திரைச்சீலை விற்பனையில் இறங்கி சாதித்த வெற்றிக் கதை இது.


மும்பையைச் சேர்ந்தவர்கள் அஜய் அரோரா, சஞ்சய். சகோதரர்களான இவர்கள் இருவரும் 1990-களில் பெண்கள் ஆடைகளுக்கான துணிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தனர். அப்போது புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து வந்த அஜய், வீட்டு அலங்காரப் பொருட்கள் துறையில் துணிகளுக்கான தேவை சர்வதேச சந்தைகளில் அதிகளவில் இருந்ததை கண்டறிந்தார்.


இதையடுத்து குடும்ப வணிகத்தை விட்டுவிட்டு வீட்டு அலங்காரப் பொருட்களுக்குத் தேவையான துணிகளை சொந்தமான உற்பத்தி செய்யத் தொடங்கினர்.

திரைச்சீலை

1999-ம் ஆண்டு மும்பையில் இவர்கள் தொடங்கிய வணிகத்துக்கு D'Décor என பெயரிட்டனர். ஐரோப்பிய தரத்துடன்கூடிய தயாரிப்புகளை இந்திய விலையில் விற்பனை செய்வதில் இந்த சகோதரர்கள் கவனம் செலுத்தினர். இந்த முயற்சி சிறப்பாக பலனளித்து உச்சத்தை எட்ட வைத்தது.


இன்று D’Décor திரைச்சீலைகள், விரிப்புகள் போன்றவற்றை நெய்யக்கூடிய உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளராக உள்ளது. 1,500 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்டுள்ள இந்நிறுவத்தின் ஐந்து தொழிற்சாலைகள் இந்தியாவில் தாராபூரில் அமைந்துள்ளது.


இங்கு தினமும் 1,20,000 சதுர மீட்டர் வரை உயர்தர துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. D’Décor தயாரிப்புகள் 65 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் போன்றவை இதன் மிகப்பெரிய சந்தைகளாகும்.


D’Décor பற்றி மேலும் அறிய இங்கே படிங்க


5. ஹேர் ஸ்டைலிங்கில் ரூ. 60 கோடி டர்ன்ஓவர் செய்த தனிஷ்


வெளிநாடுகளுக்கு இணையான தரமான ஹேர்ஸ்டைலிங்கை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் களமிறங்கி, இன்று முன்னணியில் உள்ள ஹேர் மாஸ்டர்ஸின் சாதனைப் பயணம். 2014-ம் ஆண்டு தனிஷ் பத்ரா நிறுவிய ஹேர் மாஸ்டர்ஸ் சலூன் இன்று 21 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.


தனிஷ்; லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பட்டதாரி. இவரது அப்பா கட்டுமானம் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். அதில் இணையவேண்டும் என்பதே தனிஷின் திட்டமாக இருந்தது. இந்தியா திரும்பியதும் அவரது முடிவு மாறி அழகுப் பிரிவில் செயல்படத் தொடங்கினார். லண்டனில் இருந்தபோது அங்கிருந்த 'ஹெட்மாஸ்டர்ஸ்’ என்கிற பிரீமியம் சலூனில் முடிதிருத்தம் செய்த அவருக்கு இந்தியாவில் அத்தகைய சலூன் இல்லாதது ஏமாற்றம் அளித்துள்ளது.

ஹைர்

இதையடுத்து ஆடம்பர சேவைகள் வழங்கும் சலூன் நிறுவனத்தைத் தொடங்கத் தீர்மானித்தார். 2014ம் ஆண்டு புதுடெல்லியில் பஞ்சாபி பாக் பகுதியில் 'ஹேர் மாஸ்டர்ஸ்’ (Hair Masters) தொடங்கினார். இவர் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பர உணர்வையும் தரமான சேவைகளையும் வழங்க விரும்பினார்.


2015ம் ஆண்டு ஹேர் மாஸ்டர்ஸ் சண்டிகரில் மற்றொரு ஸ்டோர் திறந்தது. அதே ஆண்டு மும்பை பாந்திராவில் ஒரு சலூன் அமைக்கப்பட்டது. இன்று மும்பையில் Palladium, புதுடெல்லியில் DLF Emporio போன்ற பிரீமியம் மால்கள் உட்பட நாடு முழுவதும் 21 ஸ்டோர்கள் இயங்குகின்றன. 500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 2018-19 நிதியாண்டில் 60 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்டுள்ளது.


இவரின் முழுக் கதையை இங்கே படிக்கலாம்


6. தனி ஒருத்தியாய் தொழில் துறையில் சாதித்த தேவிதா


திறமையும் உழைப்பும் இருந்தால் போதும் பெண்களாலும், தனியாய் தொழில்துறையில் வெற்றிக் கொடி நாட்ட முடியும் என நிரூபித்துள்ளார் நவீன தொழில்நுட்பக் கூட்டு நிறுவனமான The Vu Group தலைவர் மற்றும் சிஇஓ தேவிதா சரஃப்.


இவர் சமீபத்தில் Hurun India 2020 Rich List of Self-Made Entrepreneurs பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் ஆவார். நாட்டில் தொழில் துறையில் உள்ள மிகச்சிறந்தவர்களுடன் போட்டியிட்டு 16வது இடத்தைப் பிடித்துள்ளார். சுயநிதியில் தொடங்கப்பட்டு, தொழில்நுட்பக் கூட்டு நிறுவனமாக உருவெடுத்த இவரது தொழில்முனைவுப் பயணம் எளிதானதாக அமைந்துவிடவில்லை. எத்தனையோ சவால்களைக் கடந்து வந்துள்ளார்.

தேவிகா

மேலும் தேவிதா, ஃபார்சூன் இந்தியாவின் சக்தி வாய்ந்த 50 பெண்களின் பட்டியல் (2019), GQ அதிக செல்வாக்குள்ள 50 இந்தியர்கள் (2019), இந்தியா டுடேயின் வணிக உலகில் மாற்றத்தை ஏற்படுத்திய சக்தி வாய்ந்த 8 நபர்கள் (2018) பட்டியல் போன்றவற்றிலும் இடம்பெற்றுள்ளார்.


இந்தப் பட்டியல்களில் தேவிதா பெயர் இடம்பெற்றிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்தப் பட்டியலில் பெண் தலைமையில் இயங்கி, லாபகரமாக செயல்படும் ஒரே நிறுவனம் தேவிதாவின் நிறுவனம் மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பு.


தேவிதா பற்றி மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்


7. ரூ. 75 கோடி வருவாய் ஈட்டிய ‘தி டைமண்ட் பேக்டரி’


நகை தயாரிப்புத் தொழிலில் ஆர்வமிக்க இரு நண்பர்கள் இணைந்து உருவாக்கிய ஓர் வைர ராஜ்ஜியம் குறித்த பதிவுதான் தி டைமண்ட் பேக்டரி.


40 வயதான மும்பையைச் சேர்ந்த தொழில்முனைவோர்களான கெளதம் சிங்வி மற்றும் பிரசன்னா ஷெட்டி ஆகியோர் பள்ளி, கல்லூரி காலத்தில் இருந்தே பிரிக்க முடியாத நண்பர்கள். இவர்களின் இந்த நட்பு அவர்களை தங்கள் வாழ்க்கையில் மேலும் பெரிதாக ஏதேனும் சாதிக்கத் தூண்டியது.


1999 ஆம் ஆண்டில், கெளதம் சிங்வி மற்றும் பிரசன்னா ஷெட்டி இருவரும் இணைந்து மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு தங்க நாணயங்கள், சங்கிலிகள் மற்றும் சிறிய ஆர்டர்களை செய்து கொடுக்கத் தொடங்கினர்.


தொடர்ந்து இவர்கள் ரியல் எஸ்டேட் தொழில், விற்பனை, கொள்முதல் மற்றும் சொத்து முதலீடு போன்றவற்றில் ஈடுபட்டு சிறிது பணம் ஈட்டினர். 2008ல் பாந்த்ராவில் ஒரு சிறிய கேரேஜில் ஒரு வைர நகை சில்லறை விற்பனை நிலையத்தை அமைத்துள்ளனர். நண்பர்கள் இருவரும் முழுமூச்சாக வியாபாரத்தில் மூழ்கினர்.

டைமண்ட்

இவர்களின் கடின உழைப்பின் பயனாய் கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், ரூ.75 கோடி வருவாய் ஈட்டும் வணிகமாக வளர்ந்த நகை பிராண்டே ’தி டயமண்ட் பேக்டரி’ (டி.டி.எஃப்) எனும் பாந்த்ரா கடையாகும். குட்டாபுசலு, குண்டன், கோயில் மற்றும் வெட்டப்படாத ஜடாவ் நகைகள் மற்றும் சமகால வடிவமைப்புகளில் சிக்கலான கையால் வடிவமைக்கப்பட்ட துண்டுகள் ஆகியவற்றுடன் வைர மற்றும் தங்க நகைகளை சில்லறை விற்பனை செய்வதில் இந்த பிராண்ட் நிபுணத்துவம் பெற்றது.


தி டையமண்ட் பேக்டரி குறித்து தெரிந்து கொள்ள


8. பரம்பரையாக திரையரங்கு திரைச்சீலைகளைத் தயாரிக்கும் யூசுப்


திரையரங்குகளில் நாம் திரைப்படங்களை பார்த்து மகிழ உதவும் திரைச்சீலைகளை தயாரிக்கும் ’காலா லைட்’ நிறுவனத்தின் வித்தியாசமான வெற்றிக் கதை.


1950களில் யூசுப் ஏ காலாபாய்வாலா பகுதிநேரக் கணக்காளராக வேலைபார்த்து வந்தார். ஆனால் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் கனவுலகம், அவரையும் விட்டு வைக்கவில்லை. திரையரங்குகளில் தனது நேரத்தை செலவிட்டு வந்தார். திரைப்படங்கள் மட்டுமல்லாது,  திரைச்சீலைகள் தயாரிப்பும் அவருக்கு வியப்பைத் தந்துள்ளது. மூன்றாம் தலைமுறை தொழில்முனைவரும் யூசுப் ஏ காலாபாய்வாலாவின் பேரனுமான யூசுப் எஸ் காலாபாய்வாலாவும் தற்போது அதே தொழிலைச் செய்த வருகிறார்.

யூசுப்

1959இல் யூசுப்புக்கு திரைச்சீலைகள் தயாரிக்கும் வேலை முதல்முறையாக கிடைத்தது. யூசுப் வீடுதான் அவரது முதல் தொழிற்சாலை. அவரது மனைவி சகோதரர்கள் மற்றும் இரண்டு வேலையாட்கள் துணையோடு பல நாள்கள் பாடுபட்டு வேலையை முடித்துள்ளனர். 


மேலும் தயாரிக்க ஆர்டர் பெற. ஓர் அமெரிக்க நிறுவனத்தை நாடியுள்ளனர். இவரது உழைப்பு, ஆர்வம், மற்றும் இவர் தயாரித்த திரைச்சீலை ஆகியவை பிடித்துப் போக, அந்நிறுவனம் காலாலைட் தயாரித்த முதல் திரைச்சீலையை அன்றைய மெட்ரோ சினிமாஸ்-ல் (இன்று ஐ நாக்ஸ்) நிறுவியுள்ளனர். அன்றில் இருந்து யூசுப்விற்கு காலாபாய்வாலா என்ற செல்லப்பெயரும் கிடைத்துள்ளது . 1979 ஆண்டிற்குள், இந்தியா முழுவதிலும் 3500 திரையரங்குகளில் இவர்கள் திரைச்சீலைகளை நிறுவியுள்ளனர். 


பிவிஆர், சத்யம், மிராஜ் மற்றும் சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் பல திரையரங்குகளில் தங்களது திரைச்சீலைகளை நிறுவி இந்திய அளவில் 65% சந்தையை தங்கள்வசம் வைத்துள்ளது காலாலைட் நிறுவனத்தினர். மத்திய கிழக்கு நாடுகள் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கும் திரைச்சீலைகளை ஏற்றுமதி செய்கின்றனர். இன்றைய நிலையில் இவர்களின் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.17 கோடி வணிகம் செய்கிறது.


திரையரங்கு திரைச்சீலைகளை தயாரிக்கும் ’காலா லைட்’ இதோ


9. ஊட்டச்சத்து ஸ்நாக்ஸ் தயாரித்து வணிகப்படுத்தும் விஜயா ராஜன்


கணவருக்காக ஊட்டச்சத்து ஸ்நாக்ஸ் தயாரிக்கத் தொடங்கி, இன்று அதனையே ஓர் தொழிலாக்கி, தொழிற்சாலை மூலம் வணிகம் மேற்கொண்டு வரும் ஓர் குடும்பத் தலைவியின் வியாபார வெற்றிக் கதை.


விஜயா ராஜனின் கணவர் 2015ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு ஊட்டச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் தர விரும்பிய விஜயா ராஜன் அது குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினார்.


பதப்படுத்தும் பொருட்கள், செயற்கைப் பொருட்கள், சர்க்கரை போன்றவை சேர்க்கப்படாத ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளைத் தேடினார். இதுவே சிரிமிரி (SIRIMIRI) என்கிற ஊட்டச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் வணிகத்தை இவர் தொடங்குவதற்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.

விஜயா

எனவே நட்ஸ், தானியங்கள், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஊட்டச்சத்து நிறைந்த பல்வேறு ஸ்நாக்ஸ் வகைகளைத் தயாரிக்கும் முயற்சியில் களமிறங்கத் தொடங்கினார் விஜயா. இதற்குப் பயன்படுத்தும் பொருட்கள் குறித்தும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்து குறித்தும் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் வரை தீவிரமாக ஆய்வு செய்தார்.


பின்னர் இதுபோன்ற தயாரிப்பிற்கான தேவை அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே இருப்பதை கவனித்தார். விரைவில் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் வீட்டில் உள்ள குழந்தைகளிடையே விஜயாவின் ஸ்நாக்ஸ் வகைகள் பிரபலமானது.


2017ம் ஆண்டு ஒரே ஒரு ஊழியருடன் விஜயாவின் வீட்டிலேயே தொடங்கப்பட்ட வணிகம் இன்று பெங்களூருவில் 15 பேர் அடங்கிய குழுவாக 5,000 சதுர அடி கொண்ட தொழிற்சாலையில் செயல்பட்டு வருகிறது.


விஜயா ராஜன்இன் உழைப்பில் உயர்ந்த ஸ்னாக்ஸ் நிறுவன வெற்றிக் கதை பற்றி இங்கே படிக்கலாம்


10. இந்தியாவின் 2வது பெரிய கடிகார நிறுவனத்தின் சாதனைக் கதை


10 கடிகாரங்கள் விற்கத் தொடங்கி, இன்று 650 ஊழியர்களுடன், ஆண்டுக்கு ரூ.65 கோடி வருவாய் ஈட்டுகிறது சோனம் கிளாக்ஸ். மும்பையில் கடிகார விற்பனையில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார் ஜெயேஷ் ஷா. தினமும் 10 கடிகாரங்கள் விற்பனை செய்து வந்த இவர் 1996ஆம் 250 சதுர அடி கொண்ட கடையில் கடிகாரங்கள் தயாரித்து உள்ளூரில் விற்பனை செய்யத் தொடங்கினார். இப்படித் தொடங்கியதுதான் 'சோனம் க்ளாக்ஸ்’ (Sonam Clocks) வெற்றிப் பயணம்.


தற்போது கடிகாரத்தின் முக்கியப் பகுதியான மூவ்மெண்ட் தயாரிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாகவும் சுவர் கடிகாரங்கள் தயாரிப்பில் Ajanta Orpat நிறுவனத்தைத் தொடர்ந்து இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் சோனம் க்ளாக்ஸ் விளங்குகிறது.


இந்தியாவின் ஒட்டுமொத்த சுவர் கடிகாரங்கள் மற்றும் கடிகார மூவ்மெண்ட்ஸ் ஏற்றுமதியில் சோனம் க்ளாக்ஸ் 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பு அளிக்கிறது. இன்று இந்நிறுவனத்தில் 650 ஊழியர்கள் உள்ளனர். இதில் 90 முதல் 95 சதவீதம் பேர் பெண்கள். நாள் ஒன்றிற்கு 12,000 முதல் 15,000 சுவர் கடிகாரங்களையும் 50,000 கடிகார மூவ்மெண்ட்களையும் தயாரிக்கின்றனர்.

கடிகாரம்

150-க்கும் அதிகமான விநியோகஸ்தர்களும், 35,000 சில்லறை வர்த்தகர்களும் இருப்பதாகவும் 27-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி நடைபெறுகிறது. இந்நிறுவனம் 2018-19ம் ஆண்டில் 65 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. 2022-ம் ஆண்டில் 150 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.


சோனம் கிளாக்ஸ் பற்றி விரிவாக இதோ