Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

தமிழக வேளாண் பட்ஜெட் 2023: தொழில்முனைவோர், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கவனிக்கத்தக்க அம்சங்கள்!

திமுக அரசு 3-வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதில் பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோருக்கான பயனுள்ள அறிவிப்புகளை அறிவோம்.

தமிழக வேளாண் பட்ஜெட் 2023: தொழில்முனைவோர், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கவனிக்கத்தக்க அம்சங்கள்!

Wednesday March 22, 2023 , 10 min Read

திமுக அரசு 3-வது முறையாக தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதில், பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு பயன் தரும் அறிவிப்புகள் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்:

உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான தலைமை அமைப்பாக செயல்படும் பொருட்டு தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TN-ApEx) இலாப நோக்கமற்ற நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்துதலுக்கான குறு நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தில், வரும் ஆண்டில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் அமைக்கும் தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் மானிய உதவி, சுய உதவிக் குழுக்களுக்கு ஆதார மூலதனம், பொதுவான கட்டமைப்புகள் ஆகியவற்றுக்காக 160 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கப்படும்.

சென்ற வேளாண் நிதிநிலை அறிக்கையில் திருச்சி-நாகை இடைப்பட்ட பகுதி வேளாண் தொழில் பெருவழி தடமாக அறிவிக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில், உழவர்களுக்கு அதிக வருமானம் ஈட்டவும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வேளாண் தொழில் பெருந்தடத்தினை அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

வேளாண் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளைத் தொடங்க முன் வரும் தொழில் முனைவோருக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகுப்பும், சந்தை இணைப்புகள், வல்லுநரின் வழிகாட்டுதல்கள், ஒற்றைச் சாளர முறை வசதிகள் உருவாக்கித் தரப்படும். சேமிப்பு, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதலை திறம்பட மேற்கொள்ளும் வகையில். பொது வசதிகளுடன் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் தொழில்நுட்ப புத்தொழில்களை வளர்ப்பதற்காக தஞ்சாவூரில் புதிய வட்டார புத்தொழில் மையம் ஒன்று தமிழ்நாடு புத்தொழில்-புத்தாக்க இயக்கம் மூலம் உருவாக்கப்படும்.

Agri

இந்த வேளாண் தொழில் பெருவழி தடத்தின் மூலம் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்துத் திறம்பட செயல்படுத்தும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் தொழில் பெருந்தட திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு உணவுப் பதப்படுத்தும் கொள்கையின் கீழ் (TNFPP-2018) தனியார் தொழில்முனைவோருக்கு பல்வேறு சலுகைகள், ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இக்கொள்கை வரும் ஆண்டில் மறுசீரமைக்கப்படும்.

2023-24 ஆம் ஆண்டில் வேளாண்மை, அதன் தொடர்புடைய துறைகளான கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை, நீர்வள ஆதாரத் துறை, எரிசக்தி, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு, உணவுத் துறை, வருவாய்த் துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மானிய கோரிக்கைகளின் கீழ் 38 ஆயிரத்து 904 கோடியே 46 இலட்சத்து ஆறு ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின்னணு வேளாண்மைத் திட்டம்:

நவீன மின்னணு தொழில்நுட்பங்களை வேளாண்மையிலும் உட்புகுத்தி, விவசாயிகள் எளிய முறையில் துரிதமாகக் கையாண்டு பயன்பெற ஏதுவாக, கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, 37 வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகள் இடுபொருட்கள் பெறுவதற்கு வசதியாக சோதனை முறையில் பணமில்லா பரிவர்த்தனை செயல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில் 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் பணமில்லா பரிவர்த்தனை விரிவுபடுத்தப்படும்.

வேளாண் மின்னணு உதவி மையம்:

தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் 880 வேளாண் விரிவாக்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் அரசின் திட்டப் பலன்கள் சேரும் வகையிலும், விவசாயி சார்ந்த அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் மின்னணு முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள உதவும் வகையில், 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உதவியுடன் மின்னணு உதவி மையங்கள் (இ-சேவை) அமைக்க இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

Agri

வட்டார அளவில் வாட்ஸ் அப் குழு:

விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், சந்தை நிலவரம், வானிலை முன்னறிவிப்புகள், மானியங்கள், பூச்சி-நோய் தாக்குதல் போன்ற தகவல்களை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, வட்டார அளவில் விவசாயிகளைக் கொண்டு ”வாட்ஸ்அப்” குழு உருவாக்கப்படும்.

இக்குழுவில் அனைத்து குக்கிராமங்களிலிருந்தும், விவசாயிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். இதன் ஒருங்கிணைப்பாளராக வட்டார வேளாண்மை உதவி இயக்குநரும், தோட்டக்கலை உதவி இயக்குநரும் செயல்படுவார்கள். வட்டார குழுக்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் குழுக்கள் உருவாக்கப்படும்.

துறையின் மாநில அளவில் செயலாற்றும் விளம்பரப் பிரிவு, மாவட்டத்திற்குரிய தகவல்களை, குறுஞ்செய்தி (SMS), குரல் வழிச் செய்தி (Voice Message), குரல் வழி அறிவிப்பு (Voice Blasting), மின்னணு விளம்பரம் (Digital Advertisement) வாயிலாக மாவட்டக் குழுவிற்கு அனுப்பி வைக்கும். இத்தகவல்கள் உடனடியாக வட்டார அளவில் உள்ள விவசாயிகள் குழுவிற்கு அனுப்பப்பட்டு, அவர்கள் தங்களது குக்கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்குத் தகவல்களைத் தெரிவிப்பார்கள்.

GRAINS-ஒரு தளம்-பல பயன்கள்:

உழவர் நலன் சார்ந்த பல்வேறு துறைகளின் திட்டப்பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்திற்கு சென்று, பல்வேறு ஆவணங்களை தனித்தனி படிவங்களில் தரவேண்டியுள்ளது. இத்தகைய நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர், சாகுபடி செய்யும் விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளின் அடிப்படை தகவல்களான வங்கிக் கணக்கு, ஆதார் எண், நில விவரங்கள், பயிர் சாகுபடி விவரங்களை கிராம வாரியாக சேகரித்து, கணினிமயமாக்கி புதிய இணையதளமான ‘GRAINS’ (Grower Online Registration of Agriculture Inputs System) அறிமுகப்படுத்தப்படும். இதனால் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும் (One Stop Solution) கிடைக்கும்.

இதன் மூலம், பயிர்க்கடன், நெல். கரும்புக்கான ஊக்கத்தொகை, இயற்கைப் பேரிடர் நிவாரணம், நலத்திட்ட உதவிகள், வேளாண்மை சார்ந்த 13 க்கும் மேற்பட்ட துறைகளின் பல்வேறு திட்டப் பலன்கள் அனைத்தையும் விவசாயிகள் எளிதாகப் பெறும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இது விவசாயிகளுக்கும் அரசின் பல துறைகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்:

விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், திட்டப் பயன்கள் குறித்த விவரங்களை எடுத்துச் செல்வதற்காக, ”உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்” 2020-21 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறையின் 3,684 விரிவாக்க அலுவலர்கள் (உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்) பயணம் மேற்கொண்டு தனித்தனியே தங்கள் துறை சார்ந்த தகவல்களை வழங்கி திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர்.

இதன்படி, ஒரு உதவி வேளாண்மை அலுவலர் 8 முதல் 10 ஊராட்சிகளுக்கும், ஒரு உதவி தோட்டக்கலை அலுவலர் 10 முதல் 15 ஊராட்சிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் 15 நாட்களுக்கு ஒருமுறையே விரிவாக்க (உதவி வேளாண்மை/உதவி தோட்டக்கலை) அலுவலர்கள் ஒரு ஊராட்சிக்கு செல்ல முடிகிறது. கிராம அளவில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் திட்டங்களை ஒரு சேர வழங்கிட, கிராமத்திற்கு ஒரு விரிவாக்க அலுவலரை நியமித்திடவேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதன்பொருட்டு, வேளாண்மை-உழவர் நலத்துறையின் அனைத்து சகோதரத்துறைகளிலும் உள்ள வட்டார, கிராம அளவில் பணியாற்றும் விரிவாக்க அலுவலர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, 4,311 விரிவாக்க அலுவலர்கள் 3 முதல் 4 கிராமங்களுக்கு ஒருவராக நியமிக்கப்படுவார்கள். இந்த வேளாண்மை விரிவாக்க அலுவலர், வேளாண்மை, தோட்டக்கலை-மலைப்பயிர்கள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் சார்ந்த அனைத்துப் பணிகளையும் கிராம அளவில் ஒருங்கிணைத்து உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்-2.0 ஆகச் செயல்படுத்துவர்.

மேலும், வட்டார அளவிலான அனைத்து வேளாண்மை, சகோதரத்துறை அலுவலர்களின் ”மேசைப்பணியினைக் குறைத்து, களப்பணி”யினை அதிகரிக்கும் வகையில் ஆய்வுக்கூட்டங்கள், அறிக்கைகள் தயாரித்தல் ஆகியவை முறைப்படுத்தப்பட்டு நேரம் மீதப்படுத்தப்படும். விவசாயிகளுடனான தொடர்பு வலுப்படும்.

Agri

உழவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி:

வெளிநாடுகள் சிலவற்றில் உயர் ரக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தித்திறன் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அங்கிருக்கும் தொழில்நுட்பங்களை நம் மாநில உழவர்களும் அறிவது, அவர்களுக்குள் ஊக்கத்தை உண்டாக்கும். பிறகு, மனதில் தங்கி, தாக்கத்தை உண்டாக்கும். நாமும் அப்படி உற்பத்தி செய்ய முடியாதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தும்.

அது சாகுபடியிலிருக்கும் தேக்கத்தை நீக்கி தேடலை உண்டாக்கும். அவர்கள் தங்கள் நிலங்களில் அத்தகைய முயற்சியை மேற்கொள்வார்கள். காண்பது நம்பிக்கையாகவும், செய்வது கற்றலாகவும் மாறும். எனவே, 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பள்ளி மாணவர்களுக்குப் பண்ணைச் சுற்றுலா:

பாடப் புத்தகங்களில் படமாகவும், ஊடகங்களில் காணொலியாகவும் கண்ட வயல்களை, தோப்புகளை, தோட்டங்களை, பாசனக் கிணறுகளை, பழ மரங்களை, மாணவர்கள் நேரடியாக காண வேண்டுமென்பதற்காகவும், வேளாண்மையின் மகத்துவத்தை அவர்கள் அறிந்து, உணர்ந்து, தெளிந்து, தேற வேண்டுமென்பதற்காகவும், பண்ணைச் சுற்றுலா கல்வித் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

கான்கிரீட் காடுகளிலிருந்து பெறுகிற விடுதலையாகவும், மரகத வயல்வெளிகளைக் கண்டு மகிழ்கிற பொழுதுபோக்காகவும், உழவர்களின் வியர்வையின் உன்னதத்தைப் புரிந்துகொள்கிற பயிற்சியாகவும், பாடப் புத்தகங்களில் வருகிற வினாக்களுக்கு விளக்கமாகவும், உண்ணுகிற உணவை, உணவின் அருமையை உணரும் மெய்ஞானமாகவும், இந்தப் பண்ணைச் சுற்றுலா மாணவர்களுக்கு அமையும்.

இதுபோன்ற சுற்றுலாக்கள் இயற்கையோடு இயைந்து வாழும் நெறியைக் கற்றுத்தரும். அரிசியும், பருப்பும் தொழிற்சாலைகளில் உற்பத்தியாவதாக நினைத்துக் கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்திற்கு இந்தச் சுற்றுலா விழிப்புணர்வை ஏற்படுத்தும். இத்திட்டம் ஒரு கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

Agri

வேளாண் இயந்திரமயமாக்குதல்:

வேளாண் இயந்திரங்கள் நேரத்தை சேமிக்க உதவுபவை. நூற்றுக்கணக்கான மனிதர்கள் அறுவடை செய்கிற வயலை ஒரே ஓர் இயந்திரம், சில மணி நேரங்களில் அறுவடை செய்யும் ஆற்றல் மிகுந்தது. தமிழ்நாட்டு சிற்றூர்களில் வேளாண் பணிகளுக்கு ஆள்தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. பரவலாக்கப்பட்ட கல்வியினாலும், பரந்து விரியும் நகரமயமாக்கலினாலும், பலரும் படித்துப் பட்டம் பெற்று, பல்வேறு பணிகளில் அமர்வதாலும், இந்த ஆள் தட்டுப்பாடு, வளர்ச்சி அடைந்த நாடுகளைப் போலவே அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கு வேளாண்மை இயந்திரமயமாக்குதல் இன்றியமையாததாகும்.

உழுதல், விதைத்தல், நாற்று நடுதல், களை பறித்தல், கனி பறித்தல், அறுவடை செய்தல், மதிப்புக் கூட்டுதல், தோண்டுதல், தேங்காயைப் பிரித்தெடுத்தல், வெங்காயத் தாள் நீக்குதல், எண்ணெய் பிழிதல், போன்றவற்றை மேற்கொள்ள இயந்திரங்கள் இருப்பதால் மனித ஆற்றல் சேமிக்கப்படுகிறது. நேரம் உருவாக்கப்படுகிறது. உருவான உபரி நேரம் மற்ற பணிகளுக்குப் பயன்படுகிறது.

சிறு, குறு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இயந்திரங்களை மானியத்தில் வழங்க இவ்வரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரும் ஆண்டில் வேளாண் இயந்திரங்கள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், கரும்பு சாகுபடிக்கு ஏற்ற இயந்திரங்கள், கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஆகிய இனங்களுக்காக ஒன்றிய, மாநில அரசின் நிதியிலிருந்து 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதோடு பயனாளிகள் தேர்வும் கணினிமயமாக்கப்படும்.

இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:

திறம்பட வாழ, திறன்கள் அவசியம். ஊரகப் பகுதிகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. அவற்றை இயக்கவும், பழுதுபார்க்கவும் திறன்கள் தேவைப்படுகின்றன. உரிய நேரத்தில் வேளாண் இயந்திரங்களை இயக்குவதற்கு திறன்வாய்ந்த ஓட்டுனர்களை உருவாக்குவது அவசியம். டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றை இயக்குவதற்கும், கையாள்வதற்கும் 500 ஊரக இளைஞர்களுக்கு வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி ஆகிய ஆறு இயந்திர பணிமனைகளில் ஒரு கோடி ரூபாய் செலவில் இயந்திரங்களை இயக்குவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

மேலும், வேளாண் இயந்திரங்களைக் காடுகளிலும், மேடுகளிலும் பயன்படுத்துகிற காரணத்தால், அவை அடிக்கடி பழுதாகிற நெருக்கடி நேர்கிறது. வயலில் உழுதுகொண்டு இருக்கிறபோது, இயந்திரக் கலப்பை பழுதானால் உழுகிற பணிக்கு, ஊறு விளைந்து விடும். இதைத் தவிர்க்கும் பொருட்டு, நகர்ப்புரங்களை நாடி வருகிற அந்த இயந்திரங்களை சிற்றூரிலேயே சீர்படுத்துவதற்கு ஊரக இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பது இன்றைய தேவை. ஊரக இளைஞர்கள் சுய தொழில் தொடங்கும் வகையில் ஆறு அரசு வேளாண் இயந்திரப் பணிமனைகளில் 50 இலட்சம் ரூபாய் செலவில் 200 ஊரக இளைஞர்களுக்கு பழுது நீக்கம், பராமரிப்பு ஆகியவை குறித்த குறுகிய காலப் பயிற்சி வழங்கப்படும்.

Agri

புவிசார் குறியீடு பெறுதல்:

ஒவ்வொரு மண்ணுக்கும், ஒவ்வொரு மகத்துவம் இருக்கிறது. தட்பவெப்ப நிலை, பெய்யும் மழை, அடிக்கும் காற்று, படரும் வெளிச்சக் கதிர்கள் ஆகியவற்றைப் பொறுத்து, சுவை பகுதிக்குப் பகுதி வேறுபடுகிறது. தமிழ்நாட்டுக்கே உரிய வேளாண் பொருட்கள் எண்ணற்றவை இருக்கின்றன.

ஒரு மாவட்டத்தில் விளைகிற மாதிரி, மற்றொரு மாவட்டத்தில் அவை விளைவது இல்லை. அத்தகைய சிறப்பு வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று உலகளாவிய சந்தையில் இடம்பெறச் செய்வதன்மூலம் அவற்றின் மதிப்பு அதிகரிக்கிறது. கடந்த ஆண்டில், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, வரும் ஆண்டிலும், கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டிமுளை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புகவுணி அரிசி ஆகிய பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

நவீன சிப்பம் கட்டுதல், வேளாண் ஏற்றுமதிக்கான பயிற்சிகள்:

உற்பத்தி செய்த தரமான பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த ஏதுவாக, சிப்பம் கட்டுதல் (Packaging) குறித்த சிறப்பு பயிற்சி சென்னை, பெருங்குடியில் உள்ள இந்திய சிப்பம் கட்டுதல் நிறுவனத்தின் (Indian Institute of Packaging) வாயிலாக 154 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இதனை விரிவுபடுத்தும் முயற்சியாக, மேலும் 164 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும். மேலும், ஏற்றுமதி மூலம் கூடுதல் வருவாய் பெறவும் சந்தை வாய்ப்புகளை அதிகப்படுத்தவும், மாநில அளவிலான பத்து கருத்தரங்குகள் 50 இலட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.

மின்னணு கிடங்கு ரசீது:

தமிழ்நாட்டில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள 150 சேமிப்பு கிடங்குகள் வலுப்படுத்தப்பட்டு, கிடங்கு மேம்பாடு-ஒழுங்குமுறை ஆணையத்தின் (Warehousing Development and Regulatory Authority) அங்கீகாரம் பெற்று, வரும் ஆண்டில் மின்னணு மாற்றத்தகு கிடங்கு இரசீது (e Negotiable Warehouse Receipts) முறை கொண்டுவரப்படும். இதன் மூலம், இந்தச் சேமிப்புக் கிடங்குகளில் விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களையும், வியாபாரிகள் கொள்முதல் செய்த விளைபொருட்களையும் சேமித்து, அவற்றின் மதிப்புக்கு ஏற்ப, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 80 சதவிகிதம் வரை கடன் உதவி பெற வழிவகை செய்யப்படும்.

மேலும், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் கடலூர், திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 31,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 25 குளிர்பதனக் கிடங்குகளுக்கும் கிடங்கு மேம்பாடு-ஒழுங்குமுறை ஆணையத்தின் (WDRA) அங்கீகாரம் பெற்று மின்னணு மாற்றத்தகு கிடங்கு இரசீது பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வேளாண் துறையில் நானோ தொழில்நுட்பம்:

வேளாண்மையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தவல்லதாக நானோ தொழில்நுட்பம் அறியப்பட்டுள்ளது. உரம், நுண்ணூட்டம், பூச்சிக்கொல்லி, விளைபொருளின் தரமறிதல், சேமிப்பு காலத்தை அதிகரித்தல் ஆகியவற்றில் நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. நானோ யூரியா ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, ட்ரோன் தொழில்நுட்பத்துடன் சேர்த்துப் பரவலாக்கப்பட்டு வருகிறது.

நானோ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான செயல்பாடுகள், பொருட்கள் மூலம் வேளாண்மையிலுள்ள தீர்க்கப்படாத சவால்களுக்குத் தீர்வு காணும் வண்ணம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நானோ தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு வேர்வளர்ச்சி, வறட்சியைத் தாங்குதல், நுண்ணூட்டமளித்தல், விளைபொருட்களின் வாழ்நாளை அதிகரித்தல் ஆகியவற்றுக்கான பல நானோ தயாரிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு நானோ தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் அறியும் வண்ணம் வேளாண் அறிவியல் நிலையம் (KVK), அட்மா திட்டம் (ATMA) ஆளில்லா வானூர்திக் கழகம் (Unmanned Arial Vehicle Corporation) மூலம் செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்படும்.

வேளாண் விஞ்ஞானி:

வேளாண், தோட்டக்கலைப் பயிர்களில், புதிதாக வெளியிடப்பட்ட உயர் மகசூல் இரகங்கள், சாகுபடித் தொழில்நுட்பங்கள், பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான பயிர்ப்பாதுகாப்பு முறைகள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, நவீன இயந்திரங்கள், மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கான உத்திகள் போன்ற அனைத்து தகவல்களையும் விஞ்ஞான ரீதியிலான ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவதற்காக, வேளாண் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் அல்லது வேளாண் அறிவியல் நிலையங்களிலிருந்து ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி பொறுப்பு அலுவலராக நியமிக்கப்படுவார்.

உழவர் வளர்ச்சிக்கு பல்கலைக்கழக உதவி:

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை வணிக ரீதியாக ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் மூலம் இணைப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில், பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள் ஒவ்வொன்றும், தலா ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அக்குழுவுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் அடிப்படைத் தகவல்களைத் திரட்டி, ஒவ்வொரு நிலையமும் ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இந்நிறுவனங்களுக்குத் தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக திட்டம் ஒன்று வகுத்து, மதிப்பு கூட்டுதல் பற்றி பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன், இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை வணிகர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்களுடன், ஒருங்கிணைத்து உற்பத்தியாளர் கொள்முதலாளர் இணைப்புக் கூட்டங்கள் நடத்தி, சந்தை வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம்:

வரும் ஆண்டில், சிறுதானியப் பயிர்கள் சாகுபடி, மதிப்புக்கூட்டுதல், பயன்பாட்டினை அதிகரிக்கும் வகையில், சுய உதவி குழு உறுப்பினர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் 40 சிறுதானிய தொகுப்புகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நிதி உதவி தந்து ஊக்குவிப்பதற்காக, அரசு 40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ’மதி-பூமாலை’ வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக, சிறுதானிய சிற்றுண்டி உணவகம் (Millet Cafe) உருவாக்கப்படும்.

குடும்ப வருமானத்தை உயர்த்தும் வகையில், அந்தந்த பகுதியில் கிடைக்கும் இயற்கை வள ஆதாரங்களை உரிய முறையில் பாதுகாத்து, ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டில் தலா 40 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் வகையில் 44 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

அங்ககத் தேன் உற்பத்தி, மூலிகைத் தோட்டம் அமைத்தல் ஆகியவை கிராமப்புரங்களில் முக்கியமான வாழ்வாதாரப் பணிகளாக விளங்கி வருகின்றன. சுய உதவிக் குழுக்கள் இடையே தேன் உற்பத்தி, மதிப்புக்கூட்டுதல் போன்ற பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து ”மதி” என்னும் வணிகக் குறியீட்டில் விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு மாநில கிராமப்புர வாழ்வாதார இயக்கம், தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையுடன் இணைந்து பணியாற்றும்.