ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டாலும் சமூக மாற்றத்திற்கு வித்திட்ட சாதனைப் பெண்கள்!
லஷ்மி அகர்வால், ரேஷ்மா குரேஷி போன்றோர் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டிருப்பினும் மனமுடைந்து போகாமல் தங்களைப் போன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சமீபத்தில் 'சப்பாக்’ (Chhapaak) என்கிற திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார். லஷ்மி அகர்வால் போன்றே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் முடங்கிப் போய்விடாமல் மிகுந்த மன உறுதியோடு வாழ்க்கையில் முன்னேறி முத்திரை பதிக்கின்றனர்.
இந்தியாவில் ஆசிட் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது. திருமணம் செய்துகொள்ள மறுப்பது, பாலியல் ரீதியான அணுகுமுறை, காதலிக்க மறுப்பது, வரதட்சணை தொடர்பான கருத்து வேறுபாடுகள் உள்ளிட்ட காரணங்களாலேயே பெரும்பாலான ஆசிட் தாக்குதல்கள் நடக்கின்றன.
நிலம், சொத்து, வணிக ரீதியான பிரச்சனைகள் போன்றவை இதுபோன்ற தாக்குதல்களுக்கு 20 சதவீதம் பங்களிப்பதாக ‘மேக் லவ் நாட் ஸ்கார்ஸ்’ என்கிற என்ஜிஓ தெரிவிக்கிறது. இந்த என்ஜிஓ ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காக செயல்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் பலருக்கு படுகாயம் ஏற்படுகிறது. அத்துடன் உடலில் ஆசிட் படக்கூடிய பகுதி மோசமாக சிதைந்துவிடுகிறது. சிலர் உயிரழந்துவிடும் நிலையும் ஏற்படுகிறது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்ட பெரும்பாலானோர் அவமான உணர்வு மேலோங்குவதால் பொதுவெளிக்கு வர மறுக்கின்றனர். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். சிலர் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடவும் செய்கின்றனர். சமூகம் அவர்களை அந்த நிலைக்குத் தள்ளுகிறது. எனினும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பலர் முடங்கிவிடாமல் தங்களை சிறப்பாக வெளிப்படுத்தி பிரகாசிக்கின்றனர்.
லஷ்மி அகர்வால் போன்ற பலர் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் நிலையை மாற்றவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் போராடுவதுடன் சட்டங்களையும் தண்டனைகளையும் கடுமைப்படுத்தவும் போராடி வருகின்றனர். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து உந்துதலளிக்கும் சிலரைப் பற்றி இங்கே பார்ப்போம்.
ரேஷ்மா குரேஷி

ரேஷ்மா குரேஷிக்கு 17 வயதிருக்கையில் அவரது சகோதரியின் கணவர் உட்பட நான்கு பேர் அவர் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினர். 2014-ம் ஆண்டு மே மாதம் அவர் தேர்வு எழுத அலகாபாத் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது. தன்னையும் தனது சகோதரியையும் பாதுகாக்கும் முயற்சியில் அந்த நபர்களிடம் இருந்து ஆசிட்டை கைப்பற்ற முயற்சித்துள்ளார். அவர்கள் ரேஷ்மா மீது ஆசிட்டை வீசிவிட்டு சென்றனர்.
இதனால் அவரது முகம் சிதைக்கப்பட்டது. ஒரு கண் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
2016ம் ஆண்டு ரேஷ்மா நியூயார்க் ஃபேஷன் வீக் நிகழ்வில் ரேம்ப் வாக் செய்தார். #TakeBeautyBack என்கிற பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக ரேம்ப் வாக் செய்தார். இந்தியாவில் ஆசிட் பரவலாக விற்பனை செய்யப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் யூட்யூப் வீடியோக்களைப் பதிவு செய்துள்ளார்.
லஷ்மி அகர்வால்

லஷ்மி அகர்வாலின் வாழ்க்கையைக் கண்டு உந்துதல் பெற்ற இயக்குநர் மேக்னா குல்சார் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் நிறைந்த லஷ்மியின் வாழ்க்கைப் பயணத்தைப் படமாக்கத் தீர்மானித்து ‘சப்பாக்’ என்கிற திரைப்படத்தை எடுத்துள்ளார். 15 வயதிருக்கையில் லஷ்மி டெல்லியின் கான் மார்கெட் பகுதியில் இருந்தபோது குட்டு, ராக்கி ஆகியோர் லஷ்மியைத் தாக்கியுள்ளனர்.
குட்டுவைத் திருமணம் செய்துகொள்ள லஷ்மி மறுத்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணம். மனதளவிலும் உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டார். இவருக்கு ஏழு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.
லஷ்மி இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தீர்மானித்தார். நான்காண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குட்டுவிற்கு பத்தாண்டுகள் சிறை தண்டனையும் ராக்கிக்கு ஏழாண்டுகள் சிறை தண்டையும் வழங்கப்பட்டது. ஆசிட் தாக்குதல் வழக்குகளில் குற்றவாளிக்கு அதிகபட்சமாக பத்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதல் முறை. இதுபோன்ற மற்ற வழக்குகளுக்கு இந்தக் கடுமையான தண்டனை முன்னுதாரணமாக அமைந்தது.
லஷ்மி ‘சான்வ் ஃபவுண்டேஷன்’ என்கிற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி ஆசிட் வீச்சுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தத் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கும் சட்ட ரீதியான செயல்பாடுகளுக்கும் அவர்களது மறுவாழ்விற்கும் உதவி வருகிறார். அதுமட்டுமின்றி இவர் ஆக்ராவில் ‘ஷீரோஸ்’ என்கிற கஃபே நடத்தி வருகிறார். இங்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறார்.
அன்மோல் ரோட்ரிக்ஸ்

அன்மோலின் அப்பா அன்மோலின் அம்மா மீது ஆசிட் வீசியுள்ளார். அப்போது அன்மோல் அவரது அம்மாவின் மடியில் படுத்திருந்தார். அந்த சம்பவத்தின்போது அன்மோல் பிறந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தது. இந்த சம்பவத்தால் அன்மோலின் அம்மா உயிரிழந்தார். அன்மோலைப் பரமாரிக்க யாரும் இல்லாமல் போனது. அவரது முகம் சிதைந்து வடுக்கள் ஏற்பட்டது. பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. முகம் மோசமாக சிதைந்திருந்தது.
ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்க்கப்பட்ட அன்மோலுடன் யாரும் நட்புடன் பழக முன்வரவில்லை. பணியிடத்தில் பாகுபாடு பார்க்கப்பட்டதால் பணியை விட்டு விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ Acid Attack Survivors Sahas Foundation என்கிற என்ஜிஓ தொடங்கினார். பல்வேறு இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் சான்லகளுக்கு மாடலாக மாறினார்.
Clovia பிராண்ட் சமீபத்தில் நைட்வேர் வகைகளை அறிமுகப்படுத்தியது. இந்தியப் பெண்கள் சமூக கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்து சுயத்தை வெளிப்படுத்த இந்த பிராண்ட் ஊக்குவிக்கிறது. அன்மோல் அதன் பிராண்ட் அம்பாசிடர்.
தவுலத் பி கான்

26 வயதான இவர் ஒப்பனைக் கலைஞர். இவர் சோபாவில் அமர்ந்திருந்தபோது இவரது சகோதரியும் அவரது கணவரும் இவர் மீது ஆசிட் வீசியுள்ளனர். இந்தத் தம்பதி தவுலத்தின் அம்மாவை மோசமாக நடத்தியுள்ளனர். இது குறித்து தவுலத் கேள்வியெழுப்பியதால் அவர் மீது ஆத்திரமடைந்து முகத்தில் ஆசிட் வீசியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு இவரைப் போன்றே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ Acid Survivors Sahas Foundation என்கிற என்ஜிஓ தொடங்கத் தீர்மானித்தார். மும்பையைச் சேர்ந்த இந்த என்ஜிஓ ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளும் கல்வி உதவியும் வழங்குகிறது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 26 பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்கியுள்ளது. இவர்கள் தற்சார்புடன் மகிழ்ச்சியாக வாழ உதவியுள்ளது.
டாலி

டாலிக்கு 12 வயதிருக்கையில் இவரைக் காட்டிலும் இருமடங்கு அதிக வயதுள்ள ஒருவர் டாலியைப் பின்தொடர்ந்து அவரிடம் மோசமாக நடந்துகொண்டுள்ளார். டாலி மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த நபர் டாலி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியுள்ளார். இந்தச் சம்பவத்தால் டாலியின் முகத்தில் உள்ள திசுக்களும் மூக்குப் பகுதியும் சேதமடைந்தது. இதனால் சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்து வருகிறார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்து ஒராண்டு வரை அவர் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. சில காலங்களுக்குப் பிறகு ஆக்ராவில் உள்ள ‘ஷீரோஸ் கஃபே’ குறித்து கேள்விப்பட்டார். டாலி அங்கு பணியில் சேர்ந்தார்.
டாலியைத் தாக்கிய நபர் தற்போது சிறையில் இருக்கிறார். 2016-ம் ஆண்டு அந்த நபருக்கு டாலி ஒரு கடிதம் எழுதினார். அதில்,
“நீங்கள் சிதைத்தது என்னுடைய முகத்தை மட்டுமே. வாழ்க்கையின் நோக்கத்தை அல்ல. அதன் மீது உங்களால் ஆசிட் வீச முடியாது,” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்களும் இவர்களைப் போன்றே பாதிக்கப்பட்ட மற்றவர்களும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் மற்றவர்களுக்கு உந்துதலளிக்கின்றனர்.
ஆங்கில கட்டுரையாளர்: நிரந்தி கௌதமன் | தமிழில்: ஸ்ரீவித்யா