Budget 2025: மின்வாகனத் துறையை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட்டில் வரிச்சலுகை!
மின் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்புக்கான 35 கூடுதல் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது மின்வாகன தயாரிப்பு செலவை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் மின் வாகனங்கள் ஏற்பிற்கான ஆதரவை தொடரும் வகையில், 2024 மத்திய பட்ஜெட்டில், உள்நாட்டிலேயே லித்தியம் அயன் பேட்டரிகள் தயாரிப்பதற்கான ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மின் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்புக்கான 35 கூடுதல் பொருட்கள் மற்றும் மொபைல் போன் பேட்டரி தயாரிப்புக்கு தேவையான மேலும் 28 பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இது உள்நாட்டில் லித்தியம் அயன் பேட்டரிகள் தயாரிப்பை ஊக்குவிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.
மின் வாகனங்களின் முக்கிய அங்கமாக லித்தியம் அயன் பேட்டரிகள அமைகின்றன. மின்வாகன செலவில் இது கணிசமான பங்கு வகிக்கிறது. லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்புக்கு தேவையான முக்கிய தாதுக்கள் குறைவாக இருப்பதால் இந்தியா இதற்காக இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ளது.
மின்வாகன பேட்டரிகளுக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பது, இவற்றை இந்தியாவில் அசெம்பிள் செய்வதை செலவு குறைந்ததாக மாற்றும்.
“மின்வாகன பேட்டரி துறைக்கான மிகப்பெரிய ஊக்கம். எம்.எஸ்.எம்.இ.களுக்கான தேசிய உற்பத்தி மிஷன் கவரேஜ், உள்நாட்டு மின்வாகன பேட்டரி தயாரிப்பை மேம்படுத்த முக்கிய ஊக்கமாகும். லித்தியம் அயன் பேட்டரிகளை அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கும் முடிவு, செலவை குறைத்து சப்ளை செயினை மேம்படுத்தும். மேலும் மின்வாகன ஏற்பு, வலுவான எரிசக்தி உள்கட்டமைப்பின் ஆதரவை பெற்றிருக்கும். குறிப்பாக, மின்வாகன சார்ஜிங் மையங்கள், எரிசக்தி துறை சீர்த்திருத்தம் மற்றும் மாநில அரசுகள் ஆதரவால் வளரும்,” என்று லித்தியன் அயன் பேட்டரி நிறுவனம் நியூரான் எனர்ஜி இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. பிரதிக் கம்தார் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பேட்டரிகள் மீதான கவனம், மின்வாகன விலையிலும் நல்லவிதமாக தாக்கம் செலுத்தும். பேட்டரிகள் வாகன விலையின் 30 சதவீதமாக அமைகிறது.
“2025-26 பட்ஜெட், கோபால்ட், லித்தியம் அயன் ஸ்க்ரேப், ஈயம் போன்ற முக்கியப் பொருட்கள் மீதான சுங்க வரியை நீக்கியிருப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி சூழலை மேம்படுத்த முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. லித்தியம் பேட்டரிகள் தயாரிக்க இந்த பொருட்கள் மிகவும் அவசியம். மின்வாகனம் மற்றும் தூய எரிசக்தி துறைகளில் இவை முக்கியமாக விளங்குகின்றன. இந்த வரி விலக்கு மூலம், உற்பத்தியாளர்கள் செலவை குறைப்பதோடு அல்லாமல், நீடித்த தன்மை கொண்ட தொழில்நுட்பத்தை ஏற்கச்செய்வதை நோக்கிய மாற்றத்தையும் அரசு வேகமாக்கியுள்ளது,” என மின்வாகன ஆட்டோ தயாரிப்பு நிறுவனம் ஒமேகா செய்கி நிறுவனர் உதய் நரங் கூறியுள்ளார்.
மின்சார பஸ் சேவை லீபிபஸ் இணை நிறுவனர் ரோஹன் தேவன், இந்த வரி விலக்கு மின்வாகன ஏற்பை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“மின்வாகன விலை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தூய்மை நுட்பம் சார்ந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும்,“ என்று கூறியுள்ளார்.
மேலும், லித்தியம் அயன் பேட்டரி கழிவுகள், துத்தநாகம், ஈயம், கோபால்ட், ஆகியவற்றுக்கும் முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
“இறக்குமதி சார்பை குறைக்கும் வகையிலான அறிவிப்புகள் மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகளை மறுசுழற்சி செய்ய ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தற்சார்பை மேம்படுத்தும். இறக்குமதியை சாத்தியமாக்கி, லித்தியன் அயன் பேட்டரி ஸ்கிராப் செயல்முறை செலவை குறைப்பதன் மூலம், இந்த முக்கியப் பொருட்கள் உற்பத்தியில் தற்சார்பு பெற வழி செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, மின்வாகனம் மற்றும் மறுசுழற்சி எரிசக்தி துறையை ஊக்குவிப்பதோடு, சுழற்சி பொருளாதாரத்தில் இந்தியாவை முன்னிலை பெற வைக்கும்,” என்று லித்தியம் பேட்டரி மறுசுழற்சி நிறுவனம் BatX Energies இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ உத்கார்ஷ் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரியின் மின்வாகன புதுமையாக்க வாகன மேம்பாடு திட்டத்தின் (PM E-DRIVE) கீழ், ரூ.4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம் மின்சார பஸ்கள், ஆம்புலன்ஸ்கள், பைகள், லாரிகள் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கிறது. 2024-25 ல் இந்த திட்டத்திற்கு மறுமதிப்பீட்டில் ரூ.1,871 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2013ல் அறிமுகம் செய்யப்பட்ட பிஎம் இபஸ் சேவா திட்டத்திற்கு ரூ.1,310 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan