'விருதுநகர் டு சிலிக்கான் வேலி' - Zoom பொறியியல் தலைவர் வேல்சாமி சங்கரலிங்கம் சிறப்பு நேர்காணல்!
Zoom-இன் தயாரிப்பு மற்றும் பொறியியல் பிரிவின் தலைவராக இருக்கும் வேல்சாமி சங்கரலிங்கம், தான் கடந்து வந்த பாதை, தொழில்நுட்பப்பிரிவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தது எப்படி, சந்தித்த சவால்கள், பணியின் மீதான அவரது காதல் என பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
2020ம் ஆண்டு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கொரோனா பெருந்தொற்று காலம். உலகம் முழுவதும் கோவிட் நோய் பற்றிய அச்சத்தினால், அனைவரின் வாழ்க்கையும் முடக்கப்பட்டிருந்தபோது, இழப்புகளையும் நிச்சயமற்ற தன்மையையும் நாம் எதிர்கொண்டிருந்தபோது, தொழில்நுட்பம் மட்டுமே நமக்கு சற்று ஆசுவாசத்தை தந்தது.
நம்முடைய அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்கவும், தொடர்ந்து அலுவலக பணிகளை செய்யவும், பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வழியே தொடரவும் டெக்னாலஜி தான் நமக்கு ஒரே பாலமாக மாறியது. அப்படி இருந்த இந்த காலகட்டத்தில்தான் Zoom என்ற வரப்பிரசாதம், பிரபலமாக நம் அனைவரின் வீட்டின் ஒரு அங்கமாகும் அளவிற்கு மாறியது. ஆன்லைன் வீடியோ கால்கள் மூலம் லட்சக்கணக்கானோரை இணைத்ததில் ஜூமிற்கு பெரும் பங்கு உண்டு.
Zoom 2011ல் நிறுவப்பட்ட போதிலும், 2020ல் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றது. அதன் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆராய்ந்தபோது, அதில் தலைமைப்பொறுப்பில் ஒரு இந்தியர், அதுவும் தமிழர் இருப்பது தெரியவந்தது.
சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, Webex-இல் பணிபுரிந்த எரிக் யுவான் என்ற தொழில்நுட்ப வல்லுனர் நிறுவிய ஸ்டார்ட்-அப் Zoom. அவரது தொலைநோக்குப் பார்வையும் தலைமைத்துவமும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஜூமை உலகளாவிய தொடர்பு தளமாக மாற்றியது. அவரின் நீண்டநாள் நண்பரும் தொழில்நுட்ப வல்லுனரான வேல்சாமியும் பல ஆண்டுகள் Webex-இல் ஒன்றாக பணிபுரிந்துள்ளனர்.
2020ல், ஜூம் வேகம் பெற்றபோது, எரிக்; வேல்சாமியை Zoom-இன் தயாரிப்பு மற்றும் பொறியியல் பிரிவின் தலைவராக சேரும்படி அழைத்தார், அவரது தலைமைத்துவம் மற்றும் நிபுணத்துவத்தை அங்கீகரித்து, இந்த முக்கியமான கட்டத்தில் நிறுவனத்தின் புதுமைகளை வழிநடத்த Zoom நிறுவனத்தில் இணைந்து வேல்சாமி சங்கரலிங்கம், 2020 முதல் பணியாற்றி வருகிறார்.
அண்மையில் ஜூம்-இன் பல புதிய பிரிவுகளையும், சேவைகளையும் இந்தியாவில் விரிவாக்க, சென்னை வந்திருந்தார் வேல்சாமி சங்கரலிங்கம். அப்போது அவருடன் உரையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தான் கடந்து வந்த பாதை, தொழில்நுட்பப்பிரிவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தது எப்படி, சந்தித்த சவால்கள், பணியின் மீதான அவரது காதல் என பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அந்த நேர்காணலில் இருந்து சில முக்கியக் குறிப்புகள் இதோ.

வேல்சாமி சங்கரலிங்கம், தயாரிப்பு மற்றும் பொறியியல் பிரிவின் தலைவர், Zoom
விருதுநகர் டு சிலிகான் வேலி - வேல்சாமியின் பயணம்
விருதுநகரில் வணிகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வேல்சாமி சங்கரலிங்கம், பத்தாம் வகுப்புவரை அங்கே படித்துவிட்டு, பின்னர், ஏர்காடு மான்ஃபார்ட் போர்டிங் பள்ளியில் 12ம் வகுப்பை முடித்துவிட்டு, அண்ணா பல்கலைகழகத்தில் ECE-இல் பொறியியல் டிகிரி பெற்றவர். பிசினஸ் குடும்பத்தில் வந்தாலும், கல்விக்கு முக்கியத்துவம் அளித்த பெற்றோர்களால், 80-களில் மேற்படிப்பிற்கு அமெரிக்கா சென்றுள்ளார்.
கேள்வி: விருதுநகரில் வணிகக்குடும்பத்தில் பிறந்த நீங்கள் ஏன் பிசினஸ் செய்யாமல் பொறியியல் துறையில் செல்ல நினைத்தீர்கள்?
வேல்சாமி: எங்க அப்பா மற்றும் குடும்பத்தினர் பெரும்பாலும் பிசினஸ் செய்பவர்கள், கல்லூரிக்குக்கூட செல்லாதவர்கள், ஆனால், எனக்கு நல்ல கல்வி கிடைக்கவேண்டும் என எப்போதுமே என்னை சுதந்திரமாக முடிவெடுக்க விட்டனர். 1988ல் காலேஜ் ஆப் இஞ்சினியரிங்கில் இ.சி.இ முடித்துவிட்டு, அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்கு சென்றேன். அங்கே நார்தர்ன் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் சயின்சில் முதுகலைப் பட்டம் பெற்றேன். கூடுதலாக, ஸ்டான்போர்டு பல்கலைக்கழக வணிக மேலாண்மை பள்ளியில் ஸ்டான்போர்டு நிர்வாகத் திட்டத்திலும் பயின்றுள்ளேன்..
கேள்வி: உங்களின் முதல் பணி என்ன? அப்போது அமெரிக்காவில் கணினி துறையில் நல்ல வாய்ப்புகள் இருந்த காலகட்டம், உங்களுக்கு எப்படி இருந்தது?
வேல்சாமி: நான் அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு சிகாகோ, நியூயார்க், பின்னர் பே ஏரியா சென்று அங்கே ஒரு ஸ்டார்-அப் ஒன்றில் பொறியியல் மற்றும் செயல்பாட்டு பிரிவில் தலைமை வகித்தேன். பின்னர், அந்த நிறுவனத்தை Webex வாங்கியது.
"அப்போதிலிருந்து நான் வெப்எக்ஸ்-ல் பொறியியல் பிரிவில் பணிபுரியத் தொடங்கினேன். தற்போதைய ஜூம் நிறுவனர் எரிக், என்னுடன் Webex-ல் மற்றொரு பிரிவில் இயங்கிக்கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் பல வருடம் அங்கே இணைந்து பொறியியல் தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் செய்துவந்தோம். அப்போது முதல் நானும், எரிக்கும் நல்ல நண்பர்கள் ஆனோம்."
சிலவருடங்களில் Webex நிறுவனத்தை Cisco வாங்கியது, நான் மூன்று வருடங்களுக்குப்பின் அங்கிருந்து VMware என்ற நிறுவனத்தில் மூத்த துணைத் தலைவராக சேர்ந்து, அங்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுப் பிரிவில் செயல்பட்டு, அந்நிறுவனத்தில் மிகப்பெரிய தனியார் மேகக் கணிமை சேவைகளில் ஒன்றைக் கட்டமைக்கும் பொறுப்பில் இருந்தேன். VMware-ஐ ஒரு SaaS நிறுவனமாக்க, அனைத்து வணிக செயல்பாடுகளில் முக்கியப் பொறுப்பில் இருந்தேன். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அங்கே பணிபுரிந்தேன்.
கேள்வி: சரி! எப்போது, எப்படி Zoom-இல் இணைந்தீர்கள்? VMware-இல் முக்கியப்பதவியில் இருந்து எப்படி வெளியேறினீர்கள்?
வேல்சாமி: நான் Webex-ஐ விட்டுச்சென்ற ஓர் ஆண்டிற்குப்பின் எரிக் அங்கிருந்து சென்று Zoom-ஐ 2011ல் தனியாக நிறுவினார். ஆனால், நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்துவந்தோம். வாரம் ஒரு முறையாவது நாங்கள் பேசிக்கொள்வோம். வேலை தொடர்பாகவும், தொழில்நுட்பம் பற்றியும் அடிக்கடி பேசிக்கொண்டிருப்போம்,
"2020-ல் ஜூம் வேகம் எடுக்கத்தொடங்கியது, அப்போது எரிக்கிற்கு உதவி தேவைப்பட்டது. என்னை அவருடன் சேர அழைத்தார். VMware-இல் ஒரு மிகப்பெரிய ரோலில் நான் இருந்தாலும், என்னுடைய நெருங்கிய நண்பனுக்காகவும், இந்த உலகை இணைக்க அவர் எடுக்கும் முயற்சிக்கு உதவியாக இருப்பது நல்ல ஒரு வாய்ப்பு என்று முடிவெடுத்து ஜூமில் சேர முடிவெடுத்தேன்."
கேள்வி: Zoom-ல் பொறுப்பேற்றது முதல் உங்களின் செயல்பாடுகள் என்ன? அங்கு நீங்கள் எடுத்த முக்கிய முயற்சிகள் என்ன?
வேல்சாமி: இப்போது யோசிக்கும்போது நான் ஜூமில் சேர முடிவெடுத்தது ஒரு சிறந்த முடிவு எனச் சொல்வேன். அங்கு நான் தயாரிப்பு மற்றும் பொறியியல் பிரிவின் தலைவராக சேர்ந்து நிறுவனத்தின் பலவகை விரிவாக்கம், புதிய சேவைகள் தொடக்கத்திற்கு வித்திட்டுள்ளேன்.
"வெறும் வீடியோ கான்பரன்சிங் தளமாகத் தொடங்கிய ஜூம், தற்போது விரிவான தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைத்த தளமாக வளர்ந்துள்ளது. பெருந்தொற்றுக் காலத்தில் மிகுந்த பிரபலத்தை அடைந்த ஜூம், இப்போது பலவகை சேவைகளை வழங்கிவருகிறது. மெய்நிகர் கூட்டங்கள், ஜூம் காண்டாக்ட் செண்டர், வலைஒளிபரப்புகள், சாட் வசதி, ஜூம் போன் மற்றும் இவை அனைத்திலும் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை புகுத்தி சக்தி வாய்ந்த சேவைகளை வழங்குகிவருகிறோம். Zoom இப்போது 'ஏஐ முதன்மையான பணித்தளமாக' மாறியுள்ளது."
கேள்வி: கோவிட் காலத்தில் ஜூம் உலகமெங்கும் மிகப்பெரிய பிரபலம் அடைந்தது. அதன்பின், மெல்ல ஆஃப்லைன் சேவைகள் வரத்தொடங்கியது. ஜூமின் வளர்ச்சி எப்படி இருந்தது?
வேல்சாமி: ஜூம் பொறுத்தவரை, கோவிட்டுக்கு பிறது வருவாய் ஒருபோதும் குறையவில்லை, வளர்ச்சி சற்று மெதுவாக இருந்தது எனச்சொல்லலாம்.
"கொரோனா காலத்தில் ஜூமின் வருவாய் 10 மடங்கு அதிகரித்து, வருவாய் $300 மில்லியனில் இருந்து $4 பில்லியன் ஆனது. அதனால் அதன்பின், ஜூம் வருவாய் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நிறுவனங்களுடனான எங்களது சேவைகள் இன்றளவும் அதிகரித்து வந்து நல்ல வருவாயை ஈட்டிக்கொண்டிருக்கிறது, நாங்களும் Ai-ஐ முன்னிலைப்படுத்தி பல புதிய சேவைகளை கொடுத்துவருகிறோம். அதுவும் ஒரு காரணம்."
ஜூமின் சிறப்பே, வாட்டிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ, அதற்குத் தேவையான சேவையை உடனடியாக எங்களின் குழு உருவாக்கித் தருவதே நாங்கள் மார்க்கெட்டில் நிலைத்து இருக்க முக்கியக்காரணம்.
"Zoom மீட்டிங்கை தாண்டி ஜூம் Contact center, ஜூம் போன் சேவை, ஜூம் workvivo, ஜூம் மெயில், கேலன்டர், சேட் என நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்தும் உள்ளடக்கிய சேவைகளை தருவதால் நல்ல வளர்ச்சி இருந்துகொண்டே இருக்கிறது."

கேள்வி: தற்போது நீங்கள் இந்தியா வந்திருக்கும் நோக்கம் என்ன? இந்தியா மற்றும் தமிழகத்தில் ஜூமின் விரிவாக்கம் மற்றும் செயல்பாடுகள் என்ன?
வேல்சாமி: Zoom ’ஜூம் போன்’ (Zoom Phone) எனும் இணைய வழி தொலைபேசி அழைப்பு சேவையை இந்தியாவில் கடந்த ஆண்டு கொண்டு வந்தோம். இந்தியாவின் தொலைதொடர்புத் துறை (DoT) உரிமம் பெற்ற ஜூம் போன், இந்தியாவில் டைனமிக் பிசினஸ் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு AI தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. இதை சாத்தியபடுத்தியதில் ஜூம் முதன்மை நிறுவனமாக இருக்கிறது.
புனேவை தொடர்ந்து இந்த ஜூம் போன் சேவை பிப்ரவரி முதல் தமிழகத்தில் முதல் முறையாக சென்னையில் அறிமுகம் செய்தோம். உலகமெங்கும் பல கிளைகளை கொண்டு இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்துவரும் நிறுவனங்களுக்கு சிறப்பான தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளோம். இதற்கு முன்பு ஜூம் போன் சேவையை மகாராஷ்டிரா, தமிழ்நாட்டைத் தொடர்ந்து இன்னும் சில மாநிலங்களில் விரிவாக்க உள்ளோம்.
"இந்தியாவின் துடிப்பான தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தக நகரங்களில் ஒன்றான சென்னை நகரத்தில் போன் சேவையை அறிமுகம் செய்ததில் மிகுந்த மகிழ்ச்சி. எங்கள் புது சேவை மூலம் இந்த நகரத்தின் உள்ளூர் மற்றும் உலகளாவிய அளவில் வர்த்தகம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் எங்களின் எளிமையான, செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகள் கொண்ட தொலைத்தொடர்பு வசதிகளால் பயன் பெறுவார்கள்."
ஊழியர்கள், குழுக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஒன்றாக சிறப்பாக செயல்பட, அதிகமான பணிகளை முடிக்க உதவுவதன் மூலம், ஜூம் தொடர்ந்து பல்வேறு தொழில்துறைகள் மற்றும் புவியியல் எல்லைகளில் உள்ள நிறுவனங்களை மாற்றியமைத்து வருகிறது.
எங்களின் செயற்கை நுண்ணறிவு முதன்மையான ஒத்துழைப்பு தளம், AI Companion உடன், ஏற்கனவே இந்திய சந்தையில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதில், க்ளென்மார்க் பார்மசூட்டிகல்ஸ், லென்ஸ்கார்ட், எஸ்ஸார் குழுமம், மதர்சன், மற்றும் ரேசர்பே ஆகிய நிறுவனங்கள் அடங்கும். மேலும், பல இந்திய நிறுவனங்கள் ஜூம் சேவைகளை பெற உள்ளனர்.
கேள்வி: ஜூம் போன் சேவை மூலம் என்னென்ன பயன்கள் இருக்கிறது. இதைப்பற்றி விளக்கமாக சொல்லமுடியுமா?
வேல்சாமி: ஜூம் போன் சேவை, வணிகங்களுக்கு எளிமை மற்றும் நவீன செயல்பாடுகளை வழங்குகிறது. டைனமிக் ஒர்க் ஸ்டைல்கள் மற்றும் ஹைப்ரிட் குழுக்களை மேம்படுத்துகிறது. இது பொது மாற்றப்பட்ட தொலைபேசி வலைப்பின்னல் (PSTN) வழியாக உள்ளீடு மற்றும் வெளியீட்டு அழைப்புகளை ஆதரிக்கிறது, இதன் மூலம் நிறுவனங்கள் PBX தீர்வுகளை மாற்றி, அனைத்து தொடர்பு தேவைகளையும் ஒரு தளத்தில் ஒருங்கிணைக்க முடியும்.
"ஜூம் போன் சேவை உங்களின் ஜூம் ஆப்-லியே சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பெற்றுள்ள நிறுவன ஊழியர்கள், இந்த போன் மூலம் செல்போன், லாப்டாப், டேப்லெட் என எதிலிருந்தும், எங்கிருந்தும் கனெக்ட் செய்து பேசலாம். ஜூம் மீட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது போனில் அழைத்து பேசவேண்டும் என்றால், அப்படியே அதில் உள்ள ஜூம் போன் ஐகானை கிளிக் செய்து காலாக அதை கனெக்ட் செய்துகொள்ளலாம். இப்படி பணி நிமித்தமாக தேவையான அனைத்தையும் ஜூம் கால் மூலம் செய்துகொள்ளலாம்."
மேலும், இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட அம்சங்கள் மூலம் அழைப்புகள் முடிவு பெற்றதும் அதன் சுருக்கமான வடிவம், முக்கியமான வாய்ஸ் மெயில் பற்றி அறியும் வசதி, மேலும் வாய்ஸ் மெயில் மூலம் வந்த செய்தியில் அடங்கி உள்ள முக்கியத் தகவல்கள் பற்றியும், அது குறித்து என்ன செய்யவேண்டும் என்பது பற்றியும் அறியும் வசதிகளை பெறமுடியும். ஏற்கனவே ஜூம் நிறுவனத்தின் கணக்கு வைத்துள்ளவர்கள் இதை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக பெற முடியும்.

கேள்வி: சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் தொழில்நுட்பத்துறையில் பயணித்து தற்போது இந்த இடத்தை அடைந்திருப்பதற்கான முக்கியக்காரணங்களாக எதை சொல்வீர்கள்? எப்படி உங்களால் இத்தனை தன்னடக்கத்துடன் இருக்கமுடிகிறது?
வேல்சாமி: நான் எப்போதும் தொடக்கப்புள்ளியையும் இன்று இருக்கும் இடத்தையும் கனெக்ட் செய்து பார்ப்பேன். கடந்த காலத்தைக் கொண்டே எதிர்காலத்தை உருவாக்கமுடியும் என்று நம்புகிறேன்.
🔹 நான் பணியாற்றிய எல்லா இடங்களிலும் சவால்மிகுந்த, யாரும் செய்ய முன்வராத பணிகளை ஏற்று அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவேன். திறமை இருந்தால் எல்லாம் முடியும், என்று நினைப்பேன்.
🔹 எந்த ஒரு பணியிடத்திலும், பதவி, சம்பளத்தை விட என்னுடைய வேலைவிளைவை (impact) பற்றி அதிகமாக சிந்திப்பேன். அதுவே எனக்கான உயர்வுகளை தானாக தந்துள்ளது.
🔹 கடினமான வேலைகளை செய்யத் தயங்கமாட்டேன், அதில்தான் அதிக வளர்ச்சி இருக்கிறது.
🔹 குறுகிய கால லாபத்தைக் காட்டிலும் நீண்ட கால வளர்ச்சியே முக்கியம், என நினைப்பதால், நான் ஒரு பணியில் நீண்ட நாட்கள் இருப்பதன் மூலம் செய்யவேண்டிய பணிகளை சிறப்பாக செய்துள்ளேன், அதுவே என்னை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசென்றுள்ளது.
🔹நீங்கள் நிறுவனம் வளர்வதற்காக உழைத்தால், அந்த நிறுவனம் உங்களை மதிக்கும், உடனடியாக பலன் கிடைக்காவிட்டாலும், ஒரு நாள் நிச்சயம் அதற்கான பாராட்டும், உயர்வும் கிடைக்கும் என்று நம்பவேண்டும்.
இவற்றையே நான் இத்தனை ஆண்டுகளாக பின்பற்றிவந்துள்ளேன் என தனது அனுபவப் பாடங்களை பகிர்ந்தார் வேல்சாமி.
இறுதியாக, இத்தனை ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்துவிட்டீர்கள்? எப்போது ரிட்டையர் ஆகும் எண்ணம் உள்ளது? என்று கேட்டதற்கு,
"வேலை செய்து போர் அல்லது சோர்வுற்றால்தானே ரிட்டையர்மண்ட் தேவை, ஆனால், நான் எனக்கு பிடித்தவற்றைதானே பணியாக செய்துகொண்டிருக்கிறேன், அதனால் நான் ரிட்டையர்மண்ட் பற்றி யோசித்ததே இல்லை...," என முடித்துக்கொண்டு புன்சிரிப்புடன் விடைப்பெறுக் கொண்டார்.

‘அசோக் இல்லைன்னா டெஸ்லா இல்லை…' - எலான் மஸ்க் புகழ்ந்த தமிழக பொறியாளர் யார்?