அரசுப் பள்ளியில் ஏன் படிக்க வேண்டும்? 10ம் வகுப்பு மாணவன் கவின் சொல்வதைக் கேளுங்கள்!
அரசுப் பள்ளிகளில் ஏன் படிக்கவேண்டும் என கவின் தனது யூட்யூப் சேனலில் கூறும் 10 காரணங்கள் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.
முன்பெல்லாம் அரசுப் பள்ளிகள் தான் அதிகமாக இருக்கும், தனியார் பள்ளிகள் அங்கொன்றும் இங்கொன்றும் என அரிதாக இருக்கும். ஆனால் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. வீதிக்கொரு தனியார் பள்ளிகள் முளைத்து விட்டன.
தனியார் பள்ளிகளில் படிப்பது தான் கௌரவம், அரசுப் பள்ளிகளில் படித்தால் பிள்ளைகளுக்குப் போதிய ஆங்கில அறிவு இருக்காது என்ற பெற்றோரின் மனப்போக்கே இதற்குக் காரணம். இதனாலேயே தனியார் பள்ளிகள் எவ்வளவு கட்டணம் கேட்டாலும், அதைக் கடன் வாங்கியாவது கொடுக்கும் மனநிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டனர். அதோடு சமூகத்திலும் தங்கள் பிள்ளைகள் பகட்டான தனியார் பள்ளிகளில் படிப்பதாகச் சொல்லிக் கொள்வதே கௌரவமாகப் பார்க்கப்பட்டது.
ஆனால் எப்படி எல்லோரும் பொறியியல் படிப்பை விரும்பி அதிலேயே போய் சேர முயற்சித்ததால் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் பொறியியல் கல்லூரிகள் முளைத்து, ஒரு கட்டத்தில் அந்தப் படிப்பை முடித்தால் வேலை கிடைக்குமா என மாணவர்கள் சிந்திக்கும் நிலை வந்து விட்டது. தற்போது பெரும்பான்மையான பெற்றோர்களின் மனநிலையும் அப்படித்தான். தனியார் பள்ளி மோகம் குறைந்து, அரசுப் பள்ளிகள் மீது கவனம் திரும்பி இருக்கிறது.
அதற்கு முக்கியக் காரணம் பல லட்சங்களில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரசு பள்ளிகளின் தரமும் உயர்ந்து வருவது தான். தனியார் பள்ளிகளில் கிடைப்பதை விட பல சௌகரியங்கள் அரசுப் பள்ளியில் கட்டணமே இல்லாமல் இலவசமாகக் கிடைக்கும் போது, அதை பயன்படுத்திக் கொள்வது தானே புத்திசாலித்தனம். அதைத்தான் இன்றைய பெற்றோர்கள் செய்து வருகின்றனர். அதோடு ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அதிகளவில் சேர ஒரு காரணம் ஆகும்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும், வேறு பள்ளிகளில் இருந்து மாறுதல் பெறும் மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 24ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. மாணவர் சேர்க்கை தொடங்கிய நாளில் இருந்தே முன் எப்போதும் இல்லாத வகையில் புதிதாக சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆகஸ்ட் இறுதியிலேயே மாணவர் சேர்க்கை 10 லட்சத்தைத் தாண்டியது. தற்போது 12 லட்சத்தைத் தாண்டி மாணவர்கள் சேர்க்கை உயர்ந்து வருகிறது. விரைவில் இந்த எண்ணிக்கை 15 லட்சத்தை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் ஏன் படிக்கவேண்டும்? என 10ம் வகுப்பு படிக்கும் கவின் என்ற மாணவர் பேசியுள்ள வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான கவினின் பெற்றோர்கள் முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதால், ஐந்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்த கவினை, ஆறாம் வகுப்பில் இருந்து அரசுப் பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் அரசுப் பள்ளியில் சேர்ந்தது கவினுக்கு பிடிக்கவில்லையாம். ஆனால் சில வாரங்களிலேயே அங்கு புதிய நண்பர்கள் கிடைத்து விட, ஆசிரியர்களின் அன்பான பேச்சால் கவரப்பட்டு, நாம் ஒன்றாம் வகுப்பில் இருந்தே அரசுப் பள்ளியிலேயே படித்திருக்கலாம் என எண்ண ஆரம்பித்து விட்டாராம் கவின். அந்தளவிற்கு தனது பள்ளியை அவர் நேசிக்கத் தொடங்கி விட்டார்.
தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் கவின் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். கவின்’ஸ் இ-கார்னர் என்ற அந்த சேனலில் பத்தாம் வகுப்புப் பாடங்கள் பற்றியும், சமூக அக்கறையுள்ள வீடியோக்களையும் அவர் பதிவேற்றம் செய்து வருகிறார். அதில் ஒரு வீடியோவில் தான்,
‘பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஏன் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்?’ என்பதற்கு பத்து காரணங்களை அவர் கூறியுள்ளார்.
* அரசுப்பள்ளி ஆசிரியர்கள் திறமையானவர்கள். அவர்களின் அன்பும், அரவணைப்பும், அறிவுரைகளும், சுயநலமில்லாத தன்மை கொண்டவை.
* புத்தகப் புழுவாக இல்லாமல் கற்றல் இணைச் செயல்பாடுகளுக்கான வாய்ப்பு அரசுப் பள்ளிகளில் அதிகம். படைப்பாற்றல் மேலாண்மை, மனிதவள மேம்பாடு போன்றவற்றில் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும்.
* அரசுப் பள்ளிகள் வழங்கப்படும் மதிய உணவு சூடாகவும், சுவையாகவும், அதே சமயம் சத்துணவாகவும் உள்ளது.
* பெற்றோர்களால் பள்ளிகளுக்கு சுதந்திரமாக வர முடிகிறது. அவர்களுக்கு உரிய அங்கீகாரம் தரப்படுகிறது. ஆசிரியர்களுடன் அவர்களால் எளிதில் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பள்ளி வளர்ச்சியில் பங்கேற்க முடிகிறது.
* மிகைப்படுத்தப்பட்ட பாவனைகள் அரசு பள்ளிகளில் இல்லை. அழுத்தமில்லா சூழலில் அழுத்தமான கல்வி கிடைக்கிறது. வாழ்க்கைக்குத் தேவையான தரமான கல்வியை எளிமையான முறையில் பெற முடிகிறது.
* அரசுப் பள்ளி என்பது தனிநபர் சொத்தாக அல்லாமல் அனைவருக்குமான சமூகப் பங்கேற்பாக உள்ளது. பெற்றோர்களும் சேர்ந்து அரசுப் பள்ளி நிர்வாகத்தில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றுக் கொள்ள வாய்ப்பு அமைகிறது.
* அறிவை விலை கொடுத்து வாங்க முடியாது. அதனால் தான் அரசுப் பள்ளிகளில் பாடப் புத்தகங்கள், மிதிவண்டி, மடிக்கணினி என விலையில்லாக் கற்றல் பொருட்கள் தரப்படுகின்றன.
* தரமான கட்டமைப்பு வசதி காணப்படுகிறது. கணினி அறை முதற்கொண்டு கழிப்பறை வரை அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன.
* அரசுப் பள்ளிகளில் விலைமதிப்பற்ற கல்வியை விலையில்லாமல் இலவசமாகக் கொடுப்பதால் கல்விக்கு என பெற்றோருக்கு நிதிச்சுமை குறைகிறது. எதிர்காலத்திற்கு என சேமிக்க முடிகிறது.
* அரசு பள்ளிகளில் படிப்பதும், அரசுப் பணியில் இருப்பதும் எப்போதுமே பெருமை தான்.
- என இப்படியாக அரசுப் பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள், சிறப்புகள் பற்றிய பத்து காரணங்களை கவின் அந்த வீடியோவில் விளக்கியிருக்கிறார்.
“அரசுப் பள்ளியில் படித்து நான் பெற்ற இந்த மகிழ்ச்சியை எனது சகோதர, சகோதரிகளான நீங்களும் பெற வேண்டும். அதனால் அன்பான பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து விடுங்கள். அவர்கள் அறிவையும், ஆற்றலையும் வளர்த்து உங்களுக்கு பெருமையையும், புகழையும் சேர்த்துக் கொடுப்பார்கள். அரசுப் பள்ளிகளின் வாசல்கள் உங்களை வரவேற்கக் காத்திருக்கின்றன. உடனடியாக ஆற்றல் மிக்க அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பீர். வாருங்கள் தரமான கல்விக்கு வலிமை சேர்ப்போம்,” என அந்த வீடியோவில் உற்சாகத்துடன் கூறுகிறார் கவின்.