3 வேளாண் சட்டங்களும் வாபஸ்: பிரதமர் மோடி அறிவிப்பால் விவசாயிகளின் நீண்ட போராட்டத்துக்கு முடிவு!
விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!
இன்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்ற போவதாக அறிவிப்பு வெளியானதுடன் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி,
"விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம். 2014ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். நமது நாட்டின் விவசாயிகள் 80 சதவீதம் பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர். விவசாயிகளின் வேதனைகளை அறிந்தவன் என்பதால் தான் அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். அரசின் முயற்சியால் விவசாய விளைபொருட்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
அதனால், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை விவசாயிகள் கைவிட வேண்டும். போராட்டம் செய்து வரும் விவசாயிகள், போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்குச் செல்ல வேண்டும். விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன; ஆனால், அதை எங்களால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை. விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும். இந்த வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாயிகளுக்கு நன்றி" என்று பேசியிருக்கிறார்.
இதனிடையே, வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டத்தை டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
“சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறோம். பல மாத நீண்ட போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம்," என்று பேசியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டம் தொடர்பான தகவல் வெளியானபோதே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் போராட்டத்தை கையிலெடுத்தனர் விவசாயிகள். பஞ்சாப் ஹரியானாவில் 10 உழவர் சங்கங்களுடன் தொடங்கிய போராட்டம் கடந்த ஆண்டு செப்டம்பரில் 31 அமைப்புகளாக விரிவடைந்தது. நாளடைவில் ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் மற்றும் டிராலிகளுடன் டெல்லி எல்லைகளுக்குள் படையெடுத்தனர் பல மாநில விவசாயிகள்.
’டெல்லி சலோ’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஹரியானா, பஞ்சாப், உபி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து வலுவான போராடத்தை முன்வைத்தனர்.
சட்டங்களை வாபஸ் பெறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று கூறி, நெடுஞ்சாலைகளில் மாநில எல்லைகளை முடக்கியும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். பல மாதங்களை கடந்துச் சென்ற போராட்டம் பிரதமரின் இன்றைய அறிவிப்புக்கு பின் முடிவுக்கு வருகிறது.