கக்கன் பேத்தி உட்பட 24 தமிழகக் காவல் அதிகாரிகளுக்கு விருது!
டெல்லியில் இன்று நடைபெற்ற 71வது குடியரசு தின விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 24 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையில் சிறப்பாக சேவை புரிந்த அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்படுவது வழக்கம். காவல்துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டும் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் விருது பெறும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், நாடு முழுவதிலும் இருந்து சிறப்பாகப் பணி புரிந்த 660 காவல் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.
அந்தப் பட்டியலில் தமிழக போலீஸ் துறையில் 24 அதிகாரிகளின் பெயர்களும் அடக்கம். அவர்களில் 21 பேருக்கு இந்திய குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

கக்கன் பேத்தி ராஜேஷ்வரி (இடது), விருது பெற்ற காவல்துறையினர் (வலது)
இதோ அவர்களைப் பற்றிய விபரமாவது:
1. அபய்குமார் சிங் - கூடுதல் டி.ஜி.பி., சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை.
2. சைலேஷ்குமார் யாதவ் - கூடுதல் டி.ஜி.பி., சமூகநீதி மற்றும் மனித உரிமைகள், சென்னை.
3. பி.கே.பெத்து விஜயன் - சூப்பிரண்டு, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு, சென்னை.
4. டி.செந்தில்குமார் - கமிஷனர், சேலம்.
5. எஸ்.ராஜேஸ்வரி - சூப்பிரண்டு, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை.
6. என்.எம்.மயில்வாகனன் - துணை கமிஷனர், போக்குவரத்து,சென்னை (தெற்குசரகம்).
7. ஆர்.ரவிச்சந்திரன் - துணை கமிஷனர், ஆயுதப்படை (பிரிவு-2), சென்னை.
8. கே.சவுந்தரராஜன் - துணை கமிஷனர், ஆயுதப்படை (பிரிவு-1), சென்னை.
9. எஸ்.வசந்தன் - டி.எஸ்.பி., பாதுகாப்பு பிரிவு, சி.ஐ.டி., சென்னை.
10. ஜி.மதியழகன் - டி.எஸ்.பி., லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, நாகர்கோவில்.
11. வி.அனில்குமார் - டி.எஸ்.பி., கிரைம் பிராஞ்ச், சி.ஐ.டி., நெல்லை.
12. கே.சுந்தரராஜ் - உதவி கமிஷனர், மாநகர கிரைம் பிராஞ்ச், திருப்பூர்.
13. எஸ்.ராமதாஸ் - டி.எஸ்.பி., லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, சென்னை (தலைமையகம்).
14. என்.ரவிகுமார் - டி.எஸ்.பி., குடிமை பொருள் பிரிவு (சிவில் சப்ளைஸ்), சி.ஐ.டி., கோவை (சப்-டிவிஷன்).
15. ஜி.ரமேஷ்குமார் - இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, நாகை.
16. எம்.நந்தகுமார் - இன்ஸ்பெக்டர், பாதுகாப்புப் பிரிவு, சி.ஐ.டி., சென்னை.
17. எம்.நடராஜன் - இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, ஈரோடு.
18. என்.திருப்பதி - இன்ஸ்பெக்டர், குடிமை பொருள் பிரிவு (சிவில் சப்ளைஸ்), சி.ஐ.டி., தூத்துக்குடி.
19. எஸ்.அன்வர் பாஷா - உதவி கமிஷனர், போக்குவரத்து அமலாக்கப்பிரிவு (பரங்கிமலை), சென்னை.
20. ஏ.மணிவேலு - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு பிரிவு சி.ஐ.டி., சென்னை.

Photo courtesy : Dinamani
21. என்.ஜெயசந்திரன் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, சிறப்பு விசாரணைப் பிரிவு, சென்னை.
22. டி.டேவிட் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, சிறப்பு பிரிவு சி.ஐ.டி., சென்னை.
23. ஜே.பி.சிவகுமார் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, சிறப்பு விசாரணை பிரிவு, சென்னை.
24. ஒய்.சந்திரசேகரன் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச-ஊழல் தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு, சிறப்பு விசாரணை பிரிவு, சென்னை.
கக்கனின் பேத்தி :
விருது வாங்கிய 24 தமிழக அதிகாரிகளில் 23 பேர் ஆண்கள் ஆவர். சென்னையைச் சேர்ந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டான எஸ்.ராஜேஸ்வரி ஒருவர் மட்டுமே பெண் ஆவார். இவர் கடைசிவரை ஏழ்மையிலேயே வாழ்ந்து மறைந்து போன எளிமையின் சின்னமாகக் கருதப்படும் முன்னாள் தமிழக அமைச்சர் கக்கனின் பேத்தி ஆவார்.
காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது அமைச்சராக பதவி வகித்தவர் கக்கன். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்து தியாகம், எளிமை, நேர்மைக்காக என மக்களிடம் இன்றளவும் பேசப்படுபவர்.
தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்லக்கூடாது என சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த சமயத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான கக்கனுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கி கோயிலுக்குள் ராஜ மரியாதை கிடைக்க வைத்தார் காமராஜர்.
அதுமட்டுமின்றி பொதுப்பணி, வேளாண்மை, உளவுத்துறை, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை பராமரிப்பு, உள்துறை, நிதி, கல்வி, சிறைத்துறை, தொழிலாளர் நலம், அறநிலையத் துறை என பல்வேறு உயர்ந்த பொறுப்புகளை வகித்தவர் கக்கன்.

மக்கள் மத்தியில் அதிக அன்பைச் சம்பாரித்த கக்கன், கடைசிவரை ஏழ்மையிலேயே வாழ்ந்து மறைந்து போனார். அதனாலேயே இன்றளவும் அவரது பெயர் மக்கள் மத்தியில் மறக்கப்படாமல் உள்ளது.
கக்கனுக்கு 5 மகன்கள் மற்றும் ஒரு மகள் என மொத்தம் 6 குழந்தைகள். 3வதாக பிறந்த பெண் குழந்தையான கஸ்தூரி சிவசாமியும் அரசியலில் ஈடுபட்டவர் தான். அவரது 3வது குழந்தை தான் இன்று குடியரசுத்தலைவர் கையால் விருது வாங்கிய ராஜேஸ்வரி.
ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று மதுரையில் சிபிசிஐடியில் பணிபுரிந்து வந்த இவர், பிறகு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது வீரதீரமான நடவடிக்கைகளைப் பாராட்டும் விதமாக இன்று அவருக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.