’பாரதத்தின் லஷ்மி’கள்: பல துறைகளில் சாதனைப் படைத்த இந்திய பெண்கள்!
சாதனைப் பெண்களை பாராட்டும் வகையில் #BharatKiLaxmi பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தனது 57-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் #BharatKiLakshmi பிரச்சாரம் குறித்து அறிவித்தார். இது வெவ்வேறு துறைகளில் புதுமையான முயற்சிகள் மேற்கொண்ட பெண்களைப் பாராட்டி கௌரவிப்பதற்கான முயற்சியாகும். பிரதமர் தனது உரையின்போது,
“நமது கலாச்சாரத்தில் மகள்கள் லஷ்மியாகவே கருதப்படுகிறார்கள். நாம் பொது நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நம் கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள பெண் குழந்தைகளைப் பாராட்ட வேண்டாமா?” என்றார்.
மக்கள் தங்களைச் சுற்றியுள்ள பெண்களின் உந்துதலளிக்கக்கூடிய பங்களிப்பையும் சாதனைகளையும் சமூக வலைதளங்களில் #BharatKiLaxmi என்கிற ஹேஷ்டேக் மூலம் பகிர்ந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
“பாரதத்தின் லஷ்மியை ஊக்குவிப்பது நாடு மற்றும் நாட்டு மக்களின் வெற்றிப்பாதையை வலுவாக்குவதற்கு ஒப்பானதாகும்,” என்றார்.
மகள்களுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பகிரச்செய்யும் முயற்சி வெற்றியடைந்ததை சுட்டிக்காட்டி மக்கள் அதிகக் கதைகளை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய அரசாங்கத்தின் வலைதளத்திலும் (mygov.in) மற்ற சமூக வலைதளங்களிலும் #BharatKiLaxmi பட்டியல் இடம்பெற்றுள்ளது.
நாமும் பிரதமருடனும் அரசாங்கத்துடனும் இணைந்து இந்தப் பெண்களையும் அவர்களது பிரமிக்கத்தக்க பணிகளையும் பாராட்டுவோம். இங்கு சில ’பாரத் கீ லஷ்மி’ பற்றி தொகுக்கப்பட்டுள்ளது. எத்தனையோ பெண்களின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படவேண்டியிருப்பதால் இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும்.
கர்ணம் மல்லேஸ்வரி
இவர் ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார். இந்தப் பிரிவில் இவரது சாதனையைப் பாராட்டி இவருக்கு ’ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருது வழங்கப்பட்டது. ’ஆந்திராவின் இரும்புப் பெண்’ என்றழைக்கப்படும் கர்ணம் மல்லேஸ்வரி 2000ம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்தார். இவர் பத்தாண்டுகளில் 11 தங்க பதக்கங்களையும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் வென்றுள்ளார். முக்கியமாக பளு தூக்குதல் போன்ற கடினமான விளையாட்டுகளில் இந்தியப் பெண்களும் சாதிக்கமுடியும் என்பதை இவர் நிரூபித்துள்ளார்.
தன்யா மேனன்
தன்யா மேனன் இந்தியாவின் முதல் சைபர் கிரைம் பெண் துப்பறிவாளர். இவர் ஆணாதிக்கம் நிறைந்த பகுதியில் செயல்பட்டதுடன் ஒரே மாதிரியான கருத்துக்களையும் தகர்த்தெறிந்தார். தன்யா சைபர் கிரைம் துப்பறிவாளராக, சைபர் அச்சுறுத்தல்கள் மற்றும் தவறாக பயன்படுத்துதல், நிதி மோசடி, தரவுகளைத் திருடுதல் போன்ற குற்றங்களைத் துப்பறிந்துள்ளார். சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார்.
வருங்காலத்தில் சைபர் பாதுகாப்பு அகாடமி திறக்கவும் திட்டமிட்டுள்ளார். சைபர் அவேர்னெஸ் ப்ரோக்ராம் (CAP) என்கிற அரசு சாரா நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள பள்ளிகளுடன் இணைந்து செயல்பட்டு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
பசேந்திரி பால்
பசேந்திரி பால் உத்தர்காசியின் இமயமலையில் உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் 1984ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் இந்தியப் பெண் ஆவார். இவரது சாதனை அங்கீகரிக்கப்பட்டு 1984ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருதும் 1986ம் ஆண்டு அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது. 1990ம் ஆண்டு லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தார். அவர் தனது சுயசரிதையில்,
“சிறிது நேரம் பனித் தூள்களில் மிகவும் கஷ்டப்பட்டு நடந்தோம். பிறகு சரிவான பகுதி இருந்ததால் எளிதாக இருந்தது. சில அடி தூரத்திற்குப் பின்னர் இரண்டு மீட்டர் தூரம் தாண்டியதும் தொடர்ந்து மேலே ஏறுவதற்கான பகுதி ஏதும் இல்லை என்பதை உணர்ந்தேன். என் இதயத்துடிப்பு நின்றுபோனது. கைக்கு எட்டும் தூரத்தில் வெற்றி இருப்பதை என்னால் உணரமுடிந்தது. 1984ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி மதியம் 1.07 மணிக்கு எவரெஸ்ட் உச்சியை அடைந்தேன். இந்த சாதனையைப் படைத்த முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையை பெற்றேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
சித்தி கர்னானி
இந்தியாவின் முதல் ஆர்கானிக் உணவு ஸ்டார்ட் அப் ’பர்வதா ஃபுட்ஸ்’ நிறுவனர் சித்தி கர்னானி. இவர் 2016ம் ஆண்டு FICCI Millennium Alliance Award, 2017-ல் National Agripreneurs Award மற்றும் இந்திய அக்ரிபிசினஸ் எக்சலன்ஸ் விருது ஆகியவற்றைப் வென்றுள்ளார். சிக்கிமில் எளிதாக பின்பற்றக்கூடிய, வடகிழக்கு நிலப்பரப்புகளுக்கு ஏற்றவாறான, நவீன வேளாண் நடைமுறைகளை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்தும் முதல் நிறுவனம் பர்வதா.
ருவேதா சலாம்
2015-ம் ஆண்டு ருவேதா சலாம் ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆனார். ருவேதாவின் சிறு வயது முதலே அவர் ஐபிஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்பது அவரது அப்பாவின் விருப்பம். அப்போதுதான் முதல் முறையாக ருவேதாவிற்கு ஐபிஎஸ் ஆகவேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. இதனால் உந்துதல் பெற்று அந்த இலக்கை நோக்கி பயணித்தார்.
தமிழ்நாடு ஐபிஎஸ் கேடரில் சேர்ந்தார். சென்னையில் காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். பல இளம் பெண்கள் தங்களது கனவை நனவாக்கிக்கொள்ளத் தொடர்ந்து உந்துதல் அளித்து வருகிறார்.
பூஜா வாரியர்
பூஜா வாரியர் UnLTD என்கிற இன்குபேட்டரை நிறுவிய முதல் பெண் நிறுவனர் ஆவார். இது சமூக தொழில்முனைவோர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு டெட் இந்தியா ஃபெலோவாக முன்மொழியப்பட்டார். அத்துடன் 2013ம் ஆண்டு உலக பொருளாதார மன்றத்தால் இளம் உலகத் தலைவராகவும் முன்மொழியப்பட்டார். 2007-ம் ஆண்டு முதல் UnLTD இந்தியா 130-க்கும் அதிகமான சமூக தொழில்முனைவோர்களுக்கு ஆதரவளித்துள்ளது. இந்த தொழில் முனைவோர்கள் 2.5 மில்லியன் பேர் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். 3,90,000 வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளனர்.
தீபா கர்மாகர்
2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸில் திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர் முதல் வாய்ப்பில் 14.866 புள்ளிகள் பெற்றார். இரண்டாவது வாய்ப்பில் ’புரோடுனோவா’ சாகசம் புரிந்து 15.266 புள்ளிகள் பெற்றார். ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் உள்ள உலக சாம்பியன்களை வென்று நான்காவது இடத்தைப் பிடித்தார்.
தீபா கர்மாகர் 52 ஆண்டுகளில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவிற்கு தேர்வான முதல் இந்தியப் பெண் என்கிற பெருமைக்குரியவர். அத்துடன் 2015 உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டிக்கு தேர்வாகியுள்ள முதல் இந்தியர் என்கிற பெருமையும் இவரைச் சேரும்.
டெசி தாமஸ்
’இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி’ என்றழைக்கப்படும் டெசி தாமஸ் இந்தியாவில் ஏவுகணை திட்டத்திற்கு தலைமை வகித்த முதல் பெண் விஞ்ஞானி. டிஆர்டிஓ-வில் அக்னி-4 திட்ட இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஆண்கள் நிறைந்த விஞ்ஞான துறையில் தனது ஆளுமைத் திறனால் முத்திரை பதித்துள்ளார்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக துறையில் பங்களித்துள்ளார். அக்னி ரக ஏவுகணைகள் வடிவமைப்பில் பங்களித்துள்ளார். பல்வேறு ஃபெலோஷிப்களும் கௌரவ டாக்டர் பட்டங்களும் வென்றுள்ளார்.
சாவி ரஜாவத்
சாவி ரஜாவத் எம்பிஏ முடித்தவர். இவர் இந்தியாவின் முதல் இளம் கிராமத் தலைவர். இவர் தனது கார்ப்பரேட் பணியைத் துறந்து ராஜஸ்தானின் டாங் மாவட்டத்தில் உள்ள சோடா என்கிற தனது கிராமத்திற்குத் திரும்பினார். இவர் இந்தியாவின் முதல் கிராம பஞ்சாயத்துத் தலைவர் ஆனார். அப்போதிருந்து தண்ணீர், மின்சாரம், சாலைகள், கழிப்பறை, வங்கி என பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதியாக இருப்பினும் எந்த அரசியல் கட்சியுடனும் இவர் இணையவில்லை.
மஞ்சு தேவி
மஞ்சு தேவி ராஜஸ்தானின் சுமை தூக்கும் முதல் பெண் தொழிலாளி ஆவார். 2018ம் ஆண்டு இவருக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கௌரவிக்கப்பட்டார். ரயில் நிலையத்தில் வேலை பார்த்து வந்த இவரது கணவர் மகாதேவ் உயிரிழந்த பிறகு அவரது உரிமம் எண்.15-ஐ பெற்றுக்கொண்டு இவர் பணியைத் தொடங்கினார்.
ஆறு மாத பயிற்சிக்குப் பிறகு ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள 177 பளு தூக்கும் பணியாளர்களில் ஒரே பெண் தொழிலாளி ஆனார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா