ஐஐடி மெட்ராஸ்க்கு தேர்வான ஆட்டோ ஓட்டுனர் மகன் - சாதித்து காட்டிய அரசுப் பள்ளி மாணவன் பார்த்தசாரதி!
என் மகனோட படிப்புக்கு வறுமை தடையா இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன், அரசுப் பள்ளியில் கொடுத்த பயிற்சியை வைத்தே JEE தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடி மெட்ராஸில் படிக்கும் வாய்ப்பை பார்த்தசாரதி பெற்றிருப்பது பெருமகிழச்சியை தந்துள்ளதாக அவருடைய தந்தை சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.
“வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” என்று பொருண்மொழிக் காஞ்சியில் நெடுஞ்செழியன் பாடி இருக்கிறார். கல்வியின் சிறப்பை மிகஅழகாக இந்தப் பாட்டில் சொல்லி இருப்பார் நெடுஞ்செழியன்.
இந்த காலத்திற்கு ஏற்றாற் போல இதை பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டுமானால் பொருளாதாரம், சமத்துவமின்மை என வேற்றுமைகள் பல இருந்தாலும் கல்வி என்கிற ஒன்று மட்டுமே எல்லாவற்றையும் வீழ்த்தி ஒருவனை உயரத்திற்கு கொண்டு செல்லும் ஏணி. அதற்கு உதாரணமாகி இருக்கிறார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞன் பார்த்தசாரதி.
வீட்டில் சகல வசதிகளுடன் தனி அறை கிடையாது, ஆடம்பர ஏற்பாடுகளும் கிடையாது, ஒற்றை அறை மட்டுமே உள்ள வீட்டின் ஒரு பகுதியே பயிற்சிக்கான இடம், சுவரே எழுதிப் பழகும் பிளாக் போர்டு என இருப்பதை வைத்து தன்னுடைய கடின உழைப்பை மட்டுமே மூலதனமாக்கி இருக்கிறார் இந்த மாணவன்.
இராஜபாளையம் அருகே கணபதி சுந்தர நாச்சியார்புரத்தைச் சேர்ந்த 47 வயது ஆட்டோ ஓட்டுனர் சந்திரபோஸின் மகன் பார்த்தசாரதி. ஆதிதிராவிட மாணவனான சாரதி தன்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் +2 படித்து முடித்திருக்கிறார்.
“+2க்குப் பிறகு என்ன படிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது தான் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஜேஇஇ தேர்வு எழுத ஆசிரியர்கள் ஊக்கம் தந்தனர். 2 மாதங்கள் பள்ளியிலேயே ஆசிரியர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து போட்டித் தேர்வுக்கான வினாக்களுக்கு எப்படி விடையளிக்க வேண்டும் என்று பயிற்சி தந்தனர்.
"போட்டித் தேர்வுக்காக அனுப்பும் லிங்குகளை பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த digital classroom-இல் இருந்த கணிணிகளைப் பயன்படுத்திப் படித்தேன். முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றிருப்பதாகச் சொன்ன ஆசிரியர்கள் advanced தேர்வு எழுத சென்னைக்குப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்று கூறினர்.
கிராமத்திலே பிறந்து வளர்ந்த எனக்கு சென்னை சற்று மிரட்சியைத் தந்தது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை அரசே தந்தது, 2ம் நிலை தேர்விலும் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 240வது ரேங்க் பெற்றிருக்கிறேன்.
"ஐஐடி மெட்ராஸில் ஏரோநாடிக்கல் என்ஜினியரிங் படிக்க இடம் கிடைத்திருக்கிறது, எதிர்காலம் எனக்கு வேறு என்னவெல்லாம் தரப் போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,” என்கிறார் சாரதி.
பார்த்தசாரதியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். விருதுநகரில் ஒரு குக்கிராமத்தில் இருந்து தமிழ்வழியில் படித்து ஐஐடி மெட்ராஸில் இடம் பெற்றிருப்பதை மனதார பாராட்டியுள்ளது உயர் கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸ்.
10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் ஆட்டோ ஓட்டுநர் ஆனதாகச் சொல்கிறார் பார்த்தசாரதியின் தந்தை சந்திரபோஸ்.
என்னுடைய ஏக்கத்தை என் மகன் தீர்த்திருக்கிறான். வறுமை என்றுமே என்னுடைய 3 குழந்தைகளின் கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். நானும் என் மனைவியும் சேர்ந்து வாரத்திற்கு ரூ.3,000 சம்பாதிக்கிறோம். அதை வைத்தே குடும்பச் செலவுகளை சமாளிக்க வேண்டும். தொடக்கக் கல்விக்காக பார்த்தசாரதியை தனியார் பள்ளியில் சேர்த்தோம், ஆனால் அதனைத் தொடர முடியாததால் ஒன்றாம் வகுப்பு முதல் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தோம்.
“ஆட்டோவில் செல்லும் போது பயணிகள் ஐஐடி மெட்ராஸ் பற்றி சொல்வதைக் கேட்டிருக்கிறேன். பார்த்தசாரதியை ஜேஇஇ தேர்வு எழுத நான் கேட்டுக் கொள்வதற்கு முன்பிருந்தே அவன் பள்ளியில் நுழைவுத் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்ததை அறிந்தேன். நுழைவுத் தேர்வுக்கான புத்தகங்கள் ஒவ்வொன்றும் 2,000 ரூபாய்க்கு குறையாமல் இருக்கும், அவற்றை கடன் வாங்கித் தான் வாங்கிக் கொடுத்தேன். எங்களுடைய கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது என்னுடைய மகனுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஐஐடி அமைத்துத் தரும்,” என்று நம்புவதாக நெகிழ்கிறார் போஸ்.
நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் ஜேஇஇ தேர்வில் பங்கேற்கின்றனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐஐடிகளில் சேர்ந்து படிப்பதற்காக பல ஆயிரங்கள் செலவு செய்து கோச்சிங் கிளாஸ் சென்று படிக்கின்றனர், ஆனால், தமிழ்நாடு அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் தரும் பயிற்சியை மட்டும் வைத்து படித்தே சாதித்து காட்டி இருக்கிறார் தமிழ் வழியிலேயே பயின்ற மாணவன் பார்த்தசாரதி.
பாதைகள் கடினமாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாது கடந்து செல்பவர்களுக்கே வெற்றி என்பதை உணர்த்தி இருக்கிறார் பார்த்தசாரதி. அடுத்த தலைமுறை கிராமப்புற மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக பல முன்உதாரணங்களை இளம் தலைமுறை ஏற்படுத்தி வருவது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரியது.
அரசின் பயிற்சி வகுப்புகளில் படித்தே ஜேஇஇ தேர்வில் வெற்றி - திருச்சி NIT-யில் இடம்பெற்ற பழங்குடியின மாணவிகள்!