சென்னை அரசுப் பள்ளியில் அக்கறை மிக்க தலைமை ஆசிரியை ஏற்படுத்திய வியக்கத்தகு மாற்றம்!
ஒழுங்கற்ற கட்டடங்கள், உடைந்துபோன கழிப்பறைகள், பள்ளிக்கு வராத மற்றும் ஆர்வமில்லாத மாணவர்கள்... இதை சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது நிச்சயமாக ஏதாவது ஒரு அரசு பள்ளியாகத் தான் இருக்கும்.
அரசு பள்ளிகளை பற்றிய இதுபோன்ற எண்ணங்கள் நம் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றன. அதை அகற்றுவது என்பது கடினமான விஷயம். அந்த மாதிரி பள்ளிகள் இன்னமும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கும் இல்லை. ஆனால் இதற்கு நேர்மாறான அரசு பள்ளிகளும் இருக்கின்றன என்பது தான் உண்மை. அதுபோன்ற ஒரு பள்ளி தான் சென்னை கோட்டூரில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி.
ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தலைமை ஆசிரியரின் கீழ் அதே அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த பள்ளியில், மாணவர்கள் வருகையை அதிகப்படுத்துவது, அவர்களை தனித்துவம் மிக்கவர்களாக உருவாக்குவது என்ற நோக்கத்துடன் அனைவரும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மற்ற அரசு பள்ளிகளைப் போல தான் இந்த பள்ளியிலும் மாணவர்கள் வருகை தான் மிக முக்கிய பிரச்சினையாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பள்ளியில் மாணவர் வருகை என்பது மிகக்குறைவு. இதைத்தடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஸ்வரி கல்பனா.
"நான் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற போது, மாணவர்களை யாரும் ஊக்கப்படுத்தாத நிலை இருந்தது. இதனால் அவர்கள் பள்ளிக்கு வருவதே அரிதாக இருந்தது. இதை முதலில் சரி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இல்லையென்றால் என்ன பயன் இருக்கிறது?"
என இப்பள்ளிக்கு வந்த ஆரம்ப நாட்களை நினைவு கூர்கிறார் தலைமை ஆசிரியை கல்பனா. ஆனால் இந்த மாற்றத்தை அவர்களால் எளிதாகக் கொண்டு வர முடியவில்லை. திட்டமிட்ட இலக்கு, அதில் நிலைத்தன்மை மற்றும் ஆர்வம் ஆகியவை கொண்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சின்ன மாற்றங்களை உருவாக்கினர்.
தலைமை ஆசிரியை கல்பனா தலைமையிலான ஆசிரியர்க்குழு மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர்களது பிள்ளை ஏன் பள்ளிக்கு வரவில்லை என விசாரிக்க ஆரம்பித்தனர். பெற்றோர்கள் என்ன விளக்கம் அளிக்கிறார்கள் என்பது பற்றி தலைமை ஆசிரியரிடம் மற்ற வகுப்பு ஆசிரியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
"ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும் அவர் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் வருகைக்கு பொறுப்பு. ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோரை தொடர்புகொண்டு பேசியதால், மாணவர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது," என்கிறார் கல்பனா.
பெரும்பான்மையான மாணவர்களின் பெற்றோர்கள், கணவரை இழந்த பெண்களாகவும், படிப்பறிவு இல்லாதவர்களாகவும் இருந்தனர். இதனால் பிள்ளைகளின் படிப்பை கண்காணிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருந்தது.
எனவே, முதல்கட்டமாக மாணவர்களின் பெற்றோர் எப்போது வேண்டுமானாலும் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை உள்ளிட்டவர்களை பார்த்து, தங்கள் பிள்ளையின் படிப்பு நிலவரம் குறித்து அறியும் வகையிலான வசதிகள் செய்யப்பட்டன. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் இடையிலான இடைவெளி குறைந்தது.
"ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா பெற்றோரையும் அழைத்து கூட்டம் நடத்தினால், பெரும்பாலானவர்கள் வராமல் போவதற்கு வாய்ப்பு அதிகம். அதனால், அவர்கள் வசதிக்கு ஏற்ப எப்போது வேண்டுமானலும் வரலாம் என்ற நடைமுறையை அறிமுகப்படுதினோம்," என்கிறார் கல்பனா.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய சவாலே ஆங்கிலம் தான். பெரும்பான்மையான மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவது தான் மிகவும் சிரமமாக இருக்கிறது. இதனால் தன்னார்வளத் தொண்டர்களை அழைத்து வந்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்தார் தலைமை ஆசிரியர் கல்பனா. மேலும் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி என பல விதமான போட்டிகளை நடத்தி மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்தியது பள்ளி நிர்வாகம்.
"ஐந்து ஆசிரியர்களால் எல்லாம் செய்துவிட முடியாது. அதனால் தன்னார்வளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. கலாசேத்ராவில் இருந்து சிலர் வந்து எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு நடனமும், பாட்டும் கற்றுக்கொடுக்கிறார்கள். மற்ற சிலர் கலை வேலைபாடுகளை கற்றுக்கொடுக்கிறார்கள். ஒரு பள்ளி என்பது குழந்தைகளை மையப்படுத்தி இருக்க வேண்டும். சந்தோஷமான சூழல் இருந்தால், அது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும்," என்கிறார் கல்பனா.
இதுபோன்ற சின்னச் சின்ன மாற்றங்கள், அப்பள்ளியில் ஒரு குறிப்பிட்ட கால அளவில் பெரும் மாற்றதை கொண்டு வந்தன. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த தனது மகனின் அனுபவங்களை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்ட வெண்ணிலா,
"எனது மகன் தனியார் பள்ளியில் படித்திருந்தால் கூட இந்தளவுக்கு அக்கறை எடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. இந்த பள்ளி ஆசிரியர்களின் அக்கறையும், ஆர்வமும் தான் எல்லா மாற்றத்துக்கும் காரணம்," என்கிறார்.
இப்பள்ளியில் படிக்கும் பெரும்பான்மையான மாணவர்களை அவர்களின் பெயர்களைத் தாண்டி, குடும்ப நிலவரங்களையும் அறிந்து வைத்திருக்கின்றனர் ஆசிரியர்கள். ஏனெனில் இப்பள்ளியில் அப்பா, அம்மாவைப் பிரிந்து அல்லது இழந்து வாழும் குழந்தைகள் பலர் படித்து வருகின்றனர். எனவே தான், அவர்களுகுத் தேவையான அன்பையும், அரவணைப்பையும் பாராபட்சமின்றித் தர இங்குள்ள ஆசிரியர்கள் மறப்பதில்லை. அதனால் தான், தங்கள் மீது இவ்வாறு அதிக அக்கறை மற்றும் அதீத அக்கறையுடன் இருக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் தங்கள் ரோல் மாடலாகவே பார்க்கின்றனர்.
கல்வியறிவில்லாத கூலித் தொழிலாளியான வேலுவின் குழந்தைகள் இங்கு தான் படித்து வருகின்றனர். ஆனால், ஆசிரியர்கள் தன் குழந்தைகளின் மீது கொண்டுள்ள கவனம் மற்றும் அக்கறையால் அவர்களின் எதிர்காலம் குறித்த தனது கவலைகள் காணாமல் போய்விட்டதாகக் கூறுகிறார் வேலு. மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில்,
“இப்பள்ளியில் படிக்க எனது குழந்தைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இத்தகைய ஆசிரியர்களைப் பெற்ற அவர்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகள் தான். இதனால் தினமும் பள்ளியில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நான் அலட்டிக் கொள்வதே இல்லை. ஆனால், வீட்டிற்கு வந்ததும் என் பிள்ளைகள் தங்கள் ஆசிரியர்களின் புகழ் பாடிக் கொண்டே தான் இருப்பார்கள்,” என்கிறார் மகிழ்ச்சியுடன்.
(இக்கட்டுரை citizenmatters தளத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. அதன் தமிழாக்க கட்டுரை இது.)