பெல்ஜியம் டு திருச்சி - பூஜைப் பொருட்கள் வணிகத்தின் மூலம் கிராமப் பெண்களின் வாழ்வை மாற்றும் டேவிட் வான்டேவோர்ட்!
பெல்ஜிய பார்மாசிஸ்டான டேவிட் வான்டேவோர்ட், அவரது சொந்த நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் திருச்சியில் அவரது வாழ்க்கை வேரூன்றிவிடும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
பெல்ஜிய பார்மாசிஸ்டான டேவிட் வான்டேவோர்ட், அவரது சொந்த நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் திருச்சியில் அவரது வாழ்க்கை வேரூன்றிவிடும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. சேவை செய்வதற்காக அவர் தொடங்கிய பிரேமா நேச்சர், வெறும் தூப பிராண்ட் மட்டுமல்லாது, கிராமப்புற பெண்களுக்கு நிதி சுதந்திரத்தை அளிக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சமூக நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

பெல்ஜியம் டூ திருச்சி...
பெல்ஜியத்திலிருந்து சுற்றுலா பயணியாக இந்தியாவிற்கு வருகை தந்த டேவிட் வந்தேவார்ட்டுக்கு அப்போது தெரியாது அவரது வாழ்க்கைக்கான நோக்கத்தை இங்கே கண்டறிவார் என..!
மருந்தியல் படிப்பை முடித்த பிறகு அவர், இந்தியாவில் நான்கு மாதங்களையும், நேபாளத்தில் மூன்று மாதங்களையும் கழித்தார். அப்போது, அவர் தங்கியிருந்த பகுதியில் வாழ்ந்த குழந்தைகள் செல்வத்தில் குறையிருப்பினும், அவர்கள் வாழ்க்கையை அணுகிய விதத்தால் ஈர்க்கப்பட்டார். அப்போது கிடைத்த அனுபவங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை கண்டறிய அவரைத் துாண்டியுள்ளது.
அதன் விளைவாக, அவர் மீண்டும் இந்தியாவை நோக்கி பயணித்தார். ஆனால், இம்முறை சுற்றி பார்க்க அல்ல, பிரேமானந்தா அறக்கட்டளை மூலம் சமூக சேவையில் அவரை அர்ப்பணித்தார். பெண்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் ஆங்கிலத்தையும் கற்பித்தார். அவர்களின் நம்பிக்கையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டார்.
அச்சமயத்தில், கொரோனா தொற்று பரவ டேவிட்டின் நாட்கள், இங்கேயே கழிந்தன. அப்போது தமிழை சரளமாக பேசப் பழகியுள்ளார். உள்ளூர் சமூகத்துடன் அவருக்கு ஏற்பட்ட ஆழமானத் தொடர்பினாலும், அவரது சமூக உணர்வாலும் அம்மக்களின் பொருளாதாரத்தினை உயர்த்த எண்ணினார்.
"இந்தியாவில் நான் ஒரு தொழிலைத் தொடங்க வரவில்லை. எனது ஒரே குறிக்கோள் மக்களுக்கு உதவுவதுதான். தொற்றுநோய் காலத்தில், ஐரோப்பாவிற்குத் திரும்ப முடியாமலிருந்த போது, நண்பர் ஒருவர் இயற்கை துாபத்தைத் தேடி அலைந்தார். ஏன், தூப சூத்திரங்களை பரிசோதித்துப் பார்க்கக் கூடாது என, முயற்சித்தேன். உண்மையான, ரசாயனம் இல்லாத தயாரிப்புகள் மீதான அவரது ஆர்வத்தால் உந்தப்பட்டு, இயற்கை பூஜைப் பொருள்களை தயாரித்தோம்," என்றார்.
சமூக சேவையாக தொடங்கி சமூக நிறுவனமான பிரேமாநேச்சர்!
2021ம் ஆண்டு, திருச்சியியை தலைமையிடமாகக் கொண்டு ஆன்மிக பூஜைப் பொருள்களை தயாரித்துவிற்கும் "பிரேமா நேச்சர்" எனும் வணிகத்தைத் தொடங்கினார். அவரது மருந்து நிபுணத்துவத்தினை கொண்டு, நெய், கற்பூரம் மற்றும் தேன் போன்ற பாரம்பரிய பொருட்களைப் பயன்படுத்தி ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், விபூதி, தூபம் போன்ற ஆன்மிக பூஜைப் பொருள்களை தயாரிக்கத் தொடங்கினார்.
மூலிகை மருத்துவம் பற்றிய அவரது புரிதல், சுயமாகக் கற்றுக்கொண்ட போதிலும், அவரது படைப்புகளுக்கு ஆயுர்வேத ஞானத்துடன் ஐரோப்பிய அறிவியலை இணைத்தது ஒரு தனித்துவமான ஆழத்தைச் சேர்த்தது.
"நாங்கள் தனித்து நிற்க வேண்டுமென்றால், முற்றிலும் இயற்கையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அந்த நம்பகத்தன்மை எங்களை தனித்து நிற்க வைக்கிறது. தொடக்க முதலீட்டாக ரூ.5,00,000-ஐ கொண்டு நிறுவனத்தை தொடங்கினேன். அதில், இயந்திரத்திற்காக ரூ.3,00,000 மற்றும் பேக்கேஜிங் அச்சிட 70,000 ரூபாய் செலவாகியது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு 30,000 ரூபாய் தேவைப்பட்டது," என்றார்.
பிரேமா நேச்சர் குறித்த டேவிட்டின் தொலைநோக்குப் பார்வை வாசனை திரவியங்களுக்கு அப்பாற்பட்டது. கிராமப்புற பெண்களை மேம்படுத்தி, அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நிதி சுதந்திரத்தை வழங்கும் ஒரு சமூக நிறுவனத்தை உருவாக்குவதே அவரது குறிக்கோளாக இருந்தது.
இன்று, நிறுவனம் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20 பெண்களைப் பணியமர்த்துகிறது. அவர்களில் பலர் முறையான கல்வியைப் பெறவில்லை. அதனால், அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதும் சவால்களுடன் இருந்துள்ளது.
"அவர்கள் துல்லியமான கணக்கீடுகள் அல்லது தரச் சரிபார்ப்புகளுக்குப் பழக்கப்படவில்லை. ஆனால், அவர்கள் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தனர், நம்பமுடியாத அளவிற்கு பொறுப்பானவர்கள். நான் ஒருபோதும் தவறுகளுக்கு அவர்களைக் குறை கூறியதில்லை. அதை எப்படிச் சிறப்பாகச் செய்வது என்று அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பேன்," என்றார்.
வணிகத்தின் வருமானத்தில் ஒரு பங்கைப் பெறும் இப்பெண்கள், அதே நேரத்தில் அவர்களின் வீட்டு வருமானத்திற்கும் பங்களிக்கிறார்கள். அத்துடன் நம்பிக்கையையும் பெறுகிறார்கள். 34 வயதான இந்துமதி பாலகிருஷ்ணன், பிரேமா நேச்சரில் சேருவதற்கு முன்பு, திருச்சியில் உள்ள அவரது கிராமமான பாத்திமா நகரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் MNREGA ஊழியராக பணியாற்றி வந்தார்.
ஆனால், பல மாதங்களாக சம்பளம் சரியாக வழங்கவில்லை என்றும், இதனால் பள்ளி செல்லும் இரண்டு குழந்தைகள் கொண்ட அவரது குடும்பத்தை நடத்துவது சவாலாக இருந்தது, என்றும் அவர் கூறுகிறார்.
"இப்போது, நான் ஒரு சம்பளம் வாங்கும் நபர். இது எங்களைப் போன்ற குடும்பங்களுக்கு வரப்பிரசாதம். நிதிப் பாதுகாப்போடு இருக்கிறாம்" என்கிறார் இந்துமதி. சந்தைப்படுத்தல் போன்ற பணிகளுக்கும், பெண்களையே பணியமர்த்தியுள்ளனர்.
"எங்க ஊர் பெண்கள் நிதிச்சுதந்திரத்துடன் குடும்பத்தில் அதிகாரம் பெறுவதற்கு ஏதோ ஒரு வகையில் நானும் பங்களிக்கிறேன் என்பது தனிப்பட்ட உணர்வை அளிக்கிறது," என்றார் பெருமையுடன் மார்கெட்டிங் பிரிவில் பணியாற்றும் சவுந்தர்யா.

ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி; மாதம் ரூ 10லட்சம் வருவாய்;
பிரேமா நேச்சரின் வளர்ச்சி நிலையானது ஆனால் சவாலானது. இயற்கை தூபம், வாசனை மெழுகுவர்த்திகள் மற்றும் மூலிகை அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, இந்திய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
ஐரோப்பாவில், பிரேமா நேச்சரின் தயாரிப்புகள் சுகாதார உணர்வுள்ள நுகர்வோர் மற்றும் யோகா சமூகத்தினரிடையே நன்வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் படிப்படியாக இயற்கை தயாரிப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள், என்றார் டேவிட். உள்நாட்டில் குறைந்த லாபத்தில் பொருட்களை விற்பனை செய்து, ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி விற்பனை மூலம் ஈடுசெய்கிறார்.
ஐரோப்பா நாடுகளில் பிரேமா நேச்சர் மாதத்திற்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.
"இந்தியாவில், பூஜைப்பொருள்களுக்கான சந்தை வலுவான இரசாயன வாசனை திரவியங்களால் நிறைந்துள்ளது. எனவே நுட்பமான, இயற்கை வாசனை திரவியங்களை அறிமுகப்படுத்துவது சவாலாக உள்ளது. இது ஒருபோதும் பணம் சம்பாதிப்பது பற்றியது அல்ல. இயற்கையைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் திருப்பி கொடுக்கும் ஒரு நிலையான பிராண்டை உருவாக்குவதே எங்களது நோக்கம்."
லாபத்தின் ஒரு பகுதியானது தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்குச் செலுத்தப்படுகிறது. சூழலுக்கு நன்மை பயக்கும் வணிகங்களை உருவாக்க, மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பெருமளவிலான உற்பத்தி மற்றும் ரசாயனங்களை சார்ந்த சகாப்தத்தில், தூய்மை, நோக்கம் மற்றும் அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்த விரும்புகிறோம், என்று கூறி முடித்தார்.