Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘தேயிலை பறிக்கும் ரோபோ’ - தமிழக தொழில்முனைவோர் உருவாக்கிய மேட் இன் தமிழ்நாடு ‘T-Rover’

வேளாண் பணிக்கு ஆள்கிடைக்காமல் சவால்கள் இருக்கையில், தேயிலை பறிக்கும் பணியில் ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது. இதனை ஈடு செய்யும் விதமாக தமிழக தொழில்முனைவோர்கள் ஒன்றிணைந்து தானியங்கி தேயிலை பறிக்கும் ரோபோவை உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

‘தேயிலை பறிக்கும் ரோபோ’ - தமிழக தொழில்முனைவோர் உருவாக்கிய மேட் இன் தமிழ்நாடு ‘T-Rover’

Tuesday March 12, 2024 , 4 min Read

உலகின் சிறந்த பானங்களில் ஒன்றாக பலராலும் விரும்பப்படுவது தேநீர். அதிக அளவிலான நுகர்வோரைக் கொண்டுள்ளது தேநீர். ஆனால், அதற்குத் தேவையான தேயிலை விவசாயத்தில் இந்தியா மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. விவசாயப் பணிக்கு ஆட்கள் கிடைக்காததால் தேவை இருந்தும் தேயிலை விவசாயத்தை கைவிட்டு விட்டு ரிசார்ட்டுகளை கட்டும் நிலையில் உள்ளதாக தேயிலை தோட்ட உரிமையாளர்கள் வருந்துகின்றனர்.

வளர்ந்த நாடுகளான சீனா, ஜப்பான் போன்றவை தேயிலை தோட்டங்களில் ரோபோக்களை பயன்படுத்துகின்றன. ஆனாலும் எல்லா நிலப்பரப்பிலும் செயல்படும் அத்தகைய ரோபோக்கள் இன்னும் நம் நாட்டில் பயன்பாட்டிற்கு வரவில்லை, வெளிநாட்டில் இருந்து தானியங்கிகளை வாங்குவதைவிட உள்நாட்டிலேயே அதனை உருவாக்கலாம் என்ற முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள்.

மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையில் நிபுணத்துவம் மற்றும் ரோபோடிக்ஸில் முதுகலை பட்டம் பெற்றவருமான அருள்மணி, HnS டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரான சுந்தர்ராஜன் மற்றும் ஐடி துறையில் 16 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரான ராம் ஆகிய மூன்று பேர் மற்றும் இவர்களின் குழுவினரின் தொடர் முயற்சியால் முழுக்க முழுக்க தமிழகத்திலேயே தயாரிக்கப்பட்ட முதல் சிறிய ரக டீ ரோவர் உருவாக்கப்பட்டுள்ளது

Get connected to Surinovays-connect
சூரிநோவா

அருள்மணி, சிடிஓ(இடது ஓரம்), சுந்தர்ராஜன், சிஇஓ, (நடுவில் இருப்பவர்), ராம், சிஓஓ(வலது ஓரம்)

விவசாயத்தில் ரோபாடிக்ஸ்

அக்ரி-ரோபாடிக்ஸ் அதாவது, விவசாயத்தில் ரோபடிக்ஸ் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இயங்குகிறது ’சூரிநோவா’ (Surinova) நிறுவனம். இதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) அருள்மணியும், தலைமை இயக்க அதிகாரியாக (COO) ராமும் செயல்பட்டு வருகின்றனர். விவசாயத்துறைக்கு பயன்படுத்தும் வகையிலான தானியங்கிகளை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அடிப்படையில் உருவாக்கித் தருவதையே பிரதான பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது இந்நிறுவனம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் இயந்திரமயமாக்கலுக்கு மாறி வரும் இந்த நேரத்தில் 'சூரிநோவா' தானியங்கியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள பெரும்பாலான விவசாயப் பயன்பாட்டு இயந்திரங்கள் வாகனங்களாகவும் மனிதர்களால் இயக்கப்படுபவையாகவும் உள்ளன. ஆனால், சூரிநோவா உருவாக்கும் இயந்திரங்கள் ரிமோட் மூலம் இயக்கப்படுகிறது என்கிறார் அந்நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர்ராஜன்.

சூரிநோவா

ரோபோ பரிசோதனையில் சூரிநோவா குழுவினர்

“2019ல் சூரிநோவா தனது ஆராய்ச்சிப் பணியை தொடங்கியது, 2022 ஆம் ஆண்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாறியது, ஓராண்டுக்குப் பின்னரே நான் இந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இணைந்தேன். மேற்கத்திய நாடுகளில் விவசாய நிலங்கள் ஆயிரம், 500 ஏக்கர் என்று அதிக அளவில் இருப்பதனால் அதற்கேற்ப இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நம் நாட்டில் விவசாயிகள் 2 முதல் 10 ஏக்கர் என்கிற அளவிலேயே விவசாய நிலங்களை வைத்திருக்கின்றனர். அதனால் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தும் இயந்திரங்களை நம்முடைய விவசாயத்திற்கு பயன்படுத்துவது பொருத்தம் இல்லாததாக இருக்கும்.

Get connected to Surinovays-connect
”கல்வி மற்றும் வளர்ச்சியின் காரணமாக இன்றைய தலைமுறை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டதால் விவசாயப் பணிக்கு போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை. எனவே, விவசாயப் பணிக்கு உதவும் வகையில் ரோபோக்களை உருவாக்கலாம் என்கிற மையப்புள்ளியில் தொடங்கி உலகிலேயே முதன்முறையாக சிறிய ரக தேயிலை பறிக்கும் T-Rover என்கிற ரோபோவை உருவாக்கியுள்ளோம்,” என்றார்.
டி ரோவர்

தேயிலை அறுவடையில் t-rover

ரோவர் எப்படி செயல்படுகிறது?

மூன்று வருட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குப் பிறகு கடந்த ஆண்டு தேயிலை அறுவடை செய்யும் T-Roverஐ சந்தையில் அறிமுகம் செய்துள்ளோம். கணினி தொழில்நுட்பம், மேப்பிங், இமேஜ் கேப்சரிங், செயற்கை நுண்ணறிவு போன்ற பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த ரோவர் உருவாக்கப்பட்டுள்ளது.

தேயிலை பறிக்கும் ரோபோவுக்கு உகந்த பாதையைப் பெற பாதை திட்டமிடுவதே மிகவும் முக்கியமானது. பெரும்பாலும தேயிலை தோட்டங்கள் மேடு பள்ளமான மலைகளிலும், சரிவான நிலப்பரப்பாகவும் இருக்கும். இந்த ரோவரில் இருக்கும் சிறப்பம்சமே தேயிலை தோட்டங்கள் இருக்கும் நிலப்பரப்பிற்கு ஏற்ப தானியங்கி இயந்திரம் பாதையை திட்டமிட்டு அதற்கேற்ப செயல்படும். அதே போல, 360 டிகிரி சுழன்று செயல்படும்.

“சூரிநோவா உருவாக்கும் இயந்திரங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான படிம எரிபொருள் பயன்படுத்துவதை உறுதிபடுத்துகிறோம். எங்களுடைய இயந்திரங்கள் பேட்டரிகள் கொண்டு இயக்கப்படுகின்றன,” என்றார்.
rover

முழுக்க முழுக்க தமிழகத்திலேயே உருவாக்கப்பட்டு, விரும்பி அணுகும் தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு T-rover வழங்கப்படுகிறது.

“25 பேர் செய்யக்கூடிய வேலையை இந்த ரோவர் ஒரே நேரத்தில் செய்து முடிக்கும். வெயில், மழை என்று எல்லா வானிலையிலும் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும் பேட்டரியில் இருக்கும் சக்தியை கொண்டு ரோவரை 6 முதல் 8 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.”

ஜாய் ஸ்டிக் வைத்து ஆபரேட் செய்யும் விதத்தில் தற்போது ரோவர் இயக்கப்படுகிறது, இந்த ஜாய் ஸ்டிக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற பயிற்சியையும் நாங்களே கொடுக்கிறோம். தேயிலை பறிக்கும் தொழிலாளி வீட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த பயிற்சியை கொடுத்து அவர்களை ரோவர் ஆபரேட்டர்களாக மாற்றி ஒரு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் சமூக மாற்றத்தையும் இந்த ரோவர் கொண்டு வருகிறது.

அதிகரிக்கும் தேவை

தமிழகத்தில் தேயிலை தோட்டங்கள் அதிகம் உள்ள வால்பாறையில் 2 ரோவர்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. 25 ரோவர்கள் அனுமதி வாங்கப்பட்டு பயன்படுத்த தயார் நிலையில் உள்ளது, இது மட்டுமின்றி அயல்நாடுகளான இலங்கை, கென்யா, டான்சானியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் T-Rover-ஐ வாங்க சுமார் 200க்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளோம்.

தொடக்கத்தில் எங்கள் மூன்று பேரின் சொந்த முதலீட்டைக் கொண்டே ஆரம்பகட்ட ஆராய்ச்சிக்கான செலவுகளை செய்தோம். TNIFMC எனப்படும் தமிழ்நாடு அரசின் நிதித்துறை மற்றும் தொழில்துறை இணைந்து வளர்ந்து வரும் தொழில்துறையினருக்கு தொடக்க நிதி வழங்குகிறது.

“சூரிநோவா வளர்ந்து வரும் தொழில்துறை பிரிவில் ரூ.5 கோடி நிதியாக பெற்றதைக் கொண்டே இதுவரை செயல்பட்டு வந்தது. தற்போது இருக்கும் நிதியை வைத்து ரோவர் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய முடியாது என்பதால் அடுத்தகட்டமாக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் இறங்க உள்ளோம்,” என்கிறார் சுந்தர்ராஜன்.
சூரிநோவா குழுவினர்

ஒரு ரோவரின் விலை ரூ.30 லட்சம், ஆனால் 25 ஆட்களின் வேலையை ஒரே நேரத்தில் செய்வதால். இந்த தானியங்கியில் செய்யும் முதலீட்டை 240 நாட்களிலேயே பெற்றுவிடலாம், எஞ்சிய நாட்களுக்கு கூலி ஆட்களின் சம்பளத்தை உரிமையாளர்களுக்கு இது மிச்சப்படுத்திக் கொடுக்கும்.

வால்பாறை, மூணாறு மற்றும் அசாமில் 6 இடங்களில் ரோவர் பராமரிப்பு மையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக அடுத்த கட்ட நிதிதிரட்டலில் இறங்கியுள்ளதாக கூறினார். 6•6 இடமும் ரோவர் நிறுத்தி சார்ஜ் செய்வதற்கு தேவையான வசதியும் இருந்தால் போதும் வேறு எந்த பராமரிப்பும் ரோவருக்கு தேவையில்லை, என்கிறார்.

அடுத்தகட்ட முன்னேற்றம்

ரோவர் தற்போது தேயிலையை மட்டுமே பறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அடுத்ததாக ரோவரே களையை பிடுங்குவது, மருந்து தெளிப்பது போன்ற பணிகளை செய்யும் விதத்தில் வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக சுந்தரராஜன் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, தேயிலை பறிக்கும் ரோவரைத் தொடர்ந்து கரும்பு தோட்டத்தில் பயன்படுத்தும் விதத்தில் ஒரு தானியங்கியை உருவாக்கும் எதிர்கால திட்டமாக வைத்துள்ளனர் இவர்கள்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மட்டுமே இவர்களிடம் சுமார் 40 பேர் பணியாற்றும் நிலையில், இயந்திரத்தை பொருத்துவதற்கு தனியாக ஒரு குழு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

surinova team
”விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும். நாம் உயிர்வாழ உணவு தேவை, ஆட்கள் இல்லாததால் விவசாயத்தை விட்டு வெளியேற முடியாது. விவசாயப் பணியில் ரோபோக்களை பயன்படுத்துவது நம் வளத்தை குறைக்காது, சுற்றுச்சூழலுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. நம்பகமான, நிலையான, பராமரிக்க எளிதான மற்றும் குறைந்த செலவில் பயன்படுத்தக்கூடிய இந்த ரோவர் தேயிலை விவசாயத்தை பாதுகாக்கும் ஒரு கருவியாக நிச்சயமாக செயல்படும்,” என்று கூறுகிறார் சுந்தர்ராஜன்.

Get connected to Surinovays-connect