'நம்ம கபே' - இது புதிய தொழில் மட்டுமல்ல; புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கப் போகும் ப்ராண்ட்!
தமிழகம் முழுவதும் 1000 கடைகள்; 10ஆயிரம் வேலை வாய்ப்பை உருவாக்க ‘ப்ரான்சைஸ்’ முறையில் அறிமுகம் ஆகியிருக்கும் டீ மற்றும் காபி ப்ராண்ட்.
கொரோனா என்னும் வார்த்தை இல்லாமல் எந்த கட்டுரையும் இருக்காது. அந்த அளவுக்கு கொரோனாவின் தாக்கம் பல மடங்குக்கு அனைத்து துறைகளிலும் பரவி இருக்கிறது, குறிப்பாக தொழில்துறையிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் நேச்சுரல்ஸ் குழுமம் இந்த லாக்டவுன் சமயத்தில் புதிய தொழிலில் களம் இறங்கி இருக்கிறது. 'நம்ம கபே’ என்னும் புதிய ரீடெய்ல் நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறது.
இதுவரை முறைப்படுத்தப்படாத தொழில்களை முறைப்படுத்தும் போது அந்தத் தொழிலை பெருமளவுக்கு விரிவுப்படுத்த முடியும். அப்படி ஒரு தொழில்தான் டீ கடைகள். இதனை முறைப்படுத்தி பிராண்டாக்கும் முயற்சியில் நேச்சுரல் குழுமத்தினர் ஈடுபட்டிருக்கின்றனர். சலூன் துறையும் முன்பு அப்படிதான் இருந்தது. அதை பிராண்டாக மாற்றி பெரும் வெற்றியை பெற்றது போல், இப்போது டீ கடைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கின்றனர்.
”கொரோனா காலத்தில் அதிகம் பாதிப்படைந்ததும் அதில் இருந்து மீண்டு வருவதற்கு அதிக காலம் எடுத்துக்கொண்ட சில துறைகளில் சலூன் துறையும் ஒன்று. ஆனால் அத்தியாவசியத் துறைகள் வேகமாக மீண்டெழுந்தன. அதனால் அதுசார்ந்து புதிய தொழில் இருக்க வேண்டும் அதனை பிரான்ஸைசி மூலம் விரிவுபடுத்த ஏதுவாக இருக்க வேண்டும் என யோசித்தோம். அதன் அடிப்படையில் உருவானதுதான் நம்ம கபே,” என முன்கதையை கூறினார் நேச்சுரல் சி.கே.குமாரவேல்.
மேலும் பேசிய குமாரவேல்,
நம்ம கபே மூலம் 10 ஆயிரம் புதிய தொழில்முனைவோர்கள், 1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே தனது கனவு என்றும் தெரிவித்தார்.
என்னுடன் பணியாற்றிய சுந்தரும், என் மகள் தமயந்தியும் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர்களாக இருக்கிறார்கள். சுந்தர் ஆரம்பத்தில் என்னிடம் பணியாற்றியார். அதன் பிறகு நேச்சுரலஸின் சில பிரான்ஸைசி எடுத்து வெற்றிகரமாக நடத்தினார். நானும் அவரும் தொழில் குறித்து அவ்வப்போது உரையாடுவோம்.

இதில் சமீபத்தில் படித்து முடித்த என் மகளும் கலந்துகொண்டார் இறுதியாக, ‘நம்ம கபே’ ’Namma Cafe' என்னும் புதிய பிராண்ட் பிறந்திருக்கிறது என்றார் குமரவேல், இனி இணை நிறுவனர்களுடன் பேசிக்கொள்ளுங்கள் என விடைப்பெற்றார்.
’நம்ம கபே’ எந்த மாதிரியில் செயல்படும்?
டீ அல்லது காபி கடைகள் பெருமளவுக்கு இருக்கின்றன. ஆனால், ‘பாட்டம் ஆப் த பிரமிட்’ மக்களுக்கான கடை என்பதால் இன்னும் முறைப்படுத்தப்படாமலே இருக்கிறது. இந்தப் பிரிவில் முறைப்படுத்தப்பட்ட கடைகள் இருந்தாலும் அவைகளில் விலை என்பது மிக அதிகமாக இருக்கிறது.
”10 ரூபாய்க்கு டீ அல்லது காபி கிடைக்கும் கடைகள் என்பது சாதாரண கடைகளே. அதனால் நம்ம கபேவில் 10 ரூபாய் என்பது அடிப்படை விலையாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தோம்,” என்றார் சுந்தர்.
அதேபோல உணவு சம்பந்தப்பட்ட கடைகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் பிரத்யேக ஆட்கள் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு குறிப்பிட்ட டீ மாஸ்டர் இருந்தால்தான் வாடிக்கையாளர்கள் குடிப்பார்கள். Skilled பணியாளர்கள் தேவைப்படுவார்கள். ஆனால் Non Skilled பணியாளர்கள் மூலமே இந்தக் கடை நடத்தப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். அப்போதுதான் பிரான்ஸைசி முறையில் விரிவுப்படுத்த முடியும். இதற்கு ஏற்ற வகையில் நாங்கள் புராடக்ட்களை உருவாக்கினோம்.
அதேபோல பிரான்ஸைசி கட்டணத்தையும் குறைவாகாவே வைத்திருந்தோம், என்ற அவர்,
“ரூ.4.50 லட்சம் முதல் 6 லட்ச ரூபாய் வரை பிரான்ஸைஸி கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கிறோம். தற்போதைய சூழலில் சுமார் ஐந்து லட்சம் என்பது பெரிய தொகை கிடையாது. தொழில் தொடங்க வேண்டும் என்னும் உறுதியில் இருப்பவர்களுக்கு இந்தத் தொகை எளிதாகக் கிடைத்துவிடும். மேலும் இந்த தொகையை அதிகபட்சம் 9 மாதங்களில் எடுத்துவிடுவதற்காக வாய்ப்பு இருக்கிறது,” என்றார் சுந்தர்.
சோதனை அடிப்படையில் 2 கடைகள் சொந்தமாகத் தொடங்கி இருக்கிறோம். இனி தொடங்கப்படும் கடைகள் அனைத்தும் பிரான்ஸைசி முறையிலே தொடங்க திட்டமிட்டிருக்கிறோம்.
சென்னை மற்றும் கோவையில் பிரான்ஸைசி கொடுத்திருக்கிறோம். பல நகரங்களில் இருந்தும் இது தொடர்பான விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த ஆண்டு 1,000 பிரான்ஸைசி வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம் எனக் கூறினார்கள்.
1,000 பிரான்ஸைசி என்பது சாத்தியமில்லாத இலக்கு இல்லையா என கேட்டதற்கு,
தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 5,000 பிரான்ஸிசிக்கான தேவை இருக்கிறது. இந்தப் பிரிவில் இருக்கும் பெரிய நிறுவனங்களை எடுத்துக்கொண்டால் அவர்களால் மாநகராட்சிக்கு கீழே செல்ல முடியாது. ஆனால் நாங்கள் பேரூராட்சிகளில் கூட எங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் இந்த இலக்கை என்பது நிச்சயம் அடையக் கூடியதே.
தவிர நேச்சுரலில் 700-க்கும் மேற்பட்ட பிரான்ஸைசிகள் உள்ளன. இவர்களிடம் கொண்டு சென்றாலே நாங்கள் இந்த இலக்கை அடைய முடியும். ஆனால் நேச்சுரல்ஸ் பிரான்ஸைசி எடுத்திருப்பவர்களுக்கு இதனை கொடுப்பதில்லை என்ன முடிவெடுத்திருக்கிறோம்.

Namma Cafe நிறுவனர்கள்: தமயந்தி குமாரவேல், சிகே குமாரவேல் மற்றும் சுந்தர்
இதற்கு இரு காரணங்கள்.
“நேச்சுரல்ஸ் என்பது இதைவிட அதிக முதலீடு என்பதால் பெரிய முதலீட்டுக்கு அதிக கவனம் கொடுப்பார்கள். இரண்டாவது காரணம் நாங்கள் வளர்ச்சி அடைவதைத் தாண்டி புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பது முக்கியம். அதனால் அதில் கவனமாக இருக்கிறோம். 5 லட்ச ரூபாயில் எதாவது செய்ய முடியுமா என உழைப்பதற்கு தயாராக இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து பிரான்ஸைசி வழங்குகிறோம்,” என நிறுவனர்கள் தெரிவித்தார்கள்.
சுமார் ஐந்து லட்சத்தை உங்களிடம் கொடுப்பதற்கு பதில் அந்த முதலீட்டை நானே செய்தால் என பிரான்ஸைசி எடுப்பவர்கள் யோசிக்க மாட்டார்களா?
இந்த யோசனை தவறு என சொல்லமாட்டோம். நீங்களாகவே தொடங்கும்போது Skilled பணியாளர்கள் தேவைப்படும். டீ, ஸ்நாக்ஸ் என அனைத்துக்கும் பிரத்யே பணியாளர்கள் தேவைப்படும். ஏற்கெனவே தெரிவித்ததுபோல non skilled பணியாளர்களை வைத்து எளிதாக கடை நடத்த முடியும். டீ மற்றும் காபி பவுடர்களை நாங்கள் வழங்கிவிடுவோம். அதனால் சுவை குறித்த சிக்கல் இருக்காது. ஸ்நாக்ஸ்களுக்கும் பிரத்யேக வெண்டார்களை இணைத்துவிடுவோம். அவர்கள் தேவைக்கு ஏற்ப தினமும் சப்ளை செய்துவிடுவார்கள். அதனால் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் வாடிக்கையாளர்களைக் கையாளுவதில் கவனம் செலுத்தினாலே போதுமானது.
தவிர, நாங்கள் ஒரு பிராண்ட் உருவாக்கி இருக்கிறோம். தற்போது ஒவ்வொரு தொழிலும் கொஞ்சம் கொஞ்சமாக பிராண்ட்களை நோக்கி செல்கிறது. அதனால் தனியாக தொடங்குவதை விட பிராண்டாக இருப்பதே நல்லது. அதனால் பிரான்ஸைசி எடுப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினையாக இருக்காது என நிறுவனர்கள் தெரிவித்தாரக்ள்.
’நம்ம கபே’ என்னும் சைக்கிள்களிலும் பார்க்க முடிகிறதே என்னும் கேள்விக்கு வித்தியாசமான பதில் நமக்குக் கிடைத்தது. சைக்கிள்களில் டீ விற்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதனையும் நம்ம கபே என்னும் பிராண்டுக்குள் கொண்டுவந்தால் நன்றாக இருக்குமே என்பதற்காக கொண்டுவந்தோம்.

ஒவ்வொரு பிரான்ஸைசியும் ஆறு சிறு வியாபரிகளுக்கு வேலை கொடுக்க முடியும், அதே சமயம் பிராண்டும் விரிவடையும். நாங்களே சைக்கிள் கொடுத்துவிடுகிறோம். மாதம் 6,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிறோம். தவிர விற்பனையில் 30 சதவீதம் கமிஷனும் வழங்குகிறோம். மாதம் கணிசமான தொகையை சம்பாதிக்க முடியும்.
ஆனால் இதுவரை இந்த பிரிவில் இருவர் மட்டுமே எங்களிடம் இணைந்திருக்கிறார்கள். மேலும் புதிய நபர்களை உருவாக்க முடியும் என நம்புகிறோம் என நிறுவனர்கள் தெரிவித்தனர்.
’நம்ம கபே' புதிய தொழில் அல்ல, ஆனால் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் தொழில்.