'க்ளீனராக பணிபுரிந்த கட்டிடங்களின் உரிமையாளர் ஆனார்’ - தந்தையின் கடின வாழ்க்கையை பகிர்ந்த சுனில் ஷெட்டி!
மனம் திறந்த பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி!
பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர். இப்போது நடிகர்கள் மோகன்லால், பிரபு, அர்ஜுன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் ‘மரக்கார்: அரபிக்கடலின் சிங்கம்' படத்தின் மூலமாகவும் தென்னிந்திய சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார். இவர் டான்ஸ் ரியாலிட்டி ஷோ ஒன்றில் தனது தந்தை சந்தித்த வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றி முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில்,
“என்னிடம் யார் என் ஹீரோ என்று கேட்டால், நான் எப்போதும் என் தந்தை என்றுதான் சொல்வேன். என் தந்தை மாதிரியான மனிதர் வாழ்ந்த நம்பமுடியாத வாழ்க்கைக்காக நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். தனது 9ம் வயதில் மும்பைக்கு வந்து துப்புரவுத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர் எனது தந்தை.”
அவர் பிழைப்புக்காக என்ன வேலை செய்தாலும் அதைப் பற்றி ஒருபோது அவர் வெட்கப்பட்டதில்லை.
“தனது கடின உழைப்பால் தான் கிளீனராக பணிபுரிந்த அதே கட்டிடங்களின் மேலாளராக உயர்ந்து பணியாற்றினார். இறுதியில் அந்த கட்டிடங்களை வாங்கும் நிலைக்கு உயர்ந்தார். அதுதான் அவரின் தன்மை. நீங்கள் செய்வதைப் பற்றி பெருமைப்படவும், அதை முழு மனதுடன் செய்யவும் எனக்குக் கற்றுக் கொடுத்தார் எனது தந்தை வீரப்பா ஷெட்டி," என்று நெகிழ்ந்து பேசினார்.
இதே நிகழ்ச்சியில் சுனில் ஷெட்டியுடன் பணிபுரியும் பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரும் வீரப்பா ஷெட்டி உடனான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
“நாங்கள் ஒன்றாக வேலை செய்யும் போது சுனிலின் தந்தையை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எங்கள் படப்பிடிப்பிற்கு வந்து தனது மகன் வேலை செய்வதை பெருமையுடன் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் உண்மையிலேயே மிகவும் அழகான மனிதர்," என்றுள்ளார்.
இந்தப் பேச்சுக்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
தகவல் உதவி: பின்க்வில்லா | தமிழில்: மலையரசு