ஏவிடி இடமிருந்து 26 கோடி ரூபாய் நிதி திரட்டியது Chaikings!
தமிழ்நாட்டின் முன்னணி ’டீ’ ரீடைல் விற்பனை நிறுவனமான சாய் கிங்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய பேக்கேஜ் டீ நிறுவனங்களில் ஒன்றான ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. (AVT) நிறுவனத்திடமிருந்து ஏ-சுற்று நிதியாக 3 மில்லியன் டாலர் முதலீட்டை வெற்றிகரமாக திரட்டியுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னணி ’டீ’ ரீடைல் விற்பனை நிறுவனமான 'சாய் கிங்ஸ்', இந்தியாவின் மிகப்பெரிய பேக்கேஜ் டீ நிறுவனங்களில் ஒன்றான ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. (AVT) நிறுவனத்திடமிருந்து ஏ-சுற்று நிதியாக 3 மில்லியன் டாலர் (ரூ.26 கோடி) முதலீட்டை வெற்றிகரமாக திரட்டியுள்ளது.
இது, நிறுவன பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று சாய் கிங்ஸ் தெரிவித்துள்ளது. அதோடு, வரும் காலங்களில் நிறுவனத்தை விரிவுபடுத்தி இந்தியாவில் டீ ரீடைல் விற்பனனயில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த முதலீடு, நிறுவனத் தயாரிப்புகளை மேம்படுத்துதல், விநியோகத் திறனை வலுப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் வாடிக்கையாளர் சேவை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ChaiKings நிறுவனர்கள்
சாய் கிங்க்ஸ் நிறுவனம், 2025 நிதியாண்டில் 48 கோடி ரூபாய் வருவாயுடன் நிறைவு செய்து, நேர்மறையான EBITDA-வுடன் வலுவான வருவாய் வளர்ச்சியை பதிவு செய்யவுள்ளது. அதோடு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலையான மற்றும் சிறந்த வளர்ச்சியை உறுதி செய்ய அதன் வருவாயை இரட்டிப்பாக்கும் திட்டங்களை கொண்டுள்ளது.
"இந்தப் பயணத்தில் எங்கள் முதலீட்டாளராகவும் பார்ட்னராகவும் ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. நிறுவனத்தை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். தேயிலைத் துறையில் ஆழமான நிபுணத்துவம், இந்தியா முழுவதும் மலிவு விலையில் பிரீமியம் டீ வழங்கும் எங்களின் பார்வையுடன் ஏவிடி நிறுவனமும் பெரிதாக ஒத்துப்பபாகிறது," என்று சாய் கிங்ஸ் இனண நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. ஜஹபர் சாதிக் கூறினார்.
"இந்த முதலீடானது எங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தவும், புதிய கடைகள் திறக்கவும், புதுமையான தயாரிப்புகள் உருவாக்கவும், எங்கள் தனித்துவமான டீ அனுபவத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்லவும் உதவும்," என்று கூறினார்.
“நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் உயர் தர மற்றும் மலிவு விலையில் டீயைக் கொண்டு செல்வதே எங்களின் நோக்கம். அதற்கு ஏற்றார் போல் ஏவிடியின் ஆதரவுடன், எங்கள் வாடிக்கையாளர்கள் விரும்பும் உயர்ந்த தரம் மற்றும் சேவையை பராமரிக்கும் அதே வேளையில், இன்னும் வேகமாக நிறுவனத்தை விரிவுப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்," என்று நிறுவன சி.ஓ.ஓ.பாலாஜி சடகோபன் கூறினார்.
இந்த முதலீட்டின் ஒரு பகுதியாக, சாய் கிங்ஸின் ஆரம்பகால ஆதரவாளர்களான “தி சென்னை ஏஞ்சல்ஸ்” (TCA) கணிசமான வருமானத்துடன் பகுதியளவுக்கு வெளியேறுகிறார்கள்.

தேயிலைத் துறையில் AVT பிரீமியம் மற்றும் AVT கோல்ட் கப் போன்ற பிராண்டுகள் மிகவும் பிரபலமானது.
“சாய் கிங்ஸ் பிரபலமான பிராண்டாகவும், நம்பகமான வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. அதன் அபார வளர்ச்சியை காண முடிகிறது. மேலும், அவர்களின் பயணத்தில் ஒரு பகுதியாக நாங்கள் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று AVT நிர்வாகத் தலைவர் அஜித் தாமஸ் கூறினார்.
சாய் கிங்ஸ் 2016ல் துவங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்தியாவின் தேயிலை ரீடைல் விற்பனை துறையில் ஒரு முக்கிய நிறுவனமாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது. தற்போது சென்னை, ஐதராபாத் மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் 57 கடைகளுடன் வெற்றிகரமாக இயக்கி வருகிறது.
1935 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஏ.வி. தாமஸ் அண்ட் கோ இந்தியாவின் மிகப்பெரிய பேக்கேஜ்டு தேநீர் உற்பத்தியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வலுவான விற்பனை அமைப்பை கொண்டுள்ளது.
Edited by Induja Raghunathan