ஏஐ துணையோடு ஸ்டார்ட் அப்’கள் சரியான ஊழியர்களை நியமனம் செய்ய உதவும் சென்னை YourTribe!
2021ல் ஷ்ரவண் குமார் மற்றும் வருண் கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து தீபக் சுப்பிரமணியன் துவக்கிய யுவர்டிரைப், ஏஐ துணையோடு ஸ்டார்ட் அப்’களுக்கு திறமையான ஊழியர்களை நியமிக்க உதவுகிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பொதுவாக அதிக நிச்சயமற்றத்தன்மை மற்றும் போதிய வளமில்லாத நிலையில் செயல்படுகின்றன. இது பணிக்கு ஊழியர்களை நியமிப்பதை சவாலாக்குகிறது. நிறுவனர்களால் சரியான ஊழியர்களை ஈர்க்க முடிவதில்லை, வேலைவாய்ப்பு இணையதளங்களும் சரியாக கை கொடுப்பதில்லை மற்றும் வழக்கமான பணி நியமன நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.
வேலைக்கு நியமிப்பது மட்டும் சவால் இல்லை, சரியான ஊழியர்களை சரியான நேரத்தில், செலவு திறன்மிக்க வகையில் நியமிப்பது உண்மையில் சவாலானது.
நாஸ்காம் அமைப்பின் அண்மை சர்வே, 70 சதவீத இந்திய ஸ்டார்ட் அப்கள், திறமையான ஊழியர்களை நியமிப்பது மற்றும் தக்கவைப்பதை வளர்ச்சிக்கான மிகப்பெரிய சவாலாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஷரவண் குமார் மற்றும் வருண் கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து தீபக் சுப்பிரமணியன் 2021ல், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தரமான ஊழியர்களை வேலைக்கு நியமிக்க வழி செய்யும் ’யுவர்டிரைப்’ (YourTribe) நிறுவனத்தை துவக்கினார்.
இந்நிறுவனம் பிராண்டிங் மற்றும் ஏஐ இணைந்து சரியான திறமையாளர்களை கண்டறிய நிறுவனம் வழி செய்கிறது.
“வழக்கமான ஏஜென்சியின் அனுபவத்தை, வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட சந்தா முறையில் வழங்குகிறோம். இது வேலைக்கு ஊழியர்களை நியமித்து, ஸ்டார்ட் அப்கள் வளர் உதவுகிறது,” என்கிறார் சுப்பிரமணியன்.
அண்மையில், யுவர்டிரைப், ஸ்டார்ட் அப் சிங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்று, குழுவில் இடம் பெற்றிருந்த, மேக்னிபிக் கேபிடல் டிரஸ்ட், ஜெயின் இண்டர்நேஷனல் டிரேட் ஆர்கனிசேஷன், மெடிஸ் பேமிலி ஆபிஸ், யூஏஇ தமிழ் ஏஞ்சல்ஸ் மற்றும் நேட்டிவ் லீட் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களிடம் இருந்தும் ரூ.4 கோடி நிதியை பெற்றது.
தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சியில் வெளியாகும் முதல் ஸ்டார்ட் அப் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இது அமைகிறது.
“நாங்கள் தீர்வு காண நினைக்கும் பிரச்சனைக்கான மற்றும் பணி நியமன பரப்பில் நாங்கள் ஏற்படுத்தி வரும் தாக்கத்திற்கான அங்கீகாரமாக இது அமைகிறது,“ என சுப்பிரணியன் கூறுகிறார்.
நிறுவனர் பயணம்
சுப்பிரமணியன் 2004 முதல் பணி நியமன பரப்பில் தொழில்முனைவோராக இருக்கிறார். பெருந்தொற்று காலத்தில், வழக்கமான ஏஜென்சி செயல்படுவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்தார். தொழில்நுட்பம் சார்ந்த சேவையை உருவாக்கி மாறும் சூழலுக்கு ஏற்ப வளர்த்தெடுக்கும் தன்மை கொண்ட சேவை உருவாக்க இது ஊக்கமாக அமைந்தது.
“ஸ்டார்ட் அப்’களில் கவனம் செலுத்த தீர்மானித்தோம். ஒவ்வொரு ஸ்டார்ட் அப்பின் கதையும் அதன் நிறுவனர் பார்வையில் சொல்லப்பட வேண்டும், எனும் புரிதலின் அடிப்படையில் இது அமைந்தது. இதன் காரணமாக, நிறுவன பிராண்டிங் சார்ந்த ஊழியர் நியமன சந்தையை உருவாக்கினோம். ஸ்டார்ட் அப்’கள் தங்கள் தனித்துவமான கலாச்சாராம் மற்றும் நோக்கத்தை வெளிப்படுத்தி திறமையான ஊழியர்களை ஈர்ப்பதற்கான மேடை,” என்று அவர் கூறுகிறார்.
எனக்கு தொழில்நுட்ப பின்புலம் இல்லாததால், எனக்கு வலுவான தொழில்நுட்ப இணை நிறுவனர்கள் தேவைப்பட்டனர். என்னுடைய சிறு வயது நண்பர் ஷரவணை நாடினேன். அவர் அமெரிக்காவில் காக்னிசண்டில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் ஸ்டார்ட் அப் துறை வாய்ப்புகளில் ஆர்வம் கொண்டிருந்தார். 30 ஆண்டு நட்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை காரணமாக அவர் உடனே இணை நிறுவனராக சி.இ.ஓவாக இணைய முன்வந்தார், என்கிறார்.
சர்வதேச பிராண்டிங் மற்றும் பயனர் அனுபவம் கொண்ட வடிவமைப்பு தலைவரை தேடிக்கொண்டிருந்த போது, அமெரிக்க டிசைன் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த வருணை சந்தித்தார்.
“இருவரும் உடனே நெருக்கமானோம். எங்கள் நோக்கத்துடனும் அவர் பொருந்தினார். பொருளின் டிசைன் மற்றும் பிராண்டிங்கை உருவாக்க இணை நிறுவனராக இணைந்தார்.“
நியமனத்திற்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு பதில், இந்த ஸ்டார்ட் அப் சந்தா சார்ந்த முறையை அறிமுகம் செய்தது. நிறுவனங்கள் குறிப்பிட்ட கட்டணத்தில் அதிக தரம் வாய்ந்த ஊழியர்களை அணுகலாம்.

சேவை
ஸ்டார்ட் அப்'களுக்கு ஊழியர்களை நியமிக்க உதவும் பிரத்யேக மேடையாக யுவர்டிரைப் அமைகிறது. வழக்கமான வேலைவாய்ப்பு தளங்கள் போல அல்லாமல், சிறந்த திறமையாளர்களை கண்டறிந்து, திறன்கள், தொழில் இலக்கு மற்றும் கலாச்சார பொருத்தம் ஆகிய அம்சங்கள் அடிப்படையில் பொருத்தமான வேலைக்கு பரிந்துரைக்கிறது.
“யுவர்டிரைப் விண்ணப்பதாரர்களை வேலையுடன் இணைப்பதோடு, ஸ்டார்ட் அப்'கள் தாக்கம் நிறைந்த விதத்தில் தங்கள் கதைகளை சொல்ல உதவுகிறோம். வாய்ப்புகளை, தொழில் வாழ்க்கைக்கான அழுத்தமான பாதையாக மாற்ற வழி செய்து, ஸ்டார்ட் அப்கள் திறமையாளர்களை கவரும் விதத்தை மாற்றி அமைக்கிறோம்,” என்கிறார் சுப்பிரமணியன்.
மேலும், நியமனம் ஒரு சேவை எனும் (RaaS) மாடல் மூலம் நிறுவனம், வழக்கமான நியமன நிறுவனங்களின் அதிக கட்டணம் இல்லாமல், தேவைக்கேற்ற தீர்வை அளிக்கிறது.
“நியமனத்திற்கு ஏற்ப, ஆண்டு சம்பளத்தில் 8.33%–12% கமிஷன் வசூலிக்காமல், வளைந்து கொடுக்கும் முறையில் சிறந்த திறமையாளர்களை நியமனம் செய்ய உதவுகிறோம்,“ என விளக்கம் அளிக்கிறார்.
இது வரை நிறுவனம் 75 வெவ்வேறு நிறுவனங்களில் 400க்கும் மேற்பட்ட நியமனங்களில் உதவியுள்ளது. அதிக கமிஷன் இல்லாததால், ஸ்டார்ட் அப்'கள் தரமான ஊழியர்கள் நியமனத்தில் 50 சதவீதம் மிச்சம் செய்ய யுவர்டிரைப் வழி செய்கிறது.
வர்த்தக மாதிரி
ஸ்டார்ட் அப்களுக்கு என வடிவமைக்கப்பட்ட நியமன தீர்வுகளை வழங்குகிறது. மேலும், நிறுவனங்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை முன்னிறுத்த, ஆண்டுக்கு ரூ.12,000 கட்டணத்தில் தனி இணைய பக்கத்தை வழங்குகிறது. பணி நியமனத்தை மேலும் சீராக்க விரும்புகிறவர்களுக்கு, வேலைவாய்ப்பு தளம் மற்றும் பொருத்தம் சார்ந்த சேவைகளை அளிக்கிறது. இதன்படி, ஏஐ துணை கொண்டு ரெஸ்யூம்கள் வேலைக்கு ஏற்ப பொருந்தச் செய்கிறது. இது ஆண்டுக்கு ரூ.49,900 எனும் கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
இதனிடையே, இந்த பேக்கேஜ், ஊழியர்களை கண்டறிவதோடு, வல்லுனர் மேற்பார்வை உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட ரெஸ்யூம்களுக்கான மாற்று ரெஸ்யூம் இதில் அடங்கும். இதன் அடிப்படை கட்டணம் ரூ.12,000 மற்றும் ரெஸ்யூம்களுக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.15,000.
முழுவதும் நிர்வகிக்கப்பட்ட அனுபவத்திற்கு வேலைவாய்ப்பு தளம் மற்றும் (RaaS) சேவை துவக்கம் முதல் ஒருங்கிணைந்த சேவையை வழங்குகிறது. 90 நாள் மாற்று வசதி உள்ளிட்டவற்றையும் வழங்குகிறது.
ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை சம்பளம் கொண்ட வேலைகளுக்கு இந்த சேவை பொருந்துகிறது. ரூ.4 லட்சம், ஐந்து நியமனங்களுக்கு எனும் துவக்க சலுகையும் உள்ளது. பல்வேறு பதவிகள் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு தனிப்பட்ட சேவையையும் வழங்குகிறது.
“உதாரணமாக, ரூ.10 கோடியில் 20 ஊழியர்களை நியமனம் செய்ய உள்ள நிறுவனத்திற்கு அடிப்படை கட்டணம் ரூ.50 லட்சம் வசூலிக்கிறோம். மேலும், ஊழியர் ஒருவருக்கு ரு.25,000 என வேலை விலகல் தடுப்பையும் வழங்குவதாக,“ சுப்பிரமணியன் கூறுகிறார்.
இந்த பிரிவில், வெல்பவுண்ட், ஹைரடு, திமியூஸ், இண்டாஹயர் ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன.
பெண்களுக்கு மறுவாய்ப்பு
தொழில்முறை பணியாளர்கள் குறிப்பாக, இடைவெளிக்கு பின் பணிக்கு திரும்ப விரும்பும் பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித்தருவதிலும் யுவர்டிரைப் கவனம் செலுத்துகிறது.
“எங்கள் ஊழியர்களில் 90 சதவீதம் பேர், பணி இடைவெளிக்கு பின் வெற்றிகரமாக திரும்பி வந்துள்ள பெண்கள். எங்கள் F5 திட்டம் மூலம், பணி இடைவெளி எடுத்துக்கொண்ட பெண்கள், வேலை தரும் நிறுவனங்களை தொடர்பு கொள்ள உதவுகிறோம்,“ என்கிறார் சுப்பிரமணியன்.
“அனைவரையும் உள்ளடக்கிய பணியிடத்தை உருவாக்குவது எங்கள் இலக்கு. அனுபவம், திறமை மற்றும் ஈடுபாடு தான் இதில் முக்கியம். தொழில்முறை பணியாளர்கள் பணியிடத்தில் மீண்டும் நுழைய உதவுவதில் மற்றும் நிறுவனங்கள் இந்த திறமையாளர்களை பயன்படுத்திக்கொள்வதில் உதவுவதில் பெருமை கொள்கிறோம் என்கிறார் சுப்பிரமணியன்.
சந்தை வாய்ப்புகள்
இந்தியாவின் ஒயிட்காலர் வேலை பரப்பு 2025ல் நிலையாக துவங்கியுள்ளது. ஆண்டு அடிப்படையில் 4 சதவீத உயர்வு நியமனத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த உயர்வு, நுகர்வோர் துறை, காப்பீடு மற்றும் மருந்தகத் துறையில் இருந்து வந்துள்ள தேவையினால் ஏற்பட்டதாக நவ்கரி ஜாப் இண்டக்ஸ் தெரிவிக்கிறது.
“யுவர்டிரைப் வளரும் நிலையில், நாங்கள் தொடர்ந்து புதுமையாக்கம் செய்து வருகிறோம். ஏஐ சார்ந்த நியமனம், சந்தை விரிவாக்கம், பிராண்டிங் தீர்வுகள் வலுவாக்கம் என ஈடுபடுகிறோம். ஸ்டார்ட் அப்களுக்கான வேலை நியமன மேடையாக விளங்கி, நிறுவனர்களின் பணி நியமன தேவைக்கு உதவ வேண்டும் என்பது எங்கள் நோக்கம்,“ என்று எதிர்கால திட்டம் பற்றி சுப்பிரமணியன் கூறுகிறார்.
ஆங்கிலத்தில்: திரிஷா மேதி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan