செல்போனில் மட்டுமல்ல, செடிகளிலும் 2ஜி, 3ஜி இருப்பது உங்களுக்கு தெரியுமா?
2ஜி, 3ஜி கட்டிங் முறையில் கட் செய்யும்போது செடிகளில் அதிக காய்கறிகள் விளையும் என்கின்றனர் நிபுணர்கள்.
2ஜி, 3ஜி என்றதும் உங்களுக்கு சட்டென்று என்ன ஞாபகம் வரும்? இப்படி ஒரு கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்? இது தெரியாதா? மொபைல்போன் மட்டும்தான் ஞாபகம் வரும் என்று பளிச்சென்று பதில் சொல்லிவிடுவீர்கள்தானே?
உண்மைதான்.
ஆனால், விவசாயம் சம்பந்தப்பட்ட 2ஜி, 3ஜி பற்றி தெரியுமா என்று கேட்டால் யோசிப்பீர்கள் அல்லவா?
எந்த வேலை செய்தாலும் அதன் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டால் மட்டுமே அதை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். இது விவசாயத்திற்கும் பொருந்தும். ஏக்கர் கணக்கில் நிலத்தை வைத்து விவசாயம் செய்தாலும் சரி, வீட்டு மாடியில் தோட்டம் அமைத்திருந்தாலும் சரி, நல்ல விளைச்சல் கிடைக்கவேண்டுமானால் இதுதொடர்பான நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருக்கவேண்டியது அவசியம்.
ஏற்கெனவே சொன்ன விஷயத்திற்கு வருவோம். விவசாயத்தில் 2ஜி, 3ஜி கட்டிங் என்று சொல்கிறார்கள். இந்த முறையில் கட் செய்யும்போது செடிகளில் அதிக காய்கறிகள் விளையும் என்கின்றனர் நிபுணர்கள்.
சிறிதாக இருக்கும் செடிகளில் 2ஜி, 3ஜி கட்டிங் செய்தால், விளைச்சல் நன்றாக இருக்குமா? அதை எப்படி செய்யவேண்டும்? எப்போது செய்யவேண்டும்? எங்கு செய்யவேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைப் பார்ப்போம்.
2ஜி, 3ஜி என்றால் என்ன?
ஒரு செடியின் முதல் கிளைதான் முதல் தலைமுறை, அதாவது, முதல் ஜெனரேஷன். இதுதான் 1ஜி. இதிலிருந்து முளைக்கும் அடுத்த கிளைதான் இரண்டாவது ஜெனரெஷன், அதாவது 2ஜி. அதேபோல் 2ஜி கிளைகளிலிருந்து முளைக்கும் கிளைகள் 3ஜி என்றும் இதிலிருந்து முளைப்பது 4ஜி என்றும் அழைக்கப்படுகின்றன. இதில் 2ஜி, 3ஜி கட்டிங் ஆகியவை சிறந்த பலனளிக்கும்.
2ஜி, 3ஜி கட்டிங் செய்வது எப்படி?
செடியின் கிளை 1 மீட்டர் அளவிற்கு வளர்ந்து 6-7 இலைகள் முளைக்கும்போது அதன் மேல் பகுதி கத்திரிக்கப்படும். இதனால் அந்தக் கிளை மேலும் வளராமல் அடுத்த ஜெனரேஷன் கிளை வளரத் தொடங்கும். அதேபோல் இதுவும் 1 மீட்டர் அளவிற்கு வளர்ந்ததும் கத்திரித்தால், மூன்றாவது ஜெனரேஷன் கிளைகள் வளரத் தொடங்கும்.
கத்திரிப்பதால் கிடைக்கும் பலன்கள்
முதல் ஜெனரேஷன் கிளையில் பூக்கும் பூக்கள் ஆண் பூக்கள். ஆண் பூக்கள் பழம் கொடுக்காது. பெண் பூக்களிலிருந்து மட்டுமே பழம் கிடைக்கும். இரண்டாவது ஜெனரேஷன் கிளையில் ஒரு இலையை விட்டு அடுத்த இலையின் பக்கத்தில், பெண் பூக்கள் இருப்பதைப் பார்க்கமுடியும். அதாவது, இவை பழமாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
அடுத்ததாக மூன்றாவது ஜெனரேஷன் கிளைகளைப் பார்த்தோமானால், ஒவ்வொரு இலையின் அருகிலும் பெண் பூக்கள் இருக்கும். மொத்தத்தில் செடிகளில் இதுபோல் கத்திரிப்பதால், பெண் பூக்கள் அதிகரித்து, விளைச்சலும் அதிகமாகும்.
எந்த செடியில் இப்படி கட் செய்யமுடியும்?
நிறைய கிளைகள் வளரும் செடிகளில் 3ஜி கட்டிங் செய்யலாம். உதாரணத்திற்கு வெள்ளரி, பூசணி, பாகற்காய் போன்ற கொடி வகைகளுக்கு இது பலனளிக்கும். விளைச்சலும் லாபமும் அதிகரிக்கும்.