எளிமையாக நடந்த மகன் திருமணம்: ரூ.10,000 கோடியை நன்கொடையாக அள்ளிக் கொடுத்த கௌதம் அதானி!
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான கௌதம் அதானி, தன் இளைய மகன் திருமணத்தை எளிமையாக நடத்தி விட்டு, அதன் மூலம் ரூ. 10,000 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.
பிரபலங்கள் இல்ல சுபநிகழ்ச்சிகள் என்றாலே அதில் ஆடம்பரத்திற்கு பஞ்சம் இருக்காது. அதிலும், திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம். கடந்தாண்டு நடந்த அம்பானி மகன் திருமணத்தை உலகமே வாய் திறந்து அதிசயித்துப் பார்த்தது. அந்த திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் கோடிகளில் செலவு செய்யப்பட்டது.
அம்பானி மகன் திருமணமே இப்படி என்றால், இந்தியப் பணக்காரர்களில் முதலிடத்தில் இருக்கும் அதானி மகனின் திருமணம் எப்படியெல்லாம் பிரமாண்டமாக இருக்கும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர்களது எதிர்பார்ப்புகளையெல்லாம் பொய்யாக்கி, எளிமையாக தனது இளைய மகனின் திருமணத்தை முடித்து விட்ட அதானி, அதற்குப் பதில் வேறொரு நல்ல செயலைச் செய்து மக்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார்.

எதிர்பார்ப்பு
நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் யார் என்பதில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி இடையே அடிக்கடி போட்டி இருந்து கொண்டே இருக்கிறது. அதானியின் சொத்து மதிப்பில் அடிக்கடி ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருப்பதால், நாட்டின் பணக்காரர் என்ற பெயருடன் பெரும்பாலும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருந்து வருகிறார்.
ஆனாலும், கடந்தாண்டு இந்திய பணக்காரர்கள் பற்றிய ஹுருன் இந்தியா என்ற அமைப்பின் பட்டியலில், கௌதம் அதானி 11.6 லட்சம் கோடியுடன் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெயருடன் முதலிடத்தைப் பிடித்தார்.
தற்போது இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் தற்போது 2ம் இடத்தில் இருக்கும் கௌதம் அதானியின் இளைய மகன்தான் ஜீத் அதானி. இவர் அதானி ஏர்போர்ட்ஸ் இயக்குநராக பதவி வகித்து வருகிறார். இவருக்கும், பிரபல வைர வர்த்தகர் ஜெய்மின் ஷா மகள் திவாவுக்கும் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதமே நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போதே இவர்களது திருமணம் மிகவும் ஆடம்பரமாக இருக்கும், என எதிர்பார்க்கப்பட்டது.
சர்வதேச அளவில் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும், பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும், மீண்டும் இந்தியாவே திருமணக் கோலம் பூண்டு, சர்வதேச அளவில் பேசப்படும் திருமணமாக இது இருக்கும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்படியெல்லாம் ஆடம்பரமாக நடத்தாமல், தற்போது மிகவும் எளிமையாக தனது மகன் திருமணத்தை நடத்தி முடித்து விட்டார் அதானி.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
ஜீத் அதானி - திவா திருமணம் கடந்த 7-ம் தேதி குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் திருமணம் நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள அதானி டவுன்ஷிப் சாந்திகிராமில் கடந்த 5ம் தேதி திருமண சடங்குகள் தொடங்கின. ஹிந்து மற்றும் ஜெயின் முறைப்படி சடங்குகள் நடந்தன. 7ம் தேதி மதியம் 2 மணி முதல் பாரம்பரிய ஜெயின் மற்றும் குஜராத்தி கலாச்சாரப்படி திருமண சடங்குகள் நடந்தன.
மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
திருமணத்தின் புகைப்படங்களை கௌதம் அதானியும், ஜீத் அதானியில் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில்,
“எல்லாம் வல்ல இறைவனிளின் ஆசீர்வாதத்துடன் ஜீத்தும் திவாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் அகமதாபாத்தில் பாரம்பரிய சடங்குகள் மற்றும் அன்பானவர்கள் மத்தியில் சுப மங்களத்துடன் நடந்தது. இது ஒரு சிறிய மற்றும் மிகவும் தனிப்பட்ட விழா. எனவே, நாங்கள் விரும்பினாலும் அனைத்து நலம் விரும்பிகளையும் அழைக்க முடியவில்லை. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திவா மற்றும் ஜீத்துக்கு உங்கள் அனைவரிடமிருந்தும் அன்பையும் ஆசிர்வாதத்தையும் நான் மனப்பூர்வமாக வேண்டுகிறேன்,” என கௌதம் அதானி பதிவிட்டிருந்தார்.
இதன் மூலம் மிகவும் ஆடம்பரமான முறையில் அதானி மகன் திருமணம் நடைபெறும் என பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும் இந்தத் திருமணம் தற்போது ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளப் பக்கங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.

ரூ. 10 ஆயிரம் கோடி நன்கொடை
அதானி தனது மகன் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்த கையோடு, பல்வேறு சமூகநலப் பணிகளுக்காக ரூ.10 ஆயிரம் கோடியை நன்கொடையாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதில், பெரும்பகுதி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் கட்டுவதற்காக வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அனைவருக்கும் குறைவான செலவில் உலகத் தரத்தில் மருத்துவவசதியும், கல்வியும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலும், இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் விதமாகவும் இதனை அதானி செய்திருப்பதாகத் தெரிகிறது.
இதுதவிர, ஜீத் அதானி திருமணத்துக்கு முன்னதாக, ‘மங்கள் சேவா’ என்ற திட்டத்தையும் கௌதம் அதானி தொடங்கி வைத்துள்ளார். இதன்படி, ஜீத் அதானி-திவா தம்பதி ஆண்டுதோறும் திருமணமான 500 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் அமைப்பில் தங்கம், வெள்ளி சிலைகள்: அசர வைக்கும் அனந்த் அம்பானி திருமண அழைப்பிதழ்!