முதல் IPL போட்டியிலே 3 விக்கெட் எடுத்த இளம்புயல் - ஆட்டோ ஓட்டுனர் மகன் விக்னேஷ் புத்தூர் பற்றி தெரியுமா?
இதுவரை மாநில அணிக்காகக்கூட விளையாடியது இல்லை. ஆனால், தனது முதல் ஐபிஎல் ஆட்டத்திலேயே, தனது சைனா மேன் பவுலிங்கால் சிஎஸ்கே அணியை கலங்கவிட்டு, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் கேரளாவைச் சேர்ந்த இளம் வீரரான 24 வயது விக்னேஷ் புத்தூர்.
2025 ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் அறிமுக வீரர் விக்னேஷ் புத்தூர், மூன்று விக்கெட்டுகளை எடுத்து, கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக இளம் வீரராக, தனது வயதுக்கே உரிய துறுதுறு ஆட்டத்துடன், சைனா மேன் பவுலிங்கில் அவர் வீசிய பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் திணறித்தான் போனார்கள். ஆனாலும் சளைக்காமல், தனது இந்த அதிரடி பவுலிங் மூலம், மூன்று விக்கெட்டுகளை எடுத்து, ஓவர் நைட்டில் ஹீரோவாகி விட்டார் விக்னேஷ் புத்தூர்.
சீனியர் அணி எதிலும் விளையாடாமல், கேரளாவில் இருந்து வந்த கிளப் கிரிக்கெட் வீரரான விக்னேஷ் புத்தூர், தனது முதல் ஐபிஎல் ஆட்டத்திலேயே, “ப்பா.. யார்றா இந்தப் பையன்?” என இணையத்தில் தன்னைப் பற்றிய தகவல்களை தேட வைத்துவிட்டார்.

விக்னேஷ் புத்தூர்
தோனியின் பாராட்டு
சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை அணி விளையாடிய போட்டியில், மும்பை அணி தோற்ற போதிலும், அறிமுக போட்டியிலேயே 4 ஓவர்களில் 32 ரன்களை வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஒரே நாளில் நட்சத்திர வீரர் அந்தஸ்தை அடைந்திருக்கிறார் அந்த அணியின் இளம் வீரரான 24 வயது விக்னேஷ் புத்தூர்.
அந்த இரண்டு அணிகளிலும் ஜாம்பவான் வீரர்கள் பலர் இருந்த நிலையில், விக்னேஷ் தனது முதல் போட்டியிலேயே தனது திறமையைக் காட்டி, கிரிக்கெட்டில் தனக்கான எதிர்காலத் தடத்தை துல்லியமாக பதிவு செய்து விட்டார். இதன்மூலம், மும்பை அணியில் வளரும் நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் விக்னேஷ் புத்தூர்.
எதிரணி ஆட்டக்காரராக இருந்தபோதும், போட்டி முடிந்ததும் விக்னேஷை நேரில் அழைத்து,தோனி பாராட்டியுள்ளார். தோனி தன்னைப் பாராட்டிய புகைப்படத்தை, விக்னேஷும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தோனியுடன் விக்னேஷ் புத்தூர்
ஆட்டோ ஓட்டுநரின் மகன்
கேரளாவின் மலப்புரம் மாவடடம், பெரிந்தல்மன்னா என்ற பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். 2001ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி பிறந்தவரான விக்னேஷின் தந்தை பெயர் சுனில் குமார், தாயார் பெயர் பிந்து. சுனில் குமார் கேரளாவில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.
எளிய மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவராக இருந்தாலும், சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது தீராக்காதலுடன் தான் வளர்ந்துள்ளார் விக்னேஷ். தன் மகனுக்கு கிரிக்கெட்டில் இருந்த ஆர்வத்தைக் கண்ட, அவரது பெற்றோர் மற்ற பெற்றோர்கள் போல், விளையாட்டுத்தனமாக இல்லாமல் படிப்பைக் கவனி என வற்புறுத்தாமல், கிரிக்கெட்டையே அவரது எதிர்காலமாக எடுத்துக் கொள்ள, முழு சம்மதம் தந்ததுடன், அதற்குத் தேவையான வசதிகளையும் செய்து தந்துள்ளனர்.

விக்னேஷ் புத்தூரின் பெற்றோர் சுனில் மற்றும் பிந்து
மெருகேற்றிய பயிற்சியாளர்
10 வயதில் தனது நண்பர்களுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியவர்தான் விக்னேஷ். அப்போது, அவரின் ஆட்டத்தில் தனித்தன்மை இருப்பதைக் கண்டுபிடித்து, தனது மலப்புரம் அகாடமியில் சேர்த்து, விக்னேஷின் ஆட்டத்தை மெருகேற்றியவர் பயிற்சியாளர் விஜய்குமார்.
இரண்டு ஆண்டுகள் அங்கு பயிற்சி பெற்ற பின்னர் கேரள கிரிக்கெட் அகாடமியின் மூலம் தேர்வு செய்யப்பட்ட விக்னேஷ், மாநில அணிக்காக அண்டர் 14, அண்டர் 19, அண்டர் 23 பிரிவுகளில் விளையாடினார். அதன் பின், கேரளா கிரிக்கெட் லீக் எனும் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டும் ஆடி இருக்கிறார். தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் சில போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

திறமையை நிரூபித்த விக்னேஷ்
தமிழ்நாட்டில் நடக்கும் TNPL தொடரைப் போல கேரளாவிலும் கேரளா ப்ரீமியர் லீக் போட்டிகள் நடைபெறுகிறது. அப்படி, ஒரு தொடரில் ஆலப்புழா என்கிற அணிக்காகத்தான் விக்னேஷ் புத்தூர் விளையாடினார். அங்கே அவரின் திறமையான பந்து வீச்சைப் பார்த்து அசந்து போனது மும்பையின் Scouting குழு. அதன் தொடர்ச்சியாக, அவரை ட்ரையல்ஸூக்கு அழைத்தனர். அங்கும் அவரது ஆட்டம் பிடித்துப் போகவே, தென்னாப்பிரிக்காவில் நடந்த SAT20 தொடரில் ஆடும் மும்பை அணிக்காக நெட் பௌலராக அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து விக்னேஷின் பவுலிங் திறமையைக் கவனித்து வந்த மும்பை இந்தியன்ஸ், அதிரடியாக ஐபிஎல் மெகா ஏலத்தில் 30 லட்சம் ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்தனர். இதுவரை மாநில அணிக்காகக்கூட விளையாடாத ஒரு இளம் வீரரை மும்பை அணி துணிந்து தங்கள் அணிக்கு ஏலத்தில் எடுத்துள்ளதே என அப்போதே ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அவரை இம்பாக்ட் வீரராக தேர்வு செய்து களமிறக்கியது மேலும் அவர்களை ஆச்சர்யப்பட வைத்தது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல், தனது முதல் ஆட்டத்திலேயே மூன்று விக்கெட்டுகளைத் தூக்கி, தன் திறமையை உலகிற்குக் காட்டி விட்டார் விக்னேஷ். சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உட்பட மூன்று முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார், என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸின் சரியான முடிவு
விக்னேஷ் குறித்து மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,
“நாங்கள் அவரின் திறனை மட்டும்தான் பார்த்தோம். அவர் எத்தனை போட்டிகளில் ஆடியிருக்கிறார், என்ன செய்திருக்கிறார் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. அவரும் இன்று சிறப்பாக ஆடிவிட்டார்.“
சென்னைக்கு எதிராக ஒரு போட்டியில் ஆடுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால், விக்னேஷ் அந்த அழுத்தத்தையெல்லாம் சிறப்பாகக் கையாண்டுவிட்டார்.
”எங்களின் வலைப்பயிற்சியில் ரோஹித், சூர்யா, திலக் போன்ற வீரர்களாலயே விக்னேஷை எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவரை இந்தப் போட்டியில் இறக்கலாம், என முடிவெடுத்தோம். அது சரியான முடிவாகிவிட்டது,” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தனது மகனின் முதல் ஐபிஎல் ஆட்டமே இந்த அளவிற்கு, அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளதில், விக்னேஷின் தந்தை சுனிலுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. அதிலும் குறிப்பாக தோனி, விக்னேஷைப் பாராட்டியதை ஊடகங்களிடம் அளித்த பேட்டியில் பெருமையாக குறிப்பிட்டுள்ளார். தோனி தன் மகனைப் பாராட்டியதைக் கேட்டு அவருக்கு, அன்றிரவு தூக்கமே வரவில்லையாம்.

சைனா மேன் பவுலிங் என்றால் என்ன?
மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவரான விக்னேஷ், சைனா மேன் ஸ்டைல் பந்து வீச்சில் கெட்டிக்காரர். முதலில் மிதவேக பந்துவீச்சாளராகவும், சாதாரண சுழற் பந்துவீச்சாளராகவும் இருந்த விக்னேஷ், அதன் பின்னர் லெக் ஸ்பின்னராக மாறியுள்ளார்.
சைனாமேன் பந்து வீச்சு என்பது இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தனது மணிக்கட்டை சுழற்றி பந்து வீசுவதைக் குறிக்க பயன்படுகிறது. பந்தின் சுழற்சிக்கு இடக்கை மணிக்கட்டில் கொடுக்கப்படும் மாறுபாடே காரணமாகிறது. 1920-களில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட சைனாமேன் பவுலிங் எனப்படும் இந்த வார்த்தை, ராய் கில்னர் என்ற பந்து வீச்சாளரை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் குல்தீப் யாதவ் மிக அரிதான சைனா மேன் பவுலராக அறியப்படுகிறார். அவருக்குப் பிறகு தற்போது விக்னேஷ் புத்தூரை சைனாமேன் பவுலராக கிரிக்கெட் வீரர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விளையாட்டில் ஒரு பக்கம் சிறந்து விளங்கினாலும், படிப்பிலும் விக்னேஷ் கெட்டிக்காரர்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஒரு புறம் தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டே, மறுபுறம், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படித்து வருகிறார் விக்னேஷ்.