பாகிஸ்தான் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய வீரர்: 'வீர் சக்ரா' விருது பெற்ற கேப்டன் அபிநந்தன்!
வீரதீரச்செயலுக்கான நாட்டின் மூன்றாவது பெரிய விருது பெற்ற அபிநந்தன் வர்தமான்!
கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், சிபிஆர்.அப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில், 72 வீரர்கள் பலியானார்கள்.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பாலகோட்டில் செயல்பட்டு வந்த தீவிரவாத பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு மறுநாள் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றன. அப்போது இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் விமானங்களைச் சுற்றி வளைத்து விரட்டியடித்தன.
இந்தத் தாக்குதலின் போது, இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார். எனினும், அவரது விமானமும் சேதமடைந்து, அவர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பகுதிகுக்குள் தரையிறங்கி அவர்களிடம் பிடிபட நேர்ந்தது.
இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் தந்த அழுத்தம் காரணமாக, அபிநந்தன் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். பாகிஸ்தானில் இருந்த போது அபிநந்தன் எந்த கேள்விகளுக்கும் பதில் அளித்து தகவல்களை வெளியிட மறுத்துவிட்டார்.
போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காகவும், எதிரிகளிடம் எந்தத் தகவலையும் சொல்லாமல் உறுதி காத்ததற்காகவும் அபிநந்தன் பெரிதும் பாராட்டப்படுகிறார்.
இந்திய மக்கள் அவரை நாயகனாக கொண்டாடினர். அவரது தாக்கத்தால், அவரைப்போலவே இளைஞர்கள் மீசை வைத்துக்கொண்டனர். இவ்வளவு பெருமையாகக் கொண்டாடப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனின் வீரதீரச் செயலை பாராட்டி அவருக்கு, ’வீர் சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அபிநந்தனுக்கு ’வீர் சக்ரா’ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவப்படுத்தினார். வீர் சக்ரா விருது வீரதீரச்செயலுக்கான நாட்டின் மூன்றாவது பெரிய விருதாகும். இந்த விருதினை மிடுக்கான நடையுடனும், உடையுடனும் அபிநந்தன் பெற்றுக்கொண்டார். இவர் விருதுபெறும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி, பலரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.
முன்னதாக, அபிநந்தனின் வீரதீரச் செயலை கௌரவிக்கும் வகையில் இந்திய விமானப்படை அவருக்கு குரூப் கேப்டனாக பதவி உயர்வு அளித்தது. இந்த பதவி இந்திய ராணுவத்தில் கர்னல் பதவிக்கு சமமானது. அதேபோல் அபிநந்தனுக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.