'விசா இல்லாத நாடுகளை அதிகம் நாடும் இந்தியர்கள்' - பயண அறிக்கையில் சுவாரஸ்யத் தகவல்கள்!
வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் இந்தியர்கள் முன்னதாக திட்டமிடப்பட்ட பயணங்களை அதிகம் விரும்புவதும், விசா தேவையில்லாத நாடுகளுக்கு அதிகம் செல்வதும் தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் இந்தியர்கள் முன்னதாக திட்டமிடப்பட்ட பயணங்களை அதிகம் விரும்புவதும், விசா தேவையில்லாத நாடுகளுக்கு அதிகம் செல்வதும் தெரிய வந்துள்ளது.
இந்திய பயணிகள் ஆடம்பர அனுபவங்களை விரும்புவதும், 41 சதவீத பயணிகள் பிரிமியம் விடுமுறை பயணத் திட்டங்களை நாடுவதும் தெரிய வந்துள்ளது.
முன்னணி பயண ஏற்பாடு நிறுவனமான 'பிக்யுவர்டிரையல்' (Pickyourtrail) இந்தியர்களின் பண்டிகை கால வெளிநாட்டு பயணங்களை ஆய்வு செய்து, சர்வதேச பயண இடங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு பயணங்களுக்கான விருப்பமும், தேவையும் பெங்களூரு (23%), சென்னை (20%) அதிகம் இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அறிக்கை சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்கள் வருமாறு:
முன்பதிவில் ஆர்வம்: பயணம் மேற்கொள்பவர்களில் 64 சதவீதம் பேர் இரண்டு மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வழக்கம் கொண்டுள்ளனர். சுற்றுலா பயணங்கள் சிக்கல் இல்லாமல் விளங்க, கடைசி நேர திட்டமிடலை விட, முன்னதாக திட்டமிடப்பட்ட பயணங்களையே பலரும் விரும்புகின்றனர். பெரும்பாலான பயணங்கள் 3 முதல் 4 இரவு வரை கொண்டதாக உள்ள நிலையில், பலரும் 14 முதல் 15 இரவுகள் கொண்ட நீண்ட பயணங்களையும் விரும்புகின்றனர்.
முன்னதாக திட்டமிடுவது பரவலாக இருந்தாலும், நினைத்தவுடன் புறப்பட்டு செல்பவர்களும் இருக்கின்றனர். இளம் பயணிகள் மத்தியில் இது அதிகம் உள்ளது.
ஆடம்பர அனுபவங்கள்: வெளிநாட்டு பயணங்களுக்காக அதிக செலவு செய்யவும் தயாராக உள்ளனர். மறக்க முடியாத பயண அனுபவங்களை நாடி, சராசரியாக பயணத்திற்கு ரூ.2.6 லட்சம் வரை செலவு செய்கின்றனர். இரண்டு லட்சத்திற்கும் மேல் செலவாகும் ஆடம்பர் பயணங்களை 41 சதவீதம் பேர் மேற்கொள்ளும் நிலையில், 18 சதவீதம் பேர், ரூ.1.2 லட்சம் அளவிலான பயணத்தை நாடுகின்றனர்.
இளம் பயணிகள்: மத்திய வயது பயணிகள் 46 சதவீத பதிவுகளை மேற்கொள்பவர்கள், மாலத்தீவுகள், பாலி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகம் செல்கின்றனர். 6 முதல் 7 இரவு பயணங்களை நாடுகின்றனர். இளம் பயணிகள், தாய்லாந்து, பாலி, துபாய் உள்ளிட்ட இடங்களை நாடுகின்றனர். 5 இரவு முதல் 12 அல்லது 13 இரவு பயணங்களை நாடுகின்றனர். 50 வயதுக்கு மேலானவர்கள், துபாய், இலங்கை, கம்போடியா, பாலி போன்ற நாடுகளை நாடுகின்றனர்.
ஜோடிகள்: வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்பவர்களில் தம்பதிகள் அதிகம் உள்ளனர். இந்த ஆண்டு பதிவான வெளிநாட்டு பயணங்களில் 62 சதவீதம் இப்பிரிவனருக்கு உரியது. 41 சதவீதம் பேர் விசா தேவைப்படாத மாலத்தீவுகள், தாய்லாந்து, மொருஷியஸ், மலேசியா ஆகிய நாடுகளை நாடுகின்றனர். மாலத்தீவுகள் பலரையும் ஈர்க்கிறது. பாலி, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளும் ஈர்க்கின்றன. நகரங்களில் ஓஸ்லோ, ஹெல்சின்கி, பரேக், வியன்னா, பெர்லின் ஆகிய ஐரோப்பிய நகரங்களும் பிரபலமாக உள்ளன.
மெட்ரோ நகரங்கள்: சர்வதேச பயணங்களை மேற்கொள்பவர்கள் மெட்ரோ நகரங்களில் அதிகம் உள்ளனர். வெளிநாட்டு பயணங்களுக்கான தேவை பெங்களூருவில் 23 சதவீதமும், சென்னையில் 20 சதவீதமும் உள்ளது. தில்லி- 18 சதவீதம் மற்றும் மும்பை 15 சதவீதம். கொச்சி, ஐதராபாத அகிய நகரங்களிலும் வெளிநாட்டு பயண ஆர்வம் உள்ளது.
"இந்த ஆண்டு முன்கூட்டியே திட்டமிடும் பயணங்கள் தொடர்பான ஆர்வம் மற்றும் ஆடம்பர் அனுபவங்கள் மீதான ஈடுபாட்டை காண்கிறோம். இந்திய பயணிகள், முக்கிய இடங்கள் மட்டும் அல்லாமல், நன்கு தேர்வு செய்யப்பட்ட, தரமான பயணங்களை விரும்புகின்றனர்,” என பிக்யுவர்டிரையல் இணை நிறுவனர் ஹரி கணபதி கூறினார்.
பிக்யுவர்டிரையல் 2014ம் ஆண்டு ஹரி கணபதி மற்றும் ஸ்ரீநாத் சங்கரால் துவக்கப்பட்டது. சர்வதேச பயண ஏற்பாடு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு பயண பிராண்ட் எனும் விருதையும் அண்மையில் வென்றது. சென்னை, தில்லி, கோவை, ஐதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் அலுவலகங்களை கொண்டுள்ளது.
Edited by Induja Raghunathan