'தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்களே முதலிடம்' - எத்தனை கோடிகள் தெரியுமா?
நடப்பு ஆண்டில் 6 லட்சம் கோடி ரூபாய் அனுப்பிய இந்தியர்கள்!
வெளிநாடுகளில் வேலைபார்க்கும் மக்கள் தங்கள் தாயகங்களுக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் வகிப்பதாக உலக வங்கி கூறியுள்ளது.
உலக வங்கியின் கூற்றுப்படி,
"உலகின் மிக அதிக பணம் அனுப்பப்படும் நாடாக இருக்கும் இந்தியா 2021ல் மட்டும் 8 ஆயிரத்து 700 கோடி டாலர் மதிப்பிலான தொகையை வெளிநாடு வாழ் மக்களிடம் இருந்து பெற்றுள்ளது. இந்தத் தொகையின் இந்திய மதிப்பு 6 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு சமம்.
இதில், அமெரிக்காவில் இருந்து தான் அதிகத் தொகை அனுப்பப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அனுப்பப்பட்டுள்ள 6 லட்சத்துக்கும் அதிகமான கோடி ரூபாயில் 20 சதவீதம் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பியுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா, குவைத் போன்ற அரபு நாடுகளிலும் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் தாயகத்திற்கு அதிகமான தொகை அனுப்புகின்றனர்.
இந்தியாவைத் தொடர்ந்து சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் வெளிநாடுகளில் இருந்து அதிகளவு பணம் பெறுகின்றன என்று உலக வங்கி கூறியுள்ளது.
இதனிடையே, அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு பணம் அனுப்புதல் மூன்று சதவீதம் அதிகரித்து 89.6 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி கூறியுள்ளது.
”இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணம் 87 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 4.6%த அதிகம். இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கோவிட்-19 காரணமாக இந்தியாவிற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்குவது போன்றவற்றை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது," என்று உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதே அறிக்கையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு பணம் அனுப்புவது நடப்பு ஆண்டில் 7.3 சதவீதம் அதிகரித்து 589 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 காரணமாக உலகளாவிய அளவில் கடுமையான மந்தநிலை இருந்தபோதிலும் பணம் அனுப்புதல் 1.7 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி: உலக வங்கி அறிக்கை