தொழில் முனைவராக வெற்றி பெற Infosys நாராயணமூர்த்தி பகிரும் 9 பாடங்கள்!
இந்தியாவில் ஐடி யுகத்திற்கு வித்திட்ட நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தை துவக்கிய நாராயணமூர்த்தி, தனது தொழில்முனைவு அனுபவத்தில் கற்றுக்கொண்ட முக்கிய பாடங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் புகழ் பெற்ற ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான Infosys நிறுவனத்தை நாராயணமூர்த்தி சொற்ப முதலீட்டில் நண்பர்களுடன் இணைந்து 1981ம் ஆண்டு துவக்கினார். இந்தியாவில் தொழில்முனைவு பெரிய அளவில் ஊக்குவிக்கப்படாத காலத்தில் துவக்கப்பட்ட இன்போசிஸ் நிறுவனம் பல்வேறு சவால்களை கடந்து இன்று முன்னோடி ஐடி நிறுவனமாக விளங்குகிறது.
இன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை சொல்லவும், வழிகாட்டவும் எண்ணற்ற வல்லுனர்களும், புத்தகங்களும் இருந்தாலும், 1980-களில் இன்போசிஸை துவக்கிய போது நாராயணமூர்த்தியும், அவரது நண்பர்களும் தாங்களாகவே தொழில்முனைவு பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த அனுபவத்தின் போது கற்றுக்கொண்ட பாடங்களை நாராயணமூர்த்தி, 'ஸ்டார்ட் அப் காம்பஸ்' (Startup Compass) எனும் புத்தக்த்திற்கு எழுதிய முன்னுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
விமானங்களில் எக்கானமிஸ் வகுப்பில் பயணம் செய்ய தீர்மானித்தது, இணை நிறுவனர்கள் பிரச்சனை குறித்து மனைவியிடம் விவாதிக்காமல் இருக்க முடிவு செய்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நாராயணமூர்த்தி குறிப்பிடும் 9 தொழில்முனைவு பாடங்கள் வருமாறு:
1. மதிப்புகள் முக்கியம்
நாராயணமூர்த்தி மற்றும் அவரது குழுவினர் கற்றுக்கொண்ட முதல் பாடம் நிறுவனத்தில் மதிப்புகளை முன்வைத்து அவற்றை கடைப்பிடிப்பதாகும்.
”மதிப்புகள் தான் ஒரு தொழில்முனைவோர் உறுதியின் பின்புலமாக அமைகின்றன. நிறுவனர் குழு எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தனிப்பட்ட நலனை விட நிறுவன நலனை முதன்மையாக கருதுவதே எங்கள் மதிப்புகளின் முதல் மற்றும் முக்கிய அம்சம்,” என்று நாராயணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இணை நிறுவனர்களில் சிலர் தன்னுடைய சில முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவற்றுக்கு உடன்பட்டு, முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்தினர் என்றும் கூறியுள்ளார்.
2. தோல்வி பாடங்கள்
தொழில்முனைவுப் பயணத்தில் தோல்விகள் ஒரு அங்கம் என்று கூறியுள்ள நாராயணமூர்த்தி, தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அந்த தவறுகளை செய்யாமல் இருந்தால் தோல்வி பயனுள்ளது என்று கூறியுள்ளார்.
இதற்கான உதாரணமாக சாப்ட்ரானிக்ஸில் ஏற்பட்ட தோல்வியை குறிப்பிட்டுள்ளார்.
“சந்தை இல்லாததே தோல்விக்குக் காரணம் என புரிந்து கொண்டேன். அடுத்த முயற்சியில் ஏற்றுமதி சந்தையில் கவனம் செலுத்த தீர்மானித்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.
3. கண்காணிப்பு தேவை
நிறுவனம் அமைப்பு நோக்கிலான சிக்கலில் உள்ளது என்பதை அல்லது மீள முடியாத நிலைக்கு செல்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அறிகுறிகளை ஒரு தொழில்முனைவோர் எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
“இந்த நேரத்தில் தொழில்முனைவோர் தனது ஐடியாவை மென்மையாக்கி, உணர்வுகளைத் தள்ளி வைத்து, வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். சாப்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு உள்நாட்டு சந்தை இல்லை, அதிலிருந்து நான் மீள வழியில்லை. எனவே 9 மாதங்களில் மூடிவிட்டேன்.”
4. அதிர்ஷ்ட தேவதை
தொழில்முனைவுப் பயணத்தில் அதிர்ஷ்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
”என்னைவிட திறமையும், புத்திசாலித்தனமும் நிறைந்த நண்பர்கள் பலர் இருந்தனர். அவர்கள் குழு மேம்பட்ட ஆற்றலை பெற்றிருந்தன. ஆனால், கடவுள் எங்களைப்பார்த்து புன்னகைக்க தீர்மானித்தார். பல நெருக்கடியான சூழல்களில் முடிவுகள் பாதகமாக அமைந்திருக்கலாம். ஆனால் கடவுகள் எங்களை சரியான முடிவுகள் எடுக்க வைத்தார்.”
5. போட்டி எனும் ஆசான்
மறைந்த தொழிலதிபர் ராகுல் பஜாஜ் கூறியது போல, போட்டி தான் மிகச்சிறந்த நிர்வாகப் பள்ளி.
“சந்தை போட்டி நல்ல வாடிக்கையாளர்களை, ஊழியர்களைக் கண்டறிந்து தக்க வைத்துக்கொண்டு, முதலீட்டாளர்கள் நம்பிகையை தக்கவைத்துக் கொள்வது எப்படி என எங்களுக்கு கற்றுத்தந்தது. எல்லா துறைகளிலும் உலகின் சிறந்த நடைமுறைகளுடன் எங்களை ஒப்பிட்டு அடுத்த கட்ட நடைமுறைகளை உருவாக்கினோம்.”
6. தலைமைப் பண்பு
தலைமையில் இருப்பவர்கள் தங்கள் செயல்கள் மூலம் வழிகாட்ட வேண்டும். இதற்கு உதாரணமாக, நிறுவனத்தின் ஆரம்ப நாட்களில், செலவுகள் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டிய சூழலில் விமானங்களில் எகானமி வகுப்பில் பயணிக்க தீர்மானித்த்தை குறிப்பிட்டுள்ளார்.
“இன்றும் கூட, உள்ளூர் விமானப் பயணங்களில் எக்கானமி வகுப்பில் தான் பயணிக்கிறேன். 2011ல் ஓய்வு பெறும்வரை காலை 6.20க்கு அலுவலகத்தில் இருப்பேன். இது இளம் ஊழியர்களுக்கு நேரத்திற்கு அலுவலகம் வர ஊக்கமாக இருந்தது.”
7. ஊக்கம் எனும் சவால்
30 ஆண்டுகால இடைவெளியில், எங்களின் ஏழு தொழில்முறை இணை நிறுவனர்கள் இடையே ஊக்கம் மற்றும் நம்பிக்கையை தக்க வைப்பது மிகவும் சவாலானது என்பதை ஏழாவது பாடமாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
”எங்களில் யாரும் கருத்து வேறுபாடுகள் குறித்து வீட்டில் மனைவியிடம் பேசுவது இல்லை எனத் தீர்மானித்தேன். இதை தீவிரமாக கடைப்பிடித்தேன். காரணம் மிக எளிமையானது. மனைவிகள் இவற்றை தனிப்பட்ட முறையில் பார்க்கும் வாய்ப்புள்ளது. இது நிறுவனத்தை பாதிக்கும்.”
8. குழுக்கள் வேண்டாம்
நிறுவனத்தில் ஒரு நேரத்தில் ஒரு தலைவர் தான் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
”எந்த ஒரு நிறுவனமும் குழுக்களால் வழி நடத்தப்பட முடியாது. ஒரு தலைவர் மதிப்புகள் மூலம் வழிகாட்ட வேண்டும். பெரிய தியாகங்களை செய்ய வேண்டும். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் தகுதி வாய்ந்த சகாக்களிடம் இருந்து கருத்துக்களை வரவேற்க வேண்டும். எந்த முடிவுக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும்.”
9. நிறுவன மதிப்பு
தகுதி மற்றும் மதிப்புகள் வெற்றிகரமான நிறுவனத்திற்கு முக்கியம் எனக் கூறியுள்ளார்.
“தாமதமாக பலன் பெற ஒப்புக்கொண்டு, அனைவரும் தேவையான தியாகங்களை செய்தோம். இந்த அணுகுமுறையே அனைத்து 6 நிறுவனர்களையும் கோடீஸ்வரர்களாக்கியது. ஏழாவது நிறுவனர் அசோக் ஆரோரா 1989ல் அமெரிக்காவில் செட்டில் ஆக சென்றுவிட்டார். அவருக்கு வாழ்த்துகள்.”