ஐடி ஊழியர் டூ இயற்கை விவசாயி; இப்போது ஊராட்சி மன்றத் தலைவர்!
லட்சக்கணக்கில் மாதச் சம்பளம் தந்த பணியை உதறிவிட்டு இயற்கை விவசாயத்திற்கு மாறிய ரேகா ராமு, தற்போது தன் கிராமத்துக்கு பணியாற்ற ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பில் அமர்ந்துள்ளார்.
டாக்டரின் பிள்ளைகள் டாக்டராக வேண்டும் என்றும், போலீஸ்காரரின் பிள்ளைகள் போலீஸாக வேண்டும் என்றே பலரும் விரும்புவார்கள். விவசாயி பிள்ளை விவசாயி ஆக வேண்டும் என்று மட்டும் அந்த விவசாயி விரும்புவதில்லை, காரணம் மாதந்தோறும் நிலையான சம்பளம் தரும் வருமானமாக அது இல்லை என்ற புரிதல் இருக்கிறது.
திருவள்ளூர் ஊராட்சி பாண்டேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த ரேகா ராமுவும் விவசாயத் தொழில் தன்னோடு முடிந்து போகட்டும் என்று நினைக்கும் நடுத்தட்டு விவசாயியின் மகள்.
தான் கஷ்டப்பட்டதே போதும் என்று தனது பெண் பிள்ளை ரேகாவை மென்பொருள் பொறியாளராக்கி அழகு பார்த்திருக்கிறார் அந்த விவசாயி.
“என்னுடைய அப்பா நான் நன்கு படித்து வெளிநாட்டில் சிறப்பாக வாழ வேண்டும் என்று விரும்பினார். அவரது ஆசைப்படியே நானும் ஐ.டி படித்து வெளிநாட்டிலும் வேலை செய்திருக்கிறேன். அவர்கள் விரும்பிய கல்வி, மாதம் லட்சக்கணக்கில் சம்பளம், வெளிநாடு வாழ்க்கை என அனைத்தையும் வாழ்ந்தேன். என்னுடைய கணவர் பார்த்தசாரதியும் இதே துறையைச் சேர்ந்தவர் என்பதால் வாழ்க்கை நிம்மதியாக சென்று கொண்டிருந்தது,” என தொடங்கினார் 37 வயது ரேகா ராமு.
வருமானத்திற்கு கவலை இல்லை, நாங்கள் இருவரும் ஓடி ஆடி வேலை செய்பவர்கள் என்பதால் நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்றே நினைத்தோம். ஒரு நாள் என்னுடைய கணவர் பார்த்தசாரதிக்கு பேச்சு வராமல் நாக்கு குளறியது, அப்போது மருத்துவப் பரிசோதனை செய்த எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு உயர் தைராய்டு பிரச்னை இருந்தது தெரிய வந்தது.
நடுத்தர வயது இல்லத்தரசிகளைப் பாதிக்கும் இந்த நோய் எப்படி 30 வயதிற்குள்ளாகவே தனது கணவரை தாக்கி இருக்கிறது என்று சிந்திக்கத் தொடங்கியுள்ளார் ரேகா. நாங்கள் இருவருமே நல்ல உணவை உட்கொள்வதாக நினைத்தோம், ஆனால் வாழ்வியல் நோய்கள் எங்களைத் தாக்கிய போது தான், நாங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கிறோமா என ஆய்வு செய்யத் தொடங்கினோம் என்கிறார் ரேகா.
நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் மோனோக்ரோடகாஸ் என்ற வேதிப்பொருள் தைராய்டு சுரப்பிகளை சுரக்க விடாமல் செய்வதை அறிந்தோம். இதே போன்று என்னுடைய குழந்தை 2 வயது வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்த போதும் நோய்எதிர்ப்பு சக்தி என்பது சராசரியை விட குறைவாக இருந்தது. இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு தேடி இயற்கை அங்காடிகளில் பொருட்களை வாங்கலாம் என சென்னையிலுள்ள பல்வேறு இயற்கை அங்காடிகளை அலசி ஆராய்ந்து பார்த்தோம்.
இயற்கை அங்காடிகளில் பேக் செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்கள் எங்கே விளைவிக்கப்பட்டது, வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படவில்லையா என்று யாராலும் உத்தரவாதம் தர முடியவில்லை. இயற்கை காய்கறிகளைத் தேடி சந்தைகளுக்குச் சென்றோம், அங்கும் ரசாயனம் தெளிக்கப்படாத காய்கறிகளைக் கண்டறியவே முடியவில்லை.
இந்த இடைப்பட்ட காலத்தில் மறைந்த இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் அறிமுகம் கிடைத்தது. அவர் ஒரு முறை எங்கள் நிலத்தில் நாங்கள் என்ன செய்கிறோம் என்ற கேள்வியை எழுப்பினார், அந்தக் கேள்வி எங்களது அறிவுக்கண்ணை திறந்தது.
வெளிஇடங்களில் ரசாயன தெளிப்பு இல்லாத உணவுப்பொருட்களை தேடும் சமயத்தில் நாங்களும் அதை செய்யக் கூடாது என்ற முடிவெடுத்தோம். இயற்கை விவசாயத்தைத் தொடங்கலாம் என்று முடிவெடுத்த பின்னர் முதலில் என் கணவர் பணியை விட்டுவிட்டு விவசாயம் செய்யத் தொடங்கினார் என்கிறார் ரேகா.
பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த நிலத்தில் முதலில் கீரை விதைத்து விவசாயத்தைத் தொடங்கினோம். பொருளாதார உறுதி தேவை என்பதால் கணவர் மட்டும் பணியை விட்டு விட நான் ஐடி பணியில் தொடர்ந்தேன். இயற்கை முறையில் விளைந்த கீரையின் நன்மை எங்கள் குடும்பத்தினர் மட்டுமின்றி உறவினர்களிடத்திலும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களின் நிலத்திலும் இயற்கை விவசாயத்தைத் தொடர அவர்கள் விரும்பினார்கள்.
எனவே கணவருக்குத் துணையாக நானும் பணியை விட்டுவிட்டு முழு நேரமாக விவசாயம் செய்யத் தொடங்கிவிட்டோம். மற்ற விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் வகையைக் கொடுத்து விளைவிக்கச் செய்தோம். நல்ல மகசூல் கிடைத்தது. அப்போது தான் அந்த விளைப்பொருளை விற்பனை செய்யவும் அவர்களுக்கு எங்களின் உதவி தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தோம்.
இயற்கை முறையில் விளைந்த பொருட்களை விற்பனை செய்வதற்காகவே 2014ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கூட்டுறவு ஒன்றைத் தொடங்கினோம். அதில் விளைப் பொருட்கள் மட்டுமின்றி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் விற்பனை செய்யத் தொடங்கினோம். மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களான மாவு, எண்ணெய் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் எண்ணம் தோன்றியதற்கு முக்கியக் காரணமே எங்கள் கிராமத்தில் பல பெண்கள் வேலையின்றி இருந்ததே. இந்தக் கூட்டுறவு மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு, விளைபொருட்கள் வீணாகாமல் பொருட்கள் என இரட்டை பலனைத் தந்தது.
உடல் ஆரோக்கியம், மன நிறைவு, போதுமான வருமானத்திற்கான வழியாக இயற்கை விவசாயம் அமைந்தது. எனினும் இதனைத் தொடர்ந்து செயல்படுத்த ஒவ்வொரு நிலையிலும் ஊராட்சி மன்றத் தலைவரின் ஒப்புதல் தேவைப்பட்டது.
”புதிதாக இயற்கை விவசாயத்தைத் தொடங்கி அதனை லாபம் தரும் தொழிலாகவும் பலருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும் மாற்றுவதற்கு பல அரசியல் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தது. இதனால் ஒரு கட்டத்தில் நானே அரசியல் களம் காணலாம் என்று முடிவெடுத்தேன்,” என்கிறார் ரேகா.
ரேகாவின் முடிவுக்கு காலமும் ஒத்துழைத்துள்ளது தனித் தொகுதியாக இருந்த பாண்டேஸ்வரம், பெண்களுக்கான பொதுத் தொகுதியாக மாறியதால் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பாண்டேஸ்வரம் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார் இவர்.
ஊராட்சி மன்றத் தலைவர் பதவி மூலம் மக்களுக்கும்,விவசாயத்திற்கும் என்னென்ன நன்மைகள் செய்ய முடியும் என்பதை தொடர்ந்து செய்ய இருப்பதாகக் கூறும் ரேகா, மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 3 முறை சென்று தன்னுடைய திட்டத்தை விளக்கி வருகிறார்.
கிராம முன்னேற்றம், கிராமம் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான செயல்திட்டங்களை வகுத்து வருகிறார். மக்கள் குறை தீர் கூட்டங்களை அவ்வப்போது நடத்தி வருகிறோம், எந்தப்பிரச்னை என்றாலும் தலைவர் தான் தீர்வு காண வேண்டும் என்று எண்ணாமல் மக்களின் ஈடுபாடும் முக்கியம் என்ற உணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
ஆரோக்கியம், கல்வி, ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய தீர்மானித்துள்ளோம். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் இயற்கை விவசாயம் செய்து கீரை, காய்கறிகள் முதல் தானியங்கள் வரை அனைத்து விளைப்பொருட்களும் இந்த கிராமத்திலுள்ள மக்களுக்கு குறைவான விலையிலும், சத்துணவு கூடங்களில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவாக இதனை வழங்குவதும் எங்களது திட்டங்களில் ஒன்று என்கிறார் ரேகா.
அயல்நாடு வரை சென்று வான் பார்த்த கட்டிடங்களில் கடமைக்கே என்று 8 மணி நேரத்தை கழிப்பதை விட, மண் பார்த்து, தான் வளர்ந்த மக்களுக்கு நன்மை செய்து அவர்களின் கண்களில் மகிழ்ச்சியை பார்க்கலாம் என்ற நல்ல எண்ணத்தோடு பயணிக்கத் தொடங்கி இருக்கும் ரேகாவை நாமும் பாராட்டுவோம்.
தகவல் உதவி: புதிய தலைமுறை, படம்: முகநூல்