சென்னைக்கு வருகிறது பிரபல ஜப்பான் உற்பத்தி நிறுவனம் Murata - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!
ஜப்பானில் இயங்கி வரும் பிரபல எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனம் முராட்டா, சென்னை அருகே ஆலை அமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே திருப்போரூரில் அடுத்த நிதியாண்டிற்குள் பிரபல ஜப்பான் நிறுவனமான 'முராட்டா' (Murata) எலக்ட்ரானிக்ஸ் தனது உற்பத்தி ஆலையை தொடங்க இருப்பதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Image courtesy : Dr.T.R.B. Raja x page
முராட்டா ஆலை
ஜப்பானில் இயங்கி வரும் பிரபல எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனம் முராட்டா. இது, மல்டிலேயர் செராமிக்ஸ் கெப்பாசிட்டர் என்கிற உதிரி பாகங்களை உற்பத்தி செய்து, அதனை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஆப்பிள், சாம்சங் போன்ற பிரபல மொபைல்போன் நிறுவனங்களுக்கு இந்த நிறுவனம் தான் உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
தற்போது இந்த நிறுவனம் தமிழகத்தில் தனது ஆலையைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை ஓஎம்ஆரில் இந்நிறுவனம் தனது ஆலையைத் தொடங்க இருப்பதாக அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே இந்நிறுவனத்தின் முதல் ஆலை தமிழகத்தில்தான் இயங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாக உற்பத்தியாளர்களை ஈர்ப்பதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ் மதிப்பு சங்கிலியை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை 10X முதல் $100 பில்லியனாக அளவிடுவதற்கான எங்கள் பணியில் இது ஒரு முக்கியமான படி ஆகும்.“
அதன்படி, கார்னிங் மற்றும் ஜாபில் போன்ற பெரிய நிறுவனங்களைத் தொடர்ந்து, பல அடுக்கு செராமிக் மின்தேக்கிகளை தயாரிக்கும் தொழிற்சாலையான, பிரபல ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முராட்டா மேனுஃபேக்ச்சரிங் (Murata Manufacturing ) தற்போது சென்னை தொழில் பூங்காவிற்குள் நுழைந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த ஓராண்டாக நாங்கள் முராட்டா நிறுவனத்துடன் பேசி வந்தோம். எங்களது பல கட்ட சந்திப்புகளுக்குப் பிறகு தற்போது அந்நிறுவனம் தமிழ்நாட்டில் தனது உற்பத்தியை தொடங்குவது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டில் (2026ல்) முராட்டா இங்கு தனது முழு அளவிலான செயல்பாடுகளை தொடங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் தொழிற்சாலை நடவடிக்கைகளில் அந்நிறுவனம் நல்ல அனுபவத்தைப் பெறும் என்றும், நம் நாட்டில் எதிர்கால உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அது தயாராகும், என்றும் தெரிவித்துள்ளது. எனவே, இன்னும் இது போன்ற அறிவிப்புகளை நாம் எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் "ஒரே சட்டசபை" என்று சொல்பவர்கள் கவனத்திற்கு... இங்கு சப்ளை செயின் ஷிப்ட் எப்படி நடக்கிறது என்று பாருங்கள்! மேம்பட்ட எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கான உலகளாவிய ஹாட்ஸ்பாடாக இந்தியா விரைவில் மாறும், மேலும், தமிழ்நாடு அந்த மாற்றத்தை இயக்கும் இயந்திரமாக இருக்கும், என இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தொகுப்பு: ஜெயஸ்ரீத்ரா