'பெரிதாக யோசியுங்கள், குவிக் காமர்ஸ் சேவைகளை கடந்து இந்திய ஸ்டார்ட் அப்'ஸ் செயல்படவேண்டும்' - பியூஷ் கோயல்!
ஸ்டார்ட் அப் மகாகும்ப் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய ஸ்டார்ட் அப்கள் பெரிதாகவும், உலக அளவிலும் யோசித்து செயல்பட வேண்டும் என்றார்.
"நாம் டெலிவரி செய்யும் பையன்களாகவும், பெண்களாகவும் இருப்பதில் மகிழ்ச்சி அடையப்போகிறோமா?’ என கேள்வி எழுப்பியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஸ்டார்ட் அப்'கள் பெரிதாக யோசிக்க வேண்டும் என்றும் குவிக் காமர்ஸ், கேமிங் மற்றும் செல்வாக்காளர் பொருளாதாரம் ஆகிவற்றை கடந்து சேவைகளை உருவாக்க முற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மின் வாகனம், செமிகண்டக்டர், ரோபோடிக்ஸ், ஆழ் நுட்பம் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் சீன ஸ்டார்ட் அப்`களுடன் இந்திய ஸ்டார்ட் அப்களை ஒப்பிடும் வகையில் சமூக ஊடகத்தில் வலம் வரும் ஸ்லைடு ஒன்றை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
"நாம் உருமாறுவதற்கும், கற்றுக்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். நாம் இன்னும் பெரிதாக, இன்னும் சிறப்பாக செயல்பட விரும்ப வேண்டும். அதன் பிறகு, துணிவுடன் செயல்பட வேண்டும். பிறகு போட்டியை கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டும்,” என தில்லியில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிகழ்வான, 'ஸ்டார்ட் அப் மகாகும்ப்' நிகழ்ச்சி இரண்டாம் பதிப்பில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
இதன் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், புதிய ஸ்டார்ட் அப்'கள், ஐஸ்கிரீம், பிஸ்கெட் போன்றவற்றுக்கு ஆரோக்கியமான மாற்று உணவுகளை உருவாக்கி வருகின்றன என குறிப்பிட்டதோடு, இவை வர்த்தகம் மற்றும் தொழில்முனைவே தவிர ஸ்டார்ட் அப் அல்ல என்றார்.
உடனடி மளிகை டெலிவரி நிறுவனங்கள் வெற்றி பாராட்டத்தக்கது என்றாலும், சீன ஸ்டார்ட் அப்கள் ரோபோவியல், தானியங்கிமயம் போன்றவற்றில் செயல்படுவது போல் இல்லாமல் நாம் மாறாக, தேசிய வளத்தை அதிவிரைவு டெலிவரி சேவைகளுக்கான பயன்படுத்துவதை குறை கூறினார்.
"இந்த வசதியான சேவைகள் மூலம் குறுகிய காலத்தில் வளம் உருவானாலும், நாம் வெறும் கடைக்காரர்களாக இருக்க வேண்டுமா அல்லது உலக அளவில் செயல்பட வேண்டுமா? என்பதை ஸ்டார்ட் அப்'கள் முடிவு செய்ய வேண்டும்,” என்றார்.

ஸ்டார்ட் அப் சூழலில் 1,000 ஆழ்நுட்ப ஸ்டார்ட் அப்'கள் மட்டுமே இருப்பது வளர்ச்சிக்கான கவலை அளிக்கும் போக்கு என்று அமைச்சர் குறிப்பிட்டார். ஸ்டார்ட் அப்'களுக்கு உலக அளவிலான கனவுகள் இருக்க வேண்டும் என்றும் போட்டி கண்டு அஞ்சக்கூடாது என்றும் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த கருத்து, ஸ்டார்ட் அப் உலகில், எதிர்வினை மற்றும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.
"ஸ்டார்ட் அப்'களுக்கு ஏஞ்சல் வரியை விதித்து துன்புறுத்திய கடுமையான நிதியமச்சரை பெற்றிருக்கிறோம். நன்கொடை அமைப்புகள் முதலீடு செய்ய அனுமதி இல்லை, காப்பீடு நிறுவனங்களும் முதலீடு செய்ய அனுமதி இல்லை. உலக அளவில் அவை முதலீடு செய்கின்றன. ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வெளிநாட்டு பணம் செலுத்தல் உள்ளிட்ட விஷயங்களில் தொல்லை தருகின்றது,” என இன்போசிஸ் இயக்குனர் குழு உறுப்பினர் மற்றும் ஆரின் கேபிடல் இணை நிறுவனர் மோகன்தாஸ் பாய் எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில்: அக்ஷிதா டோஷ்னிவால், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan