60 வயதில் தொடங்கிய மரப்பொம்மை பிசினஸ்; ரூ.3.5 கோடி வருவாயுடன் மருமகள்களுடன் கலக்கும் மாமியார்!
கணவரை இழந்த வாலாஜாபேட்டையைச் சேர்ந்த கோகிலா, தன் பேரக்குழந்தைகளுக்காக தொடங்கிய தேடலில், நச்சுத்தன்மையற்ற, பாதுகாப்பான மரப்பொம்மைகளை உருவாக்கும் Woodbee Toys என்ற நிறுவனத்தை நிறுவி தொழிலில் வெற்றிநடை போடுகிறார்.
ரசாயனஉர விநியோகஸ்தரான கோகிலாவின் கணவர் நுரையீரல் பாதித்து இறந்துவிட, இழப்பின் துயரலிருந்து மீண்டு குழந்தைகளுக்கான நச்சுத்தன்மையற்ற, நிலையான மரப்பொம்மைகளை உருவாக்கும் "உட்பீ டாய்ஸ்" (woodbee toys) என்ற நிறுவனத்தை நிறுவி அவரது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பி உள்ளார்.
"நானும் என் மருமகளும் குழந்தைகளுக்கு பொம்மைகளை வாங்கச் சென்றபோது இந்த யோசனை தோன்றியது. எல்லா குழந்தைகளைப் போலவே, என் பேரக்குழந்தைகளும் பொம்மைகளை கடித்து எடுத்தனர். சந்தையில் கிடைக்கும் சிலிக்கான் பொம்மைகளை குழந்தைகளுக்கு விளையாட கொடுப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. சிலிக்கான் டீத்தர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொம்மைகளை சந்தை நம்பியிருந்தது. ஏற்கனவே மரத்தொழிலில் ஈடுப்பட்டு வந்ததால், மருமகள்களுடன் சேர்ந்து, நச்சுத்தன்மையற்ற மர பொம்மைகளை உருவாக்க முடிவெடுத்தேன்," என்கிறார் கோகிலா.
'உட்பீ டாய்ஸ்' என்ற வணிகயோசனை அவரது பேரக்குழந்தைகள் பிறந்த பிறகே பிறந்தது. ஆம், அவர் பொம்மை தொழில் தொடங்கியபோது அவருக்கு வயது 60. ரிட்டெயர்மென்ட் வயதில், பலரும் நிதானமான வாழ்க்கைக்குள் செல்கையில், கோகிலா அவரது பயணத்தை மறுவரையறை செய்தார்.

Woodbee Toys நிறுவனர் கோகிலா
வாலாஜாபேட்டையைச் சேர்ந்த கோகிலா, 2020ம் ஆண்டு குழந்தைகளுக்கான நச்சுத்தன்மையற்ற, நிலையான மர பொம்மைகளை உருவாக்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனமான உட்பீ டாய்ஸ் நிறுவினார். அவரது மருமகள்களான ரூபிணி மற்றும் சுகன்யா ஆகியோருடன் சேர்ந்து, அண்டை கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களின் ஆதரவுடன், கொரோனா தொற்றுநோய் காலத்தில் உட் பீ பொம்மைகள் வடிவம் பெற்றன.
5 ஆண்டுகளுக்குள் வேகமாக வளர்ச்சி அடைந்த நிறுவனம் கடந்த ஆண்டு வரை ரூ.3.5 கோடி வருவாய் ஈட்டி, தமிழ்நாட்டின் முன்னணி பொம்மை உற்பத்தியாளர்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
ரசாயனத்தால் இழந்த கணவர்; நச்சற்ற பொம்மைகளை உருவாக்கும் தொழில்முனைவரான மனைவி!
ரசாயனஉர விநியோகஸ்தராக இருந்த கோகிலாவின் கணவர், கட்டிடங்களில் கரையான் கட்டுப்பாட்டிற்காக புகையூட்டும் சேவைகளையும் வழங்கி வந்தார். அதன் காரணமாக பல ஆண்டுகளாக அவர் நுரையீரல் கட்டியால் அவதிப்பட்டு இறந்தார். அவரது கணவரை இறந்த போது, பள்ளிக்கு செல்லும் வயதில் 3 குழந்தைகளுடன் தனித்துநின்றார் கோகிலா. கணிதத்தில் பட்டம் பெற்ற அவர், அரசு ஊழியராக பணியாற்றி வந்தநிலையில், அவரது கணவரின் தொழிலையும் கையிலெடுத்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான துன்பங்களிலிருந்துதான் தொழில்முனைவோராக கோகிலாவின் பயணம் பிறந்தது.
பூச்சிக்கொல்லி விநியோகஸ்தராக தொழில் புரிந்த கோகிலாவின் கணவர், கட்டிடங்களில் கரையான் கட்டுப்பாட்டிற்காக புகையூட்டல் சேவைகளையும் வழங்கினார். பெரும் நிறுவனங்களுக்கான ஏற்றுமதிக்கு பேக்கேஜிங்கிற்குப் பயன்படுத்தப்படும் மரக் கொள்கலன்களில் பூச்சிகள் பரவுவதைத் தடுக்க புகையூட்டும் வேலைகளை செய்து வந்துள்ளார். பின்னாளில், அதுவே அவரது நுரையீரல் கட்டிக்கான காரணமாக குடும்பத்தாரால் சந்தேகிக்கப்பட்டது.
அவர் உயிருடன் இருக்கும் போதே, கோகிலா தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். அவரது மறைவிற்கு பிறகு, தொழிலை நிர்வகிக்கும் பொறுப்பு கோகிலாவை வந்தடைந்தது. ஒருபுறம் தொழில் பற்றி ஆழமான புரிதல் இல்லை, மறுபுறம் கணவரின் மறைவிற்கு காரணமாக சந்தேகித்த ரசயான தொழிலை முன்னெடுத்து செல்லவும் கோகிலாவுக்கு விருப்பமில்லை. அந்த சமயத்தில், பேக்கேஜிங்கிற்குப் பயன்படுத்தப்படும் மரக் கொள்கலன்களை நச்சுத்தன்மையற்றதாக வேண்டும் என்று நிறுவனங்கள் ஆர்டர்கள் வழங்க, அதன் உருவாக்கத்தில் பணிபுரிந்து முழுமையாக மரவேலை தொழிலில் அவரை ஈடுப்படுத்திக் கொண்டார்.
முழுநேர அலுவலக பணிக்கு பிறகு, தொழிற்சாலைக்கு திரும்பி மரத்தொழிலையும் நிர்வகித்து குழந்தைகளை வளர்த்துள்ளார்.
"காலையில் தொழிற்சாலைக்கு வேலையை கண்காணிக்கச் செல்வேன். பின், அலுவலகப்பணிக்குச் செல்வேன். மாலையில் மீண்டும் தொழிற்சாலைக்குச் சென்று வீடு திரும்புவேன். இப்படி ஒவ்வொரு நாளும் 15 மணி நேரத்திற்கும் மேலாக நிற்காமல் ஓடுவேன். ஆனால், என் குழந்தைகள் கல்வியை முடித்து ஆளாக்குவதில் உறுதியாக இருந்ததால் அதை மகிழ்ச்சியுடன் செய்தேன்," என்றார்.

குடும்பத்தாருடன் கோகிலா
குழந்தைகள் வளர்ந்து பணிக்கு சென்றபோதும் அவரது கடமையை நிறுத்தி கொள்ளவில்லை. ஆம், ரிட்டெயர்ட்மென்டுக்கு பிறகு, பேரக்குழந்தைகளின் ஆரோக்கியத்திலும், வளர்ச்சியிலும் கைக்கொடுக்கும் நச்சுத்தன்மையற்ற மரவிளையாட்டு பொம்மைகளை தயாரிக்கும் உட்பீ டாய்ஸ் நிறுவனத்தை துவங்கினார்.
கேரளாவிலிருந்து வேம்பு மற்றும் பைன் மரத்தை வாங்கி உள்ளூர் பெண்களை வேலைக்கு அமர்த்தி, ஆறு பேர் கொண்ட குழுவுடன் தயாரிப்பைத் தொடங்கினார். தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள மருத்துவரான கோகிலாவின் மருமகள் சுகன்யாவின் உதவியுடன், உட்பீ டாய்ஸ் அதன் முதல் தொகுதி 100 பொம்மைகளை இன்ஸ்டாகிராமில் உடனடியாக விற்றது.
மெதுவாக, கோகிலாவால் வடிவமைக்கப்பட்ட பொம்மைகளை உருவாக்கத் தொடங்கினர். கணிதம் மற்றும் பகுப்பாய்வுகளில் அவரது கல்வி பின்னணியை வடிவமைப்பில் புகுத்தினார் கோகிலா.
இதற்கிடையில், சுகன்யா சந்தைப்படுத்தலைக் கையாண்டார். ரூபிணி உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர்களை நிர்வகிக்கும் பொறுப்பேற்றார். அருகிலுள்ள கிராமங்களிலிருந்து விவசாயக் கைவினைஞர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்களாக இருக்கும் பெண்களை வேலைக்கு அமர்த்தினார். அண்டை கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களை தினசரி கூலித் தொழிலாளர்களிடமிருந்து நிலையான வருமானத்துடன் திறமையான கைவினைஞர்களாக மாற்றியது.

கோகிலாவின் தலைமையின் கீழ், உட்பீ டாய்ஸ் செழித்து வளர்ந்தது, அதன் தயாரிப்பு வரிசை 100க்கும் மேற்பட்ட மாண்டிசோரி மற்றும் வால்டோர்ஃப்-ஈர்க்கப்பட்ட மர பொம்மைகளாக விரிவடைந்தது. இதில், டீத்தர்கள், ராட்டில்ஸ், ஷேப் சார்ட்டர்கள், எண்ணும் பிரேம்கள் மற்றும் அபாகஸ்கள், எழுத்துக்கள் மற்றும் எண் புதிர்கள், அடுக்கி வைக்கும் கோபுரங்கள், மர கருவித்தொகுப்புகள் மற்றும் கட்டிடம் மற்றும் கட்டுமான பொம்மைகள் ஆகியவை அடங்கும்.
"அனைத்து உட்பீ பொம்மைகளும் குழந்தைகளுக்கு ஏற்ற நச்சுத்தன்மையற்ற வண்ணப்பூச்சுகளால் வண்ணம் தீட்டப்பட்டு, சான்றளிக்கப்பட்டவை மற்றும் சர்வதேச பாதுகாப்பு தரங்களுக்கு இணங்குகின்றன. எந்தவொரு புதிய தயாரிப்பையும் நாங்கள் திட்டமிடுவதற்கு முன்பு, எங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளிடமிருந்து அவர்களுக்கு வளர என்ன தேவை, அவர்கள் எதைப் பற்றி உற்சாகமடைந்தார்கள், என்பதை கவனிக்கிறோம். முதலில் தாய்மார்களாக இந்த விஷயங்களை நாங்கள் நெருக்கமாகப் புரிந்துகொண்டதிலிருந்து எங்கள் வணிகத்தின் பெரும்பகுதி வளர்ந்துள்ளது," என்றார் கோகிலா.
கோகிலாவைப் பொறுத்தவரை, வயதும் சவால்களும் ஒருபோதும் தடைகளாக இருந்ததில்லை, மாறாக அவை அவர் வளருவதற்கான வாய்ப்புகளாக மாறின. கோகிலாவின் கதை வணிக வெற்றியைக் காட்டிலும் மேலாக, துயரம் எப்படி மறு கண்டுபிடிப்புக்கு ஊக்கமளிக்கும் என்பது பற்றிய உத்வேகமான கதையாகும். தனிப்பட்ட துயரத்தை ஒரு செழிப்பான நிறுவனமாக மாற்றும் அவரது திறன் அவரது வாழ்க்கையை மாற்றியது மட்டுமல்லாமல், அவரது குடும்பம் மற்றும் சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலத்தில்: சரண்யா சக்ரபாணி, தமிழில்: ஜெயஸ்ரீ

குரோச்சே பொம்மைகள் செய்து வருவாய் ஈட்ட பழங்குடியினப் பெண்களுக்கு பயிற்சி - 61 வயது பெண்மணியின் முயற்சி!