கிறிஸ்துமஸ் துவக்கம்: 4,000 ஆக அதிகரிக்கும் ஓலா எலெக்ட்ரிக் விற்பனை நிலையங்கள்!
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 3,200 விற்பனை நிலையங்களை துவக்கி, மொத்த விற்பனை நிலையங்களை 4,000 ஆக அதிகரிக்க உள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் டிசம்பர் 25ம் தேதி, 3,200 விற்பனை நிலையங்களை திறக்க உள்ளது. இதன் விற்பனை நிலையங்கள் எண்ணிக்கையில் நான்கு மடங்கு உயர்வாக இது அமைகிறது. நிறுவனத்தின் மொத்த விற்பனை நிலையங்கள் எண்ணிக்கை 4,000 ஆக அதிகரிக்கும்.
நிறுவனத்தின் புதிய விளம்பர திட்டத்தின் (#SavingsWalaScooter) ஒரு அங்கமாக அமையும் இந்த விரிவாக்கத்தின் வாயிலாக ஓலா எலெக்ட்ரிக் தனது வாகனங்களை வாடிக்கையாளர் இல்லத்திற்கு அருகாமையில் கொண்டு வருகிறது.
முன்னதாக, டிசம்பர் 20ம் தேதி இந்த விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் என 2 ம் தேதி ஓலா எலெக்ட்ரிக் அறிவித்திருந்தது. எனினும், தற்போது கிறிஸ்துமஸ் அன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விற்பனை நிலையங்கள் பெரிய நகரங்கள் தவிர, இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் அமைய உள்ளன.
நவம்பர் மாதம் நிறுவனத்தின் சந்தைப்பங்கு சரிவு மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை தொடர்பாக அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள் புகார்களுக்கு மத்தியில் இந்த விரிவாக்கம் நிகழ்கிறது. இதை எதிர்கொள்ளும் வகையில், 3,200 புதிய விற்பனை நிலையங்கள் சேவை மையங்களுடன் அமைந்திருக்கும்.
வாஹன் புள்ளிவிவரங்கள் படி, நவம்பர் மாதம் ஓலா எலெக்ட்ரிக் 29,196 வாகனங்கள் விற்பனை செய்தது. அக்டோபர் மாதம் இது 41,775 வாகனங்களாக இருந்த நிலையில் அதன் சந்தை பங்கு 24.7 சதவீதம் குறைந்துள்ளது. நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட போது ஆகஸ்ட்டில் அதன் சந்தை பங்கு 31.2 சதவீதமாக இருந்தது.
இருப்பினும், மின்வாகன இருசக்கர வாகன சந்தையில் நிறுவனம் முன்னணி இடத்தை தக்க வைத்துள்ளது. பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார் 22 மற்றும் 23 சதவீத சந்தை பங்கு பெற்றுள்ளன.
நிறுவனம், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது முதல் கவனம் பெற்று வரும் விஷயமான லாபமீட்டலுக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக நிறுவனம், 450 முதல் 500 ஊழியர்கள் மீது தாக்கம் செலுத்தக்கூடிய மறுசீரமைப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டு வருவதாக யுவர்ஸ்டோரி செய்தி வெளியிட்டுருந்தது.
மேலும், நிறுவனம் ஏற்கனவே ரோட்ஸ்டார் சீரிஸ் புதிய பைக் ரகங்களை அறிமுகம் செய்யத்துவங்கியுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் கிக் புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இ-காமர்ஸ் மற்றும் குவிக் காமர்ஸ் சேவைகள் சார்ந்த சேவை பொருளாதாரத்தை இந்த வாகனங்கள் மையமாகக் கொண்டுள்ளன.
(பொறுப்புத்துறப்பு: யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷரத்தா சர்மா, ஓலா எல்கெட்ரிக் நிறுவனத்தின் சுயேட்சை இயக்குனர்)
Edited by Induja Raghunathan