'சேலை விற்பதில் பெருமை அடைகிறேன்' - IIT, IIM பட்டதாரி ராதிகா, புடவை ப்ராண்ட் தொடங்கிய கதை!
''எவ்வளவு அதிகமாக சம்பளம் வாங்கினாலும், தொழில்முனைவோராக இருப்பதன் உற்சாகத்தையும், சவால்களையும் அந்த சம்பள வேலைகளால் ஈடுகட்ட முடியாது,'' என்கிறார் ஐஐடி, ஐஐஎம்-ல் படித்து கை நிறைய சம்பளம் வாங்கிய வேலைகளை விட்டு விட்டு, தற்போது Anorah நிறுவனத்தை நடத்தி வரும் ராதிகா முன்ஷி.
‘கால் காசென்றாலும் கவர்ன்மெண்ட் காசு’ என அரசு அல்லது தனியார் நிறுனங்களில் வேலை பார்த்து, மாதம் நிரந்தரமாக ஒரு சம்பளத்தை வாங்குவதுதான் புத்திசாலித்தனம் என்ற மக்களின் மனநிலைமை தற்போது மாறி விட்டது என்றுதான் கூற வேண்டும். தற்போதெல்லாம், ‘நானே ராஜா.. நானே மந்திரி’ என சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதிலும், சமீபகாலமாக டாக்டர், இன்ஜினியர், வழக்கறிஞர், ஐடி ஊழியர் என ஏற்கனவே ஒரு பணியில் நல்ல சம்பளம் பெற்று வருபவர்கள்கூட, தங்களது வேலையை ராஜினாமா செய்து விட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்கி அதில் ஜெயித்துக் காட்டியும் வருகின்றனர்.
இந்தப் பட்டியலில் ஒருவராக, தற்போது சமூகவலைதளப் பக்கங்களில் அதிகம் பேசப்பட்டு வருபவர் தான் ராதிகா முன்ஷி. ஐஐடி, ஐஐஎம்-ல் படித்து, நல்ல மதிப்பெண்களோடு பட்டம் பெற்று, கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இவர், ஒரு கட்டத்தில் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, 'அனோரா' (Anorah) என்ற புடவை விற்கும் நிறுவனத்தை ஆரம்பித்து தற்போது அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
‘கை நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்ற தனது கனவு, எப்படி கை நிறைய சொந்தத் தொழிலில் சம்பாதிக்க வேண்டும், என மாறியது என்பது குறித்து, அவரே தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது அந்த வெற்றிக்கதைதான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி இருக்கிறது.

என் பெரும் கனவு
அனோரா நிறுவனத்தின் நிறுவனரான ராதிகா, தன் அனுபவங்களை பின்வருமாறு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “நான் மதிப்புமிக்க இந்தியக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி, ஐஐஎம்) படித்து முடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் பெரும் கனவாக இருந்தது.
இப்போது எனது பயணத்தைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது, எனக்கே வியப்பாக இருக்கிறது. நான் ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் முதல் மதிப்பெண்களுடன் படித்து முடித்தேன். ஆனால், வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்களை கொடுக்கிறது.
ஒரு தொழில்முனைவோரின் வாழ்க்கை ஏற்ற இறக்கங்களால் நிறைந்துள்ளது. இப்போது என்னுடையது இந்தப் பயணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எவ்வளவு அதிகமாக சம்பளம் வாங்கினாலும், தொழில்முனைவோராக இருப்பதன் உற்சாகத்தையும், சவால்களையும் அந்த சம்பள வேலைகளால் ஈடுகட்ட முடியாது.
அதனால்தான், நல்ல சம்பளம் தரும் நிறுவன வேலையை விட்டுவிட்டு, 2023ம் ஆண்டு எனது சொந்த பிராண்ட் புடவைகளை நம்பிக்கையுடன் உருவாக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் புடவைகளை வடிவமைக்கும்போது மிகவும் பயந்தேன். மக்கள் என் புடவைகளை விரும்புவார்களா என்று கூட யோசித்தேன். ஆனால், தீர்க்கமான முடிவுடன் நான் வேலையை ராஜினாமா செய்து விட்டு, தொழிலில் இறங்கினேன்,” என்கிறார்.
தொழில்முனைவராக பெருமை அடையும் ராதிகா
ராதிகா ஐஐஎம் அகமதாபாத்தில் பொறியியல் படிக்க வேண்டும் என அவரை விட அவரது பெற்றோர்தான் அதிகம் விரும்பியுள்ளனர். பெற்றோரின் விருப்பத்திற்காகத்தான் அங்கு சேர்ந்து படித்துள்ளார். ஆனால், எப்போதுமே நன்றாக படிக்கும் மாணவி என்பதால், அங்கு தேர்வானதுடன், படிப்பை முடித்ததுமே கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலையும் கிடைத்துள்ளது.
“ஐந்து வருடங்களுக்கு முன்பு யாராவது என்னிடம் வந்து, நீ வேலையை ராஜினாமா செய்து விட்டு, எதிர்காலத்தில் சேலைகள் விற்பனை செய்வாய் எனக் கூறியிருந்தால், ‘நல்ல காமெடி’ என நான் விழுந்து விழுந்து சிரித்திருப்பேன். ஆனால், கார்ப்பரேட் வேலை சில வருடங்களிலேயே எனக்கு சலிப்பை ஏற்படுத்தியது.“

வேறு ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என நான் நினைத்தபோதுதான், நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, நடுத்தர மக்களும் வாங்கும் நிலையில் நல்ல பிராண்டட் சேலைகள் கிடைப்பதில்லை என நான் யோசித்தது நினைவுக்கு வந்தது. அதனால், நானே அதனை ஒரு தொழிலாக ஆரம்பிக்க முடிவு செய்தேன்.
தொழிலில் ஆரம்பத்தில் சில சறுக்கல்கள் இருந்தாலும், இப்போது எனக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். எனக்குக் கிடைத்து வரும் அன்பு மிகவும் பிரமிக்க வைக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் புடவைகளை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பது குறித்த செய்திகளை படிக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது," என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தனது anorah.in இணையதளத்தில் சேலைகள் மட்டுமின்றி ஜாக்கெட்டுகள், எம்பிராய்டரி துணிகள், ஹேண்ட் பெயிண்டட் துணிகள், ப்ரீ பிளீட்டட் மற்றும் பிரிண்ட் செய்யப்பட்ட துணிகள் போன்றவற்றையும் விற்பனை செய்கிறார், ராதிகா.

முன்னாள் டெக்கீ டு ஆடைகள் பிராண்ட் நிறுவனர் - வீட்டிலிருந்து தொடங்கிய ரூ.200 கோடி சாம்ராஜ்யம்..!