சச்சின்-டிராவிட்டின் பெயரைக் கொண்ட நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா!
இந்திய வம்வசவாளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா யார்?!
நேற்று நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் இரண்டு அணிகள் அறிவிக்கப்பட்டபோது, ஒரு பெயர் கிட்டத்தட்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த பெயர் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த ரச்சின் ரவீந்திரா.
இதுவரை 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரச்சின், தற்போது தங்கியிருப்பது நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில். நியூசிலாந்தில் தங்கியிருந்தாலும் நியூசிலாந்து அணிக்காக விளையாடி இருந்தாலும் இவர் பெயரில் இந்திய டச் இருப்பது தான் அனைவரின் கவனத்துக்குக் காரணம்.
ஆம், ரச்சின் ரவீந்திரா இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். இந்தியர்களான ரவி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தீபா கிருஷ்ணமூர்த்திக்கு பிறந்தவர் இந்த ரச்சின். இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் மிகப்பெரிய ரசிகரான ரவி கிருஷ்ணமூர்த்தி, அவர்களின் நினைவாக ரச்சின் என தனது மகனுக்கு பெயர் சூட்டியிருக்கிறார். 1990-களின் முற்பகுதியில் நியூசிலாந்தில் ரவி குடிபெயர்ந்துள்ளார். அதன்பிறகு, தனக்கு மகன் பிறக்கவும் அவர்களின் பெயரை சூட்டியிருக்கிறார்.
ரச்சின் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார். நியூசிலாந்தில் பனிக்காலம் ஏற்படும்போதெல்லாம் ரச்சின் ஆந்திரா மற்றும் அனந்தப்பூர் பகுதிக்குச் சென்று கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதனிடையே,
2016 இல் நியூசிலாந்தின் U-19 உலகக் கோப்பை அணியின் ஒரு பகுதியாக இருந்த ரச்சின் ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு எதிராக விளையாடி இருக்கிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வங்காளதேசத்திற்கு எதிராக அவர் சர்வதேச அரங்கில் ரச்சின்
அறிமுகமானார். வங்கதேசத்தில் நடந்த 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-3 என நியூசிலாந்து இழந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட நியூசிலாந்து அணியில் ரச்சின் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவரால் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க முடியவில்லை.
”எனது பேட்டிங் ரோல் மாடல் சச்சின் டெண்டுல்கர். நான் சிறுவயதிலிருந்தே சச்சினை ரோல் மாடலாகக் கொண்டுள்ளேன்," என்று பெருமிதம் தெரிவிக்கும், ரச்சினுக்கு இன்று (18ம் தேதி) பிறந்தநாள் ஆகும்.