Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

400 ரூபாய் வருமானத்தில் தொடங்கி இன்று கோடிகளை தொடும் நிறுவனத்தை நிறுவிய சந்தோஷ் பலவேஷ்!

400 ரூபாய் வருமானத்தில் தொடங்கி இன்று கோடிகளை தொடும் நிறுவனத்தை நிறுவிய சந்தோஷ் பலவேஷ்!

Monday March 14, 2016 , 9 min Read

சந்தோஷ் பலவேஷ் 

நினைப்பவை நடக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவர் மனதிலும் உண்டு. ஆனால் தான் நினைத்தவற்றை நடத்திக்காண்பிக்கும் மன தைரியம் மற்றும் முயற்சி சிலரிடமே உண்டு. அச்சிலரில் ஒருவர் சந்தோஷ் பலவேஷ். இதை நான் சொல்லக் காரணம் அவரது வயது. அவரைப் போல் உள்ள இன்றைய இளைஞர்கள் பலர், பிரபல ப்ராண்ட் நிறுவனப் பணியில் இணைய யோசிக்கும் நிலையில், தனது சுய நிறுவனத்தை நிறுவி, அதில் 100 பேரை பணியில் அமர்த்தி தனக்கென ஓர் தன்னிகரில்லா இடத்தைப் பிடிக்கும் எண்ணத்தோடு உழைத்து வருபவர் இந்த இருபத்தாறு வயது சென்னையைச் சேர்ந்த இளைஞன். 

இந்தியாவில் ஐம்பது நான்கு ஊழியர்கள், துபாயில் நான்கு நபர்கள், பெல்ஜியத்தில் மூவர் என சர்வதேச அளவில் தனது நிறுவனத்தை கிளை பரவ வைத்துள்ளார். மேலும் இவர் நிறுவனத்தில் ஒருவர் இணையவேண்டும் எனில், காணொளி விண்ணப்பம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இவரது நிறுவனத்தின் எதிரே தேனீர் விடுதியில் பணிபுரிந்த ஒருவர், இன்று இந்த நிறுவனத்தில் தலைமை வடிவமைப்பாளர். அவர் வடிவமைக்கும் பலவற்றை தினசரி நாளிதழ்களிலும் தொலைகாட்சிகளிலும் தினம் நாம் பார்த்து வியந்து வருகின்றோம். இந்தியாவின் முதல் டிஜிட்டல் சாம்ராஜ்ய நிறுவனத்தை உருவாக்கவேண்டும் என்ற நோக்கோடு பயணிக்கும் சந்தொஷ் பலவேஷ் உடன் ஒரு நீண்ட நேர்காணலை தமிழ் யுவர்ஸ்டோரி கண்டது.

image
image

குழந்தைப்பருவம் :

பிறந்தது ஆந்திராவில், வளர்ந்தது சென்னை மடிப்பாக்கம் பகுதியில். படித்த பள்ளியில் படிப்பைத் தவிர மற்ற எந்த விஷயத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றாலும், மும்பையில் பிறந்து வளர்ந்த அவரது அன்னை அவரை வளர்த்த விதம், படிப்பைத் தாண்டி, வெளியுலகில் இருக்கும் மற்ற விஷயங்களை சந்தோஷின் பார்வைக்கு எடுத்துவந்தது. அவைய பின்னர் தன் வாழ்வின் போக்கை மாற்ற வல்லது என்பதனை அன்று சந்தோஷ் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மெக்கானிக்கல் இன்ஜினியர் விளம்பரத் துறைக்கு வரக் காரணம் என்ன?

“நண்பர்கள் சேர்ந்து ஒரு நாள் விளையாடியபடி இருந்தோம். அத்தருணத்தை அப்போது புதிதாக வந்திருந்த கைபேசியில் நான் பதிவு செய்தேன். பின்னர் அதைப்போல மேலும் சில பதிவுகள் விளையாட்டாக நிகழ்ந்தன. அதன் பிறகு அவற்றுக்கு ஒலி சேர்க்கத் துவங்கினேன். அவ்வாறே எனது சினிமாக் கனவு பிறந்தது". 

குறும்படங்கள் மெல்ல மெல்ல மக்களிடையே பிரபலமாக ஆரம்பித்திருந்த நேரம் அது. எங்கு குறும்படங்களுக்கான போட்டி நடந்தாலும் அதில் கலந்து கொள்ளும் ஆர்வம் எங்கள் குழுவிடம் இருந்தது. பொழுதுபோக்காக துவங்கிய ஒன்று, எங்கள் பொழுதுகளை முழுதும் ஆக்கரமிக்கத் துவங்கியது. சென்னை ஐஐடி, எஸ்எஸ்என், கோவை பிஎஸ்ஜி, ஈரோடு கொங்கு கல்லூரிகள் நடத்திய குறும்படங்களுக்கான போட்டியில், பல முறை இறுதிச் சுற்றுவரை நாங்கள் சென்றதோடு நில்லாமல், மறக்க இயலா வெற்றிகளையும் எங்கள் குழு பெற்றது. மேலும் அப்படிப்பட்ட போட்டிகளின் போதுதான் சினிமாத் துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் மூலம் திரைப்படத்துறையில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.

அவ்வாறு மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த “த்ரோணா” திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். ஷாஜி கைலாஷ் அதன் இயக்குனராக இருந்தார். இவ்வாறு இரண்டு வருடங்கள் திரைப்படத்துறையோடு கழிந்தது. அந்நேரத்தில், ஒவ்வொரு நாள் இரவும் உறங்குவதற்கு முன்பு, அன்று என்ன சம்பாதித்தோம் என்பதை கணக்காக பார்ப்பேன். காலை முதல் மாலை வரை பல பணிகள் செய்திருந்தாலும், வரவு என்னவோ பூஜ்யமாகவே இருந்தது. சினிமாத்துறை அப்படித்தான். 2009 ஐஐடி சாரங் நிகழ்வுதான் எனக்கு ஞானோதையம் கிடைத்த இடம் என்றார்.

துவக்கம்:

அங்கும் எனது குறும்படம் திரையிடப்பட்டது. ஆனால் வெற்றி பெறவில்லை என்னினும் இறுதிச்சுற்று வரை வந்தது. அப்போது அந்த போட்டியின் நடுவராக சூப்பர் ஸ்டார் மகள், சௌந்தர்யா ரஜினிகாந்த் வந்திருந்தார். சில நேரங்களில் சில அறிவுரைகள் நமக்கு ஏன் வழங்கப்படுகின்றன என்பது அப்போது தெரியாவிடினும் பின்னாளில் புரியும். அதற்கு ஏற்றார் போல், எனது குறும்படத்தை பார்த்து விட்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியது,

சந்தோஷ்... உங்கள் குறும்படத்தை பார்க்கையில் நீங்கள் தொழில்நுட்ப ரீதியாக வலுவான நிலையில் உள்ளீர்கள். உங்கள் திறமைகளை இங்கு(சினிமாவில்) வீண் அடிக்க வேண்டாம். கார்ப்ரேட் பக்கம் உங்கள் பார்வையை செலுத்துங்கள். உங்கள் எதிர்காலம் பிரகாசிக்கும்”.

அவர் கூறிய சொற்கள் என் மனதிற்குள் ஆழமாக பதிந்தது. கல்லூரியின் கடைசி வருடத்தில் இருந்தேன். திரைப்படத்துறையில் இன்னும் ஆரம்பிக்கும் தருணம் கூட வரவில்லை, எனவே அவர் வார்த்தைகளை வேதவாக்காக கொண்டு செயல்பட ஆரம்பித்தேன். கார்ப்பரேட் நிறுவனங்களை யார் மூலம் அணுகுவது என்ற கேள்வி பிறந்தபோது, கல்லூரி நண்பர்கள் உதவிக்கு வந்தார்கள். 2009 ஆம் ஆண்டு நானூறு ருபாய் மதிப்பில் முதல் விளம்பரப் படம் எடுத்து கொடுக்குமாறு எனக்கு வேலை ஒன்று வந்தது. 2 நாட்களில் அதனை முடித்து தந்த பின்பு, அவர், அவரது நண்பருக்கு என்னை பரிந்துரைத்தார். அது அவர் நிறுவனத்திற்கு ஒரு பிரோஷர் வடிவமைக்கும் வேலை. சாதாரணமாக அவ்வேலையை முடிக்க மற்றவர்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் 2 நாட்கள். நான் 2 மணி நேரத்தில் அதனை முடித்துத் தர அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. மேலும் பல வேலைகளுக்கான ஆணை எனக்கு கிடைக்கத் தொடங்கியது.

UMM ஸ்டுடியோஸ் ஆரம்பக்கட்டம் :

சந்தோஷ் நிறுவனங்களுக்கு ப்ரோஷர் வடிவமைத்துக் கொடுக்க, அவருக்கு வலைத்தளங்களை வடிவமைக்குமாறு வேண்டுகோள் வந்தது. வலைத்தளங்களை வடிவமைத்துக் கொடுத்த பின்பு, அதன் தொழில்நுட்பப் பிரிவையும் செய்து தருமாறு விண்ணப்பம் வந்துள்ளது. பின்னர் வலைதளத்தின் பின்னால் நிகழும் தொழில்நுட்ப பரிமாற்றங்களையும் செய்து கொடுக்கவேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது. இப்படி ஒன்றில் இருந்து மற்றொன்றாக, பல கிளைகளாக பிரிந்து வடிவமைப்பு, வலைத்தள தொழில்நுட்பம், வலைத்தள வடிவமைப்பு என வேறு வேறு பிரிவுகளில் தனது திறமையை வளர்த்துக் கொண்டது மட்டுமல்லாது, அதற்கு தேவையான ஆட்களை சேர்ப்பதன் மூலம் தனது நிறுவனத்தையும் வளர்த்துள்ளார்.

image
image

ஒரு நபருடன் கல்லூரி முடிந்த அடுத்த நாள் இந்நிறுவனத்தை துவங்கி, எட்டு பேராக மாறி, பின்பு மூன்றாகக் குறைந்து, மீண்டும் எழுபத்தி இரண்டாக உயர்ந்து பல திருப்பங்களை UMM ஸ்டுடியோஸ் கண்டு வளர்ச்சியடைந்துள்ளது. ஒவ்வொரு முறை தொழில்நுட்பப் பகுதியில் புதிய சவால்களை சந்தித்த போது அவரை காப்பாற்றியது கூகிள் வலைத்தளமே என்கிறார்.

"எனக்குக் கிடைக்கும் எந்த புதிய பணியாக இருந்தாலும் அது எனக்கு தெரியாவிட்டாலும், இணையத்தில் ஆராய்ந்து அதை கற்றுக்கொண்டு நானே முடித்து விடுவேன். ஆரம்பக்கட்டத்தில் வரும் பணி வாய்ப்புகளை நாமே செய்வது புத்திசாலித்தனம், லாபமும் கூட... ஏனெனில் எல்லா புதிய வேலைகளுக்கும் ஆட்களை பணியமர்த்துவது சாமர்த்தியமானது இல்லை..." என்கிறார்.

முதன் முதலாக கிடைத்த கார்ப்பரேட் பிலிம் மூலம் எண்பத்தைந்தாயிரம் சம்பாதித்து அதில் மூன்று கணினியை வாங்கியுள்ளார் சந்தோஷ். கல்லூரி முடித்து அடுத்த நாள், தனது அம்மா 3500 ரூபாய் வாடைக்கு தனக்கு எடுத்துக் கொடுத்த 350 சதுர அடி இடத்தில் தனது நிறுவனம் "UMM ஸ்டுடியோஸ்" துவங்கியுள்ளார். UMM ஸ்டுடியோஸ், ஒரு புத்தாக்க கலை வடிவமைப்பு மீடியா நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. காலை முழுதும் வேலை, பின்பு இரவு முழுதும் அங்கு வீடியோ விளையாட்டுகள் என வீட்டிற்கு செல்ல நேரமின்றி அலுவலகத்திலேயே வாழ்க்கை கழிந்துதுள்ளது.

பண சுழற்சி :

இந்த உலகம் இயங்குவது பண சுழற்சியின் மீது தான்” என்பதை ஆணித்தரமாக சந்தோஷ் நம்புகின்றார். “முதல் மாதம் செய்த வேலைகளுக்குக் கிடைக்கும் வருமானத்தை வைத்தே, அடுத்த மாதம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் தர வேண்டும் என்ற எண்ணமே எப்போதும் என்னை ஊக்கபடுத்தும். அயராது ஓடப் பழக்கியதும் அதுவே.

இது தனது அனுபவத்தின் மூலம் சந்தோஷ் கற்றறிந்த உண்மை. “இன்று வரை எனது நிறுவனத்தில், சம்பளம் காலதாமதமாகவோ, வழங்கப்படாமலோ இருந்ததில்லை”. காலதாமதம் ஆகும் பட்சத்தில், என் மீதும் நிறுவனத்தின் மீதும் ஊழியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்துவிடும் என்பது அவர் கருத்து.

சந்தித்த சவால்கள் :

UMM ஸ்டுடியோஸ் ஆரம்பித்த முதல் வருடம், 12 லட்சம் மதிப்பிற்கு வரவு செலவு நிகழ்ந்தது. ஆனால் எனக்கு சம்பளம் என்று எதையும் நான் எடுத்துச்செல்ல இயலவில்லை. அந்த நேரத்தில் என்னோடு படித்தவர்கள் மாதம் 30000 ரூபாயும், அதற்கு அதிகமாகவும் சம்பளம் பெற்று வந்தனர். என்னைப் பார்த்த பலரும் உனக்கு இது கடினமாக இல்லையா என்று கேட்பார்கள். ஆனால் எனக்கு அது துளியும் கூட கடினமாக இல்லை. அப்படி ஒரு எண்ணம் என் மனதில் இருந்திருந்தால் வருடத்திற்கு ஏழு லட்சம் சம்பளம் பெருமளவு கிடைத்த வேலையை வேண்டாம் என்று உதறி இருக்க மாட்டேன் என்கிறார் ஒரு புன்முறுவலோடு.

ஒருவருக்கு சம்பாத்தியம் இல்லை என்றால் அவரது வாழ்வே முடிந்து விட்டது என்ற எண்ணத்தை சமூகம் நமது மனதில் ஆழமாக பதியவைத்துவிட்டது. ஆனால் சம்பாதிக்காவிட்டால் என்ன? தொழிலில் முட்டிமோதும் பொழுது, 21 வருடம் நம்மை வளர்த்த பெற்றோர் மேலும் ஓரிரு வருடம் நமக்கு உதவ மாட்டார்களா என்ன?? தொழிலில் வெற்றி பெறும்போது நாம் பட்ட துன்பங்கள் அனைத்தும் பனி போல மறைந்து போவதை நாம் பார்க்க இயலும். அதன் சுகமே தனி.

இது அலுவலகமா??

நிறுவனம் ஆரம்பித்த புதிதில் வேலைக்கு விண்ணப்பித்து வந்த பலர் என்னிடம் கேட்ட கேள்வி இது. அலுவலகத்தில் குளிர்சாதன பெட்டி’ இல்லை என்று வேலைக்கு வந்த ஒருவர் வேலை வேண்டாம் எனக்கூறி வெளியேறியுள்ளார். அதனால் வேலைக்கு வருபவர்களிடம் நான் எனது கனவினை விற்கின்றேன் என்கிறார் சந்தோஷ்.

இதுவரை எழுநூற்று ஐம்பது நபர்களுக்கு மேல் நான் நேர்முகத்தேர்வை நடத்தியுள்ளேன். இன்றிலிருந்து மூன்று வருடத்தில் அவர்களும் இந்நிறுவனமும் எந்த இடத்தில் இருக்கும் என்ற என் கனவினை நான் வேலைக்கு சேர்பவர்களிடம் விற்கின்றேன். அதுவே அவர்களுக்கு ஒரு சரியான உந்துதலாக அமைகின்றது.

இது பாசத்தால் சேர்ந்த கூட்டம் :

“ஒரு மனிதனுக்கு பணம் பதவி ஆகியவற்றை கொடுப்பதைக் காட்டிலும், உனது கனவினை அவனுக்கு ஊட்டினால் அவன் வாழ்நாள் முழுதும் உன்னோடு இருப்பான்” என்ற கருத்தை நான் மிகவும் மதித்து நம்பும் ஒன்று. இங்கிருக்கும் நபர்கள் வெளியில் ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றால் கண்டிப்பாக இங்கு அவர்கள் பெறுவதைக்காட்டிலும் அதிகமாக சம்பளம் பெறுவார்கள். ஆனால் அவர்கள் எங்களோடு கட்டுப்பட்டு இருப்பது நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ள கனவிற்காக. இத்துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களை ஒப்பிட்டு பார்த்து இது போன்ற ஒரு திறமையான ஒரு அணி கனவினை பகிர்ந்து கொள்ளும் அணி வேறு எவரிடமும் இல்லை என உறுதியாக என்னால் கூற இயலும்” என்கிறார் சந்தோஷ்.

அனுபவம் :

மோசமான, மிகவும் நல்ல விதமான என பலவகையான வாடிக்கையாளர்களை இந்த 5 வருடங்களில் நான் சந்தித்துள்ளேன். ஒரு முறை எனது வருட வருமானத்தில் முப்பது சதவீதம் கொள்ளளவு கொண்ட ஒரு பணியை ஒரு வாடிக்கையாளர் அளித்தார். அவரது நிறுவனத்தில் எனது ஆட்களை வைத்து அவர் கேட்ட அத்துணை விஷயங்களையும் முடித்து கொடுத்து வந்தேன். ஆனால் சில நாட்களில் எனது ஆட்களை அவர்களது நிறுவனத்தில் சேர்த்துகொண்டனர். ஆனால் அடுத்த 3 மாதங்களில் அந்த நிறுவனமே திவால் ஆகிவிட்டது. அதன் மூலம் லட்சங்களில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தது. அன்று தான் எனது நிறுவனத்திருக்கு ஒரு சட்ட வல்லுனர்கள் குழுவின் அவசியத்தை உணர்ந்தேன். இந்த அனுபவம் மூலம் போட்டியாளர்களை சமாளித்து இன்று UMM ஸ்டூடியோஸ் வருடாந்திர வருவாயாக பல கோடிகளை எட்டியுள்ளது சந்தோஷின் விடாமுயற்சியைக் காட்டுகிறது.

Umm Studios Clients
Umm Studios Clients


அடுத்ததாக இந்த 5 வருடங்களில் என்னை வழிநடத்தி, எனது உயர்வு தாழ்வுகளில் என்னோடு பயணிக்கும் ஒரு வாடிக்கையாளரும் உள்ளார். அவர் திரு.கிஷோர். தற்போது அவரை எனது குரு எனக் கூறலாம். எந்தமாதிரி உடைகளை உடுத்த வேண்டும்? எப்படி நடக்க வேண்டும், எப்படி பேச வேண்டும் என என்னில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து மாற்றி அமைத்தார். மேலும் எனக்கு பல வாடிக்கையாளர்களை அமைத்துக்கொடுத்தார். ஒரு முறை அவரை தொழில் ரீதியாக பார்க்க சென்றிருந்த போது, எனது அழுக்கான பழைய கைபேசியை வாங்கி தனதருகில் வைத்துவிட்டு, அப்போது சந்தையில் புதிதாக வந்திருந்த ஒரு ஸ்மார்ட்போனை எனக்கு அளித்தார். தொழிலில் இறங்கிய பின்பு நீ உடுத்தும் உடைகளும், நீ உபயோகிக்கும் பொருட்களும், உன்னை பற்றிய மதிப்பீட்டு கருவிகளாகும் என்று அவர் அன்று கூறிய வார்த்தை நான் இன்றும் மனதில் வைத்துள்ளேன்.

மேற்கோள் காட்டும் கருத்துகள் :

கை க்வாசுகி மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோர் கூறியதை நான் தொழில் முனைவோருக்கு நினைவில் கொள்ள கூறுகின்றேன். ”உங்கள் நிறுவனம் முதல் தர நிறுவனமானாக மாறவேண்டும் என்றால், நீங்கள் உயர்தரமான ஆட்களை வேலையில் அமர்த்த வேண்டும்.” இன்று என் நிறுவனத்தில் எனக்கு சமமாக சம்பளம் பெறுவோர் உள்ளனர். காரணம் அவர்கள் கொண்டுள்ள திறமை. அதுதான் என் நிறுவனத்தை மேல்நோக்கி அழைத்துச் செல்லும்.

நல்ல ஒரு அலுவலகச் சூழல் இருக்கும் பட்சத்தில் எந்த வேலையும் மிக எளிதாக அமையும். தரமான ஆட்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு ஏற்ற சூழல் ஏற்படுத்திவிட்டு, நிறுவனத்தை அவர்கள் கைகளில் ஒப்படைத்துவிடுவதே ஒரு நல்ல தலைவனின் செயலாக இருக்க முடியும் என்பதை நான் நம்புகின்றேன் என்கிறார் சந்தோஷ்.

தற்போது எங்கள் அலுவலகத்தில் ஒரு மணி உள்ளது. அலுவலகத்தில் ஒரு நல்ல நிகழ்வு இருப்பின் அதை அடித்து அந்த செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வர். மேலும் ஒரு குத்துச்சண்டை களமும் உள்ளது. இதனால் பணிச்சூழலில் பெரிதும் மாற்றங்கள் ஏற்படுகிறது, மகிழ்ச்சி நிலவுகிறது.

காணொளி விண்ணப்பம்:

சரியான ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவருக்கு தேவையான திறன்களை கற்றுக்கொடுத்து நிறுவனத்தில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் அவரது மனப்பான்மை என்பது காதிகங்களில் பார்த்து தெரிந்து கொள்ளக்கூடியது அன்று. எனவே எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர நினைக்கும் எவரிடமிருந்தும் மூன்று நிமிடங்கள் அளவிற்கு ஒரு காணொளி விண்ணப்பத்தையே நாங்கள் எதிர்பார்கின்றோம். அவர்களது கல்வித்தகுதியை விட அவர்களின் அனுகுமுறைக்கே முன்னிலை கொடுக்கப்படுகிறது.

(பிராண்டிங்) வர்த்தக அடையாளம் அவசியமா?

மிகவும் அவசியம் என்பதே எனது கருத்து. எனது நிறுவனம் UMM ஸ்டுடியோஸ் ஆரம்பித்த 3 வருடங்களுக்கு நான் வர்த்தக ரீதியாக அடையாளப் படுத்தவில்லை. எனவே சில வாடிக்கையாளர்களை எங்கள் கருத்துகளோடும் நிதித் தேவைகளோடும் ஒத்துழைக்க வைப்பது கடினமாக இருந்தது. ஆனால் அடுத்ததாக “டேக்ஆஃப்” (Take Off) என்ற வேறு ஒரு நிறுவனத்தை UMM ஸ்டுடியோஸ்சின் துணை நிறுவனமாக அமைத்து அதற்கு சரியான வர்த்தக அடையாளம் கொடுத்தோம். இரண்டு லட்சம் மதிப்பில் ஒரு வேலையை தர மறுத்த ஒரு வாடிக்கையாளரிடம், பதினெட்டு லட்சம் மதிப்பல் வேலைக்கான ஆணையை எங்கள் குழு பெற்றது. எனவே இக்கால கட்டத்தில் சந்தையில் உங்கள் நிறுவனத்தை வர்த்தக ரீதியாக எவ்வாறு அடையாளப் படுத்துகறீர்கள் என்பது மிகவும் முக்கியம்.

மறக்க இயலாத பாராட்டு :

நான் சற்று ஆண்மிகத்தில் அவ்வப்போது லயித்திருப்பவன். எனவே மஹத்ரியாவோடு நாங்கள் பணிபுரிய ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அப்போது அவர்கள் இடத்தில் ஒரு சந்திப்பிற்காக சென்றிருந்த வேலையில், அங்கு மஹத்ரியாவின் ரா.(ரங்கராஜன்) வந்தார். என்னைப் பார்த்து “டூ யு வொர்க் ஃபார் UMM ஸ்டுடியோஸ்?” எனக் கேட்டார். நான் அவரை பார்த்த மகிழ்ச்சியில் ஆம் என்று கூற நீங்கள் மிக நேர்த்தியாக எங்கள் வலைதளத்தை வடிவமைத்துக் கொடுத்துள்ளீர்கள். அது சம்மந்தப்பட்ட இதர பணிகளையும் நீங்களே செய்யவேண்டும் என்று கூறினார். என்றும் அவர் கூறிய சொற்கள் எனக்கு மறக்க இயலாத பாராட்டு.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் :

வலைத்தளங்கள் வடிவமைத்து அவற்றின் தொழில்நுட்ப விஷயங்களை செய்துகொடுத்த பின்பு அதனை இணையத்தில் அதிகமானோர் பார்க்கவேண்டும், அதற்கும் ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று வேண்டுகோள் வர, அதனைப் பற்றி தெளிவாக ஆழமாக அறிய ஒரு வருடகாலம் சந்தோஷுக்கும் அவரது குழுவிற்கும் ஆகியுள்ளது. அதன் பின்பு ஒருவரை டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வதற்காக பணியில் அமர்த்தி அவருக்கு தாங்கள் கற்றவற்றை கற்றுக்கொடுத்து அதன் பின்னர் முறையாக இத்துறைக்குள் UMM ஸ்டுடியோஸ் அடியெடுத்து வைத்துள்ளது. மேலும் அதை மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் கல்லூரிகளோடு இணைந்து பணியாற்ற 'அம்னியா' என்ற திட்டமும் தற்போது உருவெடுத்து வருகின்றது.

UMM ஸ்டுடியோஸ் என்றால் என்ன??

ஐஐடி சாரங்கில் எங்கள் குறும்படத்தை திரையிட நாங்கள் காத்திருந்தோம். அப்போது, எங்கள் அணிக்கு ஒரு பெயர் வைக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூற, விண்டோஸ்சில் பெயரிடப்படாதவற்றுக்கு அன்டைட்டில்ட் என்று வருவதை எடுத்துக்கொண்டு, 'அன்டைட்டில்ட் மூவி மேக்கர்ஸ்' (Untitled Movie Makers) என அணிக்கு அன்று பெயர் சூட்டினோம். இன்று வரை அந்த பெயர் என்னோடு பயணித்து வருகின்றது. மேலும் இதை கேள்விப்படும் போது மற்றவர்கள் மனதில் உருவாகும் சிறு ஆச்சர்யமும் அதை நாங்கள் நிறுவனத்திற்கு சூட்ட காரணம் எனலாம்.

வலைத்தளம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பஸ் கண்டக்டரின் மகன் குரு பிரசாந்த் கோவையில் தொடங்கிய ‘மெட்ஸ்பி’

நான்கு கணினியுடன் தொடங்கி ஒரு கோடி வரை ஈட்டும் கோவை நிறுவனம்!